This entry is part 9 of 12 in the series 17 ஏப்ரல் 2023

ஆர் வத்ஸலா

நேற்று என் தோழி இறந்து போனாள்

படுக்கவில்லை

தூக்கத்தில் போய்‌விட்டாள்

அழுது ஓய்ந்து விட்டேன்

சமாதானப் படுத்திக் கொண்டேன்

படுக்காமல் போய் சேர்ந்தாள் புண்ணியவதி

இல்லாவிட்டால்

கஷ்டப்பட்டிருப்பாள்

புருஷன் பாம்புக்கும் பழுதைக்கும் நடுவில்

அவளுக்கு ஏகமாக

புடவை நகை வாங்குவான்

தன்னிஷ்டத்திற்கு

அவள் ஆசைப் பட்டதை வாங்க மாட்டான்

அவளுக்கு  உடல் நலம் கெட்டால்

புகழ் பெற்ற மருத்துவர் வைத்தியம்

ஆனால் அவள் தான் சமைக்க வேண்டும்

அவனுக்கு பிடித்த மாதிரி

அவள் நொண்டி நடந்து சமைத்தாலும்

கவனிக்க மாட்டான்

அவள் விட்டுக் கொடுக்காத

தர்ம பத்தினி

“அவருக்கு எம் மேலெ கொள்ளெ ஆசெடீ”‌என்பாள்

நேற்று அவள்

இறந்து போனாள்

அவன் அழவில்லை

இன்று அவன்

இறந்து போனான்

Series Navigationஆசை 1சிறு ஆசை