இது காதல் கதை அல்ல!

This entry is part 7 of 12 in the series 13 பெப்ருவரி 2022

 

 

கே.எஸ்.சுதாகர்

சனிக்கிழமை மதியம். சாப்பாட்டு மேசையில் அப்பாவும் அம்மாவும், தமது மகனுடன் சேர்ந்து உணவருந்துவதற்காக, அவனது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கின்றது. நண்பர்களுடன் சுற்றிவிட்டு வந்திருந்தான் மகன். கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தான்.

“அப்பா… இப்ப உங்களுக்கு வயது அறுபதைத் தாண்டிவிட்டுது. நீங்கள் உங்கட முதுமைக்காலத்தில உடம்புக்கு முடியாத வேளையில எங்கை இருக்க விரும்புறியள்?”

சாப்பாட்டு மேசையில் வட்டமாகச் சுற்றியிருந்து உணவருந்திக் கொண்டிருந்த வேளையில், திடீரென்று அப்பாவைப் பார்த்து மகன் பீடிகை போட்டான். அப்பா நிமிர்ந்து மகனைப் பார்த்தார். பின் மனைவியைப் பார்த்தார். மனைவி தன்னை விட வயதில் குறைந்தவள் என்பதால், மகன் இந்தக் கேள்வியை முதலில் தன்னிடம் கேட்டிருக்கலாம் என நினைத்தார்.

“நீ என்ன நினைக்கிறாய் மகனே!” என்று கேள்வியைத் திருப்பி மகனிடம்  உருட்டி விட்டார் அப்பா.

“அப்பா… உங்களை நீங்களே பாத்துக் கொள்ள முடியாத சந்தர்ப்பம் வரேக்கை, நீங்கள் என்ன சொல்லுவியள் எண்டு எனக்குத் தெரியாது. அப்ப நீங்கள் சொல்லுறதையும் என்னாலை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்ப நீங்கள் சுய நினைவோடை இருக்கேக்கை சொல்லுற பதில் தான் சரியா இருக்கும். நீங்கள் இந்த வீட்டிலேயே என்னோடை இருக்க விரும்புகிறியளா அல்லது முதியோர் காப்பகத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?”

“ஏன் இப்ப இந்தக் கேள்வி? பேசாமல் சாப்பிடு” என்றார் அம்மா.

“அம்மா… நான் கேட்கிறது அப்பாவுக்கு எண்டல்ல. உங்களுக்கும் தான். எனக்கெண்டா நீங்கள் என்னோடை இருக்கிறதுதான் விருப்பம். ஆனா என்னாலை உங்களை முழுமையா பராமரிக்க முடியும் எண்ட நம்பிக்கை இல்லை. அதுக்குக் காரணம் வேலை. வேலை வேலை எண்டு அலைஞ்சுபோட்டு, உங்கட மனம் கோணாமல் முழுமையாப் பாக்கலாம் எண்டு நான் நினைக்கேல்லை. முதியோர் காப்பகம் பரவாயில்லை எண்டு நினைக்கிறன்.”

“நீயே கேள்வியையும் கேட்டு பதிலையும் சொல்லு” என்றார் அம்மா.

“அப்பிடியில்லை… உங்கடை பதில் என்னவெண்டு அறிய விரும்புறன்.”

“மகனே! இயலுமானவரை நானும் அம்மாவும் ஒண்டா இருக்க விரும்புறம். மற்றது முதியோர் காப்பகம் எண்டா எனக்கு பக்கத்திலை நாலு தமிழர்கள் எண்டாலும் இருக்க வேணும். முகட்டை முகட்டைப் பாத்துக்கொண்டு, மூக்குச் சொறிஞ்சுகொண்டு இருக்கேலாது. தமிழ் படங்கள் சீரியல்கள் போட்டுக் காட்டிற இடம் வேண்டாம். எதுக்கும் முதலிலை நீ ஒரு கலியாணத்தைச் செய். அதுக்குப் பிறகு நான் என்ரை முடிவைச் சொல்லுறன்.”

அம்மா கையைத் தட்டிக் கெக்கட்டம் விட்டுச் சிரித்தார். மருமகளைப் பொறுத்துத்தான் தன் பதில் அமையும் என்பதைக் கணவர் பூடகமாகச் சொல்லுகின்றார் என நினைத்தார் அவர்.

மகன் முப்பது வயது கடந்தும் திருமணம் செய்கின்றான் இல்லை. பேசிச் செய்யும் கலியாணத்திலையும் அவனுக்கு விருப்பம் இல்லை. தானாகப் பார்க்கின்றானும் இல்லை என்பது அம்மா அப்பாவின் கவலை.

“இருங்கோ… ஒரு நிமிஷத்திலை வந்திடுவன்.” இருக்கையை விட்டு எழுந்தான் மகன்.

“இப்ப எங்கை போறாய்? சாப்பாட்டை முடிச்சுக் கையைக் கழுவிப் போட்டுப் போ.”

“வெளியிலை காருக்குள்ளை ஒரு ஆள் இருக்கு. உங்களுக்கு அறிமுகப்படுத்த வேணும்.”

அம்மாவும் அப்பாவும் திகைத்துப் போனார்கள்.

“காருக்குள்ளை வைச்சுப் பத்திரமாப் பூட்டிப்போட்டு வந்திருக்கிறான்” என்றார் அப்பா. கதவைத் திறந்து மகன் போகும் திசை நோக்கி இருவரும்  பார்த்தார்கள். காருக்குள் இருந்து ஒரு வெள்ளை இனத்துப் பெண் குதித்து இறங்கினாள். குதியுயர்ந்த செருப்பு, குல்லாவுக்குள்ளால் கூந்தல் இறங்கி கழுத்துவரை படந்திருந்தது. கூலிங்கிளாஸ் போட்டிருந்தாள். இறங்கியதும் மகனைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சினாள்.

“நான் முதியோர் காப்பகத்தைத்தான் விரும்புறன்” வாயிற்குள் முணுமுணுத்தார் அப்பா.

“ஹாய்… ஐ ஆம் ஜூலி” என்றபடியே அந்தப்பெண் கையை நீட்டினாள்.

“கொரோனா பிள்ளை… கொஞ்சம் தள்ளி நில்” என்று சொல்வதற்கு வாயெடுத்த அம்மா, பின், தன் மகனுடனே கூட வந்திருக்கின்றாள், கொரோனாவாவது மண்ணாங்கட்டியாவது என நினைத்துக்கொண்டு கையை நீட்டினார். அவளின் கை அவருக்குக் குளிர்ச்சியாகத் தெரிந்தது.

“வா பிள்ளை… வீட்டுக்குள்ளை இருந்து கதைப்பம்” ஆங்கிலத்தில் தடுமாறினார் அம்மா. அப்பா, ஜூலியை நோட்டம் விடுவதில் இருந்தார். மகனுக்குத் தோதாக உயர்ந்து மூக்கும் முழியுமாக அவள் இருந்ததைப் பார்த்து அரை மனது கொண்டார்.

சாப்பாட்டு மேசையில் இப்பொழுது நான்குபேர்கள் இருந்தார்கள். அம்மா அவளுக்கு சாப்பாடு போட்டு தட்டில் குடுத்திருந்தார். ஜூலி குனிந்த தலை நிமிராது அடக்க ஒடுக்கமாக இருந்தாள்.

`எல்லா இனத்திலையும் நல்லவையும் இருக்கினம். கெட்டவையும் இருக்கினம். எல்லாம் அவரவர் மனங்களைப் பொறுத்தது’ அம்மாவின் மனதில் தத்துவம் ஓடியது. இருந்தாலும் ஒரு `தமிழ்ப்பிள்ளை’ வரவில்லையே எண்ட ஏக்கம் பிறந்தது.

“எங்கையடா இவளைப் பிடிச்சாய்?” அம்மாவின் கேள்விக்கு, “அம்மா ஜூலிக்கு தமிழ் விளங்கும்” என்றான் மகன். “ஒண்டா வேலை செய்யுறம்” என்றாள் மருமகள்.

“பிள்ளை சாப்பிடும்…”

ஜூலி கையினால் உணவைப் பிசைந்து ஒரு கவளம் வாயில் போட்டாள். பின்பு, ”நான் அப்பளம் பொரிப்பேன், பருப்பு சமைப்பேன், முருக்கங்காய் குழம்பு வைப்பேன், உங்களைக் கவனமாப் பாப்பேன்” என்று கொஞ்சும் தமிழில் ஜூலி சொன்னாள்.

“இவன் தமிழ் எல்லாம் படிப்பிச்சுத்தான் கூட்டி வந்திருக்கிறான் போல” என்று சிரித்தபடியே அப்பா சொன்னார்.

“இவ தமில் நல்லா படிப்பிச்சு” ஜூலி ஒவ்வொரு சொல்லாச் சொல்ல, எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

  •  

 

Series Navigationஇந்திரன் சிறப்புரை:   திராவிட சிற்பங்களும் அதன் அழகியலும்   சுயம் தொலைத்தலே சுகம்
author

கே.எஸ்.சுதாகர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *