உறவே! கலங்காதிரு…

author
0 minutes, 9 seconds Read
This entry is part 9 of 17 in the series 9 அக்டோபர் 2022

 

                                                                                    

ச.சிவபிரகாஷ்

நகரின் நெரிசல் மிகுந்த இடத்தில், பழைய கட்டிடமாக காட்சிபடும்  ‘குற்றவியல் வழக்கு நீதிமன்றம்’-இங்கிருந்து…

காலை நேர பரபரப்புக்கிடையே, நீதியரசர் ஒரு தீர்ப்பை வழங்கிக்கொண்டிருக்கிறார். ஈ.பி.கோ இந்திய தண்டனை சட்டம் செக்க்ஷன் 421 மற்றும் 424 கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கியும், ‘சுரேஷ்’ என்னும் நபர் செய்த குற்றம் நிருபிக்கப்படாததாலும்,இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த விட்டபடியால் , விடுதலை செய்யப்படுகிறார். என தீர்ப்புகள்  ஒலிக்க, சிறை வாசலில் இருந்து வெளியே  வருகிறான் ‘சுரேஷ் ‘

தீர்ப்புகள் கேட்கவும், கேட்டு அழைத்து செல்லவும், யாரும் வராததால் எங்கே செல்வது? என (பெரும் குழப்பத்துடன்.)

 வீட்டிற்கு போனால் நம்மை சேர்த்துப்பாங்களா?  சமாதானம் ஆகியிருப்பாங்களா?  போய் பார்த்தால் என்ன? – என மனம் சொல்லும் தைரியத்தில் நடக்க தொடங்கினான்.

“….”

வீட்டு தெரு அருகே… நடந்து வருகையில், எதிர்ப்பட்ட இரண்டு பெரியவர்களில், ஒரு பெரியவர், இவனை கண்டதும்,

இதோ போறானே..தருதல பையன், இவனால தான், அந்த குடும்பமே! பாழாகி போச்சு, அவமானம் தாங்க இவன் அப்பங்காரன்  படுத்த, படுக்கையாகி, செத்தும் போயிட்டான். – என்று  பேசிக்கொண்டே கடக்கையில்,

கூப்பிட்டு,

என் குடும்பத்தை பற்றி, பேசறதுக்கு நீங்க யாருடா நாய்களா-ன்னு, இரண்டு       அ றை விட்டு, கேட்கலாம் போல  தான் இருந்தது “ சுரேஷூக்கு”. ஆனால்… தன் விதி நொந்து,  வேண்டாம்… வேண்டாம். ஒரு பாவம் செய்யாமல் இவ்வளவு நாள் ஜெயில்ல இருக்க வேண்டியதாக போச்சு, அப்பா வயசு உள்ளவர்களை அடித்து அந்த பாவத்தை எங்கே போக்குறது என்பதாலும்,

அப்பா…. செத்து போயிட்டதாக சொல்றாரே, என்னும்  அதிர்ச்சியிலும், பதட்டத்தினாலும், வேகமாக நடக்க தொடங்கினான்.

வீட்டு வாசல் வரை வந்தாகிவிட்டது. கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருப்பது தெரிகிறது. கதவை தட்டலாமா? வேண்டாமா?  என்னும் மன உளைச்சலில் வீட்டு ச்சுவர் ஒட்டியுள்ள பகுதியை  எதேச்சையாக பார்க்க. “வழியில்”.. பெரியவர்கள் பேசிக்கொண்டது  போல், இவனின்  அப்பா மறைவை குறித்த கண்ணீர் அஞ்சலி  போஸ்டர்  நெடுநாட்கள் ஆனது போல் காட்சிபட்டது.

பார்த்ததும், இவன் கண்களிலிருந்து, கண்ணீர் பெருக்கெடுத்து வந்தது.

அப்பா. அப்பா… கதறி துடித்தான். அப்பா… நான் தான் உங்களை, அநியாயமா  கொண்ணுட்டேன். தலையில் அடித்து கொண்டு சத்தமுடன் கதறினான்.

யாரோ அழுவது போல் சத்தம் கேட்பதாக உணர்ந்து, கதவை திறந்தாள் அம்மா. அம்மாவை கண்டதும்,  இவனுக்கு, இன்னும் வேதனை அதிகமாகியது, எவ்வளவு அழகிய முகம், அகன்ற நெற்றியில்  கச்சிதமான சிவப்பு குங்குமம் இட்டு, கொண்டையில்  பூவோடு பார்த்து, இப்படி…. அலங்கோலமாக, உடலும் மெலிந்து காணப்படுகிறாளே. என்ற வேதனை ஒரு புறம்.

‘அம்மா ‘….  அழைக்கிறான்.

டேய் சுரேசா… என  ஆக்சரியத்துடனும், ஆசையுடனும்  பதிலுக்கு அழைக்கும்போதே. பேசும் குரல்கேட்டு  வீட்டில் உள்ளே இருந்த அண்ணனும், அண்ணியும், வெளியே வந்து

யார் என பார்க்கும் போது  தம்பி  ‘சுரேஷ்’ வந்திருக்கிறான். அடையாளம் கண்டு

எங்கே வந்தே? – என்றான் அண்ணன் சம்பத்.

அண்ணா….!

ச்சீ… வாயை மூடு,   யார் அண்ணண் ? அந்த உறவெல்லாம் போய் பல வருஷமாச்சு, உனக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கிளம்பு. அம்மா…. வாங்க உள்ளே போகலாம், இவன் கிட்ட என்ன பேச்சு? – என கூறினான். அண்ணன் சம்பத். இதையெல்லாம் மௌனமாக பார்த்து செய்வதறியாமல் நின்று க்கொண்டிருந்தாள். அண்ணி.

பத்து மாதம் பெத்த வயிறும் எதுவும் பேச துணிவில்லாமல்  நிலைக்குலைந்து போய் நின்றிருந்தாள்

அண்ணா…  என்னை மன்னிச்சிடுங்க, உங்களை விட்டால் , எனக்கு யார் இருக்கா ? நான் எங்கே போறது? எனக்கு எல்லாமே நீங்க தான். கெஞ்சினான் சுரேஷ்.

அன்னிக்கு….. அப்பா  சொல்றத  கேட்காம, எங்களை எல்லாம் உதறிட்டு, உன் ப்ரெண்டு  தான் முக்கியம், காதலி தான் முக்கியம் ன்னு  போனியே, திடீரென இத்தனை வருஷம் கழிச்சு, இப்போ… எங்கிருந்து? வந்தது, இந்த ஞானோதயம்

அப்பா சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கா .? அவர் இருக்கும் போதே, இல்லாத உறவு. அவர் போனதுக்கப்புறம், எங்களுக்கு மட்டும் எதுக்கு? என்றான் அண்ணன் சம்பத்.

‘அதற்குள்’ – அக்கம் பக்கத்தினர் நடந்தவற்றையெல்லாம், பார்த்து விட்டு சம்பத்திடம்  சமாதானம் பேசினர்.

தம்பி… நடந்ததெல்லாம் நடந்து போச்சு, எல்லாம் கெட்ட கனவா நெனச்சு, எல்லாத்தையும் மறந்திட்டு, சுரேஷ் தம்பியை வீட்டுக்குள்ள சேர்த்துக்கங்கப்பா, என்றவர்களை,  இது எங்கள் குடும்ப விஷயம், இதுல தலையிட வேண்டிய அவசியம் இல்லை… என்று முகத்தில் அடித்தாற் போல பேசினான் சம்பத். அவர்களும் முகம் வாடி நமக்கு ஏனென்று நகர்ந்து கொண்டார்கள்.

‘  தொடர்ந்தான் சுரேஷ் ‘

அண்ணா…. நான் செய்ய கூடாத தப்பெல்லாம் பண்ணிட்டேன், இல்லேன்னு சொல்லல, அதுக்காக… இப்போ! மன்னிப்பு கேட்டுக்கறேன். நீங்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பேசினா எப்படி? என கேட்க

எந்த சமாதானமும் வேண்டாம், என சொல்லி விட்டு, அம்மாவையும், மனைவியையும், அதிகாரமாக பேசி அழைத்து கதவடைத்துக்கொண்டான்.

போக்கத்த நிலையில், மன குமறலோடு, வாயிற் கதவருகே அமர்ந்தான். இவனை சிறு வயதிலிருந்தே பார்த்தவர்கள்,பக்கத்து வீட்டினர் மனசு கேட்காமல், சாப்பிட கொண்டு வந்து கொடுத்தனர். இவன் மறுத்து, தண்ணீர் மட்டும் வாங்கி குடித்து மௌனித்திருந்தான்.

“….”

நடந்து வந்த களைப்பும், தொண்டை வற்றி கத்தியும் கதறியும், பேசியும், பசியோடும் கொஞ்சம் கண் அயர்ந்தான்.

“…”

நடந்தேறிய சம்பவங்கள் நினைவில் உதித்தன .

வழக்கமான ஒரு காலை பொழுதில்,

அப்பா எப்போதும் போல் காலையில் பக்கத்தில் இருக்கும் ஈஸ்வரன் கோயிலுக்கு சென்று வந்து, ஹாலில் பேப்பர்  படிக்க தொடங்கியிருந்தார். (தாத்தா சொத்து  தான்  நாங்கள் இருக்கும் வீடு,- அப்பா  EB காண்ட்ராக்டர். அண்ணன் படித்து முடித்து வேலைக்கு சென்றதும், காண்ட்ராக்ட் தொழிலை விட்டுவிட்டார். அன்பானவர், அதேசமயம் கட்டுபாடனவர்)

அண்ணன் வேலைக்கு கிளம்ப இருப்பதால், டிபன் தயார் செய்தும், மதியம் லஞ்சுக்கு கொடுத்து அனுப்ப, அம்மா சமையலறையில் ஏதோ ரெடி பண்ணிக்கொண்டிருந்தார்.

நானும் சுமாராக படித்து டிகிரி வாங்கி வேலைக்கு முயற்சித்து கொண்டிருந்தேன். வேலை ஏதும் இல்லாததால், மெதுவாக எழுந்திருந்து,குளித்துவிட்டு  டிபன் சாப்பிட அமர்ந்திருந்தேன்.

அண்ணன் அதற்குள் வேலைக்கும் சென்றுவிட்டார். வீட்டில், நானும், அப்பா, அம்மாவும் மட்டும் தான். டிபன் சாப்பிட அம்மா அழைத்ததால், பேப்பர் படித்து கொண்டிருந்த அப்பா, வந்ததும் அம்மாவும் சேர்ந்து, சாப்பிட தொடங்கினோம்.

அப்பா….என்னிடம், வேலைக்கு ஏதாவது முயற்சிக்கிறீயா?வேலை விஷயமாக யாரையாவது பார்த்து பேசினியா? என கேட்க

ஆமாம்பா.. தேடிட்டு தான் இருக்கேன், என் ப்ரெண்டு சுதாகர் இல்லப்பா

ஆமா..

அவன் அப்பா பெரிய பிசினஸ்மென், அரசியல்வாதி நல்ல பணக்காரன், இந்த சுதாகரும் நிறைய கம்பெனி சொந்தமா நடத்துறான். அவன்கிட்டேயும் சொல்லி வெச்சிருக்கேன்

அதெல்லாம் சரி… அவன் பணக்காரனாக இருந்தால் நமக்கென்ன? நாணயமானவனா? அதை மட்டும் சொல்லு,

நீங்க நினைக்கிற மாதிரி இல்லப்பா அவன் காலேஜ்ல ஒண்ணா படிச்சவன்பா, அவனை பத்தி நல்லா தெரியும்பா – என்றேன்.

‘அதற்கு  – அப்பா’

ரொம்ப பணக்கார பசங்கள நம்ப கூடாது, இருக்குற எல்லா கெட்ட சவகாசமும் இருக்கும். ஏதாவது பிரச்சினைன்னா  சமயத்தில் நம்மள மாட்டிவிட்டு, அவங்க தப்பிக்க பார்ப்பாங்க, பார்த்து நடந்துக்கோ. நல்ல இடத்தில்  முயற்சி பண்ணு  என்ற போது… வயசானாலே ! இந்த பெரிசுங்க  இப்படி தான் ஏடாகூடமாக கேள்வி க்கேட்டு உசிர வாங்கும், என மனதில் நினைத்தபடி,

சரி… பா  என்றேன், அதற்குள் அம்மா குறுக்கிட்டு, ஏங்க… வயசு புள்ள, படிச்சிருக்கான், நல்ல கெட்டது அவனுக்கு தெரியாதா? எல்லாம்… அவன் பார்த்துப்பான்.

 நீங்க.. நம்ம சம்பத்துக்கு, பொண்ணு  ஜாதகம் தரகர் கொடுத்திட்டு  போய் நான்கு நாளாச்சு. ஜோசியக்காரன்கிட்ட கொடுத்து பொருத்தம் பார்த்திட்டு என்ன ஏதுன்னு நீங்கள்  அவருக்கு தகவல் சொல்லலாமில்ல.

ஆமாம்… இன்னிக்கு பார்த்திடலாம் என்றார். நானும் சாப்பிட்டு முடித்து, பகட்டாக டிரஸ் செய்து கிளம்பி, வேலை தேடுவதாக வீட்டில் பொய்யை சொல்லி, எனக்காக தெப்பக்குளம் பஸ் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த  என் காதலியான ரேவதியை சந்திக்க சென்றேன். (ரேவதி எனது கல்லூரி வகுப்பு தோழி, எங்கள் கல்லூரி ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலர் பயிலும் தன்னாட்சி autonomous கல்லூரியாகும் ஒரு வருடம் தோழியாக பழகி, இரண்டு வருடங்களாக காதலியாக இருப்பவள்.)

நாங்கள் காதலிக்கும் விஷயம், எங்களுடன் படித்த நண்பன் சுதாகருக்கு மட்டுமே தெரியும்.

இன்றைய சந்திப்பில்.. ரேவதி  ஒரு விஷயத்தை கூறினாள். வீட்டில் மாப்பிள்ளை  மும்முரமாக  பார்ப்பதாகவும், இது சென்ற வருடமே ஆரம்பமாகிவிட்டது, படிப்பு முடியட்டும் அப்புறம் பார்க்கலாமென்றேன், இப்போ படிப்பு முடிந்ததும், ஆரம்பித்துவிட்டார்கள். , நீ வந்து பொண் ணு கேட்டீனாலும் வேறு சாதியை காரணம் காட்டி ஒத்துக்க மாட்டாங்க, நாம உடனே கல்யாணம் பண்ணிக்கலாம் என்றாள்.

“நான்”…          என்ன ?  திடுதிப்பென்று இப்போ சொல்ற, உடனே நடக்க கூடிய விஷயமா இது? இப்போ தான் படிப்பே முடிந்துள்ளது. வேலை தேடணும், கிடைச்சு, செட்டில் ஆகணும், எங்க அண்ணனுக்கு இப்போ தான் பொண்ணு பார்த்திட்டிருக்காங்க… அவர் கல்யாணம் முடிந்ததுக்கு அப்புறம் தான் , நம்ம விஷயத்தை சொல்லி, சம்மதம் வாங்கி, கல்யாணம் பண்ணிக்கனும் முடிவு செய்திருந்தேன். நீ.! என்னடான்னா? உடனே அவசரபடுறே  என்றேன்.

…ஹூம்ஹூம்…கண்டிப்பாக, கலப்பு திருமணம்  எங்கள் வீட்டில் சம்மதிக்க வாய்ப்பே இல்லே.

அப்போ…ஒரு வருஷம் மட்டும்! பொறுத்துக்கோ. எங்கள் வீட்ல மட்டும்.         நான்… சம்மதம் வாங்கிக்கறேன். அதற்குள் அண்ணன் கல்யாணமும் முடிஞ்சிடும், அப்புறம் வீட்ல ஒத்துக்க வெச்சிடுவேன்.

இல்லை… சுரேஷ், அவ்வளவு நாள் எங்கள் வீட்டில் பொறுத்திருக்க  மாட்டாங்க, நீ பண்ணுற லேட்ல, எனக்கும் வயதாகிடபோகுது என்றாள்.

என்ன பண்ணனும்னு சொல்லு? – என்றேன்

உடனே கல்யாணம் என்றாள்.

ஒடி போயா…? என கேட்க

பதட்டமில்லாமல்  why not? … உன்னால முடியாதுன்னு சொன்னீனா, காதல் தோல்வின்னு, பைத்தியக்கார தனமா நான் தற்கொலை எல்லாம் பண்ணிக்க மாட்டேன். வீட்ல பார்க்குற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிப்பேன். என்றாள்.

இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்க சொல்லி அனுப்பிட்டு, நண்பன் சுதாகரனை சந்தித்து, எல்லா விஷயத்தையும் சொல்லி ஆலோசனை கேட்டேன். பதிலுக்கு அவன்.

அவள் சொல்வது போல் கல்யாணம் பண்ணிக்கோ என்றான் கூலாக,

எப்படிடா.?…. வீட்ல அண்ணன் இருக்கும் போது,

உனக்கு அந்த பொண்ணு ரேவதி வேணுமா, வேணாமா?

வேணும்.. ஆனால் என்னால அண்ணன் கல்யாணம் பாதிக்காதா? – நான் கேட்க.

அட போடா… எத்தனையோ வீட்ல… எனக்கு தெரிந்து, தம்பிக்கு கல்யாணம் பண்ணிட்டு, அப்புறமாக அண்ணனுக்கு பண்ணியிருக்காங்க.

அப்படி இல்லையா… உங்க இரண்டு பேர் கல்யாணமும் ஒன்றாக நடத்திக்கீங்க. என்றவனை

இதை பத்தி வீட்ல எப்படி சொல்றது? சொன்னால்… அப்பா என்னை கொண்ணுபோட்டு விடுவார். பயமா இருக்கு.  என்றேன்

அவ்வளவு பயம் இருந்தால், நீ! அந்த பெண்ணை லவ் பண்ணியிருக்க கூடாது. என்றான் சிரித்துக்கொண்டே

அதெல்லாம் சரி…. இப்போ ஆகுற வழியை சொல்லுடா – என்றேன்.

உனக்கு வீட்ல கேட்க பயமா இருந்தால் சொல்லு, நான் வேண்டுமானால் நாளைக்கே! உங்கள் வீட்டுக்கு வந்து இதை பத்தி பேசுறேன். என்றவனிடம், இதுவும் சரிதான் நல்ல யோசனை என சம்மதித்து, நான் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து வரசொல்லி  கோரிக்கை வைத்தேன்.

“…. “

ஒரு நாள் காலையில், வேலை விஷயமாக ஒருத்தரை பார்த்துவிட்டு, வரும் போது வீட்டு கரண்ட் பில் கட்டி வருவதாக, சொல்லி கிளம்பி, வெளியே வந்து சுதாகரிடம், போய்…. பேசி விட்டு வாடா, என வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். அவனும் உடனே கிளம்பி சென்றான்.

வீடு நிசப்தமாக இருந்தது

. சுரேஷின் அண்ணன் வேலைக்கு சென்றுவிட்டார், அவன் அம்மா வீட்டில் இல்லை, அப்பா மட்டுமே பேப்பர் படித்து கொண்டிருப்பது தெரிந்தது, காலிங் பெல்லை அழுத்தினான்.

சத்தம் கேட்டு,  யாரு….? – என  வெளியே வந்து பார்த்ததும்

சுதாகர் தானே?

ஆமா.. அங்கிள்

சுரேஷ்  வீட்ல இல்லையேபா, கரண்ட் பில் கட்டிட்டு, வேலை விஷயமாக யாரையோ பார்த்துட்டு வரேன்னு போயிருக்கான். என வாசலில் நின்றபடியே சொன்னார்.

இல்லை அங்கிள், உங்களை தான் பார்க்கலாம்னு வந்தேன் என்றவனிடம்

என்னையா… ஏன்? சரி, சரி, உள்ளே வா பா. அழைத்தார் வீட்டினுள்

உட்காரு… என இன்னொரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர சொன்னார்

‘அமர்ந்ததும்’

ஒன்னுமில்லை அங்கிள், நான்…. நேராக விஷயத்துக்கு வரேன். உங்க பையன் சுரேஷ் ஒரு பொண்ணை காதலிக்கிறான். அந்த பொண்ணும் இவனை காதலிக்கிறாள். உடனே கல்யாணம் பண்ண சொல்லி அந்த பொண்ணு அவசரபடுது. – என கேட்டதும் வெகுண்டு எழுந்து

எந்திரிடா….

வெளியே போ, என ஆவேசமாக கத்த

என்ன சொல்லிட்டேன்னு இப்படி கத்துரீங்க  அங்கிள்?

ஏன்டா… நண்பன் தப்பு செஞ்சா, அவனை இந்த மாதிரி தப்பெல்லாம் செய்யாதடான்னு சொல்லி திருத்துறவன் தான் உண்மையான நண்பன், மனுஷன்., அதை விட்டுட்டு அவனுக்கு வக்காலத்து வாங்க, என் கிட்டேயே சம்மதம் கேட்க வந்திருக்கே?

உன்னை அவன் தான் அனுப்பி வெச்சானா? இல்லை.. நீ யே  வந்தியா? – என்றார் சுரேஷின் தந்தை.

‘ பதிலுக்கு சுதாகர்’,

என்ன அங்கிள்… இதுக்கு போய் இவ்வளவு emotion ஆகுறீங்க?  என்ன . பெரிசா தப்பு பண்ணிட்டான்.? கோபப்படுவதற்கு ஒன்னுமே இல்லையே அங்கிள் என்றதும்

இன்னும் கோபம் அதிகமாகி தொடர்ந்தார் சுரேஷின் தந்தை.

ச்சீ.. வாயை மூடு, என்ன? இன்னும், அங்கிள், அங்கிள்னு உரிமைகொண்டாடுற. மாமா பையளே..  என்றதும் சுதாகருக்கும் கோபம் ஏற்பட்டு,

வார்த்தையை அளந்து பேசுங்க,

பின்னே என்னடா…?   கூட்டி கொடுக்கிற மாமா பையன் மாதிரி தான்டா                  நீ  பேசுனே.  என்றவரை

நீங்க…. பெரிய மனுஷன்னு பார்க்கிறேன்.

 இல்லைன்னா என்னடா பண்ணுவே, வெளியே போடா  நாயேன்னு சொல்றதுக்குள்ள  வெளியே போயிரு. என பல்லை கடித்து கொண்டு பேசினார் சுரேஷின் தந்தை.

நான்… யார்னு கூடிய சீக்கிரம் காட்டுறேன் என சவால் விட்டு கிளம்பினான்.

“…. “

சுதாகரை எதிர்பார்த்து காத்திருந்த நான்

நம்ம வீட்டுக்கு போய், அப்பாவிடம் பேசி சம்மதம் வாங்கி வர அனுப்பி வெகுநேரமாச்சு  இன்னும் வரலீயே…. கண்ணில் படவேயில்லையே என்ன நடந்ததுன்னு தெரியலையே, எங்கே போய் தொலைந்தான் என பெரும் குழப்பத்துடன்  மதியம் வீடு வந்து சேர்ந்தேன்.

அதுவரை சுதாகர்  என் கண்ணில் படவேயில்லை

 வீட்டில் நுழைந்த  என்னை   ‘அப்பா  கண்டதும், ‘

எங்கே போயிட்டு வர? – என அதட்டலாக கேட்க, ( அம்மாவும். என்னை முறைத்துபார்த்தபடி நின்று, அப்பா கண்டிக்கும் போது குறுக்கே பேசவேண்டாம் என்றிருந்தார் போலும். பார்த்ததும் ஊர்ஜிதம் செய்துகொண்டேன் ஏதோ விபரீதம் நடந்துள்ளதை)

ஏம்பா..?  . நான் சொல்லிட்டு தானே போனேன், வேலை விஷயமாக ஒருத்தரை பார்த்துவிட்டு அப்படியே கரண்ட் பில் கட்டிட்டு வரேன்னு.

ச்சீ… பொய் சொல்லாதே, எவளை பார்த்துட்டு வர? (என கையை ஓங்கி,மடக்கி விட்டு,) தோளுக்கு மீறி வளர்ந்திட்டதால, வாயால தான் கேட்டிட்டு இருக்கேன். இல்லேன்னா… தோலை  உறிச்சிருப்பேன். – என்றார்

அப்பா….

ஏய்… வாயை மூடு. எல்லாம் எனக்கும் தெரியும்., அந்த தருதல பையன் சுதாகர் வந்து  எல்லாத்தையும் சொல்லிட்டான். அவன் கூட சேராதேன்னு உனக்கு படிச்சு, படிச்சு சொன்னேன். நீ கேட்கல, இப்போ பாரு, அந்த தருதல புத்தி தான் உனக்கும் வந்திருக்கு, இப்பவே உனக்கு கல்யாணம் சுகம் கேட்குதோ? இப்ப தான் படிப்பு முடிஞ்சிருக்கு, வேலைக்கும் சேர்ந்தபாடில்லை… அப்படி என்ன அவசரம்,? மூத்தவன் இருக்கும் போது – என்றவரிடம்

‘தைரியத்தை வரவழைத்து பேசினேன்’

அப்பா… சுதாகர் சொன்னது உண்மை தான் ப்பா, அந்த பொண்ணு என் கூட காலேஜ்ல படிச்சவ  தான். இரண்டு வருஷமா காதலிக்கிறோம். நானும் அண்ணன் கல்யாணம் முடிந்ததுக்கு அப்புறம் சொல்லிக்கலாம்னு இருந்தேன். ஆனால் அந்த பொண்ணு வீட்ல மாப்பிள்ளை பார்த்து உடனே கல்யாணத்தை முடிக்க அவசரப்படுகிறார்களாம். உடனே பண்ணிக்கலாம்ன்னு என்னை அவசரப்படுத்தினாள். எனக்கு உங்க கிட்ட , இதை சொல்ல பயமா இருந்தது. சுதாகர் தான், நான்.. பேசி சம்மதம் வாங்கி தரேன்னு சொல்லிட்டு வந்தான்  என்றேன்.

அப்ப…. நீ இரண்டு வருஷமா படிக்க போகல, பொம்பளய பொறுக்கிட்டிருந்த, அப்படி தானே? ஒழுங்கு மரியாதையா நான் சொல்லுறதை இப்போ கேளு…

வயசு கோளாரில் இப்படி பண்ணியிருக்க, நடந்ததை எல்லாம் மறந்திட்டு, அந்த தருதலைங்க கூட சேராம, நல்ல வேலையை தேடி சம்பாதிக்கிற வழிய பாரு. அண்ணன் கல்யாணம் முடிந்து இரண்டு வருடமோ,இல்லை ஒரு வருடத்திலேயே, நல்ல பெண்ணை பார்த்து, உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்.

இல்லை…. அந்த பொண்ணு தான் வேணும், கல்யாணம் இப்பவே பண்ணிக்கணும் அப்படினா… இந்த வீட்ல, உனக்கு இடம் கிடையாது. நாங்களும் உன்னை தலை மூழ்கிறோம்.  என்று கட்டளையுடன் அந்த இடத்திலிருந்து நகர்ந்து கொண்டார்  உடன் அம்மாவும்.

“……”

‘அன்று இரவு ‘

-(தன் மனைவியிடம் ஒரு விஷயத்தை கூறினார் சுரேஷின் தந்தை)

ராஜம்…

… ம்… சொல்லுங்க

இந்த பையன் இப்படி இருப்பான்னு நெனச்சு பார்த்திருப்பீயா?

நான் கனவுல கூட நெனைக்கலங்க, நம்ம பையன் இப்படில்லாம் இருப்பான்னு. என்று கவலையுடன் சொல்ல

இன்னொரு விஷயம் சொல்றேன் கேளு, எனக்கு முன்னமே தெரியும்… இப்படியெல்லாம் நடக்கும்னு, அதுமட்டுமில்லாமல்…. இவன் ஜாதகத்தில் பெரிய ஆபத்துல மாட்டிக்க போறதாக கூட இருக்கு.

என்னங்க சொல்றீங்க…?

ஆமாம் நிஜம் தான். அன்னிக்கு சம்பத்துக்கு பொருத்தம் பார்க்க  ஜோசியக்காரர்கிட்ட ஜாதகம் எடுத்து போயிருந்தேனில்ல

ஆமா….( இது இவரின் மனைவி)

அன்னிக்கு… இவனோட  ஜாதகத்தையும் எடுத்திட்டு போயிருந்தேன்.

 ஏன்…?

எப்போ நல்ல வேலை கிடைக்கும்,, வாழ்க்கை எப்படி இருக்கும், கல்யாணம் எப்போ நடக்கும் இதெல்லாம் தெரிஞ்சுக்கலாம்னு  பார்க்க கொடுத்தேன். ஜோசியர் பார்த்ததும் சொல்லிட்டார். இதுவெல்லாம் நடக்கும்னு, மூன்று வருஷம் நேரமும் சரியில்லை, ஜாக்கிரதையா பார்த்துக்க சொன்னார் – என்று முடித்தார்.

என்னங்க இப்படி குண்டை போடுறீங்க? எப்படி பார்த்துக்கிறது – என கண்ணில் வழிந்த கண்ணீரோடு மனைவி கேட்க

 அவன் என்ன சின்ன குழந்தையா பார்த்துக்கிறதுக்கு? அவன் தலையெழுத்து என்னவோ அதன்படி நடக்கபோவது. கடவுளை கும்பிட்டு மனசை தேர்த்திக்க வேண்டியது  தான். – இப்போ  போய் தூங்குற வழியை பாரு. கவலைப்பட்டு  உடம்பை கெடுத்துக்காதே! என பரிவுடன் சொல்லி படுக்கைக்கு சென்றார்.

“…”

 எனக்கு (சுரேஷ்) இரவில் தூக்கம் வரவில்லை, ரேவதிக்கு என்ன பதில் சொல்வது உயிருக்குயிராய் காதலித்த பெண்ணை விடவும் மனமில்லை.உயிர் நண்பனின் நட்பையும் விட மனமில்லை, வீட்லேயும் இப்படி சொல்லீட்டாங்க.   என்ன செய்வது? யோசித்து, யோசித்து தலைவலியோடு கண் அயர்ந்தேன்.

‘மறுநாள்’

நண்பனை பார்க்காமல் இருக்க முடியவில்லை, வழக்கம்போல இல்லாமல் மதியம் அம்மாவும், அப்பாவும் சாப்பிட்டு ஒய்வு எடுக்கும் நேரமாக பார்த்து, சுதாகர் வீட்டுக்கு சென்றேன். அழைத்ததும் வெளியே வந்ததும் முகம் கொடுத்து பேசாமல் நின்றிருந்தான்.

என்னடா மாமூ….. வீட்டுக்கு வந்திருக்கேன், வந்ததும் பேசாம முகத்தை திருப்பி வெச்சிருக்கே? என்னடா கோபம். என்றேன்.

பின்னே என்னடா? உங்க அப்பா எவ்வளவு பேச்சு பேசிட்டார். உனக்காக தான் பேச போயிருந்தேன். இப்படி அவமரியாதை செய்து வார்த்தைகள் தப்பா விட்டுட்டார். என் செல்வாக்கு என்ன? என் வசதி என்ன? சமூகத்துல எங்க அப்பா எவ்வளவு பெரிய ஆளு. எங்களோட கால் தூசுக்கு சமானம் ஆகுவாரா? என்னை போய் மாமா வேலை பார்க்க வந்தியா ன்னு  கேவலமாக,       பேசிட்டார் டா. –

உங்க அப்பாங்கிறதனால அமைதியாக வந்திட்டேன், வேறு யாராவது இருந்திருந்தால் நடக்கிறதே வேறு ஆக இருந்திருக்கும். என்றான்.

Oh!  Sorry டா, எங்க அப்பா சார்புல நான் மன்னிப்பு கேட்டுகிறேன். என்னால தான் உனக்கு அவமானம் ஏற்பட்டுச்சு, please மன்னிச்சிடு, தவறாக எடுத்துக்காதே கொஞ்சம் முன் கோபக்காரர் தெரியாம பேசிட்டார்ன்னு திரும்பவும் மன்னிப்பு கேட்டு.  நடந்த விபரத்தை சொல்லி  ஆலோசனை கேட்டேன்.

உனக்கு என்ன உதவி வேணும்னாலும் கேளு… நண்பனுக்காக,  எதையும் செய்ய தயாராக இருக்கேன். என சொல்லி அனுப்பி வைத்தான்.

‘அடுத்த நாள்’  காலையில் கிளம்பி வழக்கம் போல தெப்பக்குளம் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்து,

‘என்னை கண்டதும் ரேவதி’ – நேற்று ஏன் வரவில்லை, காத்திருந்து திரும்பிவிட்ட விஷயத்தை சொல்லி கோபப்பட்டாள்.

நான் நடந்த விஷயங்களை சொல்லி, சமாதானப்படுத்தினேன். பிறகு ஒரு வருடம் காத்திருக்கலாமா ? என அவளிடம் யோசனை சொல்ல, வீம்புக்கு மறுத்துவிட்டாள்.

நானும் இரண்டொரு நாளில் கண்டிப்பாக முடிவு சொல்வதாக அனுப்பி விட்டு, திரும்பவும் சுதாகரிடம் பேசினேன்.

அந்த பெண்ணே! தைரியமாக இருக்காள் உனக்கென்னடா.. நீ! ஆம்பள தானே. அவளை இழுத்துட்டு போய்.. உடனே தாலியை கட்டு- என்றவனிடம்.

கட்டிட்டு, எங்கடா போறது.? வீட்ல சேர்க்கமாட்டாங்களே! – என்றதும்.

நான் இருக்கேன்டா… எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வா, எங்கள் வீடு பக்கத்து தெருவிலேயே எங்களுக்கு சொந்தமான வீடு ஒன்னு காலியாக தான் இருக்கு. உங்க வீட்ல சமாதானம் ஆகுற வரைக்கும் அங்கேயே இருங்க, அப்படியே! எங்க அப்பாக்கிட்ட சொல்லி, உனக்கு  ஏதாவது வேலை வாங்கி தரேன் – என தைரியம் சொன்னான் சுதாகர்.

“முடிவானது”

சுரேஷ், ரேவதி திருமணம், எளிமையாக சுதாகர் அண்டு கோ  தலைமையில் இனிதே நடந்தேறியது. இது…. இருவரது வீட்டிலும் அல்லோகலப்பட்டது, நிலைமை இயல்புக்கு வர, சில நாட்கள் பிடித்தது.

சுதாகர் சொன்னது போல், அவனுக்கு சொந்தமான, காலியாக இருந்த ஒரு வீட்டை எங்களுக்கு கொடுத்து, அப்பாவின் பைனான்ஸ் கம்பெனியில்   என்னை (சுரேஷ்) வேலைக்கு சேர்த்து விட்டான், மாதம் பதினைந்தாயிரம் சம்பளத்துக்கு, காலையில் கம்பெனியில் இருந்துவிட்டு, மாலையில் பணம் கலெக்ஷன் செய்து வரவேண்டும்.

“….. ”

ஒருநாள் கலெக்ஷன் முடிந்து வீடு திரும்ப  இரவு  9 :00 மணிக்கு மேல் ஆகிவிட்டது.. வண்டியை நிறுத்தி விட்டு, வீட்டுக்குள் நுழைய முற்படுகையில், வீட்டினுள் இருந்து சிரிப்பு சத்தம் கேட்டது. கதவை தட்டினேன், உடனே கதவை திறந்து சுதாகரும், ரேவதியும் வந்தார்கள். (நானும், ரேவதி, சுதாகர் மூவரும் கல்லூரி வகுப்பு  நண்பர்கள்)  சுதாகர் என்னை பார்க்க வந்து, நான் இல்லாததால் நன்றாக அறிமுகமான  ரேவதியிடம் ஏதாவது கிண்டலாக பேசிக்கொள்ள  சிரித்திருப்பார்கள் என்பதாக நினைக்க

“சுதாகர்” – என்னடா  சுரேஷ்  எப்படி இருக்கே? உன்னை பார்க்கலாம்னு வந்தேன்!  வேலை எப்படி இருக்கு? – என அடுக்கடுக்கான கேள்வியை கேட்டு கொண்டிருந்தான்.

பதிலுக்கு, நானும்.. ‘ஹாங்’ ஒகே! ஒகே! எல்லாம் ஒகே! டா, ரொம்ப நன்றி வாழ்நாள்ள உன்னை மறக்க மாட்டேன் டா, – என்றேன்.

சுதாகர் தொடர்ந்தான்…

ரேவதியிடம் ஒரு ஐடியா சொல்லியிருக்கேன்., கேட்டு பாரு.. workout  ஆச்சுன்னு முடிவுபண்ணிக்கலாம் ஒன்னும் urgent இல்ல, பொறுமையா யோசனை பண்ணி சொல்லு. நேரம் ஆச்சு, நான் இப்போ கிளம்பறேன், என்றபடி கிளம்பிவிட்டான்.

 ‘அன்று இரவு ‘

தாம்பத்ய மகிழ்ச்சிக்கு பின் கட்டிலில், சுதாகர் சொன்ன விஷயத்தை பற்றி ரேவதியிடம் விசாரிக்கையில்.

அது ஒண்ணில்ல சுரேஷ்… சுதாகர் புதியதாக  சீட் கம்பெனி ஆரம்பிக்க போறானாம், இதுல உன்னையும் பார்ட்னராக சேர்த்துக்க விருப்ப படுறான்.

சரி… சந்தோஷம் – என்றேன்

ஆனால்… நீயும்! கொஞ்சம் பணம் போடனுமாம், சின்ன ரோட்ல ஆரம்பித்தால், ஜனங்களுக்கு சரியா தெரியாது, அதனால பெரிய காம்ப்ளக்ஸ் லேயோ, இல்லை, பெரிய கடைகள் எல்லாம் இருக்க கூடிய, இடமாக பார்த்து வைக்கனுமாம், அப்போ தான் எல்லோருக்கும் நம்மள தெரியும்., அந்த மாதிரி இடம் பிடித்தால் அட்வான்ஸ் தொகை கொஞ்சம் அதிகமாகும், அப்புறம் இன்டீரியர் ஒர்க், ஏசி,கம்ப்யூட்டர் விளம்பரம் அப்படி, இப்படி ன்னு தொகை அதிகமாகிறதனால, உன் கிட்டேயும்  பணம் எதிர்பார்க்கிறான். – என்றாள்.

என்னடி… பைத்தியமா அவன். , நானே! அவன் அப்பாகிட்ட மாதம் பதினைந்தாயிரம் சம்பளத்துக்கு போறேன். வீடு வேற சும்மா கொடுத்திருக்கான். அது கவுரமாக இருக்காதுன்னு, வாங்குற சம்பளத்துல, வாடகையாக ஏதாவது கொஞ்சம் கொடுக்கலாம்னு மனசுல நினைச்சிட்டிருக்கேன். இப்போ போய்…

அதுவுமில்லாமல்.. அவ்வளவு பணத்துக்கு எங்கே போவான்னு தெரியாதா? அவனுக்கு. – என்றேன்

நானும்…. அதேயே தாங்க  கேட்டேன். அதுக்கும் ஒரு ஐடியா சொன்னான்-என்றாள்

என்னது…?

உங்க அப்பாகிட்டே போய், கேட்க சொல்றான்.

‘குரலை உயர்த்தி ‘-என்ன…? அப்பாவா…? அவர் எங்கே போவார் பணத்துக்கு, இருந்தும், ஏற்கனவே வீட்டை மீறி உன்னை கல்யாணம் செஞ்சிருக்கேன், தப்பு செஞ்சிட்டு இப்ப  வீட்ல, எல்லோர் முகத்துலேயும் எப்படி போய் முழிக்கிறது? – என்றேன்.

‘பதிலுக்கு’

அது தான் நமக்கு கல்யாணம் ஆகி ஒரு மாதம் மேலே ஆகுதில்ல, இன்னுமா கோபமா  இருப்பாங்க? – கேட்டவளிடம்

சரி…. நீ! சொல்லுவது  போல வீட்டுக்கு போறேன். கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்.   ஆனால்  “பணம் “? -என்றதும்

உங்க அண்ணன் வேலைக்கு போறார், உன் கல்யாண செலவுக்கும், என் மாமனார் அதான்… உங்க அப்பா கொஞ்சம் சேர்த்து வெச்சிருப்பாரா?           இல்லையா?

அதுவும் இல்லையா, வீடு சொந்தமாக இருக்கு, உனக்கு சேர வேண்டிய சொத்தை கேளு, அது இப்போ சாத்தியப்படலைன்னா… வீட்டு பேர்ல கடன் வாங்கி கொடுக்க சொல்லு, அந்த பணத்தை  சொத்தை பிரிக்கும் போது கழிச்சிக்க சொல்லு.

 “சுதாகர்” கொடுத்தது  நல்ல சான்ஸ்., அவனும் உனக்கு தொழில் கத்துக்கொடுத்திட்டு, உன்னையே… கம்பெனியை முழுசா பார்த்துக்க சொல்லிட்டு, வெளிநாடு போற ப்ளான்  வச்சிருக்கான்.

இந்த மாதிரி உதவி செய்யுற ப்ரெண்டு எவன் கிடைப்பான் சொல்லு,

எப்போ…. நீயும் சுய கால்ல நிற்க போறே?வீட்ல பார்க்குற மாப்பிளைகளை விட்டுட்டு, உன்னை நம்பி நான் வேற வந்திருக்கேன்.  நல்ல முடிவை எடுத்துக்கோ– , யோசனை கொடுத்து தூண்டிவிட்டு, மன்மத சுகம் மேலோங்க சீண்டியும் கொண்டிருந்தாள்.

ரேவதி தலையணை மந்திரம் ஒதிய வகையில், தன் பெற்றோரிடம் சென்று பணம் கேட்க வீட்டுக்கு வந்தேன். அண்ணன் வேலைக்கு போயிருந்தார், அம்மா ஹாலில்  வெறும் தரையில் படுத்திருந்தார். கதவை தட்டியதும், அம்மா தான் எழுந்து கதவை திறந்தார்.

‘என்னை பார்த்ததும்’

படுபாவி எங்கே வந்த? என ஆத்திரம் பொங்க அடித்துக்கொண்டேயிருந்தார். சத்தம் கேட்டு, உள்ளே இருந்து வந்த அப்பாவின் முகத்திலும் கோபம் கொப்பளித்துக்கொண்டிருந்தது.

நீ! மட்டும் தான் வந்தியா? இல்லை.. அந்த ஒடுகாளியையும் கூட்டிட்டு வந்திருக்கியா? – என்றவர் தொடர்ந்தவர். அவ்வளவு தூரம் சொல்லியும் கேட்காம, தப்பும் செஞ்சிட்டு, எந்த தைரியத்தில் இங்கே வந்தே? இந்த மாதிரி நடந்துக்கிட்டால் வீட்ல இடம் கிடையாதுன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன். வெளியே போ… என பிடித்து தள்ள முற்பட்டார்.

“நான் “-தொடர்ந்தேன்

ஒரு நிமிஷம்…

நான் யாரையும் கூட்டிட்டு வரல, பழையபடி இங்க தங்கவும் வரல.

அப்புறம்  எதுக்கு வந்தே? – இது  அம்மா

எனக்கு   பத்து லட்ச ரூபாய் பணம் வேணும்?

என்னது…? – என  அதிர்ச்சியுடன், ஏன் எங்களுக்கு ஏதாவது சம்பாதித்து கொடுத்திருக்கியா? – இது  அப்பா

“மௌனம்”

எந்த தைரியத்தில் இவ்வளவு பணம் கேட்பே? – என்றவரை

நான் ஒன்னும் சும்மா கேட்கல… கடனாக தான் கேட்கிறேன்,

என்னது….?  கடனா !

சரி…. கடனா கொடுக்கிறதுக்கும்,  இப்ப… வேணுமில்ல  எங்கே போறது?

ஏன்..? வீடு இருக்குல்ல, அடமானம் வெச்சு கொடுங்க, வீடு பாகம் பிரிக்கும் போது வாங்கிய கடனை கழிச்சு மீதியை அப்போ கொடுங்க என்றதும்.

(இடி தலைக்கு மேல் விழுந்தது போல் உணர்வாகினர் அம்மா, அப்பாவும், எனக்கு வேறு வழி தெரியவில்லை)

‘அம்மா குறுக்கிட்டு ‘- உன்னை பெத்து, எப்படி எல்லாம் வளர்த்திருப்போம். அதெல்லாம் தெரிந்தால் இப்படி சொத்தை பிரித்து கேட்பீயாடா பாவி? – என தலையை அடித்துக்கொண்டு அழுதார்.

நானும் . அந்த இடத்தை விட்டு நகராமல் நிற்கவே,

நாளைக்கு வரசொல்லி, என்னை அனுப்பி விட்டு, சொன்னது போல் மறுநாள் எப்படியோ ….? நான்!  கேட்ட பணத்தை புரட்டி, முகத்தில் எறிந்து,

உனக்கு… சொத்துல இருந்து  சேர வேண்டிய மீதி தொகை, சொத்து.. பாகம் பிரிக்கும் போதோ , இல்லை… விக்கிற நிலைமை வந்தால், உன்னை தேடி மீதி பணம் வரும். அதுவரைக்கும்  இந்த வீட்ல உனக்கு இடம் கிடையாது, நான் செத்திட்டதாக  தகவல் வந்தால் கூட என் பிணத்தை பார்க்க வர வேண்டாம். எனக்கு  நீ ! கொல்லியும் போட வேண்டாம் – என்றது  நினைவில்.

யாரோ அழைப்பது போல். உணர்ந்து

 

       “  கண் விழிக்க  “

 

அம்மா  கதவை திறந்து நிற்பது தெரிகிறது.

“அம்மா “… கண்கள் கலங்க  குரல் கொடுத்தான்

பத்து மாதம் சுமந்து பெத்தவள். பிள்ளையை… இந்த நிலையில், பார்க்க முடியாமல் , வருடங்கள் பல கடந்து இப்படி அநாதையாக வந்து நிக்கிறான். சேர்த்துக்கலாம் என இவனுக்காக பரிந்து மூத்த மகன் சம்பத்திடம் சமாதானம் பேசி , வீட்டுக்குள் அனுமதிக்க கோருகிறாள்.

 வயதான அம்மா  மனம் நோக கூடாது, அவங்க ஆசையை நிறைவேற்றி வைப்பதற்காகவும், சொத்தில் இவனுக்கும்  என்றும் ஒரு பாத்தியம் இருப்பதால் தம்பி சுரேஷை வீட்டுக்குள் வர அனுமதிக்க சம்மதிக்கிறான்.

 டேய்…. சுரேஷா எழுந்திடு உள்ளே வா, பரிவுடன்  அழைத்தாள்

அம்மாவை தொடர்ந்து , இவன் அண்ணியும்

வாங்க “கொழுந்தன்” -என உரிமையோடு அழைக்க

அப்பா உட்கார்ந்திருப்பது போல் ஹாலில், அதே சேரில் அமர்ந்தபடி அண்ணன் சம்பத்  வாசலில் தன்னை கவனித்தபடி இருந்ததை, கண்ணுற்ற சுரேஷ் அப்பாவை பார்ப்பதை போல் உணர்ந்தான்.

தயங்கியபடியே உள்ளே நுழைந்தவன்.

கண்களில் நீர் கோர்த்து, இந்த மெய்யான உறவுகளை  விட்டுட்டு, வேஷம் போட்டிருந்த பொய்யான உறவை தேடி போனதுக்கு சரியான தண்டனை அனுபவிச்சிட்டேன். நீங்கள் அவ்வளவு தூரம் சொல்லியும் கேட்காம, சரியான பாடம் கத்துக்கிட்டேன்.

எல்லோரும்… என்னை! மன்னிச்சிடுங்க. – என மீண்டும் கதறினான்.

அம்மாவை பார்த்து, அழகான உங்கள் முகத்துல, மங்களகரமா இருந்த பொட்டு அழிய நான் தான் காரணமாயிட்டேன். அப்பாவை அநியாயமாக நான் தான் கொண்ணுட்டேன். அவர்  கோபத்துல சொன்னது மாதிரி…. அவருக்கு கொல்லி போட முடியாதவனாயிட்டேன்.

எனக்கு இந்த ஜென்மத்துல மன்னிப்பே கிடையாது. கதறி துடித்தான்.

இதை கேட்ட அம்மாவும், அண்ணியும் கண்ணீர் சிந்த, அண்ணனும் மனம் இறங்கினான்.

சரி போதும், போதும், முதல்ல குளிச்சிட்டு வா, அப்புறம் பேசிக்கலாம் என குளிக்க சொல்லி அனுப்பி, கொழுந்தனுக்காக  உணவு பரிமாற காத்திருந்தாள்.

“…. “

குளித்துவிட்டு வந்தவன், நேரே…. மாட்டியிருந்த அப்பா படத்தின்  முன்பு நின்று வணங்கி, மன்னிப்பு கேட்கிறான். அவரும் மன்னித்து ஆசிர்வாதம் தருவது போல படத்தில் போடப்பட்டிருந்த பூக்களின் உதிரி ஒன்று இவன் மேல் விழுகிறது. இதை அனைவருமே கண்ணுற்று சந்தோஷமடைகின்றனர்.

“….. “

சாப்பிட்டு  முடிந்ததும். தன்  ஐந்து  வருட  வாழ்க்கையின் அவலங்களை சொல்கிறான்.

என் முட்டாள் தனம்., அப்பாவிடம் பணத்தை வாங்கிட்டு, சுயமாக தொழில்  தொடங்காமல், சுதாகரிடம் கொடுத்து, அவன் சொன்னது போல், கம்பெனி ஆரம்பித்து, கஸ்டமர்களை நம்ப வைப்பதற்காக

என்னை… கம்பெனியில் இருக்க வைத்து, இவர் தான் முதலாளி என அனைவரிடத்திலும் நம்ப வைத்து

, சீட்டு பிடித்து, சலுகைகள் பல தருவதாகவும், கவர்ச்சி திட்டங்களையும் சொல்லி, நல்ல லாபம் தருவதாகவும், பல பேர்களிடத்தில் லட்சகணக்கில் பணத்தையும் வாங்கி, கஸ்டமர்கள்… நம்புவதற்காக, கொஞ்சம் நாள் நம்பிக்கையாக நடந்திட்டு.

கம்பெனி டெவலப் செய்ய பணம் வேணும்னு, கடனை… கம்பெனி முதலாளின்னு என்னை மூளை செலவு செஞ்சி கையெழுத்து போட வெச்சு கடன் வாங்கிட்டு,

டெபாசிட் பண்ணி வெச்சிருந்த மற்ற  அத்தனை பணத்தையும்,  எடுத்துக்கொண்டு கூடவே… நான் கல்யாணம் செய்த ரேவதியையும், மயக்கி, இழுத்திட்டு எங்கேயோ ஓடிட்டான். அந்த சுதாகர்.

நான்… அவங்க அப்பா கம்பெனியில், வேலை பார்த்திட்டிருக்கும் போது. நான் வீட்ல இல்லாத நேரமாக  பார்த்து  அடிக்கடி வீட்டுக்கு வருவான் போல. அது ரேவதியின்  கள்ள தொடர்பாக மாறி  போச்சு. அது தான்.

இப்படி.. சீட்டு போட்டவங்க, கடன் கொடுத்தவங்க எல்லாம்.. என்னை கேட்டு தொந்திரவு பண்ண ஆரம்பிச்சுட்டாங்க, பணத்தை இன்னொருத்தன் ஏமாத்திட்டு போயிட்டான் அப்படிங்கிறதையும் யாரும் நம்பல, ஒரு கட்டத்தில் நானும் தலைமறைவாக இருக்க வேண்டியதாக போய், கடைசியில் போலீஸ் என்னை கண்டுபிடித்து அரஸ்ட் பண்ணிட்டாங்க.

கோர்ட், கேஸ்-ன்னு, அலைந்தேன், ஒரு நல்ல வக்கீலை ஜட்ஜ்  ஐயாவே  ஏற்பாடு பண்ணிக்கொடுத்தார். நடந்த விஷயங்களை எல்லாம் அவரிடம் சொன்னேன்.  அவரும்… தலைமறைவான சுதாகர் கிடைத்ததும்,  கண்டிப்பாக உனக்கு விடுதலை வாங்கித் தரேன்.னார்

கடவுள் செயல் ‘அந்த சுதாகர்’ பையனையும், அவளையும், போலீஸ் எப்படியோ கண்டுபிடித்து.  இப்போ உள்ளே இருக்காங்க. என்னை விடுதலை பண்ணிட்டாங்க  – என சொல்லி முடித்தான் சுரேஷ்.

வீட்டிலிருந்த  அம்மா, அண்ணன், இருவரும்.

சரி… விடு, நடந்தது  நடந்து போச்சு, கெட்ட கனவாக நினைத்து  எல்லாத்தையும் மறந்திடு. இனி நடக்க வேண்டியதை பாரு. என்றனர்.

அண்ணன் கல்யாணம் செய்த விஷயத்தையும், தாமதமாக தற்போது அண்ணி கர்பமாக  இருக்கும் விஷயத்தை அறிந்து மகிழ்ச்சி கொண்டு வாழ்த்து தெரிவித்து,

சரி… நான் கிளம்புறேன் என்றான் சுரேஷ். கேட்டவர்களுக்கு அதிர்ச்சியாகி

எங்கேடா போக போறே? – இது அண்ணன் சம்பத்.

எங்கேயோ..  என்றான் சுரேஷ்.

வேண்டாம்…. வேண்டாம்

நீ… இனி மேல் எங்கேயும் போக வேண்டாம். உனக்கு  இங்கே  இருக்க  எல்லா உரிமையும் உண்டு, இந்த வீடு உனக்கும் தான் சொந்தம். அப்பா உனக்கு கொடுத்தது, உன் தொழிலுக்கு கொடுத்த பணமாக நெனச்சுக்கோ, தொழில்ல நஷ்டம் ஆயிடுச்சுன்னும் நெனச்சுக்க  நான் வேணும்னா கொஞ்சம் பணம் சும்மா  தரேன். அதை வைத்து, உனக்கு தெரிந்த தொழிலை செய்து பிழைத்துக்கோ– என்றவனிடம்

இல்லே, அண்ணா

  என் கண்ணுக்குள்ளேயும், நெஞ்சுக்குள்ளேயும் இருந்த உங்களை எல்லாம் ஒருநாள் பார்க்கணும், நான் செஞ்ச தப்புக்கெல்லாம் உங்கள் கிட்ட பகிரங்கமாக மன்னிப்பு கேட்கனும்ன்னு நெனச்சிட்டிருந்தேன். இப்போ நடந்திருச்சு.

என் வந்த வேலையும் .. முடிஞ்சது.

எல்லோரும் சந்தோஷமாக இருங்க, என்னை பத்தி கவலைப்படாதீங்க, இந்த ஐந்து வருடம் நான் இல்லாம, என்னை இன்னிக்கு பார்த்ததும், நான் உயிரோடு  இருக்கிறதை  தெரிஞ்சுக்கட்டீங்க.

அதுமாதிரி…எப்பவுமே நினைச்சுக்குங்க, நான் உயிரோடு  இருந்தால் என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக வந்து பார்த்திட்டு போறேன்.

‘வரேன்’

“கிளம்பினான்”

 

*****முற்றும்….

 

 

                                                                                                                ச.சிவபிரகாஷ்                                                                                                  

 

 

Series Navigationதொடரும்…..!!!!இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு  
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *