நாவல்  தினை – அத்தியாயம் ஏழு (CE 5000 CE  1900)

This entry is part 18 of 22 in the series 26 மார்ச் 2023

இரா முருகன்

பயணத்துக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை செய்து முடிப்பது ஒரு சுறுசுறுப்பில்லாமல் நடந்து கொண்டிருந்ததாக குயிலிக்கும் வானம்பாடிக்கும் மனதில் பட்டது.  ஆரம்ப வேகம் அப்புறம் இல்லை.

ஏழு மணி காலை நேரத்தில் வந்தவர்கள்  பத்தரை மணி ஆகியும் புறப்படவில்லை. பயண அலுவலகத்தின் புறப்பாடு பகுதியில் ஆரஞ்சு நிற விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்குப் பயணம் இருக்கிறது என்று மட்டும் சொல்கிறவை இந்த விளக்குகள்.

குயிலியின் உள்ளங்கையில் டிஜிட்டல் திரை ஒளிர்ந்தது. பொருள் வயின் பயணம் என்று எழுதிய அறிவிப்புப் பலகை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவர்  இதே பிரபஞ்சத்தில்  ஏதோ ஒரு சூரிய மண்டலத்தில் வரும் ஏதோ கிரகத்து வாசி என்று முகம் சொன்னது. காதுகள் குமடு வரை நீண்டு கூர்த்திருக்க சாய்ந்து அமர்ந்தபடி நோக்கினார்  அவர்.

“குயிலி சற்றுப் பொறுங்கள். காசுகள் வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன”. 

மனிதர் மொழியில் சரளமாக அறிவித்த அவர் குரல் வெளிவர முகத்தில் தீற்றி வைத்தாற்போல் இருந்த வாய் போதாது. காதில் அணிந்த சிறு யந்திரம் அந்தச் செயலைச் செய்வது மின்னி மின்னி நடத்தும் இயக்கத்தில் தெரிந்தது.

வார்த்து முடித்து அரசு இலச்சினை போட்ட பொதியில்,  ஒரு வினாடி பிரத்யட்சமான தங்கசாலை ஊழியர் ஒருவரால் அவை எடுத்து வரப்பட்டன. அவர் குயிலி காசுகளை ஒரு முறைக்கு இரண்டாக இருநூறு என்று எண்ணி முடிப்பது வரை நின்றிருந்தார்.

என்ன என்று பார்வையால் கேட்டாள் குயிலி. ஒரு காசு கொடுங்க என்று அவர் ஈயென்று இரப்பது பரிதாபமாக இருக்க குயிலி தன் கைப்பையை திறந்து நாணயப் பொதியை வைத்தபடி உள்ளே வேறு காசு உண்டா எனத் தேட, சென்ற வாரம் குறிஞ்சி நிலம் காணப் போய் வந்தது நினைவு வந்தது.

மெய்யும் பொய்யும் கலந்து காட்சி சமைந்த அந்தப் பயணம் ஒரு செலவும் இல்லாமல் நடந்த ஒன்று என்பதில் அவளுக்கு மகிழ்ச்சிதான். அப்போது கொடுத்த ஐந்து பாண்டியன் காசுகளில் ஒன்று தட்டுப்பட அதை காசுசாலை ஊழியரிடம் கொடுத்தாள்.

மிக்க நன்றி, என் மகன் காலந்தோறும் காசுகள் என்ற தலைப்பில்  காட்சி நடத்த பல்வேறு காலக் காசுகள், உடை, புழங்கு பொருட்கள் என்று சேகரிக்கிறான். அவனுக்குத்தான் இது என்று சொல்லி வணங்கிப் போனார் ஊழியர். 

வாருங்கள் நேரமாகி விட்டது. என் தரப்பில் தான் தாமதமாகி விட்டது. மன்னியுங்கள் என்றபடி உயரம் கூடிய தலை முடி நரைத்துப் போன ஒரு அதிகாரி புன்முறுவலோடு குயிலியையும், வானம்பாடியையும் புறப்பாடு என்று எழுதிய வழியின் ஊடாக நடத்திக் கூட்டிப் போனார்.

காலப் பயணப்படும் ஊர்தி அந்த ஒழுங்கையின் அற்றத்தில் வெய்யிலில் காய்ந்தபடி, பயன் ஓய்ந்த  பழைய பயிற்சி விமானம் போல், யார் கவனத்தையும் ஈர்க்காமல்  நின்று கொண்டிருந்தது.

”காலப் பயணம் கவன ஈர்ப்பு நடத்தக்கூடாது, காதும் காதும் வைத்தாற்போல் தொடங்கி ஓசைப்படாமல் முடிவு பெற வேண்டும்” என்று காலப் பயணத்தின் குரு யோகி சொற்பொழிந்ததை அனைவரும் அறிவர். (யோகியர் உரையமுதம் தொகுதி 7 துளி 344).

வானம்பாடி கண்ணை மூடியபடி அவளுக்கான இருக்கையைப் படுக்கையாக நீட்டிச் சாய்ந்து படுத்துக்கொண்டாள்.

பயணம் தொடங்கியது.

யந்திரக் குரல் பெண்ணாக அறிவித்தது.

பயணிகளுக்கு எம் வாழ்த்துகள்.  உங்கள் பயணம் சுகமானதாக இருக்கட்டும். பாதுகாப்பானதாக இருக்கட்டும்.

ஆண்குரல் கரகரவென்று வாழ்த்தியது.

எங்கே இருக்கிறேன் என்று குயிலி கேட்க, காலப் பயண ஊர்தியை இயக்கும் கம்ப்யூட்டர் பெண் குரலில் பத்தொன்பதாம் நூற்றாண்டு உத்தமதானபுரம் தஞ்சை மாவட்டம் தமிழ்நாடு என்றது. ஐந்து நிமிடம் இருந்து போகலாம் என்று குயிலி சொல்ல, உன் விருப்பம் என்றது அது.

 குயிலி பின்னால் திரும்பிப் பார்த்தாள். வானம்பாடி ஏதோ ஒரு பழங்காலத்தில் ரயிலில் ஏறி அது பயணப்படத் தொடங்கியதுமே நித்திரை போகிறவர்கள் போல் கால யந்திரம் கிளம்பியதும் உறங்கத் தொடங்கியிருக்கிறாள். இப்படி நகர்தல் துயிலில் கொண்டு விடும் உடல்வாகு சிலருக்கு உண்டுதானே என்று பட குயிலி வானம்பாடியைத் துயில விட்டுப் பக்கதில் மடித்து வைத்த காஷ்மீர் கம்பளப் போர்வையை எடுத்துப் போர்த்தினாள்.

புறப்பட்டு பத்தாம் நிமிடமே இவ்வளவு குளிர்கிறதே பொது காலப்பரப்பு மூன்றாம் நூற்றாண்டில் இறுதியாகப் போய் இறங்கும் போது உறைந்து போய்விடுவேனோ என்று பயம்  குயிலிக்கு.

காலப் படகின் இடம் புலப்படுத்தும் இயக்கம் வேகமாக நடந்தேறியது. வானம்பாடி என்ற வானிக்கு வியர்க்கத் தொடங்கும். காஷ்மிர் போர்வை வேண்டுமா என்று கேட்டது காலப் படகின் கணினி.

அது எனக்குத் தெரியும் பார்த்துக் கொள்கிறேன் என்று குயிலி சொல்ல, என்றால் சரிதான், இப்போது நீ வெளியே போகலாம் என்றது குரல். 

காலை நேர உத்தமதானபுரம் ஆளரவம் இல்லாமல் 1857ஆம் ஆண்டு என்ற ஆங்கிலேயக் காலக் கணக்கீட்டு முறை எந்த விதத்திலும் பாதிக்காமல் அழகான சிறு வீடுகள் வரிசை தப்பியும் வரிசையிலும் எழுந்து நின்றன. வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போட்டு வெகு அழகாக இருந்தன அவ்வில்லங்கள். அவற்றில் ஒரு வீட்டில் கிட்டத்தட்ட தெருவே கூடியிருந்தது.

”புருஷாள் எல்லாம் அப்புறம் வாங்கோ. பொம்மனாட்டிகள் ரெண்டு ரெண்டு நிமிஷம் குழந்தைக்கு ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போங்கோ” என்று ஒரு முதுபெண்   வீட்டு உள்ளுக்கும் வெளிவாசலுக்கும் நடுவே உலாத்தியபடி கணீரென்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

என்ன விஷயம் என்று குயிலி கேட்கும் முன் அவள் அங்கே யாருக்கும் கண்ணில் படாதபடி இருப்பாள் என்பது நினைவு வந்தது. கம்ப்யூட்டரை இங்கிருந்தே ஆணையிட்டு தன்னை எல்லோருக்கும் பார்க்கக் கொடுத்திருக்கச் செய்து விடலாம் தான். ஆனால் உத்தமதானபுரம் அக்ரஹரத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு காலைப் பொழுது வந்து நிற்கும் குயிலியை எப்படி யாராக அடையாளம் காட்டலாம்?

  வெங்கடசுப்பையரின் பினாங்கு வாசியான அம்மங்காள் பேத்தி என்று சொன்னால்? வெங்கடசுப்பையர் வீடு அக்ரஹாரத்தில் பூட்டி இருப்பதாக கம்ப்யூட்டர் அறிவிக்கிறது. இல்லாதவரின் விவரணைகளைப் பயன்படுத்தி அடுத்த வீட்டில் பிறந்த குழந்தையை வாழ்த்திப் போகலாம் என குயிலி தீர்மானித்தாள்.

 காலப் படகின் நாற்பரிமாணக் கூறுகளை சற்றே கணினி கொண்டு திருத்தி தன்னை எல்லோரும் பார்க்கக் கூடியபடி அலகுகளை மாற்றியமைத்தாள்.

பத்து வினாடியில், அவள் அணிந்திருந்த உடுப்பு கால்சராய், மேல்சட்டையிலிருந்து புடவை, ரவிக்கை ஆனது. தலைமுடியைக் கைப்பையிலிருந்து எடுத்த சீப்பால் வாரி, புடவைத் தலைப்பை நேராக்கிக் கொண்டு நடந்தாள். வாயில் மென்றிருந்த சூயிங் கம்மை எதிர்ப்பட்ட வீட்டு வாசல் ஓரமாகத் துப்பினாள்.

அவள் பார்த்துப் போக வேண்டியது பிறந்த குழந்தையை இல்லை. குழந்தை பிறந்த வீட்டுக்கு மேற்கே இரண்டு வயது சாமிநாதரைப்  பார்த்துப் பேசிப் போக வேண்டும். குயிலிக்கு சாமிநாதய்யரைத் தெரியும்.  .  பக்கத்து வீட்டுக் குழந்தையைத்  தெரியாது. அவளுக்கு முன்னால் கால ஊர்தியில் யாரோ ஆண்டு ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்தேழு போயிருக்கிறார்கள். சாமிநாதய்யர் அவதரித்தது ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்தைந்தாம் வருடம்.

அந்தப் பழைய பயண சமாசாரங்களை நீக்காமல் குயிலியின் பயண விவரணைகள் அதற்கு மேலே படிந்திருக்கும்படி அமைத்திருக்கிறார்கள். காரணமாகத்தான், தவறாக ஏதும் இல்லை. போனவனுக்கோ போனவளுக்கோ சாமிநாதய்யர் அவதரித்த தினத்தில் இங்கே வந்து அவரைப் பிறந்ததும் பூஜித்துப் போக வேண்டும் என்று விருப்பம்.   அது 1855ஆ 1857ஆ என்று கவலையில்லை.

ஆக, அவர் தவறுதலாக அந்தக் குழந்தை பிறந்த வீட்டுக்கு அடுத்த வீட்டு விசேஷத்தைக் கொண்டாடிப் போயிருக்கிறார், அங்கேயும் கர்ப்பிணிப் பெண், அங்கேயும் ஆண் குழந்தை, குழந்தை குழந்தைதானே, எந்தக் குழந்தையாக இருந்தால் என்ன, அவர் கொண்டு வந்த பரிசை எல்லாம் சாமிநாதய்யருக்கு இரண்டு வயது இளைய பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு அளித்து விட்டு வண்டியேறி இருக்கிறார்.

அந்தப் பயண அனுபவத்தை வேறு யாரும் மொழி அன்பர்கள் இருந்தால் அவர்களோடு பகிர்ந்து கொள்ள ஊர்தியின் நினைவு அமைப்போடு விளையாட்டாக இணைத்து வைத்துப் போயிருக்கிறார்.

அவர் செய்த தவறு அப்புறம் தெரிய வந்திருக்கிறது. அவர் கொஞ்சி விளையாடிப் பொம்மை வாங்கிப் போய் சாமிநாதய்யருக்கு என்று தவறுதலாக அடுத்த வீட்டுக் குழந்தைக்கு கொடுத்தது லைப் ஆஃப் ப்ரைன் மாண்டி பைதான் Life of Brian (Monty Python) நகைச்சுவைப் படம் போல் ஆகிப் போனது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் போய்க் கொண்டாடிய அடுத்த வீட்டுக் குழந்தை, ஆறு மாதத்தில் குடும்பம் அரசூருக்குக் குடிபெயர, அங்கே நாளடைவில் சுந்தர கனபாடிகள் என்றானதாம்.

தவறான குழந்தை என்று கொடுத்த பரிசை எல்லாம் பிடுங்கிக்கொண்டு போகவில்லை, அதுவரை க்ஷேமம். குயிலிக்கு சாமிநாதய்யரைப் பையனாகச் சந்திக்க ஆசை.

நளினமாக 1857,8,9 என்று மூன்று வருடம் காலப் படகை முன் எடுத்துப் போய், இதோ வீட்டுத் திண்ணையில் கோமணம் தரித்த சாமிநாதச் சிறுவன். துயில் கலைந்து எழுகிறான். பக்கத்தில் பாய் மேல் ஒரு செப்புக்கிண்ணம். அதை மூடி ஒரு செப்புத் தட்டு. கூடவே ஒரு கரண்டி.

குயிலி சாமிநாதய்யரின் இந்தக் குழந்தை வழக்கத்தைப் பற்றிப் படித்திருக்கிறாள்.

எழுந்ததும் சாமிநாதக் குழந்தைப் பையன் கண்ணை மூடியபடியே கிண்ணத்தின் மேல்தட்டைக் கீழே வைத்து கரண்டியால் கிண்ணத்துக்குள் ந்ங் என்று தட்டுவான். தட்டினார். கிண்ணத்தின் உள்ளே இருந்து சின்னச் சின்னதாக அப்பம் எடுத்து சந்தோஷமாகச் சாப்பிட்டு விட்டு எழுந்திருப்பதே தினசரி முதல் வேலை.

கிண்ணத்தில் இருந்து அப்பம் எடுக்கும்முன் குயிலி பாய்ந்து நாலு அப்பத்தில் ஒன்றை எடுத்து வாயில் போட்டு மெல்லுகிறாள். சாமிநாதக் குழந்தை கண் திறந்து கிண்ணத்தைப் பார்க்க, அடுத்து குயிலியைப் பார்க்க, நீ எடுத்து சாப்பிட்டுட்டியா என்று கேட்கிறார். குயிலி இல்லவே இல்லை என்று சிரித்தபடி தலையாட்டுகிறாள். ரெண்டு வயசுக்கு நல்ல உயரமான குழந்தை.

சாமிநாதர் கலவரமாகப் பார்த்தபடி திண்ணைச் சுவர் ஓரம் கிடந்த சூயிங் கம்மை எடுக்க எழுந்திருக்கிறார். அது வேணாம், எச்சில் என்று குயிலி அவசரமாக தான் மென்று துப்பிய அந்த சூயிங் கம்மைக் காலால் ஒற்றித் தெரு மணலில் தேய்க்கிறாள்.

அது என்ன என்று சாமிநாதர் ஆவலோடு கேட்க, ஒண்ணுமில்லே அது காக்கா எச்சம் என்கிறாள் சிரித்தபடி குயிலி. காக்கா ஒண்ணையும் காணோமே என்று கரிசனமாக வாசலை நோக்கிச் சொல்கிறார் சாமிநாதர். ராத்திரியே வந்து வெள்ளைக் காக்கா அப்பத்தை எடுத்துப் போனதே நீங்க பார்க்கலியா என்று கேட்டுக் குயிலி சிரித்தாள். நீ பார்க்கலியா என்று திருத்திச் சொல்கிறாள்.

 வீட்டம்மா வாசலுக்கு வந்து என்ன விஷயம் என்று பார்க்க, இந்தப் பெண் யார் என்று தெரியாமல் மயங்குகிறாள்.

”மாமி அக்ரஹாரத்துக்கு புதுசா குடி வந்திருக்கேளா?”

 மடிசார் முந்தானையைப் பாந்தமாகத் தோளுக்கு மேல் இழுத்துப் போர்த்திக் கொண்டு கேட்கிறாள்.

”நான் அடுத்தாத்து   மாமிக்கு தாயாதி உறவு. பினாங்குலே இருந்து வர்றேன். புக்ககத்து மனுஷாளுக்கு நம் சொந்தபந்தம் மேலே என்ன அக்கறை இருக்கப் போறது. நானும் இவரும் இங்கே வந்தோம் அவா எல்லாம் கோவில்லே இருக்கா”. நிறுத்தாமல் பேசினாள் குயிலி மாமி.

அம்மா, மாமி அப்பத்தை எடுத்து தின்னுட்டா என்று சாமிநாதக் குழந்தை விம்மி அழத் தொடங்கியது.

குழந்தை கண் முழிச்சி புதுசா நீங்க இருந்தேளா, அவனோட அப்பத்தை பங்கு போட்டுக்க வந்திருக்கேள்னு அரைகுறை தூக்கத்திலே ஏதோ சொல்றான்.

வாங்கோ உள்ளே. மாமா எங்கே அடுத்தாப்பலே நிக்கறாரா? அவரையும் கூப்பிடுங்கோ. சிரம பரிகாரம் பண்ணிண்டு போகலாம்னு சொல்லுங்கோ.

இல்லே மாமி நான் போய்ட்டு வரேன், ப்ளஷர் போட்டுண்டு வந்தோம். அதான், வில்வண்டி பூட்டிண்டு வந்தோம். நான் எங்க பக்கத்து பாஷையிலே சொல்லிட்டேன். கும்மோணத்துலே ஒரு விசேஷம். முடிச்சுட்டு சாயந்திரம் வரோம். குழந்தை பேரு என்ன? இங்கே பொதுவா அதிகம் வைக்கற பேர்  சாமிதானே, சாமிநாதன்.

இல்லே மாமி இவனுக்கு அவன் தாத்தா பேரை வச்சிருக்கு. திருப்பதி ஸ்வாமியும் சீதாபதியும்.

ஓ வெங்கட்ராமனா. சீக்கிரம் சாமிநாதனாய்டுவான் ஆயிடுவார், கொழந்தே இந்தா பிஸ்கோத்து என்று ஒரு பாக்கெட் டைஜஸ்டிவ் பிஸ்கட்டை சாமிநாதய்யருக்குக் காணிக்கை கொடுத்து விட்டு வேகமாக நடக்கிறாள் குயிலி.

”மஞ்சள் குங்குமம் வாங்கிண்டு போங்கோ. கொஞ்சம் இருங்கோ”.

சாமிநாதய்யரின் அம்மா இதற்கு மேல் குரல் எழுப்ப முடியாது.

”கால்லே வெந்நீரைக் கொட்டிண்ட மாதிரி வந்தா பினாங்கு மாமி, ரெண்டு வார்த்தை பேசினா, போயாச்சு. புக்ககத்து மனுஷான்னா எல்லோருக்கும் பயம் தான். பெனாங்கிலே இருந்தா என்ன, ரங்கூன்லே இருந்தா என்ன: நீ எந்திரேண்டா கையிலே இருந்து பிஸ்கோத்தை ஓரமா வை. சாப்பிடலாமோ, என்ன மனுஷா என்ன ஜாதியோ”.  

மாமி சொல்லிக் கொண்டிருக்கும்போதே சாமி விம்ம ஆரம்பிக்கிறான்.

“அப்பம் அப்பம்”.

அம்மா கிண்ணத்தை வாங்கிப் பார்க்க அதில் ரெண்டு அப்பம் தான் இருந்தது.

“பினாங்கு மாமி அப்பம் தின்னுட்டாளா?

மாமி, பிஸ்கோத்து பொதி பளபளன்னு இருக்கற விசேஷம் என்ன? என்னமோ பாஷையிலே எழுதியிருக்கு. ரங்கூன் பிஸ்கோத்தோ இது”.

கொழந்தைக்கு ஒண்ணே ஒண்ணு வேணும்னா தரலாமா? பொதியைப் பிரிக்கலாமா வேண்டாமா என்று யோசிக்கிறாள்.

”முன் பின் தெரியாதவா கொடுத்ததைத் தின்னா, அவா மருந்து போட்டு கூட்டிண்டு போயிடுவாளாமே. குழந்தையைக் கூட்டிண்டு போகப் போறாளா? ஒண்ணும் வேண்டாம். பிஸ்கோத்தை எறிஞ்சுடலாமா? நாய் வந்து சாப்பிட்டுமோ. மருந்து போட்டதுன்னா அது மாமி பின்னாலேயே வாலை ஆட்டிண்டு ரங்கூனுக்குப் போயிடுமோ”.

மாமி, கொஞ்சம் நில்லுங்கோ என்றபடி ஓட்டமும் நடையுமாக கோவில் பக்கம் சாமிநாதரின் அம்மா போனபோது நூதன வாகனம் ஒன்று வேகம் கொண்டு ஓடிப் பறந்தது. பட்டணத்து மனுஷா பட்டணத்து வாகனம். கால்லே வெந்நீரை ஊத்திண்டு வந்த மாதிரி அவசரம். என்னமோ போகட்டும். இப்போ இந்த ரொட்டியை என்ன பண்றது?

சாமிநாதரின் அம்மா அடுத்து என்ன செய்யலாம் என்று மதிமயங்கிக் கொண்டிருக்கும்போது அவருடைய தந்தையார் மாயவரம் போய்விட்டு திரும்ப வந்து கொண்டிருந்தார்.

”ஏண்டிம்மா, கால் அலம்ப தண்ணி ஊத்து. கோவலூர் மிட்டாவாத்திலே அகண்டநாம ஜபம். முடிஞ்சு பார்வதி கல்யாணம் கதாகாலட்சேபம் பண்ணிட்டு வரேன். இந்தா” என்று முகம் மலர்ந்து ஒரு ரூபாய் நாணயத்தைத் தரும்போது மனைவி கையில் பிஸ்கோத்தோடு நிற்பதைக் கவனிக்கிறார். அவள் சுருக்கமாகச் சொல்கிறாள்.

”ஓ நம்மாத்துக்கு வந்தாளா”?

“நூதன வாகனத்திலே வந்து ஊர் எல்லையிலே நின்னுட்டு அப்படியே வேகம் எடுத்துக் காணாம போய்ட்டா”.

அவர் எல்லாத்தையும் சகஜமாக எடுத்துக் கொள்ளும் மனநிலையில் இருந்தார். சாமிநாதய்யர் அப்பத்துக்குப் பதிலாக பிஸ்கோத்து தின்றார்.

”இது மனுஷா கையாலே இல்லாமல், யந்திரத்தாலே மாவு கலந்து அப்பளாம் மாதிரி சுட்டு அடுக்கி டப்பாவிலே போட்டு அனுப்பறது. தீட்டு எல்லாம் இருக்காது. ஒண்ணே ஒண்ணு வேணும்னா எடேன். ஆளுக்கு பாதியா விண்டு சாப்பிடலாம். வேணும்னா தின்னுட்டு குளிச்சிடலாம்”.

வெங்கடேச ஐயர் பிஸ்கோத்து சாப்பிட காரண காரியம் கற்பித்துக் கொண்டிருக்க, காலப் படகில் காலநகர்விலிருந்த குயிலி ஒரு டைஜஸ்டிவ் பிஸ்கட்டை எடுத்து வாயில் வைத்துக் கடித்துக்கொண்டு வேகம் என்றாள் கணினியிடம். 

இன்னும் ஒரு காலக் காட்சி மீதம் உண்டு. காண விருப்பமா?

ஊர்தியின் கணினி அறிவித்தது. 1801 என்று வருடம் காட்டும் திரை ஊர்திச் சுவரில் ஒளிர்ந்தது.  மருது பாண்டியர் என்று அடுத்த வரி வர ஊர்தி தடதடவென்று ஆடி நின்றது. குயிலி மீண்டும் இறங்கினாள்.

சீரங்கம் கோவில் பின்னணியில் காட்சிப்பட கோவில் மதிலை ஒட்டி மூங்கில் பிளாச்சுகள் நட்டு உயரத்தில் ஒரு சிறு மேடை அமைக்கப்பட்டிருந்தது. மாநிறமாக தேவைக்கு மேல் ஒரு குத்து சதை எங்கும் விழாமல் உயரம் கூடிய இருவர் அங்கே நின்று கையாட்டிக் கொண்டிருந்தார்கள்.

முகத்தில் ஒன்றிரண்டு சுருக்கங்கள் தெரிய ஏறுவெய்யிலைப் பார்த்தபடி நின்றவர் பெரிய மருது. சுருண்ட காகிதத்தை விரித்துப் படிக்க ஆரம்பித்தவர் சின்ன மருது. பெரிய மருதுவின் இளையோன்.

அவர்கள் இருவரும் பட்டையாக வீபுதி, குங்குமம், சந்தனம் தரித்து சீரங்கம் பெருமாள் கோவில் கோபுர வாசலில் நின்றது அவர்கள் யாரென்று தெரியாதவர்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கும்.

கண்களை மூடிக் கிழக்கு நோக்கி வணங்கிச் சொன்னார் பெரிய மருது-

”பெருமாளே, எனக்கு எதுவும் வேண்டாம். என் தம்பிக்கும் வேணாம். இந்த பூமியை விட்டு வெள்ளைக்காரனை வெளியே போக வைக்கணும். எங்க சிவகங்கை செம்மண் எங்க தாய் போல. ஆத்தாளை எங்களுக்குத் திருப்பிக் கொடு”.

கண் விழித்த பெரிய மருது குயிலியைப் பார்த்துக் கை கூப்பினார்.

“நாச்சியா, வாங்க, பொம்பளை பிள்ளைங்களும் தேசத்துக்கு உழைக்க வந்ததுலே சந்தோஷம். இங்கிட்டு முன்னாடி உக்காருங்க ஆத்தா” என்று அன்போடு வரவேற்றார்.

வெளியில் ஆண்களின் பெருங்கூட்டம் கூடியிருந்தது. குயிலியைத் திரும்பிப் பார்த்துவிட்டு அவர்கள் உயரத்தில் கட்டமைக்கப்பட்ட  மேடையைப் பார்த்தபடி இருந்தார்கள்.

குயிலியின் உள்ளங்கை மெல்ல அதிர்ந்தது, வானம்பாடி தான்.

“என்ன குயிலி, இன்னும் ஐம்பது வருடத்து அதிகமாகப் பின்னாலே போகலேயா இந்த வேகத்திலே போனா, சங்க காலம் இன்னும் ஒரு மணல் கடிகை வருடம் கழித்துத்தான் போய்ச் சேர்வோம் போல”.

அவள் சொல்வதும் உண்மைதான். நூறு வருடம் முந்தைய பத்திரிகையில் மூழ்குவது போல் குயிலி நேரம் மறந்து இன்னும் பதினெட்டாம் நூற்றாண்டில் தான் இருக்கிறாள். வெள்ளைக்காரனுக்கு சவால் விட்டு ஒரு சல்லி வரி தர மாட்டேன் என்று மருது சகோதரர்கள் செய்த ஜம்பு தீவுப் பிரகடனம் இதோ இரைந்து சொல்லப் போகிறார் பெரிய மருது.

 ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்… இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்… இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது…

காதில் பிரகடனம் ஒலிக்க அவரை வணங்கி  காலப் படகில் ஏற ஓட்டமும் நடையுமாகப் போனாள் குயிலி. பின்னால் இருந்து யாரோ அழைக்கும் சத்தம். திரும்பாதே என்றாள் உள்ளங்கையில் வானம்பாடி.

”யாரோ  தலை கலைந்து கந்தல் உடையோடு உன் பின்னாலே வரான். அவனை தவிர்க்க முயற்சி செய்வேன்னு பொறுமையா வரான். நீ அந்தப் பக்கமே திரும்பாமல் கை காட்டு.  உடல் துகள்படுத்தி கால ஊர்தி உள்ளே வந்துடற மாதிரி செய்யறேன்.. உள்ளே பேசலாம்”.

அதெல்லாம் வேண்டாம். நான் கவனிச்சுக்கறேன். குயிலி இணைப்பைத் துண்டித்தபடி நடந்தாள்.

அம்மா அம்மா என்று அவசரமாக பின்னால் இருந்து சத்தம். நாச்சியா, கொஞ்சம் என்னன்னு கேளேன் நல்லா இருப்பே நீ ஆத்தா நாச்சியா.

 அந்தக் குரலைத் தொடர்ந்து கனமான இங்க்லீஷில் ஒரு வெள்ளைக்காரன் குரல். சாம்ம்மி துரைசானியை தொந்தரவு பண்ணாதே. போய் வேலையைப் பாரு.. சவுக்கு அடி வேண்டியிருக்கா?

ஐயோ துரை இந்த துரைசாமிக்கு சவுக்கு, அடி எல்லாம் வேணாம். எஜமான்களே கருணை செய்யுங்க.

சவுக்கை சுழற்றும் ஓசை காற்றைக் கிழித்து வருகிறது, குயிலி சட்டென்று திரும்பிப் பார்க்க, கந்தல் ஆடையும் கலைந்த தலைமுடியுமாக ஒரு மத்திய வயசுக்காரன் நாச்சியா புண்ணியமாப் போவட்டும் ஒரு நிமிஷம் என்றபடி கையில் ஒரு காகிதத்தை நாலாக மடித்து உயர்த்திப் பிடித்தபடி தள்ளாடி வந்தான்,

 ”நான் நான் தான் சின்ன மருது மகன் துரைசாமி. மருது சகோதரர்களை காளையார்கோவில்லே தூக்கிலே போட்ட அப்புறம் என்னையும் மற்ற மருது ஆண் வாரிசுகளையும் பர்மாவுக்கு நாடு கடத்தி சாலை போடும் தொழிலாளிகளாக அரைவயிறுக்கு சோறும் அரை உடம்புக்கு துணியுமா கொடுத்து கொடுமைப் படுத்தினாங்க. எனக்கு இப்போ முப்பது வயது ஆகிறது. சக்தி எல்லாம் போய் அறுபது வயசானவனா தெரியறேன். எனக்கு ஒரே ஒரு உதவி வேண்டும் நாச்சியா. இந்த கடுதாசை நான் என் பெண்டாட்டி பிள்ளைங்களுக்கு அவங்க மதுரையிலே கூலித் தொழிலாளியா சிரம ஜீவிதம் பண்றாங்க. அவங்க கிட்டே எப்படியாவது சேர்த்துட்டா ஜன்மா ஜன்மத்துக்கும் உங்க கிட்டே மரியாதையோட இருப்பேன். நான் உசிரோட இருக்கறதை அவங்களுக்கு சொன்னாலே போதும். வேறே எதுவும் வேணாம் ஆத்தா”.

அவனைச் சவுக்கு கொண்டு அடித்து வரிசையில் பணி எடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நடுவே தள்ளினான் துரை.

தொடரும்

Series Navigationநட்பூ18வது திருப்பூர் சக்தி விருது 2023 விழா
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *