ஸிந்துஜா
சாந்தி எல்லாச் சத்தங்களையும் கேட்டுக் கொண்டு படுத்திருந்தாள். முன்பு படுக்கும் போது போட்டுக் கொள்வதற்கு என்றிருந்த பாயும் கிழிந்து விட்டதால் வெறும் தரையில் படுத்துக் கொண்டிருந்தாள். மண் தரையில் ஊர்ந்து சென்ற எறும்பு ஒன்று அவள் காலைப் பதம் பார்த்து விட்டு நழுவியது. அந்த ஊசிச் சுருக்கின் வலியில் அவள் காலை இழுத்துக் கொண்டு சேலையால் பாதம் வரை தெரியாமல் மூடிக் கொண்டாள். வெளியில் படுத்திருந்த கறுப்பன் உள்ளே வந்து சுற்றிப் பார்த்து விட்டு அவள் கையை நக்கியது. அவளிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்று புரிந்து கொண்டது போல அது திரும்பிச் சென்றது. வேலு கடந்த பத்து நிமிஷங்களாக அரிசி, புளி உப்பு வைக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களை உருட்டிக் கொண்டிருக்கிறான். அவள் ‘ஒளித்து’ வைத்திருக்கும் காசை எடுக்கிறானாம். அவள் கையில் ஒரு பைசா கூட இல்லை என்று சொன்னாலும் அவன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மிக மோசமான கெட்ட வார்த்தைகளால் அவளைத் திட்டிக் கொண்டே தேடுகிறான்.
‘எதுக்கு இப்பிடி வெறும் டப்பாவைப் போட்டு உருட்டுறே? வெளியே போய் எங்கனாச்சும் வேலை பாத்தா காசு வருமில்லே’ என்று அவள் சொல்ல முடியாது. அவன் அதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறான். அவள் அப்படி வாயைத் திறந்தால் நாயை அடிப்பது போல் அவளை அடித்து மிதிப்பான். பணம் கிடைக்காத ஏமாற்றத்தை அவளை அடிப்பதன்
மூலம் தீர்த்துக் கொள்ளப் பார்ப்பான் என்பதை அவள் கற்றுக் கொண்டு விட்டாள்.
வெளியிலிருந்து மில் சங்கு ஊதும் ஒலி கேட்டது. மணி எட்டு. ஒழுங்காய் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தால் இந்நேரம் அவன் அந்த மில்லில் இருப்பான். இந்த நேரத்துக்கு வழக்கமாக அவள் அய்யர் வீட்டுக்குக்
கிளம்பிப் போயிருப்பாள்.ஆனால் இன்று வீட்டில் ஏதோ பூஜை விசேஷம்
என்று அய்யரம்மா சொல்லி விட்டாள். ‘வெளியிலிருந்து உறவினர்கள் வருவார்கள்; பூஜை முடிந்து அவர்கள் சாப்பிட்ட பின்புதான் அவளுக்கு
வேலை இருக்கும். அதனால் பத்து மணிக்கு மேலே வா’ என்று சொல்லி விட்டாள். பூசை, வெளி ஆள்கள் சாப்பாடு என்றால் இன்று அதிகப் பாத்திரங்கள் இருக்கும்.
வேலு வெளியே வந்து விட்டான். “எங்கடி ஒளிச்சு வச்சிருக்கே? தேவடியா முண்டை. எடுத்துக் குடுறி” என்று அவளைப் பார்த்து உறுமினான்.
அவன் அவளை அம்மாதிரிக் கூப்பிட்டது அவளது மௌனத்தைத் தகர்த்து விட்டது.”தேவடியாவா இருந்தா வீடு பூரா பணமா கொட்டிக் கிடைக்குமே” என்று அவள் கோபம் பொறுக்க மாட்டாமல் அவனைப் பார்த்துச் சீறினாள்.
“அட, பத்தினி பேச்சைப் பார்றா. சும்மா கெட. இன்னிக்கி நைட்டு நா வரப்போ எங்கினாச்சும் போயி கடனோ உடனோ வாங்கி வச்சிரு. இல்லாட்டி அவ்வளவுதான்.”
“நீ என்ன பெரிய மைனரா? வேலை பாக்காம பொம்பளைப் பிள்ளையைப் போட்டு அடிச்சி, குடிச்சிட்டுத் திரியெறே. அந்த அய்யரு பாவம் என் மூஞ்சிக்காக உனக்கு மறுபடியும் மில்லிலே வேலை வாங்கித் தரேன்னு ரெண்டு மூணு வாட்டி சொல்லியும் நீ கேக்கலியே”
வேலு “ங்கோத்தா! அவன் எதுக்கு எனக்கு வேல பாத்துத் தரேங்கிறான்னு எனக்குத் தெரியாதா? வேலையை வாங்கிக் குடுத்துட்டு உன்னைய லவட்டிரலாம்னு பாக்கறான்” என்று ஆங்காரமாகச் சிரித்தான்.
அவளால் கோபத்தை அடக்க முடியவில்லை. “சீ, தூத்தேறி! நீயெல்லாம் ஒரு மனுசனா? புளுத்துப் போன நாக்க வச்சுக்கிட்டு ” என்று அவனைப் பார்த்துக் காறித் துப்பினாள்.
அவன் இந்த அவமானத்தைப் பொறுக்க முடியாதவனாக அவள் தலை மயிரைப் பிடித்து இழுத்துக் காலால் அவளை உதைத்தான். மிகுந்த வலிமையுடன் செலுத்தப்பட்ட கால் அவள் வயிற்றில் தாங்க முடியாத வலியை எழுப்ப அவள் ஓவென்று கூக்குரலிட்டாள். அவன் மறுபடியும் அவளை மிதித்து விட்டு வெளியே சென்றான்.
அவள் வலியுடன் தரையில் புரண்டாள். அழுகையும் கோபமும் மாறி மாறி வந்தன. தினமும் அடிக்கிறான். அவள் பணத்தை எங்கு ஒளித்துவைத்திருந்
தாலும் எடுத்துக் கொண்டு ஓடி விடுகிறான் என்பதால் அவள் மாதக் கூலி வந்ததும் அதை அரிசியாகவும் புளியாகவும் மாற்றினாள். கையில் அவசரத்துக்கு வேண்டும் என அவள் அவனுக்குத் தெரியாமல் பக்கத்து வீட்டு வேணியிடம் கொடுத்து வைத்திருந்தாள். இது வரை அவனுக்கு அது தெரிந்திருக்கவில்லை. அது தவிர வேணி முரட்டுத்தனம் மிக்கவள் என்று அவனுக்கு அவளிடம் கேட்கப் பயமிருந்தது.
கலியாணம் ஆவதற்கு முன் அவன் குடிகாரன் என்று யாரும் விசாரித்து அறியவில்லை. மில்லில் வேலை பார்க்கிறான் என்ற தகுதி குடிகாரனைக் காட்டிக் கொடுக்காமல் மறைத்து விட்டது. குடியென்றால் அப்படி ஒரு குடி. தெரியாமல் அவளை மாட்டி விட்டு விட்டார்கள். இல்லை, அறிந்துதான் அவளை இவனிடம் தள்ளி விட்டார்களோ? கலியாணமாகி முதல் ஒரு மாதம் அவன் காண்பித்த பிரியத்தின் மயக்கத்தில் அவள் கண்கள் மூடிக் கிடந்தன. அவள் கண்ணைத் திறந்து பார்த்த போது அவள் கொண்டு வந்திருந்த சட்டி பானைகள், சேலைகள் எல்லாம் மாயமாகி மறைந்
திருந்தன அப்போதிலிருந்து சண்டையும் சச்சரவும் அவளுடன் நிரந்தரமாக சிநேகம் கொண்டு விட்டன.
வேலையில் இருந்த போது மாதத்தில் முக்கால்வாசி நாள்கள் அவன் வேலைக்குப் போகவில்லை. குடி அவனைப் படுக்கையிலிருந்து எழ விடாமல் அடித்துப் போட்டது. மில் வேலையிலிருந்து ஒரு நாள் அவனைத் தூக்கி விட்டார்கள். அவளுக்கு வேறு வழி எதுவும் இல்லாமல் வேலைக்குப் போக ஆரம்பித்தாள். முதலில் இரண்டு மூன்று இடங்களில் வேலை பார்த்து சரி வராமல் கடைசியில் அய்யர் வீட்டில் ஒதுங்கி விட்டாள்.
அவள் வேலைக்குச் செல்லத் தயாராக வேண்டும் என்று எழுந்தாள். ஆனால் வயிற்றில் உதைபட்ட வலி அவளைக் கீழே தள்ளிற்று. அவள் மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். அம்மா, என்னமாய் அடித்து விட்டான். பொறுக்கிப் பயல். இவனுக்கு எல்லாம் ஒரு பொண்டாட்டி, குடும்பம் எல்லாம் எதற்கு என்று அவனைச் சபித்தாள்.பிறகு சுவற்றைப் பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்து குடிசையை விட்டு வெளியே வந்தாள்.
வெளியுலகம் ஆரவாரமாக நடமாடிக் கொண்டிருந்தது. முந்தின இரவு பெய்த மழையால் சாலையில் தேங்கிக் கிடந்த நீரிலிருந்து துர்நாற்றம் வீசிற்று. பொழுது விடியுமுன் ‘கால் கழுவ’ குழந்தைகளும் பெண்களும் வயதான ஆண்களும் அசிங்கப்படுத்தியதன் விளைவு. வீட்டின் எதிர்புறத்தில் நாலைந்து பயல்கள் நின்று பீடி குடித்துக் கொண்டு அருகே இடிந்து கிடைக்கும் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த சினிமாப் போஸ்டரைப் பார்த்துச் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். வெட்டிப் பயல்கள் என்று சாந்தி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். எதிர்கால வேலுக்கள்!
அவளுடைய இடத்துக்கும் பக்கத்தில் இருந்த வேணியின் குடிசைக்கும் நடுவில் இருந்த ஓலைப் பந்தல் போட்ட மறைவுக்குச் சென்று காலைக் கடனை முடித்துக், குளித்து விட்டுத் தன் குடிசைக்குள் வந்தாள். பசி வயிற்றைக் கிள்ளியது. டீத்தண்ணி குடித்தால் நன்றாக இருக்கும். ஆனால் அதற்கும் கூட அய்யர் வீட்டுக்குச் சென்றால்தான் உண்டு.
அவள் அய்யர் வீட்டை அடைந்த போது வாசல் கேட் அருகே சில வண்டிகள் நின்றிருந்தன. வாசலில் நிறைய ஜோடிச் செருப்புகள் காணப்பட்டன. பூசைக்கு வந்திருக்கும் பெண்களும் பூசை நடத்தித் தரும் அய்யர்களும் விட்டுச் சென்ற செருப்புகள் என்று சாந்தி நினைத்தாள். என்னமாய் சொலிக்குது! அன்னிக்கி ஒரு நாள் வேணி வீட்டு டிவி.யில் ஆயிரம் ரூபாய் செருப்பு போட்டுக் கொண்டு வில்லி வந்ததை வேணி சொல்லித்தான் அவள் பார்த்தாள். அது மாதிரிதான் ரெண்டு
மூணு செருப்புகள் இங்கே இருந்தன. பணக்கார வீட்டுப் பொண்ணுங்க என்று அவளுக்குத் தோன்றிற்று.
நிலைப்படியில் மாவிலைக் கொத்துக்களை இணைத்து ஒரு கொடி கட்டப்பட்டிருந்தது. அதன் கூடவே நீண்ட மல்லிகைச் சரங்களும் தொங்கின. நெருக்கமாகக் கட்டப்பட்ட பூச்சரங்கள். ‘இன்னிக்கி மல்லி விக்கிற விலேலே முன்னூறு நானூறு ரூபாயாச்சும் இதுக்கு ஆயிருக்குமே’ என்று அவள் நினைத்தாள்.
அவள் வீட்டின் வெளிப்பக்கத்தைச் சுற்றிக் கொண்டு போனாள். வழியில் இருந்த ஜன்னல்கள் வழியாக அய்யர்கள் சொல்லும் மந்திரங்களின் ஓசைகளும் ஹோமப் புகையும் வந்து கொண்டிருந்தன. அவள் பின்புறத்தை அடைந்த போது தாயம்மா செடிக்குத் தண்ணீர் வீட்டுக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்ததும் “ஏன் என்னமோ போல இருக்கே? காலங் காத்தாலியே கை வச்சிட்டானா?” என்று கேட்டாள்.
அடக்கி வைத்திருந்த கண்ணீர் வந்து விடும் போலிருந்தது சாந்திக்கு. அவள் ஒன்றும் பேசாமல் அங்கிருந்த மாமரத்தின் நிழலுக்குக் கீழே இருந்த துணி துவைக்கிற கல்லின் பக்கத்தில் போய் நின்றாள்.
“அங்கியே அது மேலியே கொஞ்சம் உக்காரேன்” என்றாள் தாயம்மா.
“காலு மடக்க முடியாம வலிக்குது” என்றாள்.
“நாசமாப் போறவன். பொம்பளைப் பிள்ளையைப் போட்டு இப்பிடியா ஒருவன் அடிப்பான்?”
பிறகு அவள் உள்ளே சென்று ஒரு பிளாஸ்க்கையும் இரண்டு பேப்பர் கப்புகளையும் எடுத்து வந்தாள். பிளாஸ்கைத் திறந்து கப்புகளில் காப்பியை ஊற்றி ஒன்றை சாந்தியிடம் கொடுத்தாள்.
“பூசை முடிஞ்சு பண்ணி வச்ச அய்யருங்க, வந்தவங்க எல்லாம் சாப்பிட்டு விட்டுப் போகுற வரைக்கும் நாம இங்க செஞ்சு வக்கிற எதையும் சாப்பிடக் கூடாதேன்னு எசமான் பணம் கொடுத்து நீங்க ரெண்டு பேரும் காப்பி வாங்கிக் குடிங்கன்னாரு” என்றாள் தாயம்மா.
அய்யரின் முன்யோசனையையும் கருணையையும் நினைத்து அவளுக்குத் தொண்டை அடைத்தது. இந்த நல்ல உள்ளத்தைத்தான் அந்த வீணாய்ப் போன கபோதி வாயில் வந்தபடி பேசினான்.
எல்லாப் பாத்திரங்களும் பாத்திரங்கள் தேய்க்கும் இடத்தை வந்தடையப் பதினோரு மணி ஆகி விட்டது. நல்ல வேளையாகக் கீழே உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லாமல் வீடு கட்டும் போதே தொட்டி கட்டி அதற்குப் பக்கத்திலேயே பாத்திரத்தை நீரில் கழுவி விட ஏதுவாகத் தண்ணீர்க் குழாய் போட்டிருந்தார்கள். இதற்கிடையில்
அவளுக்கும் தாயம்மாவுக்கும் பொங்கலும் வடையும் பசியை ஆற்றிக் கொள்ள என்று சமையல்காரம்மா எடுத்து வந்தாள். சாந்தி தாயம்மாவிடம் கொலைப்பசி என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டாள்.
அவள் எதிர்பார்த்தது போலவே அடுக்கடுக்காகக் குவிந்த வண்ணம் வந்த பாத்திரங்கள் மூன்று நாள் வேலையைச் சாந்தியிடம் அடுத்த இரண்டு மணி நேரத்தில் வாங்கின. முடிந்த பின் அவளுக்கும் தாயம்மாவுக்கும் சமையல்காரம்மா சாப்பாடு போட்டாள். சாந்தி சாப்பிடுவதை பார்த்து “எதுக்கு காலேஜு போற பொண்ணுங்க கொறிக்கிற மாதிரி இத்துனூண்டு சாப்பிடறே? நல்லா வயிறு ரொம்ப சாப்பிடு” என்று சோறையும் காய்களையும் போட்டு சாம்பாரை ஊற்றினாள்.
“இன்னிக்கி இப்பிடி ஒரேயடியா சாப்பிட்டா நாளைக்கும் இது மாதிரி கொடுன்னு இந்த வயிறு கேக்குமே!” என்றாள் சாந்தி.
அவளும் தாயம்மாவும் வீட்டை விட்டுக் கிளம்பும் போது அய்யரம்மா இருவருக்கும் சேலை, குங்குமம், பழம் இவற்றோடு ஐம்பது ரூபாய் நோட்டு வைத்துக் கொடுத்தாள். அன்று செய்த இனிப்பு வகைகளை இரு பிளாஸ்டிக் கவர்களில் போட்டு ஆளுக்கு ஒன்றாகத் தந்தாள். இருவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.
சாந்தி கையில் இருந்த ரூபாய் நோட்டைப் பார்த்தாள். வீட்டில் எங்கு வைத்தாலும் வேலு எடுத்து விடுவான். அவள் நாடார் கடையை நோக்கிச் சென்றாள். கால் கிலோ சர்க்கரையும் நாலைந்து டீ பாக்கெட்டுகளும் வாங்கினாள். மீதி பத்து ரூபாயைக் கையில் வைத்துக் கொண்டாள். ஒரு வாரம் காலையிலே டீத் தண்ணி போட்டுக் குடிக்கலாம். எப்போதும் மதியம் அய்யர் வீட்டில் அவளுக்கு மதியச் சாப்பாடு கிடைத்து விடும். காஞ்ச வயிறோடு போய் மணிக்கணக்கில் வேலை பாக்க முடியாம ஒரு மணி வரைக்கும் நிக்கறதுக்கு டீத்தண்ணி கொஞ்ச நேரத்துக்குப் பசியை அடக்கும்.
அவள் நாடார் கடையை விட்டு வந்த போது ரோட்டிலிருந்து “ஏய் சாந்தி!” என்று பெருங்குரல் கேட்டது. அவள் திடுக்கிட்டு குரல் வந்த திசையைப் பார்த்தாள். வேணி அக்கா. ஓட்டமும் நடையுமாக அவளுடைய பெரிய உடலைத் தூக்கிக் கொண்டு வந்தாள். அவளுடைய பதற்றமான முகத்தைப் பார்த்து சாந்திக்கு அடி வயிற்றில் பயம் சுருண்டது.
“என்னாச்சு அக்கா? ஏன் இப்பிடி ஓடி வரே ?” என்று வேணி தன்னை நெருங்கியதும் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
“வேலுவை வெட்டிப் போட்டுட்டாங்க” என்று அழும் குரலில் வேணி பதறினாள்.
“என்னாது?”
“ஆமாடி. இவன் சாராயக்கடையிலே போயி வம்பு பண்ணியிருக்கான். போயிடு போயிடுன்னு அவனை அரை மணியா அங்க இருக்கறவங்க திட்டியும் கெஞ்சியும் பாத்திருக்காங்க. முக்குக் கடை டெயிலர் இருக்கான்லே அவன்தான் வேலுவையும் இளுத்துக்கிட்டுப் போயி ரெண்டும் மானாவாரியா குடிச்சிருக்குங்க. திடீர்னு வேலு கல்லா கிட்டே இருந்த முதலாளியோட சட்டையைப் பிடிச்சிருக்கான். அதோட விடாம அவரைக் கெட்ட வார்த்தையிலே கண்டமானிக்குத் திட்டினானாம். அவ்வளவுதான். முதலாளியோட ஆளுங்க அவனை அடிச்சு துவைச்சுப் போட்டு கத்தியால குத்திட்டாங்களாம். ரத்தம் பீச்சி அடிச்சு அங்கியே மயக்கம் போட்டுட்டானாம். ஆஸ்பத்திரிக்கு எடுத்திட்டுப் போயிருக்காங்க” என்றாள் வேணி.
வேணியின் பதற்றத்தைப் பார்த்து நாலைந்து பெண்மணிகள் கூடி விட்டனர்.
சாந்தி அப்படியே விதிர்த்து நின்றாள். ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே அவளுக்குப் புரியவில்லை.
“ஐயோ கடவுளே, நா இப்போ என்னா பண்ணப் போறேன்? உனக்கு எப்பிடி அக்கா இதெல்லாம் தெரியும்?” என்று சாந்தி பதற்றத்துடன் வேணியை உலுக்கினாள்.
“என் வீட்டுக்காரரு சிப்டு முடிஞ்சு வரப்போ இது நடந்திருக்கு. அவருதான் ஒரு ஆட்டோ வச்சு கவருமெண்டு ஆஸ்பத்திரிலே சேத்திருக்காரு. நீ கெளம்பு” என்றாள் வேணி.
“சரி நா வீட்டுக்குப் போயி பை, மாத்து துணி எடுத்துட்டு ஓடறேன்” என்றாள்
“நா வேணுமின்னா உன்கூட வரட்டுமா? ஆனா ஸ்கூலுக்குப் போயி சரசுவை இட்டாறனும்” என்றாள் வேணி.
“இல்லே. அதெல்லாம் வேண்டாம். நா பாத்துக்கிறேன்” என்று அவள் கிளம்பினாள்.
“கையிலே காசு இருக்கா? நான் வந்து வீட்டிலேந்து எடுத்துத் தரட்டா?” என்று கேட்டாள் வேணி.
சாந்திக்குக் கையிலிருந்த பத்து ரூபாய் ஞாபகத்துக்கு வந்தது.
“இல்லேக்கா.அதெல்லாம் ஒண்ணும் வேணாம்” என்று வீட்டைப் பார்க்க நடந்தாள்.
வீட்டை அடைந்து அவள் தரையில் உட்கார்ந்தாள் . காலை மடித்து உட்காரப் பார்த்தாள். முடியவில்லை. வலியில் உயிரே போயிற்று.
அவள் மௌனமாக ஏதோ யோசித்தபடி நின்றாள். அவள் பார்வை அய்யர் வீட்டில் கொடுத்த பையின் மீது விழுந்தது. பிரித்துப் பார்த்தாள். இரண்டு லட்டுகளும், இரண்டு பாக்கெட்டு முறுக்கும் இருந்தன. ஒரு லட்டை எடுத்து வாயருகில் கொண்டு சென்றாள். வாயில் இனிப்பு கரைந்து வழிந்தது.பிறகு ஒரு மாதிரி கையை முதலில் ஊன்றி உடலைத் தரையில் சாய்த்தாள். வலி இன்னும் அவளை விட்டு விலகிச் செல்லாமல் இருந்ததால் முனகினாள். படுத்த சில நிமிடங்களில் தூங்கி விட்டாள்.
சகி

- நில் மறதி கவனி
- நான் எனதாகியும் எனதல்லவே!
- வளவ துரையன் – இலக்கியச் செயல்பாடுகளில் இவர் ஒரு தீராநதி.
- நிறைவு
- மாசற்ற ஊழியன்
- புதுவித உறவு
- நியூட்டன் இயக்கும் பிரபஞ்சம்
- சகி
- நாவல் தினை- பதினைந்தாம் அத்தியாயம். மத்தியாங்கம் CE 300
- பாழ்நிலம்
- திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு
- எப்போதும் சாத்தி கிடக்கும் வீடு