நாவல் தினை- பதினைந்தாம் அத்தியாயம். மத்தியாங்கம் CE 300

This entry is part 9 of 12 in the series 21 மே 2023

இரா முருகன்

மருத்துவர் நீலன் தர்மனார் தினசரி வாழ்க்கை ராஜநர்த்தகியின் வனப்புள்ள குதம் பற்றிய கவலைகளில் ஆழ்ந்திருக்கக் கடந்து போன தை மாதம் தைப்பொங்கலுக்கு அடுத்த வாவு நாளில் அவரைத் தேடி ஒரு யவனன் வந்தான். நல்ல உயரமும் தீர்க்கமான நாசியும் விநோத உடுப்பும் மின்னல் போல் காலில் பளிச்சிடும் காலணிகளுமாக வந்தவன் கோட்டை மதில் அருகே நின்று கொச்சைத் தமிழில் உரக்கக் கேட்டது – மருத்துவன் உண்டோ இங்கே மருத்துவன் உண்டோ.

எங்கெல்லாம் சத்தம் எழுப்பப் படுகிறதோ அங்கெல்லாம் ஓடிப் போய் நின்று வேடிக்கை விநோதம் என்னவென்று நோக்க வேலையற்ற ஒரு கூட்டம் முதற்சங்க காலத்துக்குப் பல காலம் முன்பிருந்தே மாநகர் அல்லங்காடியிலும் நாளங்காடியிலும் திரிந்து கொண்டிருக்குமே, திரிதரு மாக்கள், அவர்களை எதிர்பார்த்துத்தான் அவன் அகவியது.

பத்து பேர் அப்படி இப்படி ஒரு நிமிடத்தில் அங்கே வந்து கூட்டமாக நிற்க, யவனன் கூவினான் – மருத்துவர் இங்கே எந்தத் திசையில் இல்லம் ஏற்படுத்தி வசிக்கிறார்?

அங்கே விநோதம் வேடிக்கை பார்க்க வந்து நின்ற அத்தனை பேருக்கும் மருத்துவர் எங்கே இருக்கிறார் என்று தெரியும். அவர்களுக்கு அரசனில் தொடங்கி மருத்துவர், படைத் தலைவர், கோமாளி வரை வார்த்தையால் சீண்டி வேடிக்கை பார்க்கக் கூடத் தெரியும். பொழுது போகாவிட்டால் ராஜநர்த்தகி மாருக்கும் பெருச்சாளிக்கும் சிலேடையாக நேரிசை வெண்பா பாடச்சொல்லிக் கேட்க உடன் எழுதுமளவு கவிதையும் தெரியும். அவர்களின் சில பாட்டுகள் கவிமருந்து உட்பட அரசவைக் கவிஞர்கள் மண்டையைக் குடைந்து கொண்டு யாத்தளிக்கும் சராசரிப் பாக்களை விடச் சுவையானது என அரசனே சொல்வதாகக் கேள்வி. யார் எழுதியுமென், சிருங்காரத்தில் பூத்த செய்யுள் எக்காலமும் சோடை போகாது.

என்றாலும் அவர்கள் தேவையில்லாத இடத்தில் எல்லாம் புகுந்து புறப்படுகிறவர்கள். இங்கே வந்திருப்பவன் யார் என்ன என்று தெரிந்து கொள்ளாவிட்டால் அவர்தம் சிரம் வெடித்து விழுந்துவிடுமன்றோ.

நான் ரோமாபுரியிலிருந்து வருகிறேன் என்று அவன் தொண்டையைக் கரகரப்பு நீக்கிச் செறுமிக்கொண்டு தொடங்க, நாங்களும் ரோமாபுரியிலிருந்துதான் வந்தோம் என்று ஒரு கழுவேறி சிரிக்காமல் மறுமொழி செப்பினான். அங்கே அடுத்து ஒரே சிரிப்பு.
பகடிக்குப் பத்து வழி. அதுவும் தொழிலியற்றா மாக்கள் இலக்கின்றித் திரிதரும்போது.
மருத்துவரைச் சந்திக்க வந்தேன் என்றான் வந்தவன்.

அவர் யவனர்களோடு பேச மாட்டார்.

என்னோடு பேசுவார். வீடெங்கே சொல்வீர்.

சொல்வதற்கில்லை என்றனர் சூழ்ந்திருந்த மாக்கள்.
மருத்துவரை சந்தித்து உரையாடிப் போக வேண்டும் என்றான் வந்தவன் மறுபடியும். எதற்காக? சொல்வதற்கில்லை.
அவரில்லாவிட்டால் ராஜநர்த்தகியோடு பேசிப் போக விருப்புண்டோ. போக விருப்பமுண்டோ. கால்நூறு பொற்காசு தந்து கட்டிப் பிடிக்கலாம். கட்டியும் பார்க்கலாம்.

அவர்கள் உள்ளூர் நகைச்சுவை பகிர்ந்து நகைக்க, கடப்பாரை முழுங்கி இஞ்சிக் கசாயம் குடித்தவனாக யவனன் நெஞ்சுக்குக் குறுக்கே கைகட்டி கம்பீரமாக நின்றான்.

இந்தக் கல்லுளிமங்கனிடம் தகவல் பெயராது என்று முடிவுக்கு வந்த திரியும் கீழ்மக்கள் அவர்களிடையே அவன் குறிநீளம் குறித்து ஊகித்திருந்தது சரிதானா எனக் காண விழைந்தார்கள்.

அதற்கு மறுபடி அழுக்கு அருவியாக அடுத்த சிரிப்பு.

மருத்துவன் வசிப்பிடம் தெரிந்தால் சொல்மின். என்னுடல் பற்றி ஏனிங்கே அறைதல்? அரசுண்டோ இங்கே? அரசூழியருண்டோ வருவீர். சகலரையும் எனக்கு உதவக் கோரும் அரசாணை இதோ.

வந்தவன் வழியோடு போன, உற்றார் உறவில்லாத வெற்று வெளியில் வெறுமை கட்டி உயிர்த்திருக்கும் சூனியக் கிழவியிடம் மருத்துவனின் இல்லம் போகும் வழி கேட்க, அவனைக் கொண்டு விட்டுப் போக முன்வந்தாள் முதியவள்.

உரக்கச் சத்தமிட்டு அரசுக் காவலரை விளிக்கும் யவனனின் அதிகாரம் உண்மையானது என்று கண்ட கடைத்தெருக் கும்பல் கலைந்தது. சூனியக் கிழவியோடு வம்பு வளர்க்கவும் யாரும் விரும்பவில்லை.

வெகுதூரம் நடக்க வேண்டுமானால், அன்னாய், நீர் நடந்து கால் நோக வேண்டாமே. பகடு இழுத்தோ வெண்பரி பூட்டியோ ஊரும் வண்டியேறி செல்லலாமே. அதற்கான காசுவகை என்னிடமுண்டு.

யவனன் அன்போடு கிழவியிடம் பகர்ந்தான்.

கவலைப்படாதே இந்தத் தெருவில் கடைசி வீடு தான். அவள் சொல்லி விட்டு அவன் முகத்தில் உல்லாசம் கண்டு மகிழ்ந்து கையசைத்து நின்றாள்.

நீவிர் யார் அம்மையே எனப் பணிவோடு கேட்டான் யவனன். நானா? சூனியக் கிழவி. ஏதும் அறியாத ஞான சூனியக் கிழவி. மறுமொழி பறைந்து அவள் சிரித்தாள்.

கிரேக்கத்தில் துடைப்பம் ஏறிப் பறக்கும் சூனியக் கிழவியர் உண்டு என்று சத்தம் கூட்டிச் சொன்னான் இவள் செவி மடுக்க. பூந்துடைப்பமா அல்லது ஈர்க்குச்சித் துடைப்பமா என வினவினாள். தெரியவில்லை என்றான் வந்தவன். எதுவாயினும் ஆசாரக் குறைச்சல் அது எனச் சொல்லி வானத்தை வணங்கிப் போனாள் முதியவள்.

இத்தனை அண்மையில் தானா மருத்துவன் இல்லம்? அட இதற்கா இத்தனை சத்தமெழுப்ப வேண்டி வந்தது? நகைத்தபடி நடந்து மருத்துவன் கதவண்டை நின்றான் வந்தவன்.

முன்றிலில் உறங்கிக் கிடந்த நாய் இவன் வந்தது கண்டு இரைக்க இரைக்கக் குரைத்தது. வாசலை ஒட்டி நெல்லி, மாமரம் தவிர நான்கு தென்னை மரங்களும் இருந்ததால், ஏதோ கடமை கருதி ஒவ்வொரு மரமாகச் சுற்றி வந்து முகர்ந்து கீழ்ப்பட்டை நனைத்தது நாய்.

யார் வேண்டும் என்று குரல் வானத்தில் இருந்து வந்தது. மாமர மேற்கிளையில் இருந்து காயும் வடுவும் மருந்தரைக்கச் சீவியிருந்த மருத்துவர் சருக்கிக் கீழே இறங்கினார்.

உன்னை எதிர்பார்த்தேன். அவர் அந்த இளைஞரிடம் சிரித்தபடி முகமன் கூறினார்.

என் பெயர் பாரி. வந்தவன் நீலன் வைத்தியனிடம் சொன்னான். தெரியுமே என்றார் வைத்தியர். எப்படி என்று சொல்லவில்லை.

நான் நீலன் என்றார் வைத்தியர். தெரியுமே என்றான் பாரி. எப்படி என்று சொல்லவில்லை.

அவனை வீட்டுக்குள் அழைத்துப் போகும்போது நாய் உரக்கக் குரைத்தது.

குக்கல் குரைக்கட்டும். முன்கதை சொல்லச் சற்றுக் காலத்தில் பின்போவோம்.

சஞ்சீவனி என்றோர் மருந்துண்டு. மானுட ஆயுள் நீட்டும் அபூர்வ அமுது அது. ஒரு வம்சத்தின் இரண்டு குடும்பங்களிடம் அதை உருவாக்க வேண்டிய அறிவு பழகியிருக்கிறது. இரு குடும்பமும் சேர்ந்து முனைய சஞ்சீவனி உருவாகும், ஐநூறு வருடத்துக்கு ஒரு மாதம் மட்டும். கூடுதல் தகவல் வேண்டுமெனில் பொறுத்தருளுக. அதற்கு முன் இந்த யவனன் –

யவன இளைஞன் பெயர், அவன் நீலனிடம் சொன்னானே, பாரி. ரோமாபுரியில் இருந்து வருகிறான். அப்பன் வழி தமிழ். ஆத்தாள் யவனிகை. ஆத்தாளின் முப்பாட்டனாரும் சின்ன முப்பாட்டனார்களும் பாண்டிய மன்னனுக்கு மெய்க் காவலர்களாகப் பணிசெய்ய வந்தவர்கள்.

இருநூற்றைம்பது வருடம் முன்பு இங்கிருந்து பெரும்பாலும் ஆத்தாள் வழியில் பாதிக் குடும்பமே ரோமாபுரி திரும்பப் போனபோது ஒரு தூக்கு ஓலைகளை அவர்களிடம் அவன் தந்தை வழி முப்பாட்டன் கொடுத்து விட்டிருந்தான். ஆயுள் நீட்டும் சஞ்சீவினி மருந்து செய்முறை.

பகுதித் தகவல் கொண்ட ஓலைத் தூக்கு. மீதி மருத்துவர் நீலன் தர்மனார் பரம்பரையிடம் உண்டு. பாதுகாப்புக்காக இப்படிப் பிரித்திருந்தார்கள்.

இரண்டு பகுதி ஓலைகளையும் சேர்த்து வாசித்து அறிவு பெறவேண்டும். படிக்க சிரமமாக கொடுந்தமிழ் மட்டுமில்லை, பூடகமாக்குதலோடு வெண்பாத் தொகுப்பாகச் சொல்லப் படுகிறது.

ஐநூறு வருடத்துக்கு ஒரு முறை சஞ்சீவனி உருவாக்க வேண்டிய மூலிகைகள் அதிலும் வெகு முக்கியமான ஒன்று மண் தேடி முளைத்துச் செழிக்கும். செய்முறை ஓலை படித்துக் கிண்டிக் கிளறிச் சகலருக்கும் தருவது ஒரு மாதம் முழுக்க நடக்கலாம். மூலிகை அப்புறம் காணாமல் போகும். அடுத்து மூலிகை பூப்பூக்கும் காலத்துக்கு இன்னொரு ஐநூறு ஆண்டு பொறுத்துக் காத்திருக்க வேண்டும்.

இப்போது பிறக்க இருக்கும் மாதம், ஐநூறு வருடத்துக்கொரு முறை வந்து போகும் அபூர்வக் காலம். சஞ்சீவனி செய்ய உகந்த தினங்கள் இவை. தேவையான மிக அபூர்வமாக முகிழ்க்கும் மூலிகைகள். சொல்லப்படும். பொறுத்தருளுக.

இந்த ஆண்டு இளைஞன் பாரி மாநகர் வந்து மருத்துவன் வழித் தோன்றலைக் கண்டு பேசி மருந்து கிளறணும். யவனனுக்கு மருந்து ரோமாபுரி எடுத்துப்போக நீலன் தரணும். அதுவும் செய்ய வேண்டியதான வழிமுறை ஓலைகளில் எழுதி வைத்திருக்கிறது;

பரபரத்து, ஆசைப் பெருக்கோடு பெரிய ஜனக்கூட்டமே அதிக ஆயுள் பெற முட்டி மோத இன்னும் மாநகரிலோ நாட்டிலோ செய்தி பரவவில்லை. பரவுமோ அறியோம்.

ஓலைச் சுவடி ஐநூறு வருடம் முந்தியது. அதன் வாடை மனம் மாய்த்தது. அதன் தமிழோ படிக்க விநோதமாக இருந்தாலும் கொஞ்சம் முயன்று படித்தார் நீலன். வந்தவனுக்கும் சொல்லலாமா என்று தெரியவில்லை.

இரண்டு பேரும் சங்கேத வாக்கியங்கள், அடையாள ரகசியங்கள், உடனே பதிலை எதிர்பார்க்கும் விநோதமான கேள்விகள், அபத்தமான மறுமொழிகள் (இன்று காலை உணவு என்ன உண்டீர்கள்? சிலந்திகள் அவித்து உண்ணத் தகுந்தவையாக இருந்தன இப்படி) இருவரும் பரஸ்பரம் உண்மையான வழித்தோன்றல்கள் என்று குறிஞ்சிக் கடவுள் முன் தினை படைத்துச் சத்தியம் செய்து (பொய்யானால் தினை தொண்டையில் அடைத்துக் கொன்று விடும்)

இரண்டு தரப்பு ஓலைத் தூக்குகளையும் நெகிழ்த்தி இதில் ஒன்று அதில் ஒன்று என்று ஓலைகளை எடுத்து அடுக்கினார் மருத்துவர் நீலன்.

உணவு விடுதியோ சத்திரமோ அண்மையில் உண்டா? போய் உண்டு வருகிறேன் – சொல்லியபடி வாசலில் நின்றான் அவன். இரு இங்கேயே உண்ணலாம் என்று கைகாட்டித் தடுத்து அழைத்தார் மருத்துவர்.

இருவருக்கும் தாய்வழியோ தந்தை வழியோ உறவு உண்டு என்பதே அவன் மேல் அன்பு காட்டத் தூண்டியது.

இருவரும் சேர்ந்து இருந்து உணவு கழித்தார்கள். அவன் கொண்டு வந்த உலர் பழங்களும் இவர் வைத்திருந்த பழகிய தினை அரிசி வேகவைத்த சோறும், அவனது உலர் காய்கறிகளை வேகவைத்ததும் இவரது வாழையும் மாவுமாக உண்டாக்கிய சகல உணவும் நீலன் இணையர் கொண்டு வந்து வைக்க நிறைவாக உணவு கழித்தார்கள்.

அடுத்த முப்பது நிமிட நேரம் அசாதாரணமான செயலொன்றில் ஈடுபட்டிருந்தார் மருத்துவர். ஒவ்வொரு ஓலையாக வந்தவன் எடுத்துக் கொடுக்க அதைப் படித்து வாயிலிட்டு மென்று தின்றார் அவர். உப்பு, புளி, மிளகு, வெல்லம் பொடித்து இடித்துக் கலந்து அருகிலேயே ஒரு கிண்ணத்தில் வைத்திருந்ததை அவ்வப்போது ஒரு சிறுகரண்டியில் எடுத்து உண்ணத் தவறவில்லை. ஓலை உண்பது எளிய செயலா என்ன!

மொத்தம் அறுபது ஓலைகள் சின்னச் சின்னதாக இரண்டங்குல நீளம், அகலம் உள்ளவை. அதில் இருந்த மருந்து ஏற்படுத்தும் வழிமுறை மருத்துவர் அறிவில் ஏறியிருந்தது.

அவர் மரிக்கும் போது தன் வழித் தோன்றலுக்கோ, அப்படி யாரும் இல்லாத பட்சத்தில் தேர்ந்தெடுத்த இன்னொருத்தருக்கோ ஓலைகளில் எழுதிக் கொடுக்க வேண்டும். யவனபூமியான ரோமாபுரியில் இருக்கும் சகோதரமும் இதேபடி செய்வார். ஆக அவசரமாகச் சாகாதிருக்க மருந்து சஞ்சீவனி உருவாக்கும் செய்முறையில் ஒரு மரபுத் தொடர்ச்சி உண்டு.

மருத்துவர் சொல்லி நிறுத்தினார். யவனன் பிரமித்து நின்றான்.

அடுத்த ஞாயிறு இதே நேரத்துக்கு வா, மருந்து தயாராக இருக்கும். உங்கள் குடும்பத்துக்கு மட்டும் தரப்படும் என்றார் மருத்துவர்.

இல்லை எனக்கு வேண்டாம். ஓலை நறுக்குகளோடு இங்கே எல்லாருமறிய வரவேண்டும் என்று குடும்பத்துக்கான செயல் புரிய வேண்டியதால் வந்தேன். ஊர் கூட்டி வந்து சேர்ந்து அவற்றை உங்களிடம் கொடுத்ததோடு என் பணி கிட்டத்தட்ட முடிந்தது. சஞ்சீவனி நீங்கள் உருவாக்கும்போது பாதுகாப்பு தருவது என் இறுதிப்பணி.

மகிழ்ச்சி. நீ இங்கேயே தங்கலாம் என்றார் நீலன்.

கலகலவென்று சிரிப்புச் சத்தம். இரண்டு அழகான இளம்பெண்கள் வெளியிலிருந்து ஆளுக்கொரு கட்டு மூலிகைத் தழைப் பொதிகளோடு உள்ளே ஓடி வந்தார்கள்.

என் மாணவர்கள் தாம். பயிற்சி மருத்துவச்சிப் பெண்டுகள். நீலன் பாரியின் பார்வை போன தடம் ஒற்றிச் சொன்னார்.

அப்படியா, மகிழ்ச்சி. பாரி அவர்கள் குரலைக் கேட்டபடி நின்றான்.

ஆயுள் நீட்டிக்கும் அற்புத மருந்தை ஏன் வேண்டாம் என்கிறாய்? நீலன் அவனைக் கேட்டார்.

வேண்டாம். சூழ இருக்கிறவரெல்லாம் இயற்கைப்படி இறந்து போக பின்னால் வரும் பத்திருபது தலைமுறைக்குப் பாரமாக நான் இருக்க விரும்பவில்லை. என் குடும்பத்திலும் இதுதான் நிலைபாடு.

கொஞ்சம் சுற்றிப் பார்த்து விட்டு வருகிறேன். நான் யார் என்று யாராவது கேட்டால்?

என் மருமகன் என்று சொல். நீலன் எதையோ கொதிக்க வைத்தபடி கூறினார்.

அவன் சிரித்தபடி படி இறங்கினான்.


தினை மத்தியாங்கம் அ

மருத்துவர் பகடு பூட்டிய ரதம் செலுத்தி, என்றால், எருது பூட்டிய வில்வண்டி ஏறி புறநகர் வந்து சேர்ந்தபோது குற்றுச் செடிகள் முளைத்த தரிசு முழுக்கக் குதங்கள் உயர்ந்திருக்கக் கண்டாரேயன்றி மூலிகை ஏதும் முளைத்திருக்கப் பார்த்திருந்தாரில்லை.

ஆயுள் நீட்டிக்கும் மருந்து உண்டாக்கத் தேவையான ஐந்து மூலிகைகளில் இரண்டு, மழை பெய்த ராத்திரிகளில் மலர்ந்து விடியலில் உதிர்ந்து போகும் வகையானவை. மீதி மூன்றில் இரண்டு, சகஜமாகக் கிட்டும் நாயுருவியும் நெல்பரணியும். ஏகமாகக் கிடைக்கும், தேடிப் போகும்போது தான் காணாமல் போகும்.

அப்புறம் அந்த ஐந்தாவது மூலிகை, அதன் பெயரைக்கூட சத்தம் போட்டுச் சொல்லக் கூடாது. அபூர்வமான மூலிகை அது. எவ்வளவு அபூர்வம் என்றால் ஐநூறு வருடத்துக்கு ஒரு முறை தான் பூப்பூத்து முளைவிடும்.

ஆக அந்த ஐநூறு வருடக் குறிஞ்சி பூத்து இலைவிட்டுச் செழிக்கும் காலத்தில் தான் ஆயுள் நீட்டிக்கும் மருந்து காய்ச்சப்படும். எல்லாமே விரைவாக நடந்து விட வேண்டியது. இல்லையோ, குட்டிச்சுவராகப் போய்விடும் எடுத்த முயற்சி எல்லாம்.

இன்னொன்று அந்த ஐநூறு வருடக் குறிஞ்சியைச் சித்திரத்தில் கூட யாரும், மருத்துவர் அடக்கம், பார்த்ததில்லை. இலை நீலம், அகலம் கையளவு, நீளம் விசும்பளவு என்று சித்தரித்த வெண்பாவில் அடையாளம் ஓரளவு தெரியும். எனில் விசும்பளவு நீளம் என்றால் ஆகாயம் வரை நீண்டிருக்குமா?

மருத்துவர் மனதில் மருகினார். அப்போது தான் நினைவு வந்தது விசும்பு தேவலோகமும் தான் என்று. வானம் பார்த்து மல்லாக்க மலர்ந்திருக்கும் மூலிகை. அந்த அடையாளம் மட்டும் போதாதே.

பின், விசும்பென்றால் இதுவும் தான். சன்னமான அழுகை. கண்ணீர் பெருக்கி சத்தமின்றி அழுவது. அந்த மூலிகை இலையைத் தொட்டால் கண்ணில் நீர் வரும்.

போதும் இந்த அடையாளங்களோடு அடையாளம் கண்டுவிடலாம். மலையடிவாரத்திலும், தேவைப்பட்டால் மலையும் ஏறி மூலிகைகளைத் தேடுவதை உடனே தொடங்கினார் மருத்துவர்.

அவருடைய தகப்பனார் பச்சையப்ப மருத்துவரும், அவருக்கு அவர் தந்தை வெள்ளைச்சாமி மருத்துவரும் சொல்லியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று ஐநூறாண்டு காலங்கள், அதாவது ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக இந்த ஆயுசு நீட்டிப்பு மருந்து பயன்படுத்தவே படவில்லை.

மருந்து உருவாக்கியதே அதற்கும் ஐநூறு ஆண்டு முன்பு சரியாகச் சொன்னால் முதற்சங்க காலத்து லெமூரியா கண்டத்தைக் கடல் கொண்டு போன ஆழிப் பேரலை காலத்தில் தான்.

அதன்பின் கோகர் மலையில் உயிர்கள் இறைவன் அருள் கொண்டு மீண்டும் உயிர்த்தன. அவற்றில் மானுட ஆயுளை நீட்டிக்கும் மருந்தை இடைச்சங்க காலச் சான்றோர் உருவாக்கினர்.

அந்த நாகரிகத்தையும், கலாசாரத்தையும், மலைவாழ் உயிர்களையும் அடுத்த சுனாமி ஆழிப் பேரலை அடித்துப் போக, முதல் சங்க நகரும் பள்ளியும் கிராமமும் கடல் திருப்பித் தந்து போனது.

உயிர் நீட்டிக்கும் மருந்து இடைச்சங்க கால உருவாக்கம் என்றாலும் வாய்மொழி விவரங்கள் தவிர எழுதிய ஓலை ஏதும் இல்லை அது குறித்து. அது இப்போது கடைச்சங்க காலத்தில் இடைச்சங்க காலத்துக்கு ஐநூறு வருடம் அடுத்து வாய்மொழியாக நீலன் மருத்துவரிடம் அடைந்தது.

சாரதி, இங்கே பல தரத்தில் குதம் தானுண்டு. மூலிகை பார்க்க பின்னொரு நாள் வரலாம். இப்போது மலைநோக்கிப் பகடு செலுத்து.

மருத்துவர் ரதமேறி அமர பகடுகள் ஜல்ஜல்லெனச் சதங்கை ஒலித்து ஓடத் தொடங்கின

மலைச் சுவட்டில் புதியதாகக் கொத்திய படிகள் ஏறி மருத்துவர் மலை ஏகினார். மலையோரக் குறுநிலத்தில் கொடுந்தமிழ் உரைவீச்சு நடத்துவோர் மலை சவிட்டி எனக் கூறும் வழக்கம் ஓர்த்தார் எனில் நினைவு கூர்ந்தார்.

சவிட்டிப் போகலாம் என்று படிகளை விலக்கிப் புல்லும் பூச்செடியும் மூலிகைச் செடியும், மிளகுக் கொடியும் பசுமை காட்டிக் கொண்டிருந்த தரையில் அவர் கவனம் நிலைத்தது. வானம் பார்த்து நிமிர்ந்திருக்கும் புது இலைகள் அடர்ந்த நிலம் சிரித்தது.

ஐநூறு வருடத்துக்கு ஒருமுறை பூக்கும் ஐநூற்றுக் குறிஞ்சி அதுதானா? இலைகளை ஜாக்கிரதையாகத் தொட்டார். கண்ணில் நீர்த் திரையிட்டது. மூலிகை கொடுத்த கண்ணீர் மட்டுமில்லை, தேட வேண்டாமல் காலைச் சுற்றும் பூச்செடி கிடைத்த ஆனந்தக் கண்ணீருமன்றோ அது.

இருநூற்றுக் குறிஞ்சியும் முன்னூற்றுக் குறிஞ்சியும் எந்த சிரமுமின்றி உடனே கிட்டின. எங்கும் எப்போதும் கிடைக்கும் நாயுறுவியும் நெல்பரணியும் மட்டும் கிடைக்கவே இல்லை. இங்கில்லாவிட்டால் என்ன, வைத்தியர் வீட்டுப் புழக்கடையில் அந்த இரண்டும் அவர் விதைக்காமலேயே தழைத்துப் பெருகியுள்ளன.

தோட்டம் நேராக்குதல் செய்யாததால் கிடைத்த அந்த இரண்டும் எடுத்துச் சஞ்சியில் நிறைக்க மனம் நிறைந்தது.

மறுநாள் ஓலையில் கண்டபடி அதிகாலையில் கண்விழித்து, எருக்கிலை தலைப் பெய்து நீராடினார் மருத்துவர்.

மருத்துவர் துணைவி இன்று உத்தராயணம் அல்லவே. எதற்கு எருக்கிலை தலையில் வைத்துக் குளியல் எனக் கேட்டாள். இது சஞ்சீவனி மருந்து காய்ச்ச என்று மட்டும் சொன்னார்.

தலை போகிற ரகசியமாம் அவர் கையாள்வது. எல்லா மூலிகைகளையும், மற்றப் பொருட்களையும் கை நிறையச் சேர்த்து வைத்திருந்த பருத்திப் பைகளிலிருந்து எடுத்து பழுக்காத் தட்டுகளில் நிரப்பி வைத்தார்.

கிழக்கு நோக்கி அமர்ந்து கலுவமும் மருத்துவ விளக்கும் எடுத்து வைத்து விளக்கை ஏற்றினார். மிகப் பெரியதாக கலுவம் அடுப்பேற மூலிகைத் துண்டங்கள் எண்ணெய் மினுக்கி சூட்டில் வெந்து நீரில் கரைந்து நல்ல வாசனை எழுப்பின. அது உயிரின் வாசனை. ஆயுள் நீட்டிக்கும் மருந்து உருவாகிக் கொண்டிருந்தது.
தினை மத்தியாங்கம் ஆ
சிறு நகரக் கற்கோட்டையில் சாவைக் குணமாக்க மருந்து கண்டுபிடித்து விட்டார்கள். அதைப் பரிசோதிக்க பத்து பேரை, ஆளுக்கு நூறு பொன் கூலிக் காசு கொடுத்து, ஆயுசும் ஐநூறு வருடம் நீடிக்கப்படுகிறார்கள்.
பிரசவ ஆஸ்பத்திரி தாதிகளில் இருந்து சுடலையில் பிணம் சுடும் வெட்டியான் வரை வேறேதும் பேச்சு இல்லை. வீட்டில் வளர்க்கும் கிளிகளும் மருந்து மருந்து என்று மந்திரமாக உச்சரிக்கின்றன. கோட்டைக் கதவுகள் அடைத்து மூடப்பட்டன.
மருத்துவர் ஆயுள் மருந்தை உருவாக்குவது பக்கத்து கிராமம் சிறு நகரம் என எங்கும் பரவியது. அது பல வடிவாகத் திரிந்தது. ஒரு திரிபு உடலின்றி உயிர் மட்டும் நீடிக்க மருந்து வந்ததாகச் சொன்னது.
மற்றொன்று குரங்குகளின் உயிரை மனுஷர்களுக்கு மாற்றி வைத்து அவர்களை மார்க்கண்டேயர்களாக்கினதாக எக்காளம் முழக்கியது.
வேறொன்றோ மருந்து உண்ண ஆயுள் நீடிக்கும், எனில், உடல் சுருங்கி சிட்டுக்குருவி ஆகிவிடும் என்று பயமுறுத்தியது. அது வந்த சுவட்டிலேயே அடுத்த வதந்தி மருந்து உண்ண உடலும் பூரிக்கும் என்று எதிர்காலத்தில் எல்லோரும் சிறு குன்றுகளாக நகர்வர் எனக் கூறின.
உடல் குரங்காக ஆயுள் ஐநூறாண்டாவதை இன்னொரு திரிபு சொல்லியது. மருந்து உட்கொள்ள மலச்சிக்கல் தீரும் என்ற வதந்தியை நூறு பேராவது நம்பினார்கள்.
எது எப்படியோ, வெளியூரார் வராமல் இருக்கக் கோட்டைக் கதவுகள் அறைந்து சாத்தப்பட்டன. அவர்களும் நம்மவர்கள் தானே என்று வெளிமதில் பக்கம் சூழ்ந்து நின்றவர்களைப் பற்றிப் பரிதாபம் காட்டிய மனிதாபிமானிகள் இருந்தார்கள். அவர்களை இழுத்துப்போய்க் கோட்டை வாசலுக்கு அந்தப்பக்கம் தள்ளிவிட்டுப் பிரச்சனை தீர்ந்ததாக அரசு தரப்பில் மனநிறைவு தெரிவிக்கப்பட்டது.
இது வெளிவட்ட நிகழ்வுகளின் தொகுப்பு என்றால், நகருக்குள் நிலைமை வேறு மாதிரி இருந்தது.
மருந்து காய்ச்சி முடித்தவுடன் வியர்வையும் கையில் பிசுக்காக மருந்து ஒட்டியிருந்ததையும் களைய ஆற்றுக் கரையில் ஊற்று போட்டு அதில் இறங்கி ஒரு மணி நேரம் குளித்தார் மருத்துவர்.

பகல் சாப்பாட்டையும் ராத்திரி சிற்றுண்டித் தீனியையும் ஒரே இருப்பில் உண்ணப் போகிறேன் என்று அடுத்து மனைவியிடம் கூறியபோது அவள் இன்னொரு தடவை ஆச்சரியப்பட்டாள்.

ஓலைச் சுவடி படித்துப் படித்து தப்பும் தவறுமாகப் புரிந்து கொண்டு குளிகத் தனமாக ஏதாவது செய்ய முனைந்திருக்கிறீர்கள். ரெண்டு வேளை சாப்பாட்டை ஒரே தடவை எப்படி உண்ண முடியும்? அவள் கேட்டாள்.

அரசரைச் சந்திக்கப் போகிறேன். அவர் பேச ஆரம்பித்தால் மணிக் கணக்காகப் பேசுவது மட்டுமில்லை, சாப்பிட ஒரு கை அவல் பொரி கூடக் கொடுக்க மாட்டார். குடிக்கத் தண்ணீர் மட்டும் போனால் போகிறது என்று கொடுக்கச் சொல்வார். இப்படி நிலைமை இருக்க, எளிதாக காலையில் பேச ஆரம்பித்து சாயந்திரம் வரை பிடுங்கி எடுத்து விடுவார் என்பதால் பசிக்காமல் இருக்கச் சாப்பிட்டுப் போவேன் என்று மருத்துவர் விளக்கம் செய்து உண்டு போனார்.

அரசர் மருத்துவர் வருவதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு முகமன் கூறிப் பாராட்டியது இந்த வகையில் இருந்தது –

ஆயுள் அதிகம் ஏற்படுத்த மூலிகைகள் பயிரிட வேண்டும் தானே? மைதானத்தில் பயிரிட்டுக் கொள்ளுங்கள் அங்கே காலைக்கடன் கழிக்க யாரும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
அரசர் தாராளம் காட்டினார். மிக்க நன்றி என்று ஒரு தடவை சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து எழுந்து, இன்னும் சில கோரிக்கைகளும் உண்டு. சமூகம் அனுமதித்தால் சுருக்கமாகாச் சொல்வேன் என்றார் மருந்துவர்.
அதென்ன சுருக்கி உரைத்தல்? உங்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதெல்லாம் விவரித்துச் சொல்லுக என கம்பீரம் காட்டிய அரசர் மருத்துவன் ஐநூற்றுக் குறிஞ்சி என்று சொல்லி வரும்போது உறங்கி விட்டார்.
எல்லோருக்கும் பெருமாள் கோவில் துளசி தீர்த்தம் போல் கொடுங்கள்.
அவர் சொல்லியது எழுந்தபோது தான்.
இந்த அபூர்வ மருந்தை இன்றைக்கே வீடு வீடாகப் போய்க் குடிக்கத் தரலாம் தான். ஒரு சிறு பிழை இருந்தாலும் கூட மருந்து வேலை செய்யாது. அது மட்டுமில்லை, வேறு ஏதாவது விளைவை ஏற்படுத்தலாம். ஆகவே ஒரு பத்து பேரைப் பயன்படுத்தி தீர சோதனை செய்து பார்த்து விடுவது நல்லது என்றார் மருத்துவர்.
அதிலென்ன சிரமம்? அரசர் போகட்டும் போகட்டும் என்று கையை வைத்து அபிநயம் பிடித்தார். அந்தப் பத்துப் பேர் என்று ராகம் இழுத்தார் மருத்துவர். யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் என்று அனுமதி கொடுத்தார் அடுத்து தாராள மனதோடு.
இப்படி மக்கள் தொகைப் பட்டியலில் சகட்டுமேனிக்குப் பெயர் தேர்ந்தெடுத்தால் அவர்கள் வருவார்களா?
சந்தையில் கத்தரிக்காய் வாங்குவது போல் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொல்ல, அரசர் சீறினார்.

ஆயுசு கூட்டும் மருந்து உண்டாக்க கத்தரிக்காயும் வேண்டுமென்றால் சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே. அது இல்லாமல் புனுகுபூனைக்குக் குதத்தில் கசிந்து வராது என்று ஏதோ பேசிக்கொண்டு போகிறீர்.

அப்படியில்லை அரசே, மருந்தை ஐயம் திரிபற சோதிக்க ஒரு பத்து பேர் பத்து பேர் மட்டும், மருத்துவர் சொல்லி முடிக்கும்முன் யார் வேண்டும் உமக்கு? அரசி, அமைச்சர்,காரியக்காரர்கள், வாத்தியம் வாசிக்கிறவர்கள் யார் வேண்டுமானாலும் சோதனைக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் மீண்டு வந்தாலும் சரி, குரங்காக மாறினாலும் சரி. விளைவு தான் முக்கியம் என்று ஆள் இல்லாத உள்வீட்டில் ராஜபார்வை பார்த்தார் அரசர்.

அடுத்து உறங்கத் தொடங்கினார் அவர். அதற்கு முன் ஆயுசு நீட்டிப்பு மருந்து சோதனைக்கு இவர்கள் உட்பட வேண்டும் என்று வெற்று ஓலைகளில் அரசரின் கையெழுத்தைக் கீறி வாங்கிக் கொண்டார் மருத்துவர்.

நிம்மதியாக ஓய்வெடுக்கவும் முடிகிறதில்லை. வேறேதும் வேண்டுமா?

ஆம் மன்னா, சோதனைக்கு உட்படுகிறவர்கள் அதற்காக சில வராகன் பொன் அல்லது தங்கக் காசுகளாகப் பொருள் அளிக்கப்பட வேண்டியது வழக்கமானதன்றோ.

அன்று தான், சும்மாத் திண்ணையில் குந்தி இருந்து அரையில் சொரிந்து கொண்டிருப்பான் அவனைக் கூட்டி வந்து லேகியம் உருட்டிக் கொடுத்தால் வேறே எந்த வேலை செய்யாமல் போகிறான்? பூமிக்குப் பாரமாகக் கிடண்டு உருளுவதை அரசு மாளிகையில் மருந்து விழுங்கி உருளட்டுமே. அவனுக்கு ஆயுள் நீட்டித்தல் பிரச்சனை இல்லை. இருக்கும்வரை தினசரி விலையில்லா உணவும். உடுப்பும், கிடந்துறங்கிக் கிடக்க மனையிடமும், கூடப் படுக்கத் துணையும் கிடைத்தால் போதும். என்ன நான் சொல்வது? இதெல்லாம் சஞ்சீவினி தருமா? சொல்வீர் நீலன் தருமா. அவர் சிலேடையை அவரே ரசித்தார்.

அரசர் எதுவோ உரைக்க பாதி புரிந்த மருத்துவர் இன்னொரு ஓலையில் அரசு மாளிகையைச் சோதனைக்குப் பயன்படுவதை அங்கீகரித்தார் மன்னர்பெருமான்.

காலை எட்டு மணிக்குத் தொடங்கி பத்தரை வரை மருத்துவரோடு தொடர்ந்து அரசர் சல்லாபம் செய்திருந்தது பற்றிய முழு விவரம் அறிய விழைந்த அமைச்சரவை கூட்டமாக மருத்துவர் பின்னால் நடந்தது.

பேசியபடியே அவர் தகவல் சொல்லிப் போக பத்து பேரைத் தேர்ந்தெடுத்தாகி விட்டதா எனக் கேட்டதும் நீங்கள் தான் என்று மருத்துவர் வெற்று ஓலையைத் திரும்பப் பிடித்துக் காட்டினார். அவர் பக்கத்தில் யாரும் இல்லை

அடுத்த வினாடி முதல் தெருத் தெண்டிகள், மொழி அறியாத வழிப்போக்கர்கள், வழுக்குப்பாறையில் கிடந்து யோகம் பயிலும் யோகிகள், சதா போகம் விழைந்து குப்புறப் படுத்திருக்கும் போகிகள், மூங்கில் எடுத்துக் கயிற்றில் நடக்கும் கழைக்கூத்தாடிகள் என்று முப்பது பேருக்கு மூன்று குழுக்களாக மருந்து பரிசோதிக்கக் கிடைக்கிறது.

அவர்கள் எல்லாவருக்கும் ஜவந்திப்பூ மாலை சூட்டி ஆட வைத்து அரசு மாளிகையில் சுக வாசத்துக்காக அழைத்துப் போகப்படுகிறார்கள். அவர்களுக்கு ஆயுசு முழுக்க வாழ்க்கைச் செலவை அரசாங்கமே தரும், அவர்கள் உயிரோடு இருந்தால் என்ற வதந்தி நிலவுவதால் சற்றுத் தாமதமானாலும் பரிசோதனை எலிகளாகக் கூட்டமாகக் குழுமினர்.

இந்த முப்பது பேருக்கும் இரண்டு மூன்று பத்தாண்டுகள் ஆயுள் அதிகம் கிடைக்கும் என்று வதந்தி நிலவுகிறது. மருத்துவரின் உதவியாளர்கள் இந்த முப்பது பேருக்கும் மருந்து கொடுத்தார்கள். மருந்து புகட்டவும் அரசராணைப்படி நிதி ஒதுக்கப்பட்டு உதவியாளர்கள் இருவருக்கு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது அரசு மாளிகை முகப்பில் வைத்து, வாசலில் பெருங்கூட்டமாகப் பார்த்திருக்க நடந்ததாகும். மருந்து கசப்பாக இருப்பதாக முதலாமவர் சொன்னார். அடுத்தவர் நீர்க்கோவை காரணம் சுவை தெரியவில்லை என்றார். மீதி பதினெட்டு பேர் கசப்பையே சுவை ஆகச் சொன்னார்கள்.

மீதி பத்து பேர் மருந்து புகட்டப்பட்டதும் சுறுசுறுப்பும் மகிழ்ச்சியும் தானே வந்ததாகவும், இன்னும் ஐநூறு வருடம் உயிரோடு இருக்கப் போவதாகவும், மதியம் உணவோடு இனிப்பு சுவியன் கொடுத்தால் வாழ்க்கை நேர்த்தியானதாக இருக்கும் என்றும் கருத்துக் கூறினர்.

அந்தப் பத்துப் பேருக்கும் ஆசனம் அளித்து அரசு மாளிகை மாடி வராந்தாவில் அமர வைக்கப்பட்டார்கள். மீதி இருபது பேரும் மாளிகை சுத்தப்படுத்துதல், தெருக் கூட்டுதல், அரண்மனைக் கழிவறை சுத்தப்படுத்துதல் என்று விதிக்கப்பட்டார்கள்.

முப்பது பேருக்கும் போதும் என்று சொல்லும் வரை சைவ உணவு தினசரி மூன்று தடவை வழங்கப்பட்டதோடு, வாதாம்பருப்பும் உலர் திராட்சையுமிட்டுச் சுண்டக் காய்ச்சிய பாலும் இரவில் பனங்கற்கண்டு சீனியும் கலந்து அதேபோல் சுண்டக் காய்ச்சித் தரப்பட்டது.

அரசனுக்கு அடுத்தபடி வேறு யாருக்கும் இந்தப் பால் உபசாரங்கள் இதுவரை அளிக்கப்பட்டதில்லை என்று அமைச்சர்கள் முதல் பொது மக்கள் வரை ஆச்சரியப்பட்டுப் பேசினார்கள்.

முப்பது பேருக்கு தினசரி ஐந்து தடவை மருந்து பலாச இலைகளில் வைத்து விழுங்கும்படி அளிக்கப்பட்டது. முதல் இரு நாட்கள் மருந்து சாப்பிட்டவர்களுக்கு எதுவும் தனிப்பட்டதாக நடக்கவில்லை.

மூன்றாம் நாள் சாயந்திரம் மருந்து தரும்போது அவர்கள் பலாச் சுளைகளை உண்டு கொண்டிருந்தார்கள். நன்கு சவைத்து பலாச்சுளை உண்டு அதன்பின் மருந்து உண்ண முதல் பத்துப்பேரில் ஒன்பது பேர் முற்பட சிறப்பாக ஏதும் நடக்கவில்லை.

ஒருவர் மட்டும் வாயில் மென்ற பலாச்சுளையோடு மருந்தையும் சேர்த்து உண்ண, நிற்காமல் வாயு பிரியத் தொடங்கினார். அடுத்த பத்து நிமிடத்தில் தெருவே அதிர சத்தம் கூட்டி அவர் வாயுவைச் சங்கீதமாக வெளியேற்றினார்.

பார்வையாளர்களுக்கு நகைச்சுவையான இந்தக் காட்சிக்கு அவர்கள் வாயு ஒலியோடு கைத்தட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்கள். அவர் பறக்கப் போகிறார் என்று வேடிக்கை பார்த்திருந்த மற்றவர்கள் குறிப்பிட்டார்கள். சிறிது நேரத்தில் அவர் தோத்திரப் பாடல்களை வரிசையாகப் பாடியபடி நித்திரை போனார்.

இது எந்த விதத்திலும் பார்வையாளர்களைக் கவரவில்லை என்றாலும் மருத்துவருக்குச் சற்றே கவலை தந்தது.

ஏற்கனவே போட்டிருந்த இன்னா நூறு பட்டியலில் மருந்து உண்ணும்போது மது உண்ணாதீர், மருந்து உண்ணும்போது போகம் கொண்டாடாதீர் என்று எழுதியதற்கு நேர்கீழே மருந்து உண்ணும்போது பலாச்சுளை உண்ணாதீர் என்று சேர்த்தார்கள்.

சேர்த்து, அந்த மனுஷனை இன்னொரு பலாச்சுளை தின்கிறாயா என்று கேட்க, அவன் வேண்டாம் ராத்திரி சாப்பாடு எப்போது வரும் என வினவினான்.

அவனுக்குக் கூடுதலாக மருந்து தரலாமா என்று யோசித்தார் மருத்துவர். கையிருப்பு குறைவாக இருப்பதால் அது வேண்டாம் என்று வைத்தார். இன்னும் இரண்டு நாள் சென்றது.

பதினான்கு நாள் மருந்து கொடுத்துக் கண்காணிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர் தன் குழுவுக்கு விதித்திருந்ததில் ஆறு நாட்கள் கடந்து போக வாயுப் பிரிதல் தவிர வேறு எதுவும் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

இனிப்புகளும் பழங்களும் உண்டு அலுத்த சோதனை எலிகள் அவற்றை அரசு மாளிகை முகப்பில் இருந்து கீழே கூடும் பெருங்கூட்டத்துக்கு வீசியெறிய அந்த உணவை எடுத்து உண்ணக் கீழே சிறு மோதல் நடப்பது வாடிக்கையானது.

ஒன்பதாம் நாள் காலையில் பெருமழை பெய்தது. காலை உணவும் மருந்தும் வழக்கம்போல் உண்டார்கள் முதல் பத்து சோதனை எலிகளும்.

அவர்கள் உடனே பறக்கத் தொடங்கினார்கள்.

கீழே பார்த்து நின்ற கூட்டம் ஓவென்று அலற அந்தப் பத்துப் பேரும் வானத்தில் உயர்ந்து காணாமல் போனார்கள். அன்று அரசு மாளிகையில் என்ன நடக்கிறது என்று அறிய அரசரே வந்திருந்தார்.

மருத்துவர் கையைப் பிசைந்து கொண்டு நிற்க, பத்துக் கிளியும் பறந்து போச்சு என்று அரசர் கைவிரலைச் சுடக்குப் போட்டுச் சிரிக்க, முழுக் கூட்டமும் அவரோடு சேர்ந்து பத்துக் கிளியும் பறந்து போச்சு என்று பாட ஆரம்பித்தார்கள்.

அடுத்த சில மணி நேரத்தில் மருத்துவர் அங்கே இல்லை. வழுக்குப் பாறைக்குக் கீழே நீர் மட்டம் கூடிய குகைத் தொடரில் மனைவியோடும் மூலிகை மூட்டையோடும் நுழைந்து விட்டதாக வதந்திகள் நிலவத் தொடங்கின.

அந்தக் குகைத் தொடர் நிலத்தடி நீரும் மழை நீரும் சேர்ந்து அவ்வப்போது உள்ளே இறங்கிப் பாதை மறிக்கும். குகைத் தொடரின் உள்ளே உள்ளே தனியாக மருத்துவர் போனதாக அவருக்குத் திரும்ப எண்ணமே இல்லை என்றும் சொல்லப்பட்டது.

எல்லாம் ஐநூற்றுக் குறிஞ்சி அதிகமானதின் காரணம் தான், பத்து படி பெய்ய வேண்டிய ஐநூற்றுக் குறிஞ்சிச் சாறை பத்து பத்துப் படி கலந்து விட்டது தவறுதான்.

இவர்கள் பறந்தால் என்ன? ஊர் விநோதம் எல்லாம் பறந்து கண்டு ஆச்சரியமடைந்து நாளை சூரியோதயத்தில் திரும்ப வந்து இறங்கிவிடுவார்களே.

வராமல் போனால் தான் என்ன? அவன் இடத்தில் இவன் என்று வெற்றுத்தனமாகப் பொழுது பாழாக்க நூறு பேர் பரவலாகத் தேடினால் கிடைப்பார்கள். அரசனும் தானே பறந்தது போல பறக்காவிட்டியாக அவசரப்பட்டிருக்க வேண்டியதில்லை.

ஒவ்வொரு ஐநூறாம் வருடம் ஐநூற்றுக்குறிஞ்சி பூக்கும்போதும் இப்படித்தான் அதைப் பயன்படுத்த முடியாமல் ஏதாவது இடையூறு வந்து விட்டதை வரலாறு சன்னமாகச் சொல்கிறது.

யாரும் எங்கும் போகட்டும். வழுக்குப் பாறைக் குகைகளில் ஆழ்ந்து உள்ளே போய் இவர்கள் அண்டவே முடியாது வடக்கிருப்பேன்.

Series Navigationசகிபாழ்நிலம்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *