தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 14 of 17 in the series 5 ஜூன் 2022               

                         

                                              பாச்சுடர் வளவ. துரையன்                 

 

 

                  மாண்என் எண்மரும் நான்முகத்தன

                        மூகை சூழ அமைந்ததோர்

                  ஞாண்என் மஞ்சனம் என்கொல் காரணம்

                        நாரணாதிகள் நாசமே.                            621

 

[மாண்=பெருமை; மூகை=கயிறு; ஞாண்=கயிறு; மஞ்சனம்=நீராட்டு; நாசம்=அழிவு]

 

தேரைவிட்டு இறங்கிய வீரபத்திரரை, பெருமை கொண்ட படைத்தலைவர்கள் எட்டுப் பேரும், நால்வகைப் படைகளும் கயிறு போலச் சுற்றி நின்றனர். போருக்குச் செல்வோருக்குத் திருமஞ்சன நீராட்டு செய்வது போல அவரைச் சுற்றிக் கயிறு கட்டியது போல நிற்பதெல்லாம் எதற்கு? தேவர்களை அழிக்கத்தான்.

                  காடுபோகு சடாமுடிக்கு அபிடேகம்

                        அண்ட கபாலமே

                  ஊடுபோக அநந்த கோடி

                        சகத்ர தாரை ஒழுக்கவே.                         622

 

[காடுபோல வளர்ந்திருக்கும் வீரபத்திரரின் சடாமுடிக்குச் சூடிய மணிமுடி போல அமைந்திருந்தது அண்டத்தின் உச்சியே. வார்க்கும் அபிடேக நீராக அமைந்தது ஆயிரம் கோடித்தாரைகளாக ஒழுகும் ஆகாய கங்கையே.

                  செய்யகைத் திருநாண் அணிந்து அருள்

                         செய்கெனத் திருமங்கலம்

                  துய்ய தும்புரு நாரதாதிகள்

                        வேத வீணை தொடங்கவே.                    623

[செய்ய =-அழகிய; திருநாண்=மங்கலக் காப்பு; திருமங்கலம்=வெற்றி]

 

வீரபத்திரரின் கைகளில் வெற்றி உண்டாகட்டும் என்று வாழ்த்தி, திருமங்கலக் காப்புப் கயிறு கட்டினர். தும்புரு நாரதர் முதலானவர்கள் வீணை மீட்டி  வேதம் ஓதி வாழ்த்திப் பாடினர்.

                  பொதியில் வாழ்முனி புங்கவன் திரு

                        வாய்மலர்ந்த புராணநூல்

                  விதியினால் வருதும்பை மாலை

                        விசும்பு தூர மிலைச்சியே.                          624

 

[பொதி=பொதிகை மலை; புங்கவன்=அறிவில் சிறந்தோன்; திருவாய் மலர்ந்த= சொல்லிய; புராண நூல்=அகத்தியம்; விதி= போருக்குச் செல்வோர்; விசும்பு=வானம்; தூர=மறைக்க; மிலைச்சி=சூடி]

 

பொதிகை மலையில் வாழும் அறிவிற் சிறந்த அகத்திய முனிவன் சொல்லிய அகத்தியம் வகுத்த இலக்கண முறைப்படி, தும்பை மாலையை விண்ணை மறைக்கத் தலையில் சூட்டினர்.

                    கச்சி யில்சுர சூதசீதள

                        பல்ல வம்கனவில் கலித்து

                    உச்ச்சி யில்பனி வீசு கண்ணியின்

                        வெண்ணி லாவை ஒதுக்கவே.                      625

 

[கச்சி=கச்சியம்பதி எனும் காஞ்சி; சுரம்=மாமரம்; சீதளம்=குளிர்ச்சி; பல்லவம்=கிளை; கனம்-செறிவு; வில்=ஒளி; பனி=குளிர்ச்சி; கண்ணி=மாலை; ஒதுக்கி]

 

அவர் தலையில் மாந்தளிரையும் சூட நினைத்து ஏகாம்பரநாதருக்குத் தண்ணிழல் தரும் குளிர்ச்சி பொருந்திய மாமரத்தின் தளிரைச் சூட, அது அவர் தலையில் சூடியிருந்த பிறைநிலாவை மறைத்தது.

                 

                  மாறில் பேரொளி வட்டம்இட்டு

                        வரம்பிலா மறை மாநிறத்து

                  ஈறில் காலமும் ஞாலமும் கொடு

                        செய்த தேர்மிசை ஏறியே.                        626

 

[மாறில்=வேறு; வட்டம்=சக்கரம்; வரம்பு=எல்லை; மறை=வேதம்; மா=குதிரை; ஈரில்=முடிவில்லாத]

 

முன்பு போலில்லாமல் வேறுவிதமாக பேரொளி வீசும் சூரிய சந்திரர்கள் சக்கரங்களாக அமைய, எல்லையற்ற வேதங்களே குதிரைகளாகவும், முடிவில்லாத காலமும், பூமியுமே தேர்த்தட்டாகவும் அமைந்த வேறு ஒரு தேரில் வீரபத்திரர் ஏறினார்.

                  கால்பிடித்து நிவந்த தேர் தம

                        காணியாய் வழி வந்துமுட்

                  கோல்பிடித்து வலம் செய்து ஏறி

                        விரிஞ்சன் ஒருவன் கொள்ளவே.                   627

 

[கால் பிடித்து=உற்தியாக இருக்கும்படி அமைந்த; நிவந்த=உயர்ந்த; காணி=உரிமை; வழி=பரம்பரை பரம்பரையாக;முட்கோல்=குதிரைச் சவுக்கு; விரிஞ்சன்=பிரமன்]

 

உறுதியாகச் செய்யப்பட்ட, உயர்ந்த தேரை ஓட்டுவதைப் பரம்பரையாக பரம்பரையாக உரிமையாகப் பெற்ற ஒரு பிரம தேவன், தேரோட்டியாக வந்து, குதிரைச் சவுக்கைகத் தன் கையில் எடுத்துக் கொண்டு தேரை வலமாகச் சுற்றி வந்து தேரில் ஏறித் தேரைச் செலுத்தினார்.

                  மாகமே வரும் ஊர் இறக்க

                        விளைந்த நாளில் வளைந்ததோர்

                  நாகமேகொள் பினாகமே கொல்!

                        இடத்திருக்கையில் நண்ணவே.                   628

 

[மாகம்=ஆகாயம்; ஊர்=திரிபுரம்; இறக்க=அழிய; நாகம்=மலை; பினாகம்=சிவன் வில்; கொல்=வியப்பு; நண்ணுதல்=இருத்தல்]

 

ஆகாயத்தில் கோட்டைகள் கட்டி அரசாண்ட முப்புராதிகளின் முப்புரத்தையும், எரிக்கச் சென்ற நாளில். சிவபெருமான் வளைத்த மேரு மாமலையோ? இல்லை சிவபிரான் இடக்கையில் இருந்த பினாகம் எனும் வில்லோ? வீரபத்திரர் கையில் இருந்த வில்!

                  புரம்கொல் அம்புகொல்! வந்துவந்திடை

                        போனபோன புராணர் பொற்

                  சிரம்கொல் அம்புகொல்! என்கொல் ஒன்று

                        வலத் திருக்கை திரிக்கவே.                        629

 

[புரம்=திரிபுரம்; புரானர்=பழங்காலத்தவர்; சிரம்=தலை]

 

சிவபிரானின் வில்லைப் போன்ற வில்லை வீரபத்திரர் தம் இடக்கையில் பற்றியவுடன், அவர் வலத் திருக்கரத்தில் ஓர் அம்பு வந்து தங்கியது. அந்த அம்பு முன்னர் சிவன் திரிபுரத்தை எரித்தபோது ஏந்திய அம்போ? அல்லது அவர் முன்பு பலரின் தலைகளைக் கொய்த அம்போ?

                  ஏனம் எய்தன சிங்கம் எய்தன

                        கற்கி எய்தன எண்ணிலா

                  மீனம் எய்தன ஆமை எய்தன

                        ஆவ நாழிகை விம்மவே.                          630

 

[ஏனம்=வராகம்; எய்தன=அடைந்தன; கற்கி=கல்கி அவதாரம்; மீனம்=மச்சம்; ஆமை=கூர்மம்; ஆவ நாழிகை=அம்பறாத்துணி; விம்ம=பெருக]

 

வீரபத்திரரின் அம்பறாத்துணியில் முன்னர் திருமால் எடுத்த அவதாரங்களான வராகம், சிம்மம், கல்கி, மீன், ஆமை ஆகியவை வந்து தங்கின.

                                         

                 பிடித்த வில்லின் எறிந்த நாண்ஒலி

                        அண்டபித்தி பிளந்துபோய்

                  வெடித்த ஓசையில் அப்புறத்வனி

                        போல மேல்எழ விம்மவே.                     631

 

[எறிந்த=உண்டான; நாண்=வில்லை வளைத்துப் பூட்டியுள்ள கயிறு; பித்தி=முகடு; சுவர்; அப்புறத்வனி=எதிரொலி; விம்மல்=கலங்குதல்]

 

வீரபத்திரரின் நாண் ஒலி அண்டகோளத்தை முட்டி மோத, அது பிளந்த வெடித்த ஓசையின் எதிரொலி எங்கும் பரவிக் கதி கலங்க வைத்தது.

                  சூலமோ! புவனங்க ளுக்கும்

                        முகுந்தன் ஆதி சுரர்க்கு  மாய்

                  காலமோ! எனவந்தது அந்தில்

                        கணிச்சியும் கனல் காலவே!                      632

 

[சூலம்=திரிசூலம்; புவனம்=உலகம்; முகுந்தன்=திருமால்; ஆதி=முதலான; சுரர்=தேவர்; மாய்காலம்=அழியும்; காலம்; அந்தில்=அவ்விடத்தில்; கணிச்சி=மழுப்படை; கனல்=நெருப்பு; காலவே=எரியவே]

 

வீரபத்திரரின் அம்புகள் சூலம் போலவும்,  மழுப்படை போலவும் தேவர்களுக்கும் மூவுலகுக்கும் அழியும் காலம் வந்தது எனக் குறிப்பது போல எரியும் நெருப்புக் கனலுடன் வந்து  சேர்ந்தன.

                  புனைந்துவந்த மதிக்கு முன்பு

                        பயந்த வேலை பொறாமையால்

                  நினைந்து வந்து அமுதம் சொரிந்தென

                        மாலை வெண்குடை நிற்பவே.                   633

 

[புனைந்த=இருந்த; மதி=சந்திரன்; பயந்த=பெற்ற; வேலை=கடல்; பொறாமையால்=தாங்கிக் கொள்ள மாட்டாமல்]

 

வீரபத்திரருக்கு வெண்குடை ஒன்று புதிதாகப் பிடிக்கப்பட்டது. அது வெண்கொற்றக் குடையின் வெண்மையைப் பொறுக்க இயலாமல் பாற்கடலில் தோன்றிய சந்திரன், தானே குடையாக வந்ததைப் போல இருந்தது

                  அமைய நிற்கும் அலங்கல்ஏறு

                        பிறங்க வெண்கொடி ஆடுமால்

                  இமைய வெற்பும் அதன்கண் நின்றும்

                        எடுத்த கங்கையும் என்னவே.                  634                    

                 

[அலங்கல்=மாலை; ஏறு=இடபம்; பிறங்க=விளங்க; வெற்பு=மலை]

     

வீரபத்திரரின் தேரில் தருமமே வந்தமர்ந்தது போல மாலை அணிந்த இடபக் கோடி அசைந்தாடியது. அது இமயமலையிலிருந்து வெளிப்படும் கங்கை நதி அசைந்தாடி மேல்நோக்கிப் பாய்வது போலிருந்தது.

                  வாசவன் தசநூறு கண்ணும்

                        மறைந்து பேரிருள் மண்டவே

                  கேசவன்தகை மௌளி போய்இருள்

                        கெட்ட கேடு கிடக்கவே.                           635

 

[வாசவன்=இந்திரன்; மண்டுதல்=நிறைதல்; கேசவன்=திருமால்; கேடு=மதிப்பு; கெட்ட=அழிந்த]

 

வீரபத்திரரின் கையில் இருந்த ஆயுதங்கன் ஒளிபட்டு இந்திரன் உடலில் இருந்த ஆயிரம் கண்களும் அவிந்தன. எங்கும் இருள் பரவியது. அதனால் திருமாலின் மணிமுடியில் பதிக்கப்பட்டிருந்த மாணிக்க மணிகளும் ஒளிகெட்டு மதிப்பிழந்தன.

                     

                  சடைகொல் வெம்மழு வாய்கொல் உண்டு

                        புனற் பெருந்தகை சாயவே

                  கடைகொல் தீகொள் கரங்கொல் வவ்வி

                        இருந்த அத்தி கரிந்தவே.                          636

 

[வெம்=வெப்பம்; மழுவாய்=மழுவால்; பெருந்தகை=வருணன்; சாய=மறைய;

வவ்வி=கவ்வி; அத்தி=கால்]

 

வீரபத்திரரின் சடாமுடி உறிஞ்சியதாலோ அல்லது அவரின் எரிமழு நெருப்பில் பட்டு வெந்ததலோ கடலரசன் வருணன் ஓடி மறைய, கடல் நீர் எரிந்து கரிந்து வற்றியது.

                  திங்கள் மண்டிலம் ஏறவெந்து

                        களங்க மல்லது தீயவே

                  வெங்கண் மண்டிலம் ராகுமுற்ற

                        விழுங்கி யொத்து மழுங்கவே.                637

 

[திங்கள்=சந்திரன்; வெங்கண்=சூரியன்; மழுங்கவே=மறையவே]

 

வீரபத்திரரின் மழுப்படையின் எரியும் நெருப்பு சந்திரமண்டலம் வரை சென்றது. சந்திரனின் களங்கம் தவிர மற்ற பகுதிகள் தீய்ந்தன. வெப்பமான சூரிய மண்டலமும் இராகு கவ்வியது போல மறைக்கப்பட்டது போலாயிற்று.

                  கொட்ட ஊத எடுத்த பல்இயம்

                        ஐந்தும் வந்து இறைகொள்ளவே

                  இட்ட வெண்குடை வீச சாமரை

                        யாவும் யாரும் இழக்கவே.                         638

 

[கொட்ட=முரசு கொட்ட; ஊது=சங்கு ஊத; பல்இயம் ஐந்தும்=பல இசைக்கருவிகள், தோல்கருவி [மத்தளம்]; துளைக்கருவி [புல்லாங்குழல்; நரம்புக் கருவி [வீணை] கஞ்ச கருவி [கைத்தாளம்] மிடற்றுக் கருவி [வாய்ப்பாட்டு]

 

கொட்டி முழங்கவும், ஊதி ஒலி எழுப்பவும், ஐந்து வகை இசைக்கருவிஉகள் ஒலி எழுப்பவும், பிடித்த வெண்கொற்றக் குடை. வெண் சாமரம் முதலானவற்றைத் தேவர்கள் இழந்தனர்.

                  சூட என்று வகுத்த தும்பை

                        புராரி சேவடி தோயவே

                  வீட என்று எடுத்த தும்பை

                        சுரேசர் மௌளி மிலைச்சவே.                      639

 

[வகுத்த=குறித்த; புராரி=சிவபெருமான்; வீட=அழிய; சுரேசர்-இந்திரன்; மௌளி=தலைமுடி; மிலைச்சவே=தலைசூடவே]

 

வீரபத்திரரின் தலைமுடியில் சூட ஏற்றதான தும்பை மாலை சிவபெருமானின் திருவடிகளை அர்ச்சிக்கும் பொருளானது. தேவர்கள் போரிட அணிந்த மாலை அழிந்தவர்க்கு இடும் மாலையாயின.

                  விட்ட ஊர்தி அனைத்தும் உம்பரை

                        வீசி வந்தன விம்மவே

                  தொட்ட ஆயுதம் முற்றும் மற்றவர்

                        கை துறந்தடி சூழவே.                              640

 

[ஊர்தி=வாகனம்; தொட்ட=தொடுத்த; கைதுறந்து=தாக்குதலின்றி]

 

வீரபத்திர்ர் தொடுத்த ஆயுதங்கள் எதிரிகளைத் தாக்கிவிட்டு மீண்டும் அவரிடமே வந்தன. தேவர்கள் விட்ட ஆயுதங்கள் வீரபத்திரரைத் தாக்காது அவரிடமே சேர்ந்தன.

                 

       

                  போகையேஎன வைன தேயனும்

                        அன்னமும் குடி போகவே

                  கூகையே மிடை காகமேஅவர்

                        கொடிமிசைக் குடி கொள்ளவே.

 

[போகையே=போய் விடுவதே; வைனதேயன்=கருடன்; கூகை=கோட்டான்; மிடை=நெருங்கி;மிசை=மேல்]

 

கருடனும் அன்னமும் இனி இவ்விடம் விட்டுப்  போவதே மேல் என முறையே திருமால். பிரமன் கொடிகளிலிருந்து போய்விட, கோட்டானும், காகமும் வந்து கொடிகளில் குடி புகுந்தன.

                  பின் வரும்சுடர் ஆழியான் நடு

                        வாக மீது ப்ரதானராய்

                  முன்வரும் சுரரொடும் இந்திரன்

                        வந்து தோமரம் முட்டவே.                  642

 

[ஆழி=சக்கரம்; ப்ர்தானராய்=முதன்மையானவராக; தோமரம்=இரும்புலக்கை]

 

பின்னர் ஒளிவீசும் சக்ராயுதத்தை உடைய திருமால் முதன்மையானவராக இருக்க, முன்னே வந்த தேவர்களுடன் இந்திரன் வந்து இரும்புலக்கை எடுத்தெறிந்து போரைத் தொடங்கினான்.

                  புரண்டு மின்னும் நெடுநாண் நுடங்குவன

                        மேகராசி பொழியப் புறத்து

                  இரண்டு வில்லும்என இந்திர சாபமுடன்                 

                        யந்திர சாபமுடன் இறங்கவே.                     643

 

[நுடங்குவன=அசைவன; மேகராசி=மழைமேகம்; இந்திரசாபம்=வானவில்; யந்திரவில்=மேருமலையான வில்] 

 

மின்னுகின்ற மேகக்கூட்டம் வளைத்த வானவில்லும் மேருமலையும் எதிரெதிரே தோன்றியது போல இந்திரன் மற்றும் வீரபத்திரர் தம் இரு விற்களையும் எடுத்து எதிரே நின்று போரிடத் தொடங்கினர்.

                  சேய கண்கனல முராரி தங்கள் கடல்

                        செல்க என்ன அது சென்றதால்

                  நாயகன் பரசுபாணி வேணி ஒரு

                        நாக நாவினை நனைந்த தால்.                  644

 

[சேய=சிவந்த; முராரி=திருமல்; பரசு=மழு; பாணி=கை; வேணி=சடை]

 

செந்தாமரைக் கண்ணனான திருமால் கண்கள் மேலும் சிவந்து நெருப்பைச் சிந்த செல்க எனப் பாற்கடலுக்கு ஆணையிட, கடலும் சென்று வீரபத்திரர் கையில் மழு ஏந்திய, சடைமுடியில் அணிந்திருந்த நாகத்தின் உணவாயிற்று. பாம்பு பாற்கடலை உறிஞ்சி விட்டது.

                  படப்படப் பெரும்பரவை ஆயிரம்

                        பள்ளி மால்எதிர் பரப்பினான்

                  விடக்கருங் கணினது ஐயர் கைத்தொடி

                        விழித்தது அன்றவையும் வேவவே.               645

 

[படப்பட=அழிய அழிய; பரவை=கடல்; பள்ளி=படுக்கை; விடம்=நஞ்சு; ஐயர்=வீரபத்திர்ர்; கைத்தொடி=கங்கணம்; வேவ=வெந்து போக]

 

ஒரு பாற்கடல் நாகத்திற்கு இரையானதைக் கண்டு பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமால், பல ஆயிரம் பாற்கடல்களைப் படைத்து ஏவினார். வீரபத்திரர் கையில் கங்கணமாகக் கட்டியிருந்த விடமும் கருமையான கண்களும் கொண்ட ஒரு பாம்பு [இதைத் திட்டி விடம் எனக் கூறுவார்கள்; கம்பராமாயணத்தில் கும்பகருணன், ”திட்டிவிடம் அன்ன சீதையை இன்னமும் விட்டிலையோ” என்பான்] கண்விழித்துப் பார்க்க அவை வெந்து வற்றின.

                     

             

                      வையம் உண்டு தனிதுஞ்சும் ஆலைவர

                        மாயனார் விலக நாயனார்

                     ஐயம் உண்டு தருமம் பணித்தருளும்

                        ஆதி ஆல்பொருது அழித்ததால்.              646

 

[வையம்=உலகம்; துஞ்சும்=தூங்கும்; மாயவனார்=திருமால்; நாயனார்=சிவபெருமான்; ஐயம்=சந்தேகம்; தருமம்=அறம்; பணித்தருளும்=உபதேசம் செய்த; ஆதிஆல்=ஆதியாகிய ஆலமரம்]

 

உலகத்தை உண்டு தனியே அரிதுயில் கொண்ட மாயவனான திருமால் ஆலமரத்தை ஏவ, வீரபத்திரர் சற்றே விலகினார், முன்பு சனகாதி முனிவர்களின் சந்தேகத்தைப் போக்கி உபதேசம் செய்ய அமர்ந்த ஆதி ஆலமரம் மாயவனார் ஏவிய ஆலமரத்தை அழித்தது.

                  ஆழி மாயவன்விட ஆதிவானவன் முன்

                        ஆடகச் சிறகின் அருகு புக்கு

                  ஊழி மாருதம் இரண்டு பாடும்வர

                        ஊடு டென்றது அவன் உவணமே.                 647

 

[ஆழி=பாற்கடல்; ஆதிவானவன்=வீரபத்திரர்; ஆடகம்=பொன்; ஊழி=உலகமுடிவுக் காலம்; மாருதம்=காற்று’ உவணம்=கருடன்]

 

மாயவனாரான திருமால் தம் வாகனமாகிய கருடனை வீரபத்திரர் மீது ஏவ, அது தன் பொன்னிறச் சிறகை இரண்டு பக்கமும் விரித்து அடித்துக் கொண்டு சென்றபோது எழுந்த காற்று ஊழிக்காலத்தில் எழும் சண்டமாருதம் போலச் சென்று அவரைச் சூழ்ந்து கொண்டது.

                  இறகுதீய உயிர்தீய வீயும் அதன்

                        வெற்றுடம்பு உலகின் எல்லையில்

                  பிறகு தீஎன எழுந்து வீழ்ந்திட

                        உயிர்த்தது ஐயர்வீடு பெற்றமே.                  648

 

வீரபத்திரர் தம் இடபத்தை ஏவினார். அது எழுப்பிய மூச்சு பெருநெருப்பாய்க் கிளர்ந்து மேலெழ, அதில் கருடன் சிறகு கருகியது. அதுவும் உயிர் மடிந்தது. அதன் வெற்றுடம்பு அண்டமுகட்டுக்கு அப்பால் போய் விழுந்த்து.

                  சக்கரப் படைமுகுந்தன் ஏவ அது

                        தானும் எங்கள் இரைதான் எனா

                  நக்கர் அப்பு அடை சடாடவிப் புடையில்

                        உண்ட றுத்தது ஒருநாகமே.                      649

 

[நக்கர்=சிவபெருமான்; அப்பு=நீர்; அடை=அடைபட்டுள்ள; சடாடவி=சடைக்காடு; புடை=பக்கம்] 

 

திருமால் சக்கரப் படையை ஏவினார். அதுவும் எமக்கு உணவாகத் தக்கது என, சிவபெருமானின் கங்கை நீர் அணிந்த சடாமுடிக் காட்டில் இருந்த ஒரு பாம்பு அந்தச் சக்கரப்படையை உடைத்து உண்டது.

                  ஆலம் ஒன்றும் அமுதம் என்று பண்டுஅமுது

                        செய்யும் ஐயர் பணி அன்றியே

                  சூலம் ஒன்றுதனி சென்று மற்றவன்

                        மணித்துழாய் முடி துணித்ததே.                   650

 

[ஆலம்=சிவபெருமான்; ஆலம்=நஞ்சு; பணி=கட்டளை;]

 

நஞ்சை அமுதம் போல உண்டு தேவர்கள் அமுதம் பெற உதவிய சிவபிரானின் கட்டளை இன்றியே ஒரு சூலம் தனியே சென்று துளசிமாலை அணிந்த திருமாலின் தலையைத் துண்டித்தது.

                     

 

Series Navigationவடகிழக்கு இந்தியப் பயணம் : 12திரும்பத்திரும்பத் துகிலுரியப்படும் திரௌபதி
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *