வெனிஸ் கருமூர்க்கன் – ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 10

This entry is part 6 of 18 in the series 5 மார்ச் 2023

தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++

அங்கம் -1 காட்சி -2 பாகம் : 10

++++++++++++++++

நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]

ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது]

மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]

புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது]

காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]

ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன்

சிசாரோ : மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது]

எமிலியோ : புருனோவின் மனைவி.

மான்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.

பயாங்கா : காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.

மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.

நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு

++++++++++++++++++

இடம் : அரசவை மன்றம்
நேரம் : இரவு வேளை
பங்கு கொள்வோர் : வெனிஸ் நகர டியூக், செனட்டர்கள், விளக்கேற்றிய மாளிகை.

[முன் பக்கத் தொடர்ச்சி]

ஒத்தல்லோ: [போகும் சிசாரோவை விளித்து] புது மணத் தம்பதிக்கு ஒரு அன்புத் தந்தை அளிக்கும் ஆசீர்வாதமா இது ? உமது சாபம் எம்மை நோகச் செய்யாது ! மோனிகா என்னை மிகவும் நேசிக்கிறாள். ஒருபோதும் எனக்கு அவள் வஞ்சனை செய்ய மாட்டாள். முறையாக அவள் உமது அனுமதி கேட்டிருந்தால் நீவீர் மனம் ஒப்பி திருமணத்தை நடத்தி வைப்பீரா ? அவளை மகள் இல்லை என்று ஒதுக்கி விட்டீர் ! என்னைப் போர்க் களத்துக்குப்

போகச் செய்து செனட்டர் என்னைப் பிரித்து விட்டார். அவளைப் பாதுகாத்து உதவி செய்ய பெற்ற தந்தைக்கே விருப்பம் இல்லை. [புருனோவைப் பார்த்து] கண்ணிய புருனோ ! நீ உத்தமன். உன்னை நம்பி என் கண்மணி மோனிகாவை உன் இல்லத்தில் விட்டுச் செல்கிறேன். அவளுக்குத் துணையாக இருக்க உன் மனைவிக்கு அனுமதி கொடு. தக்க தருணத்தில் நீ சைப்பிரசுக்கு அவளை அழைத்துவா. [மோனிகாவைப் பார்த்து] வா என் கண்மணி, நமக்கு ஒரு மணி நேரம் தான் உள்ளது திருமணத் தம்பதியாய் வாழ்வதற்கு. கடிகாரத்தை பார்த்துக் கொண்டே நேரத்தை கடக்க வேண்டும். போகலாம். [ஒத்தல்லோ, மோனிகா போகிறார்]

ஷைலக்: [புருனோவை நோக்கி] புருனோ ! நான் இப்போது என்ன செய்ய வேண்டும், சொல்.

புருனோ: நள்ளிரவு நேரம். தூங்கப் போ கொஞ்ச நேரம் தூங்கலாம். விடியப் போகிறது.

ஷைலக்: [சோகமுடன், ஆங்காரமாய்] நேரே போய் நீரில் நான் மூழ்கிச் சாகப் போகிறேன்.

புருனோ: நீ செத்தால் நான் இனி உன் நண்பனாக இருக்க முடியாது. மூடச் செல்வந்தனே ! நீ ஏன் மூழ்க வேண்டும் ?

ஷைலக்: [மனக் கசப்புடன்] வாழ்வதே மூடத்தனம், வாழ்க்கை இதயத்தைக் கிழிக்கும் போது. மரணம் நமக்கு மருத்துவராய் ஆகும் வேளையில் சாவுதான்் அவர் தரும் தக்க மருந்து.

புருனோ: என்ன கோரத்தனமான மூடத்தனம் ! நானும் உலக வாழ்வை 28 வருடங்களாய் உள்நோக்கி வருகிறேன். ஒருவனுக்கு எது காயம் உண்டாக்கும், எது உபகாரம் செய்யும் என்பதை நன்கு அறிவேன். இதுவரை எப்படி ஒருவன் தன்னை இப்படித்தான் நேசிக்க வேண்டும் என்று கருதுபவனைக் கண்ட தில்லை . ஒரு பெட்டைக் கோழியின் காதலுக்காக நான் நீரில் மூழ்கிச் சாவதாய் சொல்வதற்கு முன்பு, ஒரு குரங்காக மாற நினைப்பேன்.

ஷைலக்: [மனத் தவிப்புடன்] சொல், நான் என்ன செய்ய வேண்டும் இப்போது ? மோனிகா மீது மோகம் கொண்டு ஏமாந்து போனதற்கு நான் வெட்கப் படுகிறேன். ஆயினும் என் இயற்கையான பிறவிக் குணத்தை, நான் மாற்ற இயலாது.

புருனோ: [சிரித்துக் கொண்டு] இயற்கையான குணம் ? பூ ! நாம் எப்படி வாழ்வது என்பது நம் மன உறுதி அழுத்தத்தில் தான் உள்ளது. நமது உடல் ஒரு தோட்டம் போன்றது. மன உறுதி என்பது தோட்டக் காரன். வெள்ளரிக்காய் வித்துகளை விதைத்தால், நிலத்தில் கத்தரிகாய் முளைக்குமா ? தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான். நம் மன இச்சைபோல் தான் எதுவும் நடக்கும். காம இச்சைக்கும் கண்ணியத்துக்கும் இடையே ஒரு சீர்ப்பாடு இல்லையேல், கீழ்மையுள்ள இழிவு இச்சைகள் கோரமான விளைவுகளில் நம்மை தள்ளிவிடும். நீரில் மூழ்கிச் சாவத் துணிந்து விட்டாய் நீ ! பார் ! ஆனால் கட்டுப்பாடு இல்லாத நமது உடல் இச்சைகள், துடிப்புகளின் வெப்ப உணர்ச்சி குளிர்ந்து போகக் காரணம் உள்ளது. என் கருத்து உன் பிள்ளைக் காதல் ஒரு சின்ன செடிதான் ! பெரிய மரமில்லை !

ஷைலக்: [சோகமுடன்] அப்படி இல்லை நான் மனப்பக்குவம் அடைந்தவன்.

புருனோ: அது வெறும் உடல் இச்சையே. மனம் நெகிழாமல் மனிதனாய் எழுந்து நில் ! நீரில் மூழ்கும் எண்ணத்தை கைவிடு. நாளை மீண்டும் சந்திப்போம், நிந்திப்போம், சிந்திப்போம்.

[தொடரும்]

Series Navigation‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்சுமைகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *