இருப்பதும் இல்லாதிருப்பதும்

author
0 minutes, 6 seconds Read
This entry is part 8 of 17 in the series 12 பெப்ருவரி 2023

ராம் ஆனந்த்

மக்கள் கூட்டமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்

நடத்தல் ஒன்றே யாயினும் 

நடத்தலுக்கான காரணங்கள் வேறு வேறு.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.

வெவ்வேறு மொழிகளில் பேசிக்கொண்டாலும்  ஒன்றிணைப்பது தேவையின் புள்ளி.

கிராமத்தான் எதைப் பற்றியும் யோசிக்காமல் ஓடும் நடையோடு 

தனக்குத்தானே பேசிக்கொண்டு 

குனிந்த தலை நிமிராமல் 

முணுமுணுத்தவாறு போய்க் கொண்டிருக்கிறான்.

யாசிப்பவர்கள் மெய்மறந்து 

வழியெங்கும் 

தூங்கிக் கொண்டும் விழித்துக் கொண்டும்

சூடம் விற்றுக் கொண்டிருக்கும் 

கைவிடப்பட்ட பாட்டிகள் தாத்தாக்கள் தொலைத்த வாழ்க்கையை ஓடி ஓடி 

தேடி கொண்டிருக்கிறார்கள்.

உற்சாகத்தோடு துள்ளலோடு 

யுவதிகளின் நடையும் நடனமும்

பொதுவெளியில் பூத்திருந்தன.

நீக்கமற நிறைந்திருக்கும் இறை அருள்

பௌர்ணமி ஒளி வெள்ளத்தில் 

ஜன சங்கமத்தில் 

இயற்கைக்கும் மனிதனுக்கும் 

ஆதி தொப்புள் கொடி உறவில் 

சிறு மயக்க நிலை.

கைவிடப்பட்ட மனதிலிருந்து 

துண்டிக்கப்பட்ட ஆதி எண்ணத்திலிருந்து

விட்டோடிய ஏதோ ஒன்றோடு பேசி மகிழ, உணர்ந்து திளைக்க, எங்கு பார்த்தாலும் கால்களின் நடைகள்.

நடந்து நடந்து பூமியைச் சுற்றிவர ஆக்ரோஷத்தின் ஆற்றல்.

செய்த செயல்களின் சுமை தாங்க முடியாமல்

தள்ளாடும் நடையில் அழிந்து ஒழிய மறுக்கும் நினைவுகளும்.

செய்யக்கூடாத செயல்களும்

சிந்தித்துப் பார்க்கிறேன் சிந்திக்காமல் இருப்பதற்கு. 

சிந்திக்க மறக்க மௌனத்தில் ஆழ்ந்தாலும் மௌனமும் ஒளியாகி மௌனத்தில் கரைகிறேன்.

கடவுள் இருக்கிறார் தான். இல்லையென்றாலும் பரவாயில்லை. 

பிரம்மாண்ட ஜன கூட்டத்தில் மனதால் உறவாடி தனித்திருக்கும் தனிமையில். தனியாகக் கூட்டத்திற்குள், 

நானே நானாகி 

என்னுள் நானாகி 

நானாகிய என்னுள் அவனுமாகி

அவனுமாகிய என்னுள் அவளுமாகி

அவளுக்குள் நானும் எனக்குள் அவளும் ஆகி 

எங்களுக்குள் இறையாய் நிற்கும் இறையே 

இறைந்து இறைந்து இறைஞ்சினாலும் காண்பறியா பரம்பொருளே 

கண்டுணர முடியா, உயிர்த்துணர முயன்று நடந்து கொண்டே இருக்கின்றன பல்லாயிரம் கால்கள் கண்டடையும் கனவோடு.

Series Navigationமழைநானே நானல்ல
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *