அங்கம் –1 காட்சி –2 பாகம் : 5
[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++++++++++++
[ வெனிஸ் கருமூர்க்கன் ]
++++++++++++++++
நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]
ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது]
மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]
புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது]
காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]
ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன்
சிசாரோ : மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது]
எமிலியோ : புருனோவின் மனைவி.
மான்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.
பயாங்கா : காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.
மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.
நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு, துருக்கி நாடு.
++++++++++++++++++
[முன் பதிப்புத் தொடர்ச்சி]
ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்
அங்கம் –1 காட்சி –2 பாகம் : 5
இடம் : அரசவை மன்றம்
நேரம் : இரவு வேளை
பங்கு கொள்வோர் : வெனிஸ் நகர டியூக், செனட்டர்கள், விளக்கேற்றிய மாளிகை.
அனைவரும் : வருந்துகிறோம் இந்த தகாத தவறுக்கு.
டியூக்; [கடுமையாக ஒத்தலோவை நோக்கி] நீ என்ன காரணம் கூறுவதாய் நிற்கிறாய் ?
ஒத்தல்லோ : [குழுமிய கூட்டத்தை நோக்கி] மதிப்பு மிக்க கவலை கொண்ட நாட்டு மக்காள் ! மேதகு மேலாளர்காள் ! அவரது புகார் உண்மைதான். இந்த வயதான செல்வந்தர் மகளை கூட்டிச் சென்றது நான் தான், என்று ஒப்புக் கொள்கிறேன். அதோடு ஓர் உண்மை , நான் அவளை மணந்து கொண்டது. மோனிகா என் மனைவி. அதுதான் நான் செய்தது. அது என்ன, தவறா ? நான் ஒரு மூர்க்கன், முரடன், திறமை இல்லாதவன், அடங்கி அமைதியாய்ப் பேசவோ, கண்ணியமாய் நடந்து கொள்ளவோ பழக்கம் இல்லாதவன். ஏழு வயது முதல் கடந்த ஒன்பது மாதங்கள் வரை என் உடற்பலம் முழுதும் போர் முனையிலே கழிந்து போனது. பொதுப் பொழுது போக்கு உலகம் நான் அறியாதது, நான் இப்போது காதல் வயப்பட்டது தவிர்க்க முடியாத மனிதச் செயல்தான். நான் மந்திரம், தந்திரம், மாய வித்தைகள் தெரியாதவன். அவற்றைச் செய்து நான் மகளைக் கடத்திச் சென்றதாய், இப்போது புகார் செய்கிறார் சிசாரோ.
சிசாரோ: இளங்குமரிப் பெண் என் மகள். அப்பாவிப் பெண். வெளி உலகம் தெரியாதள். அவள் எப்படி கரு மூர்க்கன் ஜெனரல் ஒத்தல்லோவை காதலிக்க முடியும் ? கருப்பன் விரித்த காம வலையில் சிக்கிக் கொண்டாள் என் செல்வி. அறியா பருவம், தன்னினப் பெருமை, தாய்நாடு, எல்லாவற்றையும் இழந்து எப்படி காண வெறுக்கும் இந்த கருப்பு மானிடனை நேசிப்பாள் ? நியாய சிந்தனை உடைய எவரும் கண்டு கொள்வார். பிசாசுச் சூட்சமம் இங்கே கடைப்பிடிக்கப் பட்டுள்ளது. மீண்டும் நான் இப்போது அறிவிக்கிறேன் ஒத்தல்லோ ஏதோ ஒரு மயக்க மருந்தைக் கொடுத்து தான் என் மகளை மயக்கி, களவாடிப் போய் இருக்கிறான்.
டியூக்: சும்மா வெறும் வாய்ச்சொல் மட்டும் போதாது. தக்க சான்றுகள் தரவேண்டும் சிசாரோ.
முதல் செனட்டர்: ஒத்தல்லோ ! முதலில் இதைச் சொல். மயக்க, மாந்திரிக மோசடி செய்து இந்த இளமாதின் காதலைப் பெற்றாயா ? அல்லது உமது உள்ளங்கள் ஆத்ம கவர்ச்சி கொண்டனவா ?
ஒத்தல்லோ: தங்கி இருக்கும் பங்களாவுக்குச் சென்று, இளம் மங்கை மோனிகாவை நேரே அழைத்து வந்து கேட்டுப் பாருங்கள். அவள் தந்தை முன்பு, நான் கெட்ட வழிகளில் அவளைக் கடத்திச் சென்றேனா என்று சொல்லட்டும். நான் என் பட்டம், பதவியைக் கைவிடத் தயார்., உங்கள் தண்டனையும் ஏற்றுக் கொள்ளத் தயார்.
டியூக்: [காவலரிடம்] மோனிகாவை அழைத்து வருக.
[காவலர் போகிறார்]
ஒத்தல்லோ: [புருனோவை நோக்கி] தங்குமிடம் உனக்குத் தெரியும் அல்லவா ! நீயே அவரை வழி நடத்திச் செல். [மற்றரை நோக்கி] அவள் வரட்டும். நான் மெய்யாகச் செய்த என் பாபத்தை கடவுள் முன்பு முறையிடுகிறேன். மேதகு டியுக், உங்கள் காதில் படச் சொல்கிறேன். என்னை அந்த இளமாது எப்படி நேசிக்க வாய்ப்பு வந்தது என்று விளக்குகிறேன்.
டியூக்: சொல் ஒத்தல்லோ சொல்.
ஒத்தல்லோ : மோனிகாவின் தந்தை சிசாரோக்கு என்னை மிகவும் பிடிக்கும். அடிக்கடி அவரது இல்லத்துக்கு வர அழைப்பார் எனது தீவிர ச் செயல்களை தெரிந்து கொள்ள. நான் என் சிறு வயது முதல் வாலிப வயது வரலாறுகளை போர்முனை தீரச் செயல்களை எல்லாம் பெருமையோடு பீற்றிக் கொள்வேன். ஒளிந்து நின்று மோனிகாவும் கேட்டுக் கொண்டிருப்பாள். என்னைத் தனியே கண்டும் என்னைப் பற்றி விளக்கம் கேட்பாள். சிறு வயதில் நான் பட்ட துன்பங்களைக் கேட்கும் போது அவளது கண்களில் கண்ணீர் பொங்கியது. போர்ப்படையில் நான் பணி செய்த போது, கருப்பன் என்னை வெள்ளையர் கேலி செய்வது, புண்படுத்துவது , பூட்ஸ் காலால் எற்றி உதைப்பது, காயப் படுத்துவது, காரி என்மேல் துப்புவது தினமும் நான் பெற்ற வெகுமதி. இவற்றை எல்லாம் கடந்து நான் இப்போது காலாட்படை ஜெனரல் என்று உயர் பதவியில் இருப்பது மோனிகாவைக் கவர்ந்தது. இதுதான் மந்திரம், மையல் மருந்து இல்லாத எங்கள் காதல் பயணம். இதோ மோனிகா வந்து விட்டாள். அவளையும் நேரே கேளுங்கள்.
[மோனிகா , தோழியர், புருனோ சூழ வருகிறாள்],
[தொடரும்]