எழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 )  நூற்றாண்டு ஆரம்பம் !

author
0 minutes, 33 seconds Read
This entry is part 13 of 14 in the series 3 ஜூலை 2022

 

எழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 )  நூற்றாண்டு ஆரம்பம் !

இந்திய ஞனபீட விருதைப்பெற்ற முதல் தமிழ் படைப்பாளி ! !

                                                                        முருகபூபதி

தமிழ்நாடு புதுக்கோட்டையில் பெருங்காளுர் கிராமத்தில் வைத்திலிங்கம் பிள்ளை – அமிர்தம்மாள் தம்பதியின் புதல்வனாக அகிலாண்டம் என்ற இயற்பெயருடன் பிறந்தவர், பின்னாளில் காந்தீயவாதியாகவும் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் வளர்ந்தவரான எழுத்தாளர் அகிலன் அவர்கள் –  பிறந்த நூற்றாண்டு  இந்த வருடம் ஜூன் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இலங்கையிலும் இதே திகதியில் 1927 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் டொமினிக்ஜீவா என்ற மல்லிகை ஜீவா.

1922 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் அகிலன், சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், தன்வரலாறு முதலான துறைகளில் சுமார் ஐம்பது  நூல்களை வரவாக்கியவர்.

இவற்றுள் 19 நாவல்கள், 17 சிறுகதைத் தொகுதிகள் மற்றும் மூன்று சிறுவர் இலக்கியங்களும் அடங்கும்.

இவரது பாவை விளக்கு ,  அதே பெயரிலும் வாழ்வு எங்கே குலமகள் ராதை என்ற பெயரிலும் கயல்விழி,  மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்ற பெயரிலும் திரைப்படமாகியவை.

முதல் இரண்டு திரைப்படங்களிலும் சிவாஜிகணேசனும், மூன்றாவது திரைப்படத்தில் எம்.ஜி. ஆரும் நடித்துள்ளனர்.

அகிலனின் வேங்கையின் மைந்தன் இந்திய தேசிய சாகித்திய விருதினையும் சித்திரப்பாவை ஞானபீட விருதினையும் பெற்றன.

சித்திரப்பாவை நாவலும் தொலைக்காட்சி நாடகமாக பல வாரங்கள் ஒளிபரப்பானது. அகிலன் எழுதிய சிநேகிதி நாவலைத்தழுவி இயக்குநர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் சாரதா என்ற திரைப்படத்தை எடுத்தார் என்று கருதிய அகிலன், தனது எழுத்துரிமைக்காக நீதிமன்றம் வரையில் சென்று போராடியவர். இதுபற்றி எழுத்தும்  வாழ்க்கையும் என்ற தனது சுயவரலாற்று நூலிலும் விரிவாக எழுதியிருக்கிறார்.

அகிலனின் வேங்கையின் மைந்தன் நாவல்,  சிவாஜிகணேசன் நடிப்பில் மேடை நாடகமாகவும் தமிழ்நாட்டில் பல பாகங்களில் அரங்கேறியிருக்கிறது..

ராஜ ராஜசோழனின் மைந்தன் ராஜேந்திரசோழனின் வீரவரலாற்றைப்பேசும் இந்நாவலை, கல்கியின் பொன்னியின் செல்வனின் தொடர்ச்சி எனவும் வாசகர்கள் மதிப்பீடு செய்தனர்.  தனது மலேசியப்பயண அனுபவத்தின் பின்னணியில் பால்மரக்காட்டினிலே என்ற  தொடர்கதையையும் கலைமகளில் அதன் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதனின் வேண்டுகோளில் எழுதினார்.

அகிலன் எழுதிய பொன்மலர் நாவல் நாட்டில் மறைக்கப்பட்ட கறுப்புப்பணம் பற்றியும் அது சமூகத்தில் விளைவித்த சீர்கேடுகள் பற்றியும் பேசியது.

பின்னாளில் ராணி முத்து பிரசுரத்தின் முதல் வெளியீடாகவும் வந்து,  பல இலட்சம் பிரதிகள் வாசகரை சென்றடைந்தது. இந்நாவலும் பிற மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது.

விஜயநகரப் பேரரசை மையமாக வைத்து அகிலன் எழுதிய வெற்றித்திருநகர் கல்கியில் தொடராக வெளிவந்து வாசகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

தனது மாணவப்பருவத்திலேயே 1938 இல் கதைகள் எழுதத் தொடங்கியிருக்கும் அகிலன்,  காந்தீயவாதியாக வளர்ந்தவர். அதனால் தனது படைப்புகளில் அறத்தையும் அன்பையும் கருணையையும்  பேசுபவராகவும் திகழ்ந்தார். இவரது கதைகள் தொடர்பாகவும் படைப்பூக்கம் பற்றியும்  இலக்கிய விமர்சகர் க. நா. சு.  மற்றும் எழுத்தாளர் விந்தன் ஆகியோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தபோதிலும், அது குறித்து அலட்டிக்கொள்ளாமல், தொடர்ந்தும் தனக்குத் தெரிந்த பாணியிலேயே எழுதிக்கொண்டிருந்தார்.

 “ தான்  எழுதிய முதற் கதையும் சரி, இனிமேல்  எழுதப்போகும் கடைசிக் கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவைகளாகவே இருக்கும். கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியை வாசகர்கள்  காணலாம். ஆனால், கருத்தெல்லாம் நான் காணும் உண்மைகளாகவே இருக்கும். ஒருபுறம் அழகும் வனப்பும் நிறைந்த இயற்கை உலகம், மற்றொருபுறம் வேற்றுமையும் வெறுப்பும் நிறைந்த மனிதர்கள்.  இவைதான்  என் கதைளின்  கருத்து நிலை  என்றும் சொல்லலாம்  “  என்று கூறியவர் அகிலன்.

சோவியத் ஒன்றியத்திற்கு மூன்று தடவைகள் பயணம்மேற்கொண்டு, அதுபற்றியும்  பயண இலக்கியம் எழுதியிருக்கும் அகிலனின் படைப்புகள் அனைத்திந்திய மொழிகளிலும் ஆங்கிலம், சீனம், பிரெஞ்சு, பல்கேரியா, செக், மலாய்,  ஜெர்மன் மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன.

திருச்சியிலிருந்து சென்னைக்கு 1965 இல் இடம்பெயர்ந்த அகிலன்,  தமிழ் எழுத்தாளர் சங்கம், எழுத்தாளர் கூட்டுறவுச்சங்கம் முதலான அமைப்புகளை உருவாக்குவதற்கும் முன்னின்று உழைத்தார்.

இந்திய ரயில்வே தபால் பிரிவில் ஆரம்பத்திலும்,  அனைத்திந்திய வானொலியில் பின்னரும் பணியாற்றியவரான அகிலன், அதன் பிறகு முழுநேர எழுத்தாளராகவே இறுதிவரையில் வாழ்ந்தார்.

ராகுல சங்கிருத்தியானின் வால்கா முதல் கங்கை வரை என்ற புகழ்பெற்ற நூலை தமிழுக்கு வரவாக்கியவரும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நோதாஜி சுபாஷ் சந்திரபோஸின்  இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றியவருமான கண. முத்தையா அவர்களின் புதல்வி மீனாவுக்கு தனது புதல்வன் கண்ணனை திருமணம் முடித்துவைத்து, தனது சம்பந்தியாக்கிக்கொண்ட அகிலனின் சில நூல்கள் கண. முத்தையாவின் தமிழ்ப்புத்தகாலயத்தின் வெளியீடாகவும், புதல்வர் கண்ணனின் தாகம் என்ற பதிப்பகத்தின் ஊடாகவும் வெளிவந்துள்ளன.

அகிலன் கண்ணனும் சிறுகதை எழுத்தாளராக பதிப்பாளராக சென்னையில் இயங்குகிறார்.

அகிலனின் மற்றும் ஒரு மகளின் கணவர் பா. ரவியும் எழுத்தாளராவார். இவரும் கதைகள், இலக்கியப்பிரதிகள் எழுதிவருவதுடன் தளம் என்ற சிற்றிதழையும் நடத்திவருகிறார்.

அகிலன் இவ்வாறு இலக்கிய வாரிசுகளையும் தமிழ் இலக்கிய உலகிற்கு விட்டுச்சென்றுள்ளார்.

தமது 66 வயதில் 1988 ஆம் ஆண்டு மறைந்திருக்கும் அகிலனின் படைப்புகள் ஒரு காலகட்டத்தில் வாசகர்களால் பெரிதும் விரும்பி வாசிக்கப்பட்டன.  

மூத்த தலைமுறை வாசகர்கள் அகிலனின் படைப்புகளை எளிதில் மறந்துவிடமாட்டார்கள். அவருக்குப்பின்னர் எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களும், அவரது எழுத்துக்களை ஆரம்பத்தில் வாசித்துவிட்டே எழுத்துலகில் பிரவேசித்திருப்பார்கள்.

அதனால், நூற்றாண்டை காணும் அகிலன் வாகர்களின்  மனதில் நிலைத்திருப்பார்.

—0—

 

 

 

 

Series Navigationசந்திப்போம்அசாம்  – அவதானித்தவை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *