அவ்வை நோன்பும் பெண் மன உளவியலும்

author
0 minutes, 6 seconds Read
This entry is part 2 of 10 in the series 22 மே 2022

முனைவர் ம இராமச்சந்திரன்

மக்கள் இணைந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் உருவாக்கப்பட்டது சமுதாயம்.
மனிதனது தேவைகள் அனைவருக்கும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளைக் களைவதற்கான ஒரு அமைப்பாகச் சமுதாயம் உருவாக்கப்பட்டது.
மக்களிடையே தோன்றும் பொருளாதாரச் சிக்கல்கள் அதிகார ஏற்றத்தாழ்வுகள் பண்பாட்டு இயலாமைகள் முதலியவற்றைச் சமன்படுத்துவதற்காக மக்களிடையே காணப்படும் முரண்பாட்டை நீர்த்துப்போகச் செய்வதற்கும் சமுதாயம் துணையாக இருந்தது. சமுதாயத்தில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று அவரவர் தேவைகள் விருப்பங்கள் ஒரு ஒழுங்குமுறையில் நடப்பதற்கும் நடக்காமல் போவதற்கான செயல்பாடுகள் கட்டமைக்கப்பட்டன என்ற வகையில் பெண்களின் திருமண தேவையைச் சார்ந்து சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட நடைமுறை செயல்பாடு அவ்வை நோன்பு.

நோன்பு

நோன்பு என்றால் மனதில் தோன்றும் ஒரு நோக்கம் நிறைவேற உடலாலும் மனதாலும் பின்பற்றப்படும் சில ஒழுங்குமுறை செயல்பாடு என்று அழைப்பர். இதனை, “சாப்பிடும் உணவு வேலைகளைக் குறைத்தோ சில எளிய உணவுகளை மட்டும் உண்டோ இறைவனை நினைத்துச் செய்யும் பிரார்த்தனை நோன்பு” என்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி 2008, சென்னை, எடுத்துக் கூறுகிறது.

நோன்பு என்றால் தவம், விரதம்  என்றும் நோற்பார், நோன்பாளி, நோன்பு நோற்றல்  (நோறு-வாய்) நோன்பி, விரதி, நோன்பு இருத்தல், நோன்பு நோற்றல், நோன்பு பிடித்தல், (நோன்பு – பொறுமை, வலிமை, பெருந்தன்மை) நோன்றல் – தொ.பெ பொறுத்தல், தள்ளல், நிறுத்தல், நோனாமை, தவம் செய்யாமை, ஆற்றாமை, நோனார் – தவம் இல்லாதவர், ஆற்றாதவர். மேலும்,

பொறுமை, பொறுத்தல், பெருந்தன்மை, பாவம் என்று மெய்யப்பன் தமிழ் அகராதி முனைவர் சா.வே சுப்பிரமணியன், டிசம்பர் 2006, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108, எடுத்துக் கூறுகிறது.

நோன்பு – விரதம், தவம் என்றும்
நோன்மை – பொறுமை, வலிமை, பெருந்தன்மை, தவம்,
நோற்றல் – பொறுத்தல், தள்ளுதல், நிலை நிறுத்துதல்.
நோற்பு – பொறுமை

“நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து” – திருக்குறள் 1132.

என்று சுராவின் தமிழ் – தமிழ்-ஆங்கில அகராதி நவம்பர் 2007, சுரா காலேஜ் ஆப் கம்பெடிசன் சென்னை 40, நோன்பு என்ற சொல்லுக்கான விளக்கத்தைத் தந்துள்ளது.

அவ்வை

அவ்வை என்ற சொல்லானது ஒரு படிமமாக விளங்குகிறது. ஒவ்வொரு காலத்திலும் அவ்வை என்ற சொல்லானது பெண்ணின் சுய சார்பை எடுத்துக் கூறுவதாக வந்துள்ளது. ஒரு குறியீடாகவும் மாறி உள்ளதை அறிய முடிகிறது.

அவ்வை என்றால் தவ பெண், தாய், அவ்வையார் என்று மெய்யப்பன் தமிழ் அகராதி எடுத்துக் கூறுகிறது.

அவ்வை – தாய், மூதாட்டி,
சுராவின் தமிழ் – தமிழ் – ஆங்கில அகராதி பொருள் விளக்கம் தருகிறது.

அவ்வை நோன்பு

அவ்வை நோன்பு என்கிற வளமை பெண்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கான பொருளை அகராதிகள் எடுத்துக் கூறுகின்றன. இதில்
அவ்வை நோன்பு – செவ்வாய் கிழமையில் பெண்கள் நோற்கும் ஒரு நோன்பு என்று மெய்யப்பன் தமிழ் அகராதியும்,

அவ்வை நோன்பு – செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் நோற்கும் நோன்பு வகை என்று சுரா அகராதியும் விளக்கம் தருகின்றன.

நோன்பு நோற்கும் முறை

அவ்வை நோன்பு ஆண்டில் மூன்று மாதங்களில் நோக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆடி மாதம், தை மாதம் மற்றும் மாசி மாதங்களில் விரதம் இருக்கலாம் என்பதை அந்தி நாவல் எடுத்துக் கூறுகிறது.

“ஆத்தா இத ஆடி மாசம் மட்டும் தான் விரதம் இருப்பாங்களா?
இல்லம்மா. தையிலும் இருக்கலாம் மாசியிலும் இருக்கலாம். தவழ்ந்தா தையிலும் மறந்தா மாசியிலும் அசந்தா  ஆடியிலும் நோன்பு இருக்கலாம்” என்று நாவலாசிரியர் சுந்தரபாண்டியன், ஆறுமுத்தாயின் மூலமாகத் தெளிவுபடுத்துகிறார்.

நோன்பில் கலந்துகொள்ளும் பெண்கள் மாலையிலேயே உணவு சாப்பிட்டுவிட்டு வரவேண்டும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் பெண்கள் கலந்துகொள்ள வேண்டும். விரதமிருக்கும் போது பின்பற்றப்படும் செயல்களைப் பற்றி யாரிடமும் கூறக் கூடாது. நோன்பின்போது கொழுக்கட்டை அவித்து அதனைப் படைத்து விரதம் இருப்பார்கள். அதற்காகச் செய்யப்படும் கொழுக்கட்டை பல வடிவங்களில் காணப்படும். இதனை அந்நாவலில் விரிவாக ஆறுமுக தாயின் மூலம் எடுத்துக் கூறுகிறார் நாவலாசிரியர். இதனை,

“அன்றைக்கு ஒத்தப்படை எண்ணிக்கையில பொண்ணுக வந்தாங்க. இரவு பத்து மணிக்கு எல்லாரும் வந்துட்டாங்க.” என்றும்,

“இங்க நடக்குறத சொல்றத யாரும் வெளியில் சொல்லக் கூடாது அப்படி யாராவது சொன்னா அவங்க கண்ணு அவிஞ்சு போகும்” என்றும்,

“அவங்க பல்வேறு உருவத்துல கொழுக்கட்டை செஞ்சாங்க கிளவி, கெழவன், ஆண்குறி, பெண்குறி, கை, கால், காது, தாடை, கம்பு, மண்டையோடு, சட்டி, அம்மி, குழவி, விளக்குன்னு என்னென்னமோ செஞ்சு அவிச்சாங்க. சுவர்ல கண்ணாடிய சாட்சி வச்சு அதுல கெளவி உருவத்தைச் சும்மா வரைஞ்சு வச்சாங்க. ஏழு குளத்து மண் கொண்டு வந்து அவ்வையார் உருவம் செஞ்சு கண்மலர் வச்சு,  புங்கம் இலை, புளிய இலைகளோடு உதிரிப் பூ குங்குமம், கும்பத்து மேல தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம், சூடம், சாம்பிராணி திருநீரு எல்லாம் வச்சாங்க” என்று அவ்வை நோன்பு நோற்பதன் நடைமுறைகளை அந்தி நாவல் எடுத்துக் கூறுகிறது.

பிறகு விரதம் இருப்பவர்களில் வயது முதிர்ந்த பெண் இந்த விரதத்தை வழிநடத்தி செல்லும் நோன்பின் உச்சத்தில் ஒழுக்க நெறிகள் எடுத்துக் கூறப்படும் . இந்தக் கதை பெண்களின் சமூக வாழ்வை ஒழுங்கமைக்கும் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்து வருகிறது. பிறகு அவர்கள் தயார் செய்த கொழுக்கட்டைகளை அவர்களே சாப்பிடவேண்டும். எதனையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்ல கூடாது .விரதம் இருந்த இடத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து காலையில் அவரவர் வீடு சென்று விடுவார்கள். இந்த நோன்பின் நிலை ஆண்களுக்குத் தெரியக்கூடாது என்று முதிய பெண்கள் எடுத்துக் கூறுவார்கள். இதனை,

“ஆத்தா எல்லாருடைய கொழுக்கட்டைப் பாத்திரங்களிலும் பிள்ளையார் கொழுக்கட்டை வைத்துச் சூடம் காட்டினார். புங்க இலையையும்  புளிய இலையையும் அவங்க கிட்ட கொடுத்து அம்மனுக்குப் போட்டாங்க” என்றும்,

ராத்திரி நாலு மணி இருக்கும் போது எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்குப் புறப்பட்டாங்க. அப்ப ஆத்தா ‘கொழுக்கட்டையை ஆம்பளைங்களுக்குக் கொடுக்கக்கூடாது. பொம்பளங்க மட்டும் தான் சாப்பிடணும் என்று சொல்லி அனுப்புவாள்’ என்பதன் மூலம் அவ்வை நோன்பின் அடிப்படையை உணர முடியும்.

கதையும் பண்பாட்டுக் கட்டமைப்பும்

அவ்வை நோன்பின் முக்கிய நிகழ்வாக அமைவது கதை கூறுவதாகும். நோன்பு இருக்கும் பெண்களின் மூத்தவர் நோன்பாள் ஏற்படும் நன்மைகளைச் சார்ந்த குடும்ப கதையை எடுத்துக் கூறுவதைப் பெண்கள் குடும்பத்தின் நலனைக் கருத்தில் கொண்டு விரதம் இருக்க வேண்டும் என்பதும் விரதம் இருக்காமல் இருந்தால் துன்பம் ஏற்படும் என்றும் கதை கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்நாவலில் சுந்தரபாண்டியன் ஆறுமுகத்தின் வாயிலாகப் பெண்களின் நடத்தை முறைகளை எடுத்துக் கூறுகிறார். இதனை ‘அவ்வையை நெனச்சி நோன்பு இரு நெல்லு உமியா போகாது’ என்று பிச்சை கேட்கும் கெழவி கூறுவதாகக் கூறப்படுகிறது. இதனை வண்ணதாசன் தனது ஒரு சிறு இசை சிறுகதையிலும் பதிவு செய்துள்ளார்.

பொருள் உற்பத்தியில் ஈடுபடும் ஆண்கள் அதே நேரத்தில் குடும்ப அமைப்பைப் பாதுகாக்க முடியாமல் துன்பப்பட்டனர். சமூகத்தில் நீண்ட நெடிய போராட்ட வாழ்க்கையில் குடும்ப அமைப்பை நெறிப்படுத்த ஆண்களால் பல வழிமுறைகள், கலை இலக்கியங்கள் மூலமாக உருவாக்கப்பட்டன.  அவ்வை நோன்பு அவற்றில் ஒன்று. தாய் தங்கை மனைவி மகள் என்ற குடும்ப உறவில் பெண்களின் இருத்தல் முக்கியத்துவம் பெறுகிறது. பெண்கள் குடும்ப உறவில் தங்களின் அதிகார வரம்பை அறிந்து செயல்பட வேண்டும் என்ற கட்டமைப்பு இங்கே பெண்களால் பெண்களுக்கு ஊட்டப்படுகிறது. குடும்பத்தில் பெண்கள் கற்பு நெறியிலிருந்து இறைவனை வேண்டினால் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்ற கருத்தாக்கமும் அவ்வாறு செய்யவில்லை என்றால் ஆண்கள் பொருள் உற்பத்தியில் எவ்வளவுதான் முனைப்பாகச் செயல்பட்டாலும் அது வளமை சேர்க்காது என்றும் குடும்பம் இல்லாமையில் இருந்தும் துன்புறும் என்ற நிலையும் இக்கதையில் கூறப்படுகிறது. “மயினிமார்கள அழைச்சி வெரதம் இருக்கும்படி வற்புறுத்தினர். அவங்களும் விரதம் இருக்கவே. போன செல்வம் திரும்பவும் வர. வசதி ஆயிட்டாங்க. எல்லாரும் சுகமா இருந்தாங்க என்று தங்கையின் மூலமாகக் கதை சொல்லப்படுகிறது. இயல்பில் அண்ணன் தங்கை பாசம் நிலைத்து அன்போடு வாழ்வதும் தங்கை திருமணமாகி வேறு வீடு சென்ற பிறகு அந்த இடத்தை அண்ணிமார்கள் பெறுவதும் வழமை என்றாலும் அதிகாரம் சுறுக்கப்பட்டதால் குடும்ப ஒத்துழையாமை பெரும் சிக்கலை உருவாக்கி வறுமையைக் கொண்டு வரும். எனவே பெண்கள் அதிகாரப் போக்கை எண்ணாமல் அன்புடை குடும்ப அமைப்பைப் பேணவேண்டும் என்பதால் இறைவன் துணையுடன் கட்டமைக்கப்படுகின்றன.

அந்தவகையில் அவ்வை நோன்பும் உருவாக்கப்பட்ட பண்பாட்டுக் கட்டமைப்பாகும். குடும்பம் என்ற சமூக அமைப்பில் பெண் என்ற உயிர்நிலை தனது விருப்பம், அதிகாரம், தேவை போன்றவைகளை எப்படி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற செயல்முறையாக இதுபோன்ற விரதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

“வண்ணாத்திக்குப் போன செல்வம் எங்களுக்கு வரட்டும் என்று எல்லாரையும் சொல்லச் சொன்னா எல்லாரும் சொன்னாங்க” அந்தி. ப.38

“கொழுக்கட்டையை ஆம்பளைகளுக்குக் கொடுக்கக்கூடாது. பொம்பளைங்க மட்டும் தான் சாப்பிடணும்னு சொல்லி அனுப்பினா. ப. 38

இப்படியெல்லாம் ஆத்தா வாத்திச்சி மாதிரி அந்த ஊருக்கே பாடம் சொன்னா. ப.38

இவற்றின் மூலம் பெண்களுக்கான சமூக ஒழுக்கம் ஆறுமுகத்தாய் போன்ற பெண்கள் மூலமாகக் கதைகளாக, சடங்குகளாக, விரதங்களாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. “கதைகளோடும் பாடல்களோடும் சடங்கு வகைகளோடும் புராணங்களோடும் நாம் அன்றாடம் வாழ்வதையும் இவற்றை உற்பத்தி செய்வதன் மூலம் நம்மை நாமே உயிர்ப்பித்து கொள்கிறோம்” என்று கோவை ஞானி எடுத்துக் கூறுகிறார்.

பயன்பட்ட நூல்கள்

1. அந்தி, சுந்தரபாண்டியன், காவ்யா பதிப்பகம், சென்னை.

2. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, கிரியா. மே 2008 சென்னை 41.

3. மெய்யப்பன் தமிழ் அகராதி, பதிப்பாசிரியர் முனைவர் சுப்பிரமணியன், 2006 மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108.

4 பண்பாட்டு அசைவுகள், தொ. பரமசிவம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

5. ஒரு சிறு இசை, வண்ணதாசன் சிறுகதைத் தொகுப்பு, சந்தியா பதிப்பகம் சென்னை.

  ##########################

Series Navigationபூகோள ராகம்பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *