மனநோய்களும் திருமணங்களும்

This entry is part 3 of 17 in the series 23 ஜனவரி 2022

 

 

நடேசன்

 

இந்திராணி சில்வா 45 வருடங்களுக்கு  முன்பு இலங்கையில்   என்னுடன் படித்த பெண். அவரை சமீபத்தில்   ஒரு  மெய்நிகர்  நிகழ்வில் சந்தித்தேன்.  அந்த நிகழ்வில் கலந்துகொண்ட  ஒருவர் அந்தப் பெண்ணை  “ அங்கொடை சில்வா   “ என்றார். அது ஒரு நகைச்சுவை எனப் பலரும் சிரித்தார்கள். நான் சிரிக்கவில்லை, ஆனால்,  அந்த வார்த்தையின் உள்ளர்த்தம்  என்னைச் சிந்திக்கப் பண்ணியதால் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

அங்கொடை என்ற இடம்  இலங்கையில் பிரதான மன நோய் வைத்தியசாலை அமைந்துள்ள கொழும்பின் புற நகரம். மிகவும் பெரிதானது . இதேபோல் வடமாகாணத்தில் ஒரு மனநோய் வைத்தியசாலை இருக்கிறது. அது மந்திகை என்ற ஊரில்  உள்ளது.  அதை மந்திகை வைத்தியசாலை என்போம். இலங்கையில் உள்ள ஒன்பது  மாகாணங்களுக்கும் அங்கொடை பொதுவாக இருந்தபோதிலும் ஒரு மாகாணத்தில்   மந்திகையில் இந்த வைத்தியசாலை அமைந்துள்ளது

இதன் காரணம் என்ன?

ஏன் யாழ்ப்பாணத்தில் மனநோய் அதிகமாக  உள்ளதா?

என்னிடம் அதற்கான தரவுகள் இல்லை.

தற்காலத்தில் அங்கே  நடக்கும் பல தற்கொலைகள்  என்மனதில் இந்தக் கேள்வியைக் கேட்க வைத்தன. போர் கடந்து சென்ற   பூமியில்  மரணமானவர்கள், காணாமல் போனவர்கள் ,  அங்கவீனர்களுக்கும் கணக்கு விபரம் உள்ளது. ஆனால்,  உளரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரம் எதுவுமில்லை.

இலங்கையில்  நான்  இருக்கும்போது மனநோயாளரை மட்டுமல்ல எங்களுக்குப் பிடிக்காத ஒருவரையும்   “அவன் ஒரு அங்கொடை “ என்போம். ஒருவரது பேச்சைப் புறந்தள்ள நினைத்தால்  “அவனது அங்கொடைக் கதையைக் கேட்காதே” “ என்போம். இந்தப்பதத்தை    எனது எட்டாம்  வகுப்பில்   படிக்கும்போது  நானே பாவித்தேன். இந்துக்கல்லூரி விடுதியிலிருந்த ஒருவனை நிரந்தரமாக அங்கொடை எனப் பட்டப்பெயர் சூட்டி  அழைத்தோம்.

மனநோய்   மேல்நாட்டு மருத்துவத் துறையில் மிகவும் பிற்காலத்திலேயே ஒரு நோயாக சேர்க்கப்பட்டது. மூன்றாம் உலக நாடுகளில் நகரங்களைத் தவிர்த்தால் இன்னமும் பேயோட்டுபவர், சாமியார்கள், மந்திரவாதிகள்  முதலானோர்  மனநலவைத்தியர்களாகத் தொழில்  செய்கிறார்கள்.  சமூகம் மற்றும் மதம் , அவர்களுக்குக் காலம் காலமாகக் கொடுத்த   அங்கீகாரமது.

ஆபிரகாமிய மதங்களான யூத மதம்,  கிறிஸ்தவத்திலும் சமய குருமார்கள் பேயோட்டுவார்கள்.  இது போன்ற விடயங்கள் இஸ்லாத்திலும் உள்ளது. இங்கு மனிதர்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் என்பது ஆன்மாவைப் பிடித்த தீயசக்தி என்ற பொருளில்,  இந்த பேயோட்டும் சடங்கு  நடக்கிறது.

 அதை வெளியேற்ற மதச் சின்னங்களையும் புனித நீரையும் பயன்படுத்துவார்கள் . இந்தச்  சடங்கில் தீயசக்திக்கும் பேய் ஓட்டுபவருக்கும் இடையில் நடப்பது,  வன்முறையான புனிதப்  போராக உருவகிக்கப்படும். இங்கு இறுதியில் கர்த்தரின் உதவியால் பேயோட்டும் பாதிரியார் வெல்வார். கிறிஸ்தவத்தின் பிரிவுகளான ஓதோடொக்ஸ்  கத்தோலிக்கம் மற்றும் புரட்டஸ்தாந்து பிரிவுகளில் சிறிது மாற்றங்கள் இருந்தாலும் அடிப்படையான சடங்கு ஒன்றே .

யூதர்கள், ஓய்வு கொள்ள முடியாத தீய ஆன்மா மற்றவர்களின் உடலைத்தேடி குடிபுகுவதால் மனநோய் ஏற்படுவதாக நம்பினார்கள்.  ராபீ  என்ற மதகுரு பேயோட்டுதல் சடங்கைக் கொம்பூதி,  பிரார்த்தனை நடத்தி,  பைபிளைப் படித்து,  தவறான ஆன்மாவை அடுத்த உலகத்திற்கு அனுப்புகிறார்

இஸ்லாத்திலும் கிறீஸ்துவத்தை ஒத்த அடிப்படை , ஆனால்  இங்கு பேய்கள்  ஜின்கள் என அழைக்கப்படுகிறது.   இங்கு குர் -ஆனைப் படித்து சடங்கை நடத்தி,  ஜின்களை அகற்றும்போது நோயாளியை அடித்து நொறுக்கும்  விடயம் பரிதாபகரமானது.

இந்து மதத்தில் பூசாரிகள் பேயோட்டுவதையும்  நாம் எல்லோரும் பார்த்திருக்கிறோம். எனது அம்மாவுக்கு  நீரிழிவு வந்தபோது பக்கத்து வீட்டார்கள் சூனியம் செய்துவிட்டதாக மலையாள  மந்திரவாதி  ஒருவர் சொல்லியதுடன் நிற்காது,   வீட்டுவாசலில் புதைக்கப்பட்டிருந்ததாக ஒரு செப்புத்தகட்டை எடுத்துக் காட்டினார்.  அதுபோல் மனநோயும் சூனியத்தால் ஏற்படுவது என்பார்கள். இந்து மதத்தில் மதக்கடவுள்களின் எண்ணிக்கைபோல்  ஏராளமான  காரணங்கள் சொல்லுவார்கள்.

பௌத்தத்தில் நேரடியான எந்த விடயமும் நான் அறியாதபோதும் இலங்கையில் பேய் ஓட்டுபவர்கள் உடுக்கையடித்து தொவில் எனும் நடனம் ஆடுவதைக் கண்டுள்ளேன்.  மேலும் இந்துமத சடங்குகள் அவர்களில் அதிகம் ஊடுருவியிருக்கிறது. இங்கு பௌத்த மதகுருவும் கலந்து கொள்வார்.

இதற்கப்பால் பேய் விரட்டுதலில் இந்துக்கள் தர்கா செல்வதையும் இஸ்லாமியர்கள் பூசாரிகளிடம் செல்வதையும் பார்க்க முடிந்தது.   பவுத்தர்கள்  பூசாரியிடம் செல்வதும்  உண்டு. எல்லா மதங்களிலும் இந்த பேயோட்டுதல் பற்றிய ஒரே சமாந்தரமான கருத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

பெண்கள் விடயத்தில் ஐரோப்பாவில்,  மத்தியகாலத்தில் கத்தோலிக்க மதம் பேயை விரட்ட முடியாதபோது அவர்களைச் சூனியக்காரிகளாக அறிவித்து  அவர்களை உயிரோடு   எரித்ததற்கான பல தடயங்கள் வரலாற்றில் உள்ளது. அந்தச்சடங்கிற்கு எந்த ஒரு தடையும் இருக்கவில்லை. மக்கள் கூட்டமாகத் திரண்டு இதை ரசிப்பார்கள். அங்கு உண்மையில்  கொளுத்தப்படுவது மனநோயாளி ஒருவரே.

ஏன் சூனியக்காரிகள் ஐரோப்பியச் சிறுவர் இலக்கியத்தில் அதிகமாக வருகிறார்கள்? அவர்கள் எல்லோரும் ஏன் மத்திய வயதைத் தாண்டியவர்களாக இருக்கிறார்கள்?

பதில் இருக்கிறது  

கருத்தரிக்கும் பருவம் கடந்த அவர்களை,  விதை முளைக்காத பாழ் நிலமாக அக்கால சமூகம் கருதியது. 

பெண்கள் மகப்பேற்றின் பின்பாக, உடல் ஓமோன்களின் விளைவால் ஏற்படும் மன அழுத்தத்தை ஹிஸ் ரீ ரியா எனப் பெயரிட்டு அவர்களைத் தனிமையில் நிரந்தரமாக அடைத்து வைப்பார்கள் . யெலோ வோல்பேப்பர் (The Yellow Wall- is a short story by American writer Charlotte Perkins Gilman)   என்ற சிறுகதையில் வைத்தியர் ஒருவர் தன்  மனைவியை அடைத்து வைக்கும்போது,  அவள் மஞ்சள் சுவர் காகிதத்தின் அடியில் ஊர்வதாக உணர்கிறார். உலக வரலாற்றில் மிகவும் தாக்கத்தை உருவாக்கிய கதையிது.

தற்காலத்தில் ஹிஸ் ரீ  ரியா( Hysteria)  என்ற வார்த்தை மனநோய் மருத்துவத்தில் இடம் பெறுவதில்லை.  ஆனால், அக்காலத்தில்  பெண்களின் கர்ப்பப் பையிலிருந்து ஹிஸ் ரீ ரியா வருவதாக (uterus- Hyster in லத்தீன்)  அந்த பெயர் அக்காலத்தில் மருத்துவத்தில் இடம் பெற்றது. தற்பொழுது அதை  மகப்பேற்றின் பின்வரும் மன அழுத்தம் (Post Natal depression)  என்பார்கள்.

——

மேற்கத்தைய மருத்துவம்,  மனவியாதிகள் மூளையின் நரம்பு மண்டலத்தில் இரசாயன பொருட்களின் விகிதாசாரத்தின் குறைபாட்டால் வருகின்றன என்கிறது. இவைகள் பல பாரம்பரிய அலகுகளால் கடத்தப்படுகின்றன என்பதும் தெளிவாகியுள்ளது. இவைகள் என்ன வீதத்தில் என்பது பல முடிவுகளைக்கொண்டு இருந்தபோதிலும்,  மனநோய் கொண்டவர்கள் குறிப்பிட்ட குடும்பங்களில் இருப்பதை நாம் அவதானிக்க முடியும்

எமது மூன்றாம் உலக நாடுகளில் மனநலம் சம்பந்தப்பட்ட விடயங்கள் மருத்துவர்களால்  உறுதி செய்யப்படுவதில்லை.  பலர் மன நோயின் விளைவாக குற்றங்களில் ஈடுபடும்போது அவரை  குற்றவாளியாக அடையாளம் கண்டு முத்திரை குத்தி  சிறையில் அடைப்போம்.  சிலர் பிச்சைக்காரராகவும் வீடில்லாதவர்களாகவும் ஒதுக்கப்படுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் வீடற்றவர்கள் மற்றும் சிறையில் உள்ள குற்றவாளிகளில் ஏராளமானவர்கள் மனநலக் குறைபாடானவர்கள் என்று மருத்துவ  ஆய்வுகள் கூறுகிறது    

Scientists have long recognized that many psychiatric disorders tend to run in families, suggesting potential genetic roots. Such disorders include autism, attention deficit hyperactivity disorder (ADHD), bipolar disorder, major depression, and schizophrenia.1

 

இப்படியாக மனநோய்  குறைபாடுகள் தலைமுறையாகக்  கடத்தப்படுகிறது எனத் தெரிந்தும்  நாம் என்ன செய்கிறோம்?

புகைத்தலால் புற்றுநோய் வருகிறது என சிகரட் ,  பீடி, சுருட்டு என்பவற்றிற்கு எதிராகப் பிரசாரம் செய்கிறோம் . பொது வாகனங்கள்,   பொதுமக்கள் பாவிக்கும் கட்டிடங்களான சந்தைகள் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களில்  புகைப்பவர்களைத் தடைசெய்து,  அவர்களிடம், மறைமுகமாக நீங்கள் செய்வது  நல்லதல்ல என்கிறோம்.

மது அருந்துதல் உடலுக்குக் கெடுதல்  என மதுபானத்திற்கு எதிராகப் ஊடகங்களில் பல பிரசாரங்கள் செய்கிறோம். மதுக் கடைகளுக்கு  பலவிதமான  தடைகள் செய்யப்படுகிறது.

உறவினர்களுக்குள் திருமணம் செய்வதால் மனநோய் அதிகமாகிறது என்பது பலருக்குத் தெரியும். ஆனால்,  நமது யாழ்ப்பாணத்தில் மச்சான் மச்சாள் திருமணங்கள் மிகவும் பிரபலமானது. அதேபோல் தமிழகத்தில் மாமா – மருமகள் திருமணங்கள் வழமையானது மட்டுமல்லாமல்  திரைப்படங்கள்  தொலைக்காட்சித் தொடர்களில் உன்னதமான ஒன்றாக  பிரச்சாரப்படுத்தப்படுகிறது.

நில உடைமை சமூகத்தில் நிலத்தைத் தொடர்ந்து வைத்திருக்க,  இந்த  சாதி மற்றும் உறவுக்குள் திருமணங்கள் தேவையாக இருந்தது. அது பாரம்பரியமான பண்பாடு எனக்கூட வாதாடலாம்.  சமூக பொருளாதார உறவுகள், சமூகத்தின் பண்பாட்டு உறவுகளை உருவாக்கியது உண்மை. ஆனால்,  இப்பொழுது பொருளாதார அமைப்பு மாறிவிட்டதே! 

நில உடைமை  தகர்ந்து நகரமயமாகும் இந்தக்காலத்தில் நிலத்தை விவசாயியே கைவிட்டு வேறு தொழிலுக்குப் போகும் காலம். நமது வடபகுதியில் நிலங்களை விட்டுச் சென்று வெளிநாடுகளில் இருப்பவர்கள் மச்சாளைத் திருமணம் செய்வது முரண்பாடு இல்லையா? அதேபோல் விவசாய நிலங்களைத் தரிசாக விட்டுவிட்டு நகரை நோக்கி  வந்தவர்கள்,  மீண்டும் அந்த பாரம்பரியத்தில் போய் அக்கா மகளைத் திருமணம் செய்வது  முரணல்லவா?

இவைகள் கேட்கப்படவேண்டிய கேள்விகளா? தேவையற்றவையா?

எனது குடும்பம் மற்றும்  உறவினர் மத்தியில் பாதிப்புகள் ஏற்பட்டதால் நான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.

நான் மன நலத்தை  மட்டும் பேசியதால் மற்றைய உடல் வியாதிகள் பாரம்பரியமாகச் செல்வது இல்லை என்பது  அர்த்தமில்லை. அவைகளுக்கும் நெருங்கிய உறவில் திருமணங்கள் நடக்கும் பொழுது அதன் தாக்கங்கள் உருவாகிறது.

அக்கால அரச குடும்பங்கள் தங்களுக்குள் திருமண உறவுகளை  வைத்துக்கொண்டன. அதில் ஐரோப்பிய  அரச வம்சங்களிடையே நெருக்கமான   குடும்ப உறவுகள் இருந்தன.

ரஷ்யாவில் 1917 ஆண்டு ஒக்டோபர் மாதம் நடந்த புரட்சி உலக வரலாற்றை மாற்றியது உங்களுக்குத் தெரியும்.  அக்காலத்தில் ரஷ்யாவை அரசாண்ட  ஜார் மன்னன்  பல காரணங்களால் மக்களது செல்வாக்கை இழக்கிறான். அது புரட்சியாளர்களுக்கு வசதியாகிறது.  அதில் ஒரு முக்கிய காரணம் அரச குடும்பங்களில் நெருக்கமான திருமண உறவால் இளவரசனுக்கு வந்த ஹிமோபீலியா என்ற நோயாகும்.

ஜார்  நிக்கலசின் பட்டத்துக்குரிய ஒரே மகன்,  இளவரசன் அலக்சிக்கு ஹிமோபீலியா என்ற இரத்த உறையாமை நோய் பிரித்தானிய அரச வம்சத்திலிருந்து, தாய் அலக்சாண்டிட்ரா வழியாக வந்தது. ஏதாவது சிறிய காயம் வந்தால் இரத்த பெருகும். நிறுத்த முடியாது. அலக்சிக்கு இப்படியாக காயமேற்பட்டபோது மருந்துகள் எதுவும் வேலை செய்யாததால்,  ரஸ்புடீன் என்ற சாமியாரை அரசி நாடினார். ரஸ்புடின் இரத்தப்பெருக்கை நிறுத்தியதால் அரசி அலக்சாண்டிட்ராவுடன் நெருக்கமாகி, அவருக்கு  முக்கியமான அரசியல் ஆலோசகராகவும் மாறியது மற்றைய பிரபுக்களுக்குப் பிடிக்கவில்லை.

ரஸ்புடீனால் மட்டுமே தன்  மகனது உயிரைத்  தக்கவைக்க முடியும் என நினைத்து,  தாயான அலக்சாண்டிட்ரா , பலரது வெறுப்புக்கும்  மத்தியில் ரஸ்புடீனைப் பாதுகாத்தார். இதனால் அரசிக்கும் ரஸ்புடீனுக்கும் பாலியல்  தொடர்பு உள்ளது,  ரஸ்புடீனே ரஷ்ய அரசை நடத்துகிறார் என வதந்தி பரவுகிறது.   இந்த வதந்தியை மக்களிடையே பரவச்  செய்தவர்கள் அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள். பின்பு அவர்கள் ரஸ்புடீனை கொலை செய்கிறார்கள். விசாரணையின் பின்பாக   கொலை செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது கொலையில் ஈடுபட்டவர்கள் கிரைமியாவிற்கு கடத்தப்பட்டார்கள்.  வேறு பல காரணங்களால்  மக்களது வெறுப்பைச் சம்பாதித்த  ஜார் மன்னன் தனது பொறுப்பை இழக்கிறார்.  இறுதியில்  அந்த அரசகுடும்பம்  புரட்சியாளர்களால் கொலை செய்யப்படுகிறது.

மேற்கூறிய விடயத்தில் ஹிமோபீலியா என்ற இரத்த உறையாமை  தலைமுறையாகக் கடத்தப்பட்டதுபோல் மற்றைய நோய்களும் கடத்தப்படலாம் என்பதற்குப் பல உதாரணங்கள் உள்ளது.  

எனக்கு நாய் ,  பூனைகளோடு  45 வருடத் தொழில் அனுபவம் உள்ளது.  மனிதர்கள் போல் இனத்தைப் பெருக்க கால் நூற்றாண்டுகள் அவை காத்திருக்கத் தேவையில்லை . ஆறு மாதத்தில் அவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. அதனால் அவற்றின் விளைவை விரைவில் பார்க்க முடிகிறது .

எனது மிருக வைத்திய நிலையத்தில் நடந்த விடயத்தை உள்கலவி என்ற தலைப்பில் முன்பு  எழுதினேன்

ஷரன் – தனது ‘நாய்’ விவகாரம் தொடர்பாகத் தொலைபேசியில் அடிக்கடி ‘அலுப்பு’ கொடுப்பவள். ஒருநாள் இரவு – எனது   கைத்தொலைபேசி சிணுங்கியது.

அவளேதான்.

” எனது நாய் பிரின்சஸ் குட்டிபோடுவதற்கு மிகவும் சிரமப்படுகிறது.” – என்றாள்.

குறிப்பிட்ட  நாய் கர்ப்பமடையக் காரணமான நாய் பற்றி விசாரித்துவிட்டு, சொற்ப வேளையில் மீண்டும்  அழைக்குமாறு சொன்னேன்.  சுமார் இரண்டு மணித்தியாலத்தின் பின்பு தனது நாய்க்கு ஆண்குட்டி பிறந்திருக்கிறது  என்ற தகவலை ஷரன் சொன்னாள்.

இச்சம்பவம் நடந்து ஆறுமாதங்களின் பின்னர் மீண்டும் அவளிடமிருந்து தொலைபேசி . ”என்ன?” –  என்று  கேட்டேன்.

  “ பிரின்சஸ் குட்டிபோட மிகவும் சிரமப்படுகிறது ” – என்றாள் ஷரன்.

”எந்த நாய்?” – என்று பிறக்கவிருக்கும் குட்டியின் தந்தை நாயை விசாரித்தேன்.

ஒஸ்கார்- என்றாள். ”அப்படியா…. ஆறுமாதத்திற்கு முன்பு பிரின்சஸிற்கு பிறந்ததுதானே இந்த ‘ஒஸ்கார்’- எனது சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தக் கேட்டேன்.

”ஆமாம்…. ஒஸ்கார் தான் காரணம்.”

”ஷரன்… இப்படி உள்ளின கலப்பு செய்தால் குட்டி ஊனமாகத்தான் பிறக்கும். அதனால் – எதற்கும் ஓஸ்காருக்கு  சத்திர சிகிச்சை  (விதை எடுத்தல்) செய்யவேண்டும் ” – என்றேன்.

நல்ல வேளையாக – பிறந்த குட்டி ஆரோக்கியமாகப் பிறந்தது. அது ஒரு  பெண்குட்டி.

மேலும் ஆறுமாதம் கடந்த பின்பு, குறிப்பிட்ட பெண் நாய்க்குட்டி, பிரசவத்திற்குத் தயாராக இருப்பதாகவும் பிரசவத்திற்கு சிரமப்படுவதாகவும் ஷரன்  தொலைபேசியில்  சொன்னாள்.

”சரி….. இந்தமுறை இந்தப் பெண் குட்டியைத் தாயாக்கிய நாய் எது?” என்று சந்தேகத்துடன் கேட்டேன். ‘ஓஸ்கார் ‘ – என்ற பதில் கேட்டுத் திகைத்தேவிட்டேன்.

‘ஒஸ்கார் தாயுடனும் – தங்கையுடனும்? ‘எனக்கு ஆத்திரம்தான் வந்தது. ”ஷரன்…. உங்களுக்கு எவ்வளவு சொல்லியும் பலன் இல்லை. பிறக்கும் குட்டி ஊனமுடன்தான் பிறக்கப்போகிறது  “ எனச் சொல்லி இணைப்பை துண்டித்தேன்.

ஒரு வாரத்தின் பின்பு , ஷரன் – சிறிய நாய்க்குட்டியைக் கொண்டுவந்து கருணைக் கொலை செய்யுமாறு கேட்டாள். அதற்கு ஒரு கால் இல்லை. அதனால் அப்படி ஒரு வேண்டுகோள்.

 “ இப்பொழுதாவது உணர்ந்தால் சரி. இரண்டு தலைமுறைக்குள் உள்ளின கலப்பு விருத்தி செய்தால் விளைவு இப்படித்தான் அமையும்” – எனச் சொன்னேன்.

கலாச்சாரமாக நமது சமூகத்தில் நடக்கும் திருமண உறவுகளை  நான் எதிர்க்கவில்லை. மற்றவர்களுக்கு உபதேசிக்கவில்லை.   எனது காலில் குத்திய கல்லால் நான் நொண்டுகிறேன் எனச் சொல்வதுடன் அந்தக்கல்லை நாம் தூர எடுத்தெறியமுடியும் என்கிறேன் – அதுவே இந்தக் கட்டுரையின் நோக்கம்.  

—0—

 

 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 263 ஆம் இதழ்கவிதைகள்
author

நடேசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *