குரு அரவிந்தன்
கோவிட்- 19 பேரிடர் 2020 – 1921 ஆம் ஆண்டுகளில் ஒரு பக்கம் உலக மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்க, மறுபக்கம் முன்னேறிய நாடுகள் விண்வெளி சார்ந்த தமது நடவடிக்கைகளை மிகவும் கவனமாக நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறன. கோவிட் பேரிடரைக் காரணம் காட்டி அவற்றைத் தள்ளிப் போடவோ அல்லது நிறுத்திவைக்கவோ முடியாத ஒரு நிலையில் விண்வெளி சார்ந்த நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. பல நூறு விண்கலங்களும், ரோபோக்களும் விண்வெளியில் வலம் வந்து கொண்டிருப்பதால், அவற்றின் நடவடிக்கைகள் பூமியில் உள்ள கட்டுப்பாட்டு நிலையங்களில் இருந்துதான் கண்காணிக்கப்படுகின்றன. அதனால் பூமியில் இயங்கும் கட்டுப்பாட்டுத் தளங்கள் தொடர்ந்தும் இயங்கத்தான் வேண்டும். கோவிட் காரணமாக சில விண்வெளித் தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தாலும், தேவை காரணமாக அவை இப்போது மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டன.
அரசியலை ஓரம் தள்ளிவிட்டு இந்த நாடுகள் அறிவியல் நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதற்குக் காரணம் எதிர்காலம் விண்வெளி நிகழ்வுகளில்தான் தங்கி இருக்கப் போகின்றது என்பது தெளிவாகப் புலனாகின்றது. 6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில் நாடுகளைப் பிடிப்பதில் ஈடுபட்டது போல, இப்போ கிரகங்களைப் பிடிப்பதில் நாடுகளிடையே போட்டிகள் ஆரம்பமாகி விட்டன. எனவே 2021 ஆம் ஆண்டு நடந்த சில விண்வெளி நிகழ்வுகளை இங்கே தருகின்றேன்.
விண்வெளிப் பயணத்தை முதன் முதலாக ஸ்புட்னிக் மூலம் 1957 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்துப் பல சாதனைகளை நிலைநாட்டிக் காட்டியது ரஸ்யாதான். அதைத் தொடர்ந்து அமெரிக்காவும், சீனாவும் இப்பொழுது சாதனை படைக்கத் தொடங்கிவிட்டன. இந்த வருடம் செவ்வாய்க்கிரகம் நோக்கிய ரோபோக்களின் பயணத்தில் அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகள் ஈடுபட்டிருந்தன. 2021 செவ்வாய் நோக்கிய முதல் பயணத்தை அமீரகத்தின் ஹோப் விண்கலம் ஆரம்பித்ததைத் தொடர்ந்து சீனா அனுப்பிய விண்கலம் 2021 மே மாதம் ரோவரைத் (China’s Tianwen-1 mission) தரை இறக்கம் செய்தது. பெப்ரவரி 18 ஆம் திகதி நாசாவின் (NASA’s Perseverance rover) ரோவர் செவ்வாயில் தரை இறக்கப்பட்டது. இதில் அமெரிக்கா வெற்றிகரமாக ஹெலிகொப்டர் ஒன்றையும் செவ்வாய்க் கிரகத்தில் பறக்க விட்டிருந்தது. முதன்முதலாக வேற்றுக் கிரகத்தில் பறந்த ஹெலிக்கொப்டர் என்ற பெயரை அமெரிக்காவின் இன்ஜெனுட்டி என்ற சிறிய ஹெலிக்கொப்டர் தட்டிக் கொண்டது. செவ்வாய் கிரகத்தில் இதுவரை 16 பறப்புகளை மேற்கொண்டிருந்தது தானியங்கியான இந்த ஹெலிகொப்டர். இதன் முதலாவது பறப்பு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது. அமெரிக்காவைத் தொடர்ந்து செவ்வாய்க் கிரகத்தில் இரண்டாவதாக ரோபோவை இறக்கிய பெருமை சீனாவுக்கு உரியது.
எல்லா கிரகங்களிலும் தேடுதல்கள் வேகமாக நடைபெறுகின்றன. புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்களில் ரோவர்கள் தரை இறங்கி இருக்கின்றன. குறுங்கோள்களிலும் ரோவர்களின் தரை இறக்கங்கள் நடைபெற்றிருக்கின்றன. அக்ரோபர் 16 ஆம் திகதி லூசி என்ற விண்கலம் நாசாவால் விண்வெளி நோக்கி அனுப்பப்பட்டது. 12 வருடங்கள் பயணிக்கப்போகும் இந்த விண்கலம் முக்கியமான ஏழு விண்கற்களைப் பற்றி ஆய்வு செய்ய இருக்கின்றது. வியாழன் கிரக மண்டலத்தில் உள்ள ஆறு விண்கற்களையும், அதிக விண்கற்கள் அடங்கிய பட்டியில் இருந்து தெரிவு செய்த ஒரு விண் கல்லையும் இது ஆய்வு செய்யும். 2011 ஆம் ஆண்டு ஆனுப்பப்பட்ட யூனோ விண்கலம் தொடர்ந்தும் வியாழன் கிரகத்தை ஆய்வு செய்கின்றது. 2025 ஆம் ஆண்டுவரை இதன் சேவை நீடிக்கப்பட்டிருக்கின்றது. நவெம்பர் மாதம் 24 ஆம் திகதி DRAFT என்ற விண்கலம் டிமோபோஸ் என்ற விண்கல்லைத் தாக்கித் திசை திருப்புவதற்காக அனுப்பப்பட்டது. 24,000 கிலோ மீட்டர் வேகத்தில் விண்கல்லைத் தேடிச் செல்லும் இந்த விண்கலம், 2022 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் பிற்பகுதியில் குறித்த இலக்கை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் பூமியை நோக்கி வரும் ஆபத்தான விண்கற்களை இனிவருங்காலங்களில் திசை திருப்ப முடியும்.
சந்திரனின் மறுபக்கத்திற்கு அனுப்பப்பட்ட சீனாவின் சாங்-4 தரைஇறங்கியும் யூரு- 2 ரேவரும் சந்திரனின் மறுபக்கத் தரையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. சீனா தனக்கான விண்வெளி நிலையம் ஒன்றை 29 ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு விண்வெளியில் அமைக்கத் தொடங்கி இருக்கிறது. தியாங்காங் (Tiangong) என்ற அதற்கான வேலைகள் விண்வெளியில் தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கின்றன. கட்டுமானப் பணிக்காக சென்ற யூன் மாதம் 17 ஆம் திகதி, நி ஹாய்ஷெங், லு பூமிங், ராங் ஹாங்போ ஆகிய மூன்று விண்வெளி வீரர்களை சீனா தனது விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி இருந்தது. இதுவரை 14 சீனவீரர்கள் விண்வெளிக்குச் சென்றிருக்கிறார்கள். இவர்களில் லீ யாங் என்ற பெண்மணியும் அடங்குவார். இந்தத் திட்டம் 2024 ஆம் ஆண்டு முழுமையாக நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வர்ஜின் கேலக்டிக் நிறுவனமும் மற்றும் ப்ளு ஒரிஜின் நிறுவனமும் விண்வெளிக்குச் சுற்றுலாப் பயணிகளை அனுப்பியதன் மூலம் 2021 யூலை மாதம் சாதனை படைத்திருந்தனர். அந்த வரிசையில் மூன்றாவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் செப்ரெம்பர் மாதம் 2021 தனியார் விண்வெளிப் பயணத்தில் இணைந்து கொண்டது. இதுவரை மூன்று கோடீஸ்வரர்களும், வேறுசில விண்வெளிச் சுற்றுலாப் பயணிகளும் விண்வெளி சென்று வந்திருக்கிறார்கள். விண்வெளித் தொலைநோக்கியான Imaging X-ray Polarimetry Explorer டிசெம்பர் மாதம் 9 ஆம் திகதி விண்வெளிக்கு நாசாவால் அனுப்பப்பட்டது. நாசா நிறுவனமும் இத்தாலிய விண்வெளி நிறுவனமும் கூட்டாகச் செயற்பட்டன. 188 மில்லியன் டொலர் பெறுமதியான இந்தத் தொலைநோக்கி கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் நட்சத்திரங்கள், கருந்துளைகள், சுப்பநோவா போன்றவற்றை ஆய்வு செய்ய இருக்கின்றது. இதேபோல கிறிஸ்மஸ் தினத்திலன்று 25 ஆம் திகதி ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளி நோக்கி அனுப்பப்பட்டது. இது மில்லியன் மைல்களுக்கு அப்பால் சென்று தகவல்களைச் சேகரிக்க இருக்கின்றது. பிரபஞ்சத்தின் தொடக்க காலத்தில் பெரும் வெடிப்பு காரணமாக நட்சத்திரங்கள் எப்படித் தோன்றின, அகச்சிவப்பு ஒளி என்பது போன்ற பல தகவல்களைப் பின்நோக்கிச் சென்று சேகரித்துப் பூமிக்கு அனுப்ப இருக்கின்றது.
விண்வெளி நோக்கிய விண்கலங்களின் பயணம் இந்த வருடம் மட்டும் (2021) இதுவரை 137 நடந்திருக்கிறது. இதில் 128 வெற்றிகரமாகச் செயற்பட்டது. ஆகக்கூடிய பயணமாக நவெம்பர் மாதத்தில் 16 விண்வெளிப் பயணங்கள் நடந்திருக்கின்றது. இவற்றில் 52 விண்கலங்களை அனுப்பிய சீனா முன்னணி வகிக்கிறது. அடுத்ததாக அமெரிக்கா 51, ரஸ்யா 23, ஐரோப்பா 5, இந்திய 2, யப்பான் 2, தென் கொரியா 1 ஐயும் அனுப்பி இருக்கின்றன. அதிக ரொக்கெட்டுகள் சீனாவின் யூகுவான் ஏவுதளத்தில் இருந்து 21 ஏவப்பட்டன. இரண்டாவதாக அமெரிக்காவின் கேப்காணிவெல் தளத்தில் இருந்து 19 ரொக்கெட்டுகள் ஏவப்பட்டன. ரஸ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், ஹஸகிஸ்தான், நியூசிலாந்து, தென்கொரியா, ஈரான், யப்பான் ஆகிய நாடுகளில் ரொக்கெட் ஏவுதளங்கள் இருக்கின்றன.
விண்வெளிப் பயணத்தில் சீனா எல்லா நாடுகளையும் மிஞ்சப் போகிறது என்பதற்கு இது நல்லதொரு உதாரணமாகும். இதைவிட சீனா பொருளாதாரத் துறையில் சிறப்பாக இருப்பதும், அந்த நாட்டு அதிபர் விண்வெளித்திட்டத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருப்பதும் குறிப்பிடத் தக்கது. வானத்தில் இருந்தே இந்த உலகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலைமை ஒரு நாள் ஏற்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. தொடக்க காலத்தில் ரஸ்யா மிகவும் ஆர்வமாக விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்டாலும், பொருளாதார நெருக்கடி காரணமாக ரஸ்யாவால் முழுமூச்சாக ஈடுபட முடியவில்லை.
‘விண்வெளிப் பாவனைகள் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டிருப்பதாலும், விண்வெளியில் குப்பைகள் தொடர்ந்தும் குவிக்கப்படுவதாலும் நாம் எல்லோரும் சர்வதேச ரீதியாக இணைந்து இந்த விடயத்தில் பொறுப்பாகக் கவனம் செலுத்த வேண்டும்’ என்று வெள்ளைமாளிகை ஊடகச் செயலாளர் துநn Pளயமi சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். பழுதடைந்த நிலையில் பல விண்கலங்கள் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருப்பதால், விண்கற்களைப்போல இவையும் பூமிக்கு ஆபத்தானவையே. அமெரிக்காவின் ஸ்கைலாப், சோவியற்யூனியனின் சல்யூட் மற்றும் மிர் விண்வெளி நிலையம், சீனாவின் லோங் மாச் -5பி போன்றவை பழுதடைந்ததால் விண்வெளிக் குப்பைகளாக இருந்தது மட்டுமல்ல, ஒரு துப்பாக்கி ரவையைவிட 5 மடங்கு வேகமாக வந்து பூமியில் விழும்போது இதனால் மனிதருக்கும் ஆபத்தாகும். ரஸ்யாவின் உளவு விண்கலமான கொஸ்மோஸ் 954 வடமேற்கு கனடியப் பரப்பில் விழுந்தபோது பல மைல் தூரத்திற்கு கதிர்வீச்சு இருந்தது அவதானிக்கப்பட்டது. சுமார் 6 கோடி மில்லியன் டொலர்களுக்கு மேல் அதைத் துப்புரவு செய்யக் கனடா செலவிட்டதும் குறிப்பிடத் தக்கது. ரஸ்யா நாட்டின் விண்வெளித் திரைப்படமான ‘த சலஞ்ச்’ என்ற படம் நிஜமாகவே விண்வெளியில் அக்ரோபர் மாதம் 2021 ஆம் ஆண்டு படமாக்கப்பட்டது.
செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் உறைநிலையில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2023 ஆண்டு ரஸ்யாவின் விண்கலம் ஒன்று இது பற்றி ஆய்வு செய்வதற்காகச் செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்ல இருக்கின்றது. தண்ணீர் இருக்குமானால் வெகுவிரைவில் குடியேற்றங்கள் அங்கு நடைபெறலாம்.