பயணம் – 6

This entry is part 17 of 17 in the series 5 ஜூன் 2022

னநேசன்

6

            மூன்றாம் நாள் வீட்டை அடைந்தான்.  என்றுமில்லாத வழக்கமாய் அம்மாவின் இருகைகளைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்த்தான்.  மனம் உருகி கண்ணீர் கசிந்தது.  அம்மா அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவளது இடுங்கிய கண்கள் இவனது முகத்தை ஊடுருவியது.  இவனது முகத்தில் அவளது சொந்தம் சுருத்துக்கள் நிழலாடுவதைப் பார்த்தாளோ…

            மனைவி மல்லிகா வந்து, “என்னங்க, அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா, என்ன சொன்னாங்க” என்றபடியே கொண்டு வந்த பைகளை நோட்டமிட்டாள்.  அம்மா இயல்பு நிலைக்கு வந்தவளாக “சரி எல்லோரும் நல்லா இருக்காங்களா சித்தி, மாமா, பிள்ளைகள் என்ன சொன்னார்கள்” என்றவள் அவனது பயணக்களைப்பை உணர்ந்தவளாக “சரி அப்புறம் பேசிக்கலாம்.  நீ போய் குளிச்சிட்டு வா.  சாப்பிட்டு சாவகாசமாய் பேசுவோம்”.

            இவன் குளித்து சாப்பிட்டான்.  அம்மாவிடம் வந்து நடந்ததை எல்லாம் சொன்னான்.  பணவரைவைக் கொடுத்தான்.  அம்மா அதை வாங்கி பார்த்தபடி கேவி கேவி அழுதாள்.  இவன் அமைதியாக இருந்தான்.  கருக்கொண்ட உச்சி மேகம் ஊற்றி வடியட்டும்.  மனம் தெளியட்டும் என்பது போல மௌனசாட்சியாக இருந்தான்.  இவனது கண்முன்னும் ஷில்லாங் நிகழ்வுகள் நிழலாடியது.  எவ்வளவு நேரமோ தெரியவில்லை.  அம்மா பேசினாள். ‘அம்மா மல்லிகா’ என்று மனைவியை அழைத்தாள்.  “மகள் ரோஜாவை வரச் சொல்லுமா”.

            மகளும் மருமகளும் வந்துவிட்டார்கள்.  மகனை அழைத்தாள் ஜெயக்கொடியிடம் அந்த பணவரைவை மருமகள் மல்லிகாவிடம் கொடுக்கச் சொன்னாள்.  மருமகள் வாங்கி பார்த்தாள்.  ஐந்து லட்சம்.  முகமெல்லாம் பவுர்ணமி ஒளி.!

    “ஏம்மா மல்லிகா, இன்னிக்கு புதன்கிழமை.  சீக்கிரம் மதியம் சமையலை முடி.  நாமெல்லாம் பேங்குக்குப் போவோம்.  இந்த ஐந்து லட்சத்தில் உன் மகள்க பேருக்கு ஆளுக்கொரு லட்சம்  ரோஜா பெயருக்கு ரெண்டு லட்சம்.  உன் பெயருக்கு ஒரு லட்சம் போட்டுருவோம்.  சம்மதம்தானா.  மல்லிகா அரைமனதோடு தலையசைத்து கணவனைப் பார்த்தாள்.

   “அம்மா இது உன் பணம்.  உன் பெயரிலேயே இருக்கட்டும்.  பின்னால நீ எப்படி சொல்றியோ அப்படி செய்வோம்.  அடுத்த மாசம் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் லீவுதான். நாமெல்லாம் அங்கே போய் வருவோம்”.

            “ எனக்கும் அங்கே போய் என் உடன்பிறப்புகளை, பிறந்து வளர்ந்த மண்ணை மனுஷங்களை பார்க்கத்தான் ஆசை.  ஆனால் நா அங்கே போனேன்னா அந்த சந்தோஷத்திலேயே செத்துருவேன் என்ற பயம்.  என்னை கட்டிகிட்டு என்னை பாதுகாத்த புருஷன் மண்ணிலேயே நான் உயிரை விடனும்”

     என்று அம்மா தெளிந்த குரலில் சொன்னாள்.  கண்களில் நீர் இல்லை. ஒளி இருந்தது.

 

 

Series Navigationபேராசிரியர் மௌனகுருவின் இரண்டு நூல்கள் !  

2 Comments

  1. Avatar Musthafa.ஜவ்வாது முஸ்தபா.

    உயிர்ப்பான கதை,
    உண்மையில் சில பேருக்கு சொந்த சனங்களைப் பார்த்ததும் உயிர் போயிடும்.
    வாழ்த்துகள் சார்.

  2. Avatar Jananesan

    நன்றி திரு.முஸ்தபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *