நாவல்  தினை  –   அத்தியாயம் எட்டு           CE  5000   CE  1800

This entry is part 13 of 13 in the series 2 ஏப்ரல் 2023

  

                                                                                                                    

  குயிலி பார்த்துக் கொண்டிருந்தபோதே, மருது சகோதரர்கள் சீரங்கம் கோவில் மதி இருந்து ஜம்பு தீவு பிரகடனம் செய்வது கலைந்து போனது.

ரங்கூனில் ரோடு போட ஜல்லி கலக்கும் யந்திரத்தின் தார் வாடை உக்ரமாகச் சூழ்ந்து அடித்தது. துரைசாமியை, பின்னால் குதிரையேறி வந்து, சவுக்கால் அடித்து, மயிர் பிடுங்கி இங்கிலீஷ் துரை ஒருத்தன் தார் கலக்க விரட்டினான்.

1790 மருது சகோதரர்கள் உயிர்த்த காலத்தில் இருந்து முப்பது வருடம்  முன்னால் போய் 1820-இல் கண்ணில் பட்ட எலும்பும் தோலுமான துரைசாமி என்ற மருது மகன் தீனமாகக் கதறினான். திரும்பத் திரும்ப பிச்சைக்காரன் போல் அம்மா தாயே அம்மா என்று தலையில் அடித்துக் கொண்டு பின்னாலேயே ஓடிவந்தான்.

அவன் தீனம் குயிலி கண்ணில் நீர் துளிக்க வைத்தது. ஒன்றும் செய்ய முடியாது. நிகழ்ந்து முடிந்த வரலாறு. மாற்றி நிகழ்த்த, அதுவும் பல நூற்றாண்டுகள் உருண்டோடப் பின்னால் வந்த குயிலி பார்க்க வேண்டுமானால் சும்மா பார்த்துவிட்டுப் போகலாம்.

திரும்ப வேண்டிய நேரம் இது, தள்ளுவண்டியில் வைத்து இழுத்துப் போன தார்க் கலவை வழியெல்லாம் சிதறிக் கொண்டு போக, ஒரு குத்து சூடான தார் குயிலி கால்மேல் விழுவதாக சிதறி வந்தது.

அது அவள் பாதத்தை அடைவதற்குள் மறுபடி மேலே போக, அந்த வெளி பரந்து விரிந்த ஆள் நடமாட்டம் இல்லாத பெரிய பொட்டலாக ஆனது.

இல்லை, குயிலி வேறு எந்தக் காலத்தையும் நின்று நிதானித்து அதில் அமிழ்ந்து பார்க்கப் போவதில்லை. நேரம் இல்லை. வானம்பாடி வேறு அவசரப்படுத்துகிறாள்.

பெருந்தேளர் ஹோலோகிராமாகச் சந்திக்க இருக்கிறார் என்று காலப் படகின் சுவர்த் திரை அவசரமாக அறிவித்தது. குயிலியும் வானம்பாடியும் அடுத்தடுத்து அமர்ந்து நேர்காணலை எதிர்பார்த்திருந்தனர்.

அலுவலகத் தொழில்நுட்ப அவை உருவாக்கிய லேசர் ஹொலோகிராமாக  ,   பெருந்தேளர் ஊர்ந்து முன்னால் வருகிறார்.

குயிலி, வானி, இன்னும் 1820இல் தான் இருக்கீங்களா? ஒற்றைச் சாட்டமாக இருபது முப்பது நூற்றாண்டைக் கடக்கும் முன்னே, சின்னச் சின்னப் பயணம் போய்வந்து தயார்ப்படுத்திக்கறது நல்லதுதான். அதற்காகத் தேர்ந்தெடுத்த காலங்களுக்கான அண்மைக்கால வரலாற்றிலே இவ்வளவு அமிழ வேண்டாம். அடுத்து?

ஐயா, வணங்கறேன் என்று பெருந்தேளரின் ஹோலோகிராம் முன்னால் மண்டியிட்டு நான்கு முறை தலை தரையில் பட  வணங்கி எழுந்து நின்றாள் குயிலி.

வானம்பாடியும் அந்த வெகுவாக சம்பிரதாயமான வணங்குதலை நடத்த பெருந்தேளர்  முகத்தில் கண்கள் பிரகாசித்தன. விஷம் நிறைந்த கொடுக்கு – அன்பர்களுக்கு அல்லல் நீக்கும் கவசமும் அன்பிலாருக்கு உயிர் பறிக்கும் விடமுமான அவர்தம் வல்லுறுப்பு அது. அதன் சிறப்பு குறித்து ஐந்தாம் நூற்றாண்டு பொது சகாப்தப் புலவரை நியமித்து தூதுவும், உலாவும் பிரபந்தமும் எழுத வைத்து சிருங்கார ரசம் போதாது என்று இன்னொரு புலவரை, இவர் எட்டாம் நூற்றாண்டுக்கவி- மதிப்பீடு செய்ய வைத்தார்கள். புலவருக்கு ஆயிரம் பிரபஞ்ச நிதி சொல்லியிருந்ததற்குப்பதில் தொள்ளாயிரத்தைம்பது காசுத் துணுக்குப் பொதி மட்டும் கொடுத்து ஒரு நூற்றாண்டு பின்னால் அவரை இறக்கி விட்டது வேறு கதை. இன்னும் அவர் வீடு சேரவில்லை.

எட்டாம் நூற்றாண்டு புலவரே கால்வாசி நிதி மதிப்புக்கு, அதிமதுர சிருங்காரக் கண்ணி என்ற நீள்செய்யுளை எழுதி வந்து விருது பெற்றுச் சென்றார். தேளர் கொடுக்கு வனப்பு ஐம்பது அடி நீண்டு போக கொடுக்கு இரண்டாம் குறி, நீள்குறி இரண்டாம் கொடுக்கு என மோகாவேசத்தோடு வர்ணித்து அவர் எழுதிய கண்ணி அது. வாசித்தும், சொல்லக் கேட்டும், நடனமாக ஆடியும், நாடகமாக மேடையில் பேசி உலவியும், கலவி இன்பம் பகிர்ந்தமை கண்டு பழகி, புலவரைப் பார்த்தாலே கலவி இன்பம் துய்க்கும் சுகம் ஏற்பட்டது பலர்க்கும்.

இது வழக்கமானதாக, அவரை எட்டாம் நூற்றாண்டுக்கே திருப்பி அனுப்பிவிட  முடிவு செய்தபோது வயதான பெரிய தேளர்களும் கரப்பர்களும் தங்களுக்கும் இன்பம் நுகர இதுவே வழியாக இருக்க, கவிஞரை என்றால் புலவரைக் கண்ணில் படாமல் செய்து விட்டால் சரிப்படாது என்று எடுத்துச் சொல்லப்பட்டது.

பெருந்தேளரும் நிர்வாக அவையும் கலந்தாலோசனை செய்து ஏற்றுக்கொண்டு, நடக்கும்  ஐம்பதாவது நூற்றாண்டிலேயே புலவரை இருத்திக் கொள்ள நிச்சயமானது.

அவரை வைத்து பெருந்தேள் காமாயிரம், கரப்பு திகம்பர அந்தாதி என்று புதிதாகப் பாடவும் செய்தனர் அவர்கள். இருநூற்றிருபது அன்பளிப்பு செய்தால் அன்பளித்தவர் நாயகனாக வரும் சிற்றிலக்கியங்களைப் புலவர் எழுதித் தள்ளி விடுவார். குறிக்கும் கொடுக்குக்கும் வேறுபாடு தெரியாமல் எழுதுகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தாலும், அது அவர் சித்தரிக்கும் அதீத காமத்தின் தரிசன வெளிப்பாடு எனக் கருத வேண்டும் என்று அரசாணை மூலம் கவிதை அனுபவ மதிப்பீடு கற்றுத்தரப்பட்டது.

மின்னணு உருவில் சேமித்து வைத்தது தவிர கட்டாயமாக நியூரோன்கள் மூலம் தகவல் களஞ்சியத்தில் உடனடி இணைப்பு வழியே இந்த சாகாவரம் பெற்ற படைப்புகளை மனித மூளையில் சேமித்து வைக்க, கட்டாயத்தின் பேரில் அடிமை வம்ச மனிதப் பரம்பரையில் பத்து பேரைத் தகவலர்களாக நியமித்துமிருக்கிறது.  அவர்கள் இறக்கும்போது வேறு தகவலர்களுக்கு இவர்கள் படித்து அனுபவித்துக் கிட்டிய இந்த ரசனை, மனனம் செய்த சிருங்காரச் செய்யுள்கள், அவை போல் காமம் சொட்டும் செய்யுள் இயற்றக் கைகொள்ள வேண்டிய திறமையெல்லாம் கடத்தப்படும்.

மதுவும் போதைப் பொருளும் மாந்திமாந்தி சதா போதையில் இருப்பவர்கள் போல், தகவல் பரப்பில் தனக்குத் தேவையில்லாத சிங்காரக் காட்சிகளை எப்போதும் உணர்ந்து அதில் அமிழ்ந்தபடி இருக்கும் அந்தப் பரிதாபத்துக்குரியவர்கள் உண்ண உடுக்கக் கூட பிரக்ஞை இன்றி படுத்தே கிடக்கிறார்கள்.

தகவல் மனிதர்கள் வினாடியின் பதினெட்டாயிரம் பங்கில்  சேர்த்து வைத்த தகவலைத் தேடி எடுத்து வரவேண்டும். மாமைக்கும் பசலைக்கும் வேறுபாடு என்ன என்று தேளர் யாரும் கேட்டால் உடனே தகவல் தர வேண்டும். தாமதம் இருந்தால் நியூரல் ஆயுதங்கள் மூலம் கடுமையான வலி உணர்வு ஏற்படுத்தித் தரையில் கிடந்து புரள வைக்கும். மிகக் கடுமையான தண்டனை ஒரு குழு செந்தேளர்கள் சுழ்ந்து நின்று கொடுக்கு கொண்டு ஏக காலத்தில் கொட்டுவதாகும்.

அப்படியும் தகவல் கொண்டுவர விநாடிக்கு பதினெட்டாயிரம் பகுதி நேரத்தில் செயல்படாத தகவல் மனிதர்கள் ஒரு வாரத்தில் பகுதி பகுதியாகச் செத்துப் போவார்கள். அவரவர் கையால் ஏற்படும் இறப்பு இது.

தேளரசின் விநோதங்களைப் பற்றி யோசித்தபடி குயிலி உறங்கிட, வானம்பாடி என்ற வானியும் ஆழ்துயில் கொள்ளப் பின்னணியில் இதமான சத்தம் கடந்து போனபடி உள்ளது.

ஊ ஊ என்று சன்னமாகக் காற்று போல் சீழ்க்கை ஒலி தொடர்ந்து வர ஒரு அணு கூட நகராமல் காலப் படகு பின்னோக்கிக் காலத்தில் பயணமாகிக் கொண்டிருக்கிறது. ஜம்புத் தீவு பிரகடனமும் துரைசாமியும் கால வெள்ளத்தில் குறுந் திவலையாகி மறைந்து போகப் பயணம் நீள்கிறது; 

காற்றைப் போன்ற ஒலி நின்றது. குயிலி நிறுத்துவதற்கான உத்தரவு பிறப்பித்தல்ல. தன் போக்கில் நிலைத்த இயக்கம். உள்ளே கவிந்த சுவர்த் திரையில் ஆறு வளைந்து திரும்பும் நீர்நிறை வாய்க்கால் ஓரம் ஆள் வராத முடுக்கில் காலப்படகு கண் மறைவாக நிற்பது தெரிகிறது.

குயிலியும் வானியும் வெட்டவெளியில் கால் வைக்காமல் காலப் படகில் இருந்தபடிக்கே   பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

காலப் படகு, பால் வீதி பிரபஞ்சத்தில், சூரிய மண்டல கிரகத் தொகுதியில், பூமி கிரகத்தில் மட்டும் சஞ்சரிக்கும் ஊர்தி. பூமியில் நிகழும் காலத்தின் பின்னும் முன்னுமாக  முப்பது நூற்றாண்டுகள் பயணம் செய்யும் ஊர்தி. சக்கரங்களோ இறக்கைகளோ இல்லாதது. அதன் இயக்கமும் எரிபொருள், அ-எரிபொருள் தேவையும் பற்றிப் பின்னொருநாள் விரிவாகப் பேசலாம். இப்போது குயிலி காத்திருக்கிறாள். வானம்பாடியும் நீலரும் கூட.

புதியதாகத் தொடங்கிய எதற்கான துறை என்று யாருக்கும் சரியான புரிதல் இல்லாத அலுவலகத்தில் யாரோ பணிக்குச் சேர்வதை எதிர்பார்த்துக் கட்டி வைத்த அமைப்பாக காலப் படகு தட்டுப்படும்.

ஏமப் பெருந்துயில் கட்டிடத்தின் ஈசான மூலையில் இரும்பு மற்றும் மின்காந்தத் தடுப்புக் கதவுகள் தடுத்து இளம் நீலம் மற்றும் இளம் பச்சையில் விளக்கு எரிய திரைகளுக்குப் பின்னே காலப் படகு இருக்கும். அது பயணம் போகும்போது விளக்குகள் எரியாது.

 அரசுத் தலைவர் பெருந்தேளர் தவிர யாரும் ஹோலோகிராமாகவோ சக்தித் துணுக்குத் தொகுதிகளாகவோ ஊர்தியில் பிரவேசிக்க முடியாது. பெருந்தேளருக்கான சம்பிரதாயபூர்வமான மரியாதையை மேம்போக்காக மட்டும் கடைப்பிடித்து ஊர்திப் பயணிகள் காலப் படகின் நகர்விலும் நிலைத்தலிலும் கவனம் செலுத்த அனுமதி உண்டு.

எந்த நூற்றாண்டில் எந்த இடத்தில் ஊர்தி சென்றடைந்து கதவு திறக்க வேண்டும் என்றாலும் பெருந்தேளர் அல்லது இனி வருமாயிருக்கும் அவருக்கடுத்தவர் ஊர்திக்கு உள்ளே இருக்கும்போது பயணிகள் வெளியேற முடியாது. இப்போது 1565-ஆம் ஆண்டில் நிற்கும் முன் பெருந்தேளரின் ஹோலோகிராம் மறைந்தது .

வானி இருக்கையில் இருந்து எழுந்து வந்து குயிலியை அணைத்துக் கொண்டாள். நல்ல உணவு கிடைக்கும் இடத்துக்கு வந்திருக்கிறோம் என்றாள் குயிலி. விஜய நகரத்தில் வழக்கம் போல் விழாக் கொண்டாட்டம் என்று கூவியபடி வானி என்ற வானம்பாடி, ஊர்திக் கதவுகள் திறந்து வழிவிட வெளியே வந்தாள். அடுத்து குயிலி.

குன்றின் அடிவாரத்துக்கு அவர்கள் நடந்தும் சற்றே சில அங்குல உயரத்தில் பறந்தும் போவதற்கு முன் கால ஊர்திக் கணினி வடிவமைத்து சக்தித் துகள் உருவத்தில் இருந்து தூலமான பட்டுத் துணியாக உரு மாற்றிக் கொடுத்திருந்த உடுப்புகளை அணியும்போது யந்திரக் குரல் – சீமாட்டிகளே, சுதந்திரத்தில் குறுக்கிடலுக்கு மன்னிப்பு கோருகிறோம். உங்களை இங்கோ, எங்கோ இப்போது யாரும் பார்க்கவில்லை, பார்க்க முடியாது.

வானி கையசைத்து இயந்திரக் குரலை நிறுத்தினாள்.

நீங்கள் விழுத்துப் போட்ட அணிந்த உடுப்புகளை சலவை யந்திரத்தில் போடக் கோருகிறோம்.

வானி குயிலியின் துணிகளை முகர்ந்து லகரிதான் என்றாள் கண் மூடி. குயிலி அவசரமாக அவள் வீழ்த்திப் போட்ட துணியை விளக்கு எரியும் இடைவெளி கடந்து வீசித் திரும்பினாள்.

வானம்பாடி சற்று நேரம் எடுத்து உடுப்பு களைந்து நின்று இருகையும் குயிலியை நோக்கி நீட்டி அணைக்க வருவது போல் போக்குக் காட்டினாள். இருவரும் சிலிர்த்து, கொஞ்சம் சிரித்தனர். அவர்கள் உடையணிந்து வெளியேறினார்கள்.

  குயிலியின் கையைப் பிடித்துக் கொண்டு விழாவில் மகிழ்ச்சியும் பரபரப்புமாக பெரியோர் வழிநடத்த  நகர்ந்து போகும் குழந்தை போல் நடந்தாள் வானி என்ற வானம்பாடி.

 தொடரும்

Series Navigationமுதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *