‘இவன் வேற மாதிரி அல்ல.’ – புத்தகத்தைத் தெரிந்து கொள்வோம்

author
0 minutes, 6 seconds Read
This entry is part 6 of 17 in the series 12 டிசம்பர் 2021

அழகியசிங்கர்         சமீபத்தில் நான் ஒரு புத்தகம் படித்து முடித்தேன்.  உடனே எடுத்துப் படிக்கவில்லை.  அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். முழுவதும் படிக்க முடியவில்லை.  ஒரு 60 பக்கங்கள் தடுமாறிப் படித்து முடித்தேன்.

         அந்தப் புத்தகத்தை எழுதியவர் கௌ.செ.லோகநாதன் என்கிற நண்பர்.  புத்தகத்தின் பெயர் ‘இவன் வேற மாதிரி அல்ல.’  அது ஒரு சுய வரலாறு.  அவருக்கு நடந்த ஒரு பயங்கரமான சம்பவத்தைத்தான் அவர் ஒரு புத்தகமாக எழுதி உள்ளார்.

         சாதாரண பேச்சுத் தமிழில்தான் அந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.  லோகநாதனின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் புத்தகம்.  ஆனால் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது நமக்கு ஏற்படும் சங்கடத்தை விவரிக்கவே முடியாது.

         கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர்.  இயல்பிலேயே மிகுந்த நகைச்சுவை உணர்வும் உற்சாகமும் கொண்டவர்.  அரசுப் பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்து பின்னர் அரசு கல்லூரிகளில் உணவக மற்றும் சுற்றுலாத்துறை மேலாண்மை படிப்பைத் தொடர்ந்து பின்னர் புகழ்பெற்ற ஓபராய் குழும நட்சத்திர ஹோட்டல்களில் வேலையில் அமர்ந்த படிப்படியாக முன்னேறி ஒரு பிரிவில் முழுப் பொறுப்பாளராக பணியாற்றும் போது அவர் வாழ்வையே புரட்டிப் போட்ட ஒரு சாலை விபத்தில் (அப்போது அவருக்கு வயது 23) தன் இயக்கத்திறனை (கை, கால் மற்றும் பல உறுப்புகள்) பெருமளவு இழந்தவர்.

         புரட்டிப்போட்ட அவருடைய வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டார் என்பதுதான் இந்தப் புத்தகம்.

         இந்தப் புத்தகத்திலிருந்து சில வரிகளை இங்கே கொடுக்கலாமென்று நினைக்கிறேன்.  

 

 

         – 21ஆம் பக்கத்தில் 

 

         நான் பத்தாவது படிக்கும்போது எங்க அப்பா வாங்கிக் கொடுத்த கிரே கலர் சில்வர்டயல் டைமெக்று; வாட்ச் இன்னும் ஞாபகத்தில் இருக்கு.  எட்டாவது படிக்கும்போது சொன்னார் 

ஃபர்ஸ்ட்  ரேங்க் எடுத்தா வாட்ச்ன்னு.  எடுத்தேன்.  ஆனா அப்ப வாங்கிக் கொடுக்க முடியல போல.  பத்தாவதில்வாங்கிக்கொடுத்தார்.  நான் வாட்ச் கட்டுவதைப் பார்த்து அப்பாவுக்கும் ரொம்ப மகிழ்ச்சி. கௌரவம்.  நானே வாட்ச் கட்ட மறந்தால்கூட.  ஏன் இன்னைக்கு வாட்ச் கட்டலை என்பார்.  எனக்கு அப்ப இருந்தே வாட்ச்ன்னா ரொம்ப பிடிக்கும்.

 

         – 31 ஆம் பக்கத்தில்

 

         என்னைப் பத்தி மட்டும் சொன்னேன்.  வேற எந்த கேள்விகளும் இல்லை.  அவர்களே ஓபராய் குரூப் பத்தியும் ஓபராய் ராஜ் விலாஸ் பத்தியும் கொஞ்சம் விளக்கினார்கள்.  மிகத் தோழமையுடன் பேசினார்கள் மூவரும். 

நீங்கள் செலக்ட் ஆகி விட்டீர்கள் சொல்லிட்டு ஒரு கோரிக்கை வைத்தார்கள்.  மீசையை எடுத்து விட்டால் இன்னும் அழகாகத் தெரிவீர்கள் என்றார்கள்.  நான் சில நொடிகள் யோசித்துவிட்டு சரின்னேன்.  எனக்கு

ஏற்கனவே இந்த யோசனை இருந்திச்சு.  ஏன்னா நான் ஜெய்ப்பூரில் வந்து இறங்கினதிலிருந்து பார்க்கிறேன் பெரும்பாலும் யாருமே மீசை வைக்கல.  குறிப்பாக இளைஞர்கள்.

 

         – 43ஆம் பக்ககத்தில்  

 

         ஆனா அப்பத்தான் எனக்குப் பிரச்சினையே ஆரம்பித்தது.  என்ன சொல்றது எப்படி சொல்றதுன்னு இப்பக்கூட 

புரியலை.  அவள் அப்படி ஒன்றும் அழகில்லை. நடை, உடை, பாவனை எதுவும் பெருசாப் புடிக்கல.  ஆனால் ஏதோ ஒண்ணு என்னை அவள் பக்கம் ஈர்த்தது.  அதுக்குப் பதில் இன்னைக்கு வரைக்கும் தேடிட்டு இருக்கேன்.  கண்டுபிடிக்க முடியல.  ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது.  நான் அவளை காதலிக்கிறேன்.

 

 

         – 49ஆம் பக்கத்தில்

 

         ஒரு பத்துப் பதினைந்து நிமிஷம் கழித்து உள்ளே போனோம். அவள் அம்மா என்னை வரவேற்றார்.  குனிந்து வட இந்தியப் பாணியில் வணக்கம் சொன்னேன்.நான் அவளின் அம்மாவை மாஜி (மாதாஜியை சுருக்கி மாஜி) என்றே அழைத்தேன்.  அவரும் என்னைப் பேட்டா என்றே அழைத்தார்.  அரை மணிநேரம் கழித்துச் சரி நான் கிளம்பட்டுமா?”  என்றேன்.  

 

       “இல்லை இல்லை சாப்பிட்டு விட்டுத்தான் போகணும்.  எங்க வீட்டுக்கு முதன் முதலில் வந்திருக்கீங்க என்றார்கள் அம்மாவும் மகளும்.

 

 

         – 51ஆம் பக்கத்தில்

 

         சாங்க நெரி கேட் சிக்னலில் ரெட்.  அந்த ரெட் எனக்கு மட்டுமல்ல என்னுடைய கனவுகளுக்கும்போடப்பட்ட ரெட்டுன்னு அப்போ எனக்குத் தெரியாது.  கிரீன் விழுந்து எங்கள் பக்கம் நகர ஆரம்பித்தோம்.  அப்பொழுது இடப்பக்கத்திலிருந்து வேகமாக வந்த ஒரு ஆம்னி வேன் தடார்னு எங்கள் ரெண்டு மூணு பைக்குக்களை தட்டிவிட்டு விட்டுப் பறந்தது.

 

         முழிச்சு பார்த்தபோது ரோட்டோரமா படுக்க வைக்கப்பட்டிருந்தேன்.  ‘ என்னாச்சுன்னு’ கேட்டேன்.    ‘ஒண்ணும் இல்லை 

கார்காரன் தட்டி விட்டுட்டு போயிட்டான்.  ரெண்டு மூணு பேருக்கு நல்ல காயம்.  அவங்களை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயாச்சு.  நல்லவேளை உங்களுக்கு ஒண்ணும் ஆகலை.  வெறும் மயக்கம்தான்.  அதுதான் ஓரமா படுக்க வச்சிருக்கோமனாங்க.

 

 

         -69ஆம் பக்கத்தில்

 

கோயம்புத்தூர் வந்ததற்குப்புறம் தான் அப்பாவோட வேற ரூபம் தெரிய ஆரம்பித்தது.  அப்பாவோட ஆட்டம் ஆரம்பித்தது.  எதற்கெடுத்தாலும் வீட்டில் சண்டை.  தினமும் குடி சிகரெட் குறைந்தபட்சம் 200 ரூபாய் செலவுக்கு வேணும்.  என்னைக் குளிக்க வைக்க, ஹாஸ்பிடல் போக இந்த மாதிரி ஏதாவது ஒண்ணுன்னா அப்பாவோட உதவி தேவை.  இரண்டு பேர் சேர்ந்துதான் தூக்கி சேர்ல உட்கார வைக்க முடியும்.  அந்த ஒரு காரணத்துக்காகவே அம்மா முழுசா அடிமையாக வேண்டியிருந்தது.

 

         – 106ஆம் பக்கத்தில் 

 

         எங்க வீட்டு மரம் செடி கொடிகளோடு

பேசுறது  ரொம்ப பிடிக்கும். அவங்ககிட்ட கேட்பேன்.

 ‘உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு பொறுமை.  வெயில் அடிச்சாலும் சரி, மழை வந்தாலும் சரி நீங்கப் பாட்டுக்கு ஜாலியா கம்முனு நிற்கிறீங்களே.’

 

         – 120ஆம் பக்கத்தில்

 

         முதல்ல எனக்குக் கழுத்துக்குக் கீழே உள்ள உறுப்புகள் முழுசா செயலிழந்துருச்சுன்னு புரிஞ்சிக்கிட்டேன்.  இனி வாழ்க்கைல சில பல வருஷங்கள் இப்படித்தான் இருக்கணும்னும் தெரிஞ்சுகிட்டேன்.  என் வாழ்க்கை இப்படி ஆயிருச்சேன்னு யோசிப்பதைவிட இப்படி இருந்துகிட்டே எப்படி வாழ்க்கையை வாழ்வதுன்னு யோசித்தேன்.

 

 

         – 139 ஆம் பக்கம்

 

         கொஞ்சம் யோசிச்சு பார்த்தா அன்னைக்கு ஜெய்ப்பூரில் சாங்க நெரி கேட் சிக்னலில் மயக்கம் போட்டுக் கிடந்த நான் முழிக்காமலேயே போயிருந்தா, சரிஅதை விடுங்க அதுக்கும் முன்னாடி மூணு வயசுல வாய்க்கால்ல மூழ்கியபோது முருகண்ணன் வந்து காப்பாற்றாமல் போயிருந்தா, இதெல்லாம் பார்க்கும்போது இது எனக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட மூன்றாவது வாய்ப்பு.  சாவின் விளிம்பைக் கண்ணால பாத்துட்டு வந்தவனுக்குத்தான் வாழ்க்கையோட மதிப்பு புரியும்.

 

 

 

லோகநாதன் புத்தகம் பற்றி என் கருத்து 

 

         இந்தப் புத்தகம் படிக்கும் போது புத்தகத்தை எப்படி விவரிப்பது என்பது  தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்.  லோகநாதனுக்கு ஏற்பட்ட  சோகமான  விபத்து யாருக்கும் ஏற்படக்கூடாது.  கழுத்துக்குக் கீழே உள்ள எல்லா உறுப்புகளும் செயல்படாத நிலையிலும் அவர் தன்னம்பிகையோட வாழ்க்கையை எதிர்கொள்வது மிக முக்கியமாகக் கருதுகிறேன். ஒவ்வொருவரும் இந்தப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டும்.

 

         இவன் வேற மாதிரி அல்ல -கௌ.செ.லோகநாதன் – சுய வரலாறு – கௌரி பதிப்பகம், 29 எஸ்.எஸ்.கார்டன், செந்தமிழ் நகர், சுகுணா புரம் கிழக்கு, கோயமுத்தூர், தமிழ்நாடு  – பக்.144 – விலை ரூ.150 – தொடர்புக்கு : 9944647156

 

Series Navigationதந்தையின் இருத்தலும் மகளின் கட்டுடைப்பும் ‘பெத்தவன்’ நெடுங் கதையை முன்வைத்து.எங்க வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *