ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 4

This entry is part 18 of 20 in the series 29 ஜனவரி 2023

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++

[ வெனிஸ் கருமூர்க்கன் ]

அங்கம் -1 காட்சி -2 பாகம் : 4

++++++++++++++++

நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]

ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது]

மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]

புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது]

காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]

ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன்

சிசாரோ : மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது]

எமிலியோ : புருனோவின் மனைவி.

மான்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.

பயாங்கா : காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.

மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.

நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு, துருக்கி நாடு. 

++++++++++++++++++

[முன் பதிப்புத் தொடர்ச்சி]

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்
அங்கம் -1 காட்சி -2 பாகம் : 4

இடம் : அரசவை மன்றம்
நேரம் : இரவு வேளை
பங்கு கொள்வோர் : வெனிஸ் நகர டியூக், செனட்டர்கள், விளக்கேற்றிய மாளிகை
.

டியூக்: [பின் தொடர்வோரைப் பார்த்து] இவற்றை எல்லாம் பார்க்கும் போது], என்ன தெரியுது உங்களுக்கு ?

முதல் செனட்டர்: மேலோடித் தெரிவது, இவை எல்லாம் மெய்யில்லை என்று. ஒரு பொய்க் காட்சி, நமது கவனத்தை திசை திருப்பி துருக்கி நாடு சைப்பிரசை எளிதாய்க் கைப்பற்றிக் கொள்ள முயல்கிறது. சைப்பிரஸ் துருக்கி நாட்டுக்கு எவ்வளவு முக்கிய தேவை என்பதை நாம் அறிவோம். ஆனால் சைப்பிரஸ் யுத்தம் புரியத் தயாராக இல்லை. யுத்தத் தளவாடங்களும் இல்லை. தருணம் பார்த்து துருக்கி படையுடன் தாக்க காத்துக் கொண்டிருக்கிறது. 

டியூக்: ரோடசை [Rhodes] நோக்கி துருக்கி இப்போது ஏகவில்லையே. 

அதிகாரி:  இதோ இன்னும் ஒரு தகவல் வருகிறது.

[தூதுவன் ஒருவன் வருகிறான்]

தூதுவன்: துருக்கி ராணுவப் படகுகள் ரோடஸ் தீவு நோக்கிச் செல்கின்றன. அடுத்து ஓர் படை அணியும் பின் வருகிறது.

முதல் செனட்டர்: அப்படித்தான் நானும் நினைக்கிறேன். எத்தனை படகுகள் வரலாம் என்று நீ யூகிக்கிறாய் ?

தூதுவன்:  சுமார் முப்பது படகுகள். இப்போது சற்று பின் தங்குகிறார்கள். உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான, பராக்கிரம உமது பணியாள் மேதகு மான்டேனோ, அதாவது சைப்பிரஸ் தீவின் ஆளுநர் உங்களுக்கு உறுதுணை யாக இருப்பதால் தூதுவனை நம்பலாம். 

[தூதுவன் போகிறான்]

டியூக்: நிச்சயம் அது சைப்பிரஸ்தான். இப்போது மார்கஸ் லுசிகஸ் தலைநகரில் இல்லையா ?

முதல் செனட்டர்: இல்லை, பிளாரன்ஸில் இருக்கிறார். 

டியூக்: நம் கருத்தை உடனே எழுதிச் செல். போ.

முதல் செனட்டர்: பாருங்கள் சிசாரோ வருகிறார், பராக்கிரம கறுப்பன் மூர்க்கனோடு.

[சிசாரோ, ஒத்தல்லோ, காசியோ, புருனோ, ஷைலக்  ஆகியோர் நுழைகிறார்]

டியூக்: பராக்கிரம ஜெனரல் ஒத்தல்லோ, உடனே இன்று உமது படைத் தளவாடங்கள் தயாராக வேண்டும், உலகப் பகைவர் துருக்கியரை எதிர்த்து.  [சிசாரோவை நோக்கி]  நான் உன்னைப் பார்க்க வில்லையே. வருக, வருக மேதகு கோமானே. எமக்கு உமது உதவி, ஆலோசனை இன்றிரவு தேவை. 

சிசாரோ: மன்னிக்க வேண்டும் மதிப்புக்கு உரிய வேந்தே.  எனது அரசாங்க பதவி, அதிகாரம் எதுவும் என் இல்லத்தில் தனிப்பட்ட தொல்லைகளிட மிருந்து என்னை காக்க வில்லை. காரணம், சமீபத்தில் தாங்க முடியாத் துயர் என்னைப் பற்றிக் கொண்டு குறையாமல் துடிக்க வைத்துள்ளது. 

டியூக்: என்ன கேடு விளைந்து விட்டது ?

சிசாரோ: [கோவென கதறி]  என் மகள், அருமை மகள்….

எல்லாரும்: மகளுக்கு என்ன ஆச்சு ? செத்து விட்டாளா ?  

சிசாரோ: ஆம், என்னைப் பொறுத்தவரை அவள் செத்துப் போனவள் தான்.  அவள் இனி எனக்கு மகள் இல்லை. ஒருவனால் ஏமாற்றப் பட்டாள் அவள். களவாடப் பட்டாள் அவள். மந்திரத்தால் கவரப் பட்டாள் அவள். இழந்து விட்டேன் நான் நிரந்தரமாய் அவளை.

டியூக் [அழுத்தமாக] இத்தகைய மாபெரும் குற்றத்தை உனக்கு செய்தவன் எமது மகன் ஆயினும் சட்டத்தின் மூலமாகத் தான் பிடித்து அவனைச் சிறைக்குள் தள்ள வேண்டும்,  தண்டிக்க வேண்டும்.

சிசாரோ: உங்கள் அனுதாபத்துக்கு எனது பணிவான நன்றி.

டியூக்: யார் அந்த குற்றவாளி ?

சிசாரோ: [ஆவேசமாக ஒத்தல்லோவைச் சுட்டிக் காட்டி] இதோ நிற்கிறானே உங்கள் முன்பு.  ஒரு கரு மூர் இனத்தவன். ஜெனரல் இப்போது உங்கள் குற்றவாளியாக தண்டிக்கப்பட வேண்டும்.     

[தொடரும்]    

Series Navigationதேர் வீதியும் பொது வீதியும்…வேரில் பழுத்த பலா
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *