நவீன விருட்சம் 121  ஒரு பார்வை   

This entry is part 6 of 7 in the series 25 டிசம்பர் 2022

எஸ்ஸார்சி

 நவீன விருட்சம் அழகியசிங்கரால் வெளியிடப்படும் காலாண்டிதழ். 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு சிற்றிதழைச் சாத்தியமாக்கிகொண்டிருப்பது ஆசிரியரின் இலக்கிய ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. சத்தான மெய் நிகர் இலக்கிய க்கூட்டங்களையும்  விமர்சன நிகழ்ச்சிகளையும் அழகியசிங்கர் நடத்தி வருகிறார். கதைஞர்கள் பற்றிய   மெய்நிகர் அமர்வு மற்றும் கவிதை நேசிப்புக்கூடுகை என்பவை அவை.

121 நவீன விருட்சம் எப்படி வந்துள்ளது என்பதனை  இவண்ஆராய்வோம்.

அழகியசிங்கரின் ’கழுதை’ கவிதை என்னை மிகவும் பாதித்தது. அப்பா மகளைச்செல்லமாகக்கழுதை என்று விளிக்கிறார்.  படவா படுவி  என்று பெற்றோர் குழந்தைகளை அழைப்பதுண்டு. அம்மாவிடம் குழந்தையின்புகார் போகிறது.  பின்னர் அப்பா அப்படிக்கூப்பிடுவதை  நிறுத்திக்கொண்டார். மகள்  பெரியவள் ஆகிறாள். வேலை வருகிறது சம்பாதிக்கிறாள்.மணம் செய்து கொள்கிறாள்.  இப்போது எல்லோருடைய பொதியையும் சுமக்கும் கழுதையாகிவிட்டேன்  என்று அந்த  மகளே தன்னைப்பற்றிய  ஒரு விளக்கம் சொல்கிறாள். பெற்ற பெண்ணை  ஒரு தந்தை கழுதை என்று அழைப்பது  பிரியமான செல்லத்தின் வெளிப்பாடு அன்பின் மொழி. அதனை விளங்கிக்கொள்ளும் நிலையில் குழந்தை இருக்கமுடியாது. வளர்ந்து ஆளாகி மணம் செய்துகொண்டு அப்பெண் பாரம் பல சுமந்து வாழ்க்கையை நடத்துகிறாள்.  

அப்பாவிடம் என்ன சொன்னாளோ அம்மா

அப்புறம்

அப்படிக்கூப்பிடுவதை

நிறுத்திவிட்டார்.’

 இந்த ’என்ன சொன்னாளோ அம்மா’ மிகவும் சிந்திக்கவைத்தது. குழந்தை தாய் தந்தை மூவரையும் நம் கண் முன்னே  ஓவியமாய்க் கொண்டு நிறுத்திய அழகியசிங்கரைப் பாராட்டலாம்..

பேயோன் குறுங்கவிதைகள் சில இவ்விதழில் வெளியாகிருக்கின்றன. அவை சமூகத்தைச் சீண்டித்தான் பார்க்கின்றன.

‘எத்தனை கோடி

இன்பம் வைத்தாய் இறைவா?

கணக்குக்காட்டேன் கொஞ்சம்.’  நல்ல கவிதைச்சொடுக்கல்.

‘உப்புபெறாத சாப்பாடு

பல்லிடுக்கில்

மாட்டிக்கொள்வதில்

குறையொன்றுமில்லை.’

கச்சிதமான குறுங்கவிதை.  எள்ளல் நகைச்சுவை விரைந்த  குறும்படைப்பு.

வத்சலாவின் ’மூன்று கவிதைகள்’ சிறப்பாக வந்துள்ளன. நல்ல முடிப்புக்களை உடமைகளாகக்கொண்ட படைப்புக்கள் அவை.

‘எனக்கு கொலு

 பார்க்கப் பிடிக்கும்

அதில் அமர அல்ல’

’இப்பொழுது

நான் நேராக நிற்பதை

மற்றவர் சொல்லித்தெரிந்துகொள்கிறேன்’

’நான்?

வாசிக்காத உனதும்

எழுதாத எனதும்’

அனங்கனின் ’சிலந்தி நூலிலாடும் சின்னப்பூ’  நமக்கு சேதி எதுவும் சொல்லவில்லை. ஒரு செய்தியை விட்டுச்செல்கிறது. இரண்டிற்கும் உள்ள கனமான வேறுபாடு உணரமுடிகிறது

‘இருக்கும் இடம் எதுவானாலும்

அதுதன் மலர்ச்சியை

இழக்கவில்லை’

மலர் எங்கிருப்பினும் தன் நிலையைத் தனதாக்கிக் கொள்கிறது. நெருக்கடி நிலைகளிலும்  உயர்ந்த வாழ்க்கை  மனிதனுக்கும் சாத்தியப்படுமானால் அதுவே சிறப்பு.

தாஜ்மகாலைப்புகழும் இடத்து  வைதீஸ்வரன் கவிதை ‘காதல் சுமந்த கர்ப்பிணி எழில்’ என்று பேசுகிறது. ’காலம் சமைகிறது. நீ  யோ ஒரு அசட்டுப்பெண்’ என்கிறார் தாஜ்மகால் அழகை வைதீஸ்வரன்.

மாடத்தில் நிற்கும் புறா ஓவியனுக்கும் கவிஞனுக்கும்  கருப்பொருளாகிறது. ஒளியில் மவுனம் கண்கிறார் புனிதஜோதி. மவுனமும் பேசுமொழிதானே.

வந்துபோகட்டும் கவிதையில்  கவி முருகு பல சிலர்களின் அனுபவம் சொல்கிறார். மோகனரங்கனின் கண்ணாடி உடைந்து கடவுளர் பல ஆன  நல்ல கதை சிறப்பு.

’’பொண்ணுகள் வசதியாகத்தான் இருக்கிறார்கள்.ஆனாலும் சொத்து பிரச்சனைன்னு வரும்போது எல்லோருமே பிச்சைக்காரிகள் ஆகிவிடுகிறார்கள்’ என்று பேசும்  புதிய மாதவியின் கதை சிந்திக்கவைக்கிறது. கதையின் தலைப்பு இதனை பொருளடக்கத்தில் இதழாசிரியர்  முதல் விஷயமாய்  சேர்த்திருக்கவேண்டாமோ என்றும் தோன்றுகிறது.

 பம்பாயிலிருந்து வந்த அல்போன்ஸ்  பழங்கள் நூறு காலி செய்து கொட்டையை மட்டும் போட்ட குரங்கும், பழம் இருப்பதை லிஸ்டில் குறிப்பிடாது  எப்படி  நீ அனுப்பினாய் எனக்கேள்வி கேட்டு மடக்கும் ஸ்டேஷன் மாஸ்டரும்    லதா ரகுநாதனின் குரங்குவெடி கதை சுவாரஸ்யம்.

ஸிந்துஜாவின் கூடு  கதையில் வரும், குளிர்ச்சி மருந்துக்குக்கூட இல்லாத பெங்களூர்,  சீனா ராஸ்கல், ஜுர ரசம், கபடம் நிறைந்த அழகு, ஏதோ அமெரிக்கா கம்பெனியாம் அவா முடைக்குத்தான் வேலை செய்யணுமாம் பகல்லே தூங்கறதுனாலெ ரொம்ப வெளீல வரறதில்லையாம்  போன்ற சொல்லாடல்கள் படைப்புக்கு வலு கூட்டுகின்றன.

முபீனின் மூன்று குறுங்கதைகள்  பளிச்சென்று தெரிவாகின்றன.

காந்தம் கொண்டு  திருடனின் இரும்புக்கை மீட்ட கதை, கொலைப்பழியை ஆயுள் முழுக்கச்சுமக்க வேண்டியது நினைத்து அழும் பெண்ணின் கதை,  எப்போதும் அவன் பார்வையில்   வாழ ஓவியம் வரையும் கித்தானில் ஓவியமாகிய ஒரு பெண்ணின் கதை நிறைவு தருகிறார் முபீன்.

அசோகமித்திரன் பற்றி இ.பா வின் கட்டுரை ஆழமானது. விருடசத்தின் மெருகு கூட்டி நிற்கிறது. கிங்கரன் என்ற பெயரில் காரசாரமான அரசியல் கட்டுரை எழுதியவர் அசோகமித்திரன் என்பது புது செய்தி.

பிராந்தியமொழி எழுத்தாளர்களை இந்திய எழுத்தாளர்கள் என்று அழைக்கச் சுணங்கும் மய்ய அரசு பற்றி இ.பா குறிப்பிடுகிறார்.  சமீபமாய் காசிதமிழ் சங்கமம் போனவர்களுக்கு ஏதேனும்  விடை தெரியலாம்.

மனதில் தோன்றும் சில குறிப்புகள் என்னும் தமிழவனின் கட்டுரை வழக்கம்போல் கூர்மையானது. சில எடுத்துக்காட்டாய்.

‘கட்சியில் உள்ள சிந்தனைத்துறையில் வேலை செய்யும் கருத்துக்களத்தில் இருந்த உழைப்பாளிகளும் ஏனோ புது மார்க்சீயம் கூறும் விசயங்களில் அக்கறை காட்டவில்லை’

‘நமச்சல் தீர்ப்பதல்ல மார்க்சியம் வாசிப்பதென்பது’

‘தமிழ்ப்பெரும்பத்திரிகைகள் ஒன்றில் கூட  நான் எழுதியதில்லை. அவை பாக்கியம் செய்தவை’

‘எல்லா மனிதர்களும் கலைஞனாயும் மனிதனாயும் இருக்கிறார்கள்’

‘கதை எழுதுகிறவர்கள் உலகைப்பற்றியும் அதன் பகுதியாகிய தத்துவம்,பொருளாதாரம்,விஞ்ஞானம் போன்றவற்றையும் மேலும் மேலும் அறிந்துகொண்டே இருக்கவேண்டும்’

விருட்சம் வெளியீடு ‘அஞ்சலட்டை கதைகள்.’  அழகிய சிங்கரின் இந்தக்குறுங்கதைகள் பற்றி athangoduanish@rediffmail.com சொல்லும் விஷயத்தை மீண்டும் இவ்விதழில் பார்க்க வாய்க்கிறது. தன்னுடைய நீரோட்டம் போன்ற இயல்பான நடையால் அழகியசிங்கர் மனிதர்களின் அக உலகைத்திறந்து வைக்கிறார் என்று சபாஷ் சொல்கிறது இக்கட்டுரை.

அழகிய சிங்கர், பா.ராகவன்,யுவன் சந்திரசேகர், பெருந்தேவி,முபின்சாதிகா போன்றோர் எழுதிவரும் குறுங்கதைகள் தீவிர வாசிப்பிற்கும் ஆழ்ந்த விவாதத்திற்குரியவை. ஆக குறுங்கதைகளுக்கு ஒரு  பிரகாசமான பாதை தெரிகிறது.

அழகியசிங்கர்,மோகினி,ஜெகன் மூவரும் சந்திப்பது உரையாடலாக மலர்கிறது. குறுங்கதைப் பாணி இங்கும் அனுபவமாகிறது அண்மையில் மறைந்த .பா.செயப்பிரகாசத்திற்கும், விழி.பா இதயவேந்தனுக்கும் அஞ்சலியோடு உரையாடல் முடிகிறது.

121 இதழ்  வாசகர்க்குக் காத்திரமாய் வந்திருக்கிறது. அழகியசிங்கருக்குப்பாராட்டுகள்.

Series Navigationகாற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்புஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *