உஷாதீபன்
என்னாங்க…நிறையத் தண்ணி இருக்கிறதாப் பார்த்து வெட்டுங்கன்னா….இப்டி சீவிக் கொடுக்குறீங்களே? …. ஒரு டம்ளர் அளவு கூட இல்ல….
சின்னாண்டி தலையைக் குனிந்தவாறே நின்றான். சமயங்களில் அவன் கணக்கு தப்பி விடுகிறதுதான். அது பிரச்னையாகிவிடுகிறது. ஒன்றும் சொல்லாமல் இளநீரை இரண்டாய் வெட்டிப் பிரித்தான். ஒரே வழுக்கை. பார்த்ததும் திக்கென்றது. வழுக்கையாய் இருந்தால் நீர் அதிகம் இருக்க வேண்டும். அதுவுமில்லை.
ஆனால் இளநீர் என்று வெட்டினால் முப்பது ரூபாய்தான். ஒன்று முப்பது, ஒன்று நாற்பது, ஒன்று இருபத்தைந்து என்றெல்லாம் விற்பதற்கில்லை. ஒரே விலை. அப்படியானால் ஒரே பலன் என்றிருக்க வேண்டும்தானே? அது மாறுபட்டு விடுகிறது. பாதிக்கும் மேலானோர் அதிருப்தியில்தான் செல்கிறார்கள். சிலருக்கு வெறும் தேங்காயாய் வந்து விடுகிறதே…? இந்தக் கடை சரியில்ல…என்று ஒதுங்கி விட்டால்?
ஏன்யா….இளநியக் கேட்டா….தேங்காய வெட்டுற….தண்ணி ஜாஸ்தியாப் பார்த்து வெட்டத் தெரியாதா? தேங்காய்க்குள்ள இருக்கிற அளவுக்கே தண்ணி இருந்தா அது எப்படிய்யா இளநி ஆகும்?
கேள்விகளை நன்றாய்த்தான் கேட்கிறார்கள். கொள்முதல் செய்யும் இடத்தில் இதெல்லாம் பேச முடிகிறதா? அவனாய் எண்ணி எண்ணித் தூக்கிப் போடுவதுதான். பெரிசும், சிறிசுமாகத்தான் வருகிறது.
அண்ணே…! கொஞ்சம் பொறுக்கிப் போடுங்கண்ணே….சரியா வியாபாரம் பார்க்க முடில…..! பயந்துதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
என்னாது? பொறுக்கிப் போடவா? சர்தான்….இப்டி ஆளாளுக்குப் பொறுக்கிப் போட்டா அப்புறம் நாங்க பொறுக்கிட்டுப் போவேண்டிதான்…!
என்னாண்ணே இப்டிச் சொல்றீக…? வருஷக் கணக்கா ஒங்ககிட்டதான வாங்குறேன்…எனக்கு அந்தச் சலுக தரக் கூடாதா? இப்டிக் கறாராப் பேசுறீகளே…?
இந்தா பாரு சின்னாண்டி….பொள்ளாச்சிலர்ந்து லோடு வருது…வண்டிச் சத்தம், ஆட்கூலி, டிரைவர் சம்பளம், ஏத்துக் கூலி எறக்குக் கூலி….பெட்ரோலு, டீசலு, டோல் கேட்டுன்னு நூறு இருக்கு…எல்லாம் போகத்தேன் நாங்க காசு பார்க்கணும்…ஆகையினால பொத்திட்டு வாங்கிட்டுப் போ…நீ என்னா வெலைக்கு விக்கற, எம்புட்டு லாபம் பார்க்குற…என்னா விவரம்னு நாங்க ஏதும் கேட்டமா? பெறவென்ன?
அதற்கு மேல் பேசினால் மறுநாளைக்கு சரக்கு இல்லையென்று கூறி விடுவார்கள். இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது சின்னாண்டியின் அன்றாட வாழ்க்கை. சமயங்களில் காய்க்கு ஏற்றாற்போல் விற்றால்தான் சரக்கைத் தள்ள முடியும் என்கிற சொந்தச் சுய உணர்வு முடிவில் கடை விரித்தவுடன் பெரிசு, சிறிசு என்று பிரித்துப் போட்டு வியாபாரத்தையும் நடத்தித்தான் ஆக வேண்டியிருக்கிறது. அப்படிப் பிரித்த நாட்களில் கிறு கிறுவென்று இளநீர்கள் விற்றுத் தீர்ந்துமிருக்கின்றன. ஆனால் கடைசியில் காசை எண்ணும் போது முதலுக்கே மோசமாய்த்தான் இருந்திருக்கின்றன.
வாடிக்கையாளரையும் அனுசரித்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. உழவர் சந்தை ஆபீசில் கெஞ்சிக் கூத்தாடி சந்தைக்குள்ளேயே ஒரு இடம் பிடித்தான் ஆரம்பத்தில். அந்தா…கடோசில இருக்குல்ல…அங்க போட்டுக்க உன் கடையை… என்று ஒரு மூலையைக் காட்டினார்கள் ஆரம்பத்தில். மதியம் ஒரு மணியைப் போல் வந்து வாய் இழக்காமல் ஓசி இளநீருக்கு நின்றார்கள். சமயங்களில் ஆபீசர் இன்சுபெக் ஷனுக்கு வந்திருக்காகய்யா…ரெண்டு இளநீ வெட்டு என்று அதிகாரமாய்க் கேட்டார்கள்.
அவர்களை அன்றாடம் பிச்சாண்டி கவனித்துக் கொண்டுதான் இருந்தான். தினமும் சரியாக மணி ஒன்று நெருங்கும்போது ஒரு பெரிய படுதாப் பையை எடுத்துக் கொண்டு வந்து கடை கடையாய் நீட்ட, அவர்களும் கைக்கு வந்ததை அள்ளி அள்ளிப் போட “அடப் பாவிகளா…ஒரு வாரத்துக்குத் தேறுமேய்யா….?” என்று முனகியவர்கள் பலர். காசு கொடுத்து வாங்கினால் ஐநூறு செலவழித்தாலும் அந்தப் பை நிறையாது. அது ஓசியிலேயே அன்றாடம் நிறைகிறது என்றால்? வாங்கிக் கொண்டு போய் இவர்கள் வீட்டு வாசலில் கடை போட்டு விடுகிறார்களோ? இம்புட்டு காய்கறி ஒரு குடும்பம் திங்கணும்னா…பத்து நாளானாலும் தீராதே….? என்று வயிறெரிந்தார்கள்.
இந்த ஓசிக்கு சம்மதிக்கவில்லையென்றால் மறுநாள் கடை போட டோக்கன் கிடைக்காது. வாயை மூடிக்கொண்டு கொடுத்துத் தீர்த்தால்….மீதிக் காயைச் சாக்கில் கட்டி அதே எண்ணுள்ள கடையில் பாதுகாப்பாய் வைத்து விட்டும் செல்லலாம்.மறுநாள் டோக்கனும் இடமும் அன்றே உறுதி. வந்தபின்தான் தண்ணீரைத் தெளித்து புதுக்காய்கள் போலாக்கி விடலாமே…? தேனி, திண்டுக்கல், பொள்ளாச்சி, பழனி என்று வந்து சேரும் காய்கள் இத்தனை நாட்கள் எந்த வாட்டமும் காணாமல் எப்படி நிமிர்ந்து நிற்கின்றன? எல்லாம் மருந்தடிக்கும் யோகம்தான். வாடிப் போன கீரையே அந்த சாயத் தண்ணீரில் முக்கி எடுத்தால் நிமிர்ந்து மலர்ந்து சிரிக்கிறது. அப்போதே பறித்து வந்த கீரை கூட அத்தனை பளபளப்பாய் இருந்து கண்டதில்லை. கேட்டால் எல்லாம் தோட்டத்துக் காயு, காலைல கைவிட்டுப் பறிச்ச வீட்டுத் தோட்டத்துக் கீரைக….சாமி….என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறார்கள். மக்களும் அதைத்தானே நம்பி வாங்கித் தின்று வியாதி வெக்கை என்று அலைகிறார்கள்? எளிய மக்கள் எப்படி இப்படி மாறினார்கள்?
அட என் கிராமத்து அன்பான ஜனங்களே…நீங்கள் எப்போது இப்படி பொய் சொல்லக் கற்றுக் கொண்டீர்கள்? நிறுத்த நிறுவை போக ஒரு கை தாராளமாய் அள்ளிப் போட்ட உங்கள் தாராள மனசு எங்கே போய் மறைந்து கொண்டது? அரை கிலோ இருபத்தெட்டு என்றால் முப்பதுக்குப் போட்டுர்றேன் என்று பிடுங்கி விடுகிறீர்கள். கால் கிலோ பன்னெண்டு என்றால் பதினஞ்சுக்குப் போடுறேன்…என்று சில்லரைத் தட்டுப்பாடு காரணம் சொல்லி ரவுன்ட் ரவுன்டாய்ப் பிடுங்குகிறீர்களே? இதெல்லாம் உங்களுக்கு யார் கற்றுக் கொடுத்தது? வெள்ளந்தியாய் இருந்த உங்கள் விகல்பமற்ற மனதை இந்த உலக நடப்புகள்தான் இப்படி மாற்றி விட்டதா?
சின்னாண்டியும் அவர்களோடேயே அன்றாடம் கழித்து விடலாம் என்றுதான் பார்த்தான். காய் வாங்க வருபவர்கள் மாய்ந்து மாய்ந்து அங்கே இன்னொரு மூலையில் வைத்திருக்கும் பத்து ரூபாய்க் காளான் சூப்பைத்தான் மண்டி மண்டிக் குடிக்கிறார்களே தவிர முப்பது நாற்பது கொடுத்து ஒருத்தனும் தைரியமாய் வந்து இளநீர் கொடுங்க என்று கேட்க மாட்டேங்கிறானே? தினசரி கடை போட்டு, ஆபீசுக்கு ஓசிக்கு வெட்டி நீட்டவா இங்கே வியாபாரம் செய்ய வந்தேன்?
சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விட்டான் சின்னாண்டி. அதே உழவர் சந்தையின் வெளிச் சாலையில் சற்றுத் தள்ளி ரோட்டோரமாய் தன் கடையை விரித்தான். ஆரம்பத்தில் நன்றாய்த்தான் போய்க் கொண்டிருந்தது. டவுனில் அலைந்து திரிந்து சாமான்செட்டுகள் வாங்கி வரும் புருஷன் பெண்டாட்டி முதற்கொண்டு அவன் கடைக்கு முன் வந்து வண்டியை நிறுத்தினார்கள். கூல் டிரிங்கும், பழ ரசமும் சாப்பிடுவதற்கு இது எவ்வளவோ மேல், அலைந்த அலைச்சலுக்கு உடம்புச் சூடும் குறையும் என்று நின்று நிதானித்து உறிஞ்சி, பிட்டு விடாமல் வழுக்கையையும் வழிச்சு வாங்கி ஆயாசமாய் உள்ளே தள்ளிவிட்டுப் போனார்கள். சமயங்களில் இன்னொண்ணு குடுங்க…என்று கூட வாங்கிக் குடித்து விட்டுப் போனார்கள்.
பரவால்லியே…இந்தப் பக்கத்து ஆளுங்க…நல்ல வசதியானவுக போல்ருக்கு …என்று எண்ணி வியந்திருக்கிறான் சின்னாண்டி. ஆடி ஓடி அங்கே ஒரு நல்ல இடம் அமைந்ததே என்று எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே அதற்கும் ஒரு வினை வந்தது. பக்கத்தில் செக்கச் செவேல் என்று ஒரு பெரிய வணிக வளாகத்தைத் திறந்திருந்தார்கள்.பேச்சுக்குப் பேச்சு எல்லாம் “ஃப்ரெஷ்ஷா” கிடைக்குது என்றார்கள். அரசு டெப்போவில் கிடைக்கும் அன்றாடப் பால் பாக்கெட் கூட அம்பது பைசா அங்கே கம்மி என்றார்கள். போதாக்குறைக்கு நாளைக்குப் பால் நாளைய தேதி போட்டு இன்னைக்கு மதியம் ரெண்டு மணிக்கே வந்திடுது என்று குஷிப்பட்டார்கள்.
இந்தியா பூராமைக்கும் மாநிலத்துக்கு மாநிலம் மாவட்டத்துக்கு மாவட்டம் கடை போட்டிருக்கும் அந்த “ஃப்ரெஷ் “ ஏன் ஒரு பொருளைப் பாதி விலைக்கு விற்க முடியாது? அடப் பாவி…அதற்காக இளநீரைக் கூடவா நீ விற்க வேண்டும்? தண்ணிப் பழம் முதற்கொண்டு இப்டியா லாரி லாரியாக் கொண்டு அடுக்கணும்? மலை மலையாய் இப்படிக் கொண்டு வந்து இறக்கினால்…என்னை மாதிரி சிறு வியாபாரி என்னதான் செய்வான்? அன்றாடங் காய்ச்சியாய் இருக்கும் என் வயிற்றிலா நீ அடிக்க வேண்டும்? இன்னைக்குப் பூரா இந்த இளநீ வித்தாத்தான்யா ராவுக்கு வீட்டுல போய் வயிறார நான் சாப்பிட முடியும்? அப்பத்தான்யா பொழுது புலர நா போய் கொள் முதல் பண்ண முடியும்? என்ன மாதிரி செத்துப் பிழைக்கிறவன் வயித்துல அடிக்கவா நீ இப்படிக் கடை பரப்பினே? நாங்கள்லாம் உயிரோட இருக்கணுமா வேணாமா? திருவிழாக் கூட்டம்மாதிரி வருதேய்யா சனம் உன்னத் தேடி…அதுல நாலு ஆளுகதானே என்னத் தேடி வந்திட்டிருந்தாக….அதுக்குமா வென? இப்டியே போச்சுன்னா எதுக்கு இந்த உசிர வச்சிக்கிட்டுன்னு எங்கள மாதிரி ஆளுகளெல்லாம் கடல்ல போய் விழுந்து மாய்ஞ்சு போக வேண்டிதானா? அந்தக் கடலத் தேடிப் போயி உயிர மாய்ச்சிக்கிறதுக்கும் எனக்கு ரூபா ஐநூறு இருந்தாத்தானய்யா முடியும்? தற்கொலதான் பண்ணிக்கணும் செலவில்லாம…!
இப்டி ஏழைக வயித்துல தேடித் தேடி…பார்த்துப் பார்த்து அடிக்கிறீகளே…இது நியாயமா? எங்களயெல்லாம் கடவுள் ஏன்தான் படைச்சாருன்னு நினைக்க வச்சிட்டீகளே?
நகரில் இப்படி நாலஞ்சு இடம் மாற்றியிருக்கிறான் சின்னாண்டி. எல்லா இடமும் ஆரம்பத்தில் சூடு பிடித்தாற் போலிருக்கும். பிறகு படுத்து விடும். ஆனால் ஒன்று. விற்காமல் நிற்கும் இளநிகளை தென்னை மட்டைகளை வைத்து வெளித்தெரியாமல் அழுத்தமாய் மூடி வைத்துவிட்டுப் போய் விடுவான் சின்னாண்டி. ஒரு நாளும் அது திருடு போனதில்லை. அந்த மட்டும் அந்தப் பகுதி மக்களே அதற்குப் பாதுகாப்பு. விடிகாலை நாலு மணிக்கு காந்தி மியூசியம் வாசலில் ப்ளாட்பாரம் ஓரமாய்க் கொண்டு ஐநூறு இளநிகளை இறக்கி விட்டுப் போகிறதே ஒரு வேன். அந்த நாகு அண்ணன் எட்டரை மணியைப் போல்தானே வியாபாரத்திற்கு என்றே வருகிறார். அதுவரை அது பாதுகாப்பாக இருக்கிறதே…! மக்களிடம் இன்னும் நல்லதனம் முற்றிலும் அழிந்து படவில்லை. நம்பினால்தான் வாழ்க்கையோ….!
நாகுண்ணே…நானும் வந்து அப்டிக் கொஞ்சம் தள்ளி கடை போட்டுக்கிறேண்ணே என்று கேட்ட அன்றைக்கு என்ன கோபம் வந்தது அண்ணாச்சிக்கு?
ஏய்…இதென்ன ஓசிக்கு வச்சிருக்கேன்னு நினைச்சியா? கார்ப்பரேஷனுக்கு வாடகை கொடுக்குறன்ப்பா….இந்த வரிசைல நெட்டுக்கப் பாரு….கொய்யாப் பழம், வெள்ளரிக்காய்…பதநீ….மாம்பழம், நுங்குன்னு உட்கார்ந்திருக்காக பார்த்தியா…அவுகளெல்லாம் தர்மத்துக்கு உட்கார்ந்திருக்காகன்னு நெனச்சியா? ஒவ்வொண்ணும் காசாக்கும்….! இங்கயே ஒக்காந்து பாரு…ஆளுக வந்து கையை நீட்டுறத…இந்த ஒலகத்துல எங்கயும், எதுவும் ஓசியில்ல….மறைவான்னாலும் ஏதாச்சும் நடந்திட்டிருக்குமாக்கும்…ஒலகமே காசுலதாம்ப்பா மெதக்குது….!
அந்த இடத்தையும் மாற்றி இதோ பாலத்துக்கடியில், கீழ்ப்பாலம் ஓரமாய் இப்போது கடையை விரித்திருக்கிறான் சின்னாண்டி. மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கம் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது என்று செய்தி வருகிறது. பெரியார் அணைப் பக்கம், தேனி, திண்டுக்கல் என்று மழை பிய்த்துக் கொண்டு அடிக்கிறதாம்.வைகைக் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள் என்று உஷார்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். வைகையில் எந்நேரம் வெள்ளம் வரும் என்று தெரியாத நிலை. திறந்து விட்ட தண்ணீர் எப்போது கரை புரண்டு இந்தக் கீழ்ப்பாலத்தைமூழ்கடிக்கும் என்று கதி கலங்கிக் கிடக்கும் சிறு வியாபாரிகள். போலீஸ் வந்து வந்து விரட்டிக் கொண்டிருக்கிறது. ஆட் புழக்கம் அந்தப் பக்கம் வெகுவாகக் குறைந்து விட்டிருக்கிறது.
அண்ணே…நாளைக்கு இந்த எடம் நமக்கு நிச்சயமா….? – கேட்டான் பருத்திப்பால் விற்கும் அய்யணனிடம்.
இன்னைக்கே ஒண்ணுமில்லயேப்பா….கீழ்ப்பாலத்துல கொஞ்சம் கொஞ்சமா தண்ணி ஏறிக்கிட்டு இருக்கு பாரு….இன்னும் கொஞ்சம் போச்சுன்னா சுத்தமா நிப்பாட்டிருவாக….பெறகு எப்டி இந்தப் பக்கம் வந்து வியாபாரம் பார்க்குறது?
காலையில் இந்தப் பக்கம் வர முடியாதென்றால் மீதி இளநீரை எங்கு வைத்து விட்டுப் போவது? -முகத்தில் கவலை தோய செய்வதறியாது நின்றிருந்தான் சின்னாண்டி. நாளைக்கு புதிய கொள் முதல் இல்லையென்று அப்பொழுதே முடிவாகிப்போனது.
நீ ஒண்ணும் கவலப்படாதண்ணே…இந்த வண்டிக்கு அடில ஒரு சாக்கக் கட்டி அதுல பாரத்த ஏத்திருவோம். ரெண்டு பேரும் சேர்ந்து உருட்டிக் கொண்டு போயிருவோம்…என்ற அய்யணனை நன்றியோடு பார்த்தான் சின்னாண்டி. அய்யணனும் அவன் பகுதி ஆள்தான். ஆகையால் கொண்டு சேர்ப்பதில் அத்தனை சிரமம் இருக்காது. ஏரியா திரும்புகையில் கொஞ்ச தூரம் இளநி மூட்டையைச் சுமக்க வேண்டியிருக்கும். அவ்வளவே…
எப்பொழுதும் லாலா மிட்டாய்க் கடை வாசலில் பொழுது விடிகையிலேயே கடை போட்டு விடுவான் அய்யணன். சுடச் சுட அவனிடம் பருத்திப்பால் குடிக்கும் வாடிக்கை நிறைய இருந்தார்கள். அந்தப் பக்கம் யோகா பயிற்சி வகுப்பு நடக்கும் ஒரு கூடம் இருந்தது. பயிற்சி முடித்து வரும் அவர்கள் நேரே அவனிடம்தான் வருவார்கள். அங்கு வள்ளிசாக வியாபாரம் பார்த்தபிறகுதான் இந்தப் பாலத்தடிக்கு வருவான். அருகிலுள்ள மில்லில் வேலை முடித்து வருபவர்களால் கொஞ்சம் மறு வியாபாரம் பார்க்க முடியும். ஆக ஒரு நாளைக்கு பெருங்குடத்துக்கு ஒன்றும், சிறு குடத்துக்கு ஒன்றுமாக அவன் வியாபாரம் நிச்சயப்பட்டிருந்தது.
அய்யணண்ணே…இன்னைக்கு ஒங்களாலதான் எம் பொருளப் பத்திரப்படுத்த முடிஞ்சிச்சு….நீங்க மட்டும் ஒதவலண்ணா….இம்புட்டு கனமுள்ள இளநிகள நா எப்டிக் கொண்டாந்திருக்க முடியும்? ரிக் ஷாவோ ஆட்டோவோ பிடிச்சு வாடகை கொடுத்து நா என்ன காசு பார்த்திருக்க முடியும்? மொதலுக்கே மோசமால்ல போயிருக்கும்…! ஒங்க ஒதவிதான் இன்னைக்கு என் கையக் கடிக்காமப் பண்ணியிருக்கு…..ரொம்ப நன்றி ஒங்க ஒபகாரத்துக்கு….
நீ என்னப்பா இதுக்கெல்லாம் போயி நன்னி சொல்லிக்கிட்டு….நம்மள மாதிரி ஆளுக ஒருத்தருக்கொருத்தர் ஒதவாம பெறவு யாரு வந்து செய்வாக…அந்தப் பாலத்தடிக்கு வியாபாரம்னு போயி நின்னதே தப்பாப் போச்சு….நாந்தேன் யோசிக்காம ஏமாந்து வந்திருக்கேன்னா…நீயும் வந்து திடுதிப்னு நிக்கிறே?….எத்தன எடம்தான் மாத்துவ….நானும் ஒன்னைக் கவனிச்சிக்கிட்டுத்தேன் இருக்கேன்….ஒரு குறிப்பிட்ட எடம்னு தெகையாம அலையா அலையுற…நானாவது சட்டுச் சட்டுனு வண்டிய உருட்டிட்டு நகர்ந்திடுவேன்….எந்தெந்த எடம் எந்தெந்த நேரம் வியாபாரத்துக்குப் பலிதமாகும்னு எனக்குத் தெரியும்….அட…காலேஜ் பொம்பளப் புள்ளைக கூட விரும்பிக் குடிக்குதுப்பா…..சூப்பு செய்து கொண்டாங்கண்ணேன்னு கேட்குதுங்க…வண்டிய இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தில்ல அதச் செய்யணும்….அதான் ரோசனயா இருக்கு…அதப்போல உனக்குத் தெரிஞ்ச இந்த இளநி வியாபாரத்த எப்படி சுலபமாக்கிக்கிறதுன்னு யோசிங்கண்ணே….சட்டுச் சட்டுன்னு எடம் மாத்திப் போயிட்டேயிருக்கணும்….ஆனா வெட்டி அலச்சலா இருக்கப்படாது. போய் நின்னா பத்துக் காயாச்சும் வெட்டணும். அஞ்சு கிலோமீட்டர் சுத்துல ஒரு நாள்ல அத்தனையையும் வித்துப் புட மாட்டீகளா…? உங்களால முடியாதா என்ன….? நல்லா ரோசன பண்ணுங்க…அலையுறது பிரயோசனமா இருக்கணும்னு சொல்ல வந்தேன்….வேறே ஒண்ணு தப்பா நெனச்சிக்கிடாதீக….
அய்யணனின் அறிவுரைகள் சின்னாண்டியை உசுப்பித்தான் விட்டது. பாங்காய்த்தான் சொல்கிறான். பதவாகமாய்த்தான் எடுத்து வைக்கிறான். அவரவர் வியாபாரத்தில் அவரவர் நிமிர வேண்டும் என்பதே அவனின் அறிவுரையாயிருக்கிறது.
சரிண்ணே….நாளைக்கு முடிஞ்சாப் பார்ப்போம்….சந்திச்சிக்கிட்டம்னா பேசுவோம்….
மூட்டையை முதுகில் சுமந்து பிரிந்து நடந்தான் சின்னாண்டி. எதிர்பாரா வேகமாய் சர்ர்ரென்று ஒரு வண்டி இவனைக் கடந்தது. மூன்று முக்குகள் சந்திக்கும் அந்த இடம் வெளிச்சமில்லாமல் கிடந்தது. மூட்டையோடு திரும்பிப் பார்க்க முடியாது என்பதால் பொருட்படுத்தாமல் நடந்தான்.
யாருப்பா….சின்னாண்டியா…..என்னய்யா….கண்டுக்காமப் போற……?
அட…தெரிந்த குரலாய் இருக்கிறதே….ஐயோ…அந்த மவராசனா இருக்குமோ….? மனசுக்குள் ஏற்பட்ட பதட்டத்தில் சற்றே தயங்கி நின்று மூட்டையைக் கீழே இறக்கினான் சின்னாண்டி. திரும்பிப் பார்த்தான். ஐயா….நீங்களா……? என்னங்கய்யா இந்த நேரத்துல? இம்புட்டு லேட்டாப் போறீக…..?
ஆமய்யா…. ஒரு வாரம் பேங்கு லீவுல்ல… பூஜா லீவெல்லாம் முடிச்சு இன்னைக்குத்தான வந்தோம்…அதான் வேல ஜாஸ்தி…..எல்லாருமே இப்பத்தான் கௌம்பினோம்…..அது கெடக்கட்டும்….நா சொன்னது என்னாச்சு….? ஏன் வரல…..?
என்னாதுங்கய்யா….? – ஒன்றும் புரியாமல் தலையைச் சொரிந்தான் சின்னாண்டி.
என்னாய்யா…மறந்திட்டியா….? ஒனக்கு ஏதாச்சும் வசதி பண்ணுவம்னு பார்த்தா…நீயே இப்டி சோம்பேறியா இருந்தீன்னா எப்டிங்கிறேன்…?
ஐயா என்ன சொல்றீகன்னு புரியலீங்க….? எதுவும் ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது…?
சரியாப் போச்சு…..ஏன்யா…வெறுமே ஒன்னோட ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கொண்டான்னு சொன்னதையா இப்டி மறந்திட்டே….? அதுக்கு ஒனக்கு வலிக்குதா? ஒரு வண்டி வாங்க ஏற்பாடு செய்றன்யா….அதுல இளநிகளப் போட்டுக்கிட்டு உருட்டு….வியாபாரம் சுலபமாயிடும்….அம்புட்டையும் வௌக்கிச் சொன்னாதான் உனக்கு மண்டைல ஏறுமா?
ஐயா…மன்னிச்சிருங்க சாமி…இந்தத் தர்க்குறி அத மறந்திட்டன்….நாளைக்குக் கட்டாயம் எடுத்தாந்து ஒங்ககிட்ட ஒப்படைச்சிடுதேன்….நீங்க நல்லாயிருக்கணும்…..
அதெல்லாம் கெடக்கட்டும்…முதல்ல அதுகளக் கொண்டாந்து குடு…புரிஞ்சிதா? ஒரு ஏற்பாடு பண்ணிருவோம்……
ரொம்ப நன்றிங்கய்யா……உங்க கால்ல விழுந்து கும்பிடுறேன்…….
அது காதில் விழுந்ததோ என்னவோ….போய்க் கொண்டிருந்தார்.
இன்னொன்றும் அந்தக் கணத்தில் மனதில் மின்னலாய்த் தோன்ற ஐயா…ஐயா….என்று சத்தமெடுத்துப் பலமாய்க் கத்தியபோது வண்டி வெகு தூரம் போயிருந்தது. அடடா…மர மண்டைல எதுவும் நிக்கவும் மாட்டேங்குது. சட்டுனு ஞாபகமும் வரமாட்டேங்குது…
நாளை ரேஷன் அட்டையையும், ஆதார் அட்டையையும் அவரிடம் கொடுக்கும்போது அய்யணனுக்கும் ஒரு அகலமான பருத்திப் பால் வண்டிக்கு அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி கடனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் சின்னாண்டி. அதற்கு முன் அய்யணனையும் ஒரு முறை பார்த்து அவன் சம்மதத்தையும் பெற வேண்டும் என்றும் அவன் மனசு சொல்லியது.
—————————————