நாவல்  தினை              அத்தியாயம் பதினாறு     CE 300

author
0 minutes, 35 seconds Read
This entry is part 11 of 14 in the series 28 மே 2023

  

குகை. குகைக்குள் இருந்து இடமும் வலமும் பாதை பிரிந்து இன்னும் இரண்டு குகைகள். அவற்றில் ஒன்றில் பிரவேசிக்க தண்ணீர் குகையின் கூரையில் இருந்து சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருக்கிறது. இந்தக் குகையைக் கடந்தால் அந்தகாரம் தான். 

இருள் பிரபஞ்ச இருள்பொதியோடு இணைந்து பிசையப்பட்டுத் தனிமை இழக்கக் கூடும். இடது பக்கம் பாதை  பிரியும் குகைக்கு மேலே சிறு பாறை நகர்வு வழியே மறையும் சூரிய வெளிச்சம் ஒரு கம்பித் தாரையாக உள்நுழைந்து கீழே   கசிந்து திடமாக நிற்கிறது, 

மருத்துவர் அந்த கிரணத்தை ஆவலோடு பிடித்து மேலேறப் பார்க்கிறார்.  கை மீது ஒளி பூசி நிற்கிறவரின் தலைக்கு மேல் அந்த ஒளி படிந்து மேலே எழுகிறது. அவர் திரும்பிப் பார்க்கிறார். 

ஒன்றிலிருந்து ஒன்றாக எத்தனை குகை கடந்து, எந்தக் குகையில் தொடங்கினேன் என்பதே நினைவின்றி, ஓரத்துக் காற்றும் சின்னஞ்சிறு வெளிச்சமும், படிகம் போல் சுத்தமாகக் கசிந்து வடியும் நீரும் அவரிடம் சொல்கின்றது போல் உணர்கிறார் –நாங்கள் உன்னோடு இல்லை. நீ எங்களோடு இருக்கிறாய் . 

தோளில் மாட்டிய சஞ்சியில்  கொண்டு வந்த சேமச் செப்பு கூட வைத்திருந்த வெங்கல நடராஜர் உள்ளங்கையகலச் சிறு சிற்பத்தோடு மோதி  நலம் விசாரித்து ஓரம் நகர்கிறது. நலமான நடராஜர் ஆடிக்கொண்டிருக்கிறார். 

சஞ்சியில் கை நுழைத்து, எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்து வந்த இரட்டை கதலிப் பழங்களை வெறுமனே தடவிப் பார்க்கிறார். 

பசித்தால் உண்ணலாம். எத்தனை தடவை? பசி எப்படி வரும்? வைராக்கியம் கொண்டு தானே பசியும், பெயரும், புகழும், ஆரோக்கியமும், பொன்னும் பொருளும் துறந்து வந்தது. 

இனியும் உணவு எதற்கு? இருக்கட்டும். எனக்கு வேண்டாவிட்டால் வேறு யாருக்காவது பயன்படாது போகாது. இந்தக் குகைச் சிக்கலில் யார் வரப் போகிறார்கள்? எப்படி வந்து எப்படி எங்கே போகப் போகிறார்கள்? 

எல்லாம் வெறுத்து என்னைப் போல் யார் இங்கே வருவர் என மருத்துவர் யோசிக்க, மனதின் மூலையில் ஆயுசு நீட்டிப்பு மருந்து சஞ்சீவனி வைத்த சம்புடம் உருள்கிறது. 

ஊருக்கெல்லாம் ஆயுள் வளர மருந்து கொடுத்தாயே உனக்குக் கொஞ்சம் வாயிலிட்டு விழுங்கினாயா? முன்னோர்கள் சொன்ன சொல் பொய்யாக இருக்க முடியாது. ஆயுள் நீட்டும் மருந்தென்றால் நீட்டாமல் இருக்காது. அறிவியலை சுக்கைத் தட்டிப் போட்டுக்கொண்டவுடன் குதத்தைத் தொட்டு நரகல் வந்துவிட்டதா எனச் சோதிப்பது நடக்குமா? 

நடக்காது தான். ஆனால் உடலில் சின்னஞ்சிறு மாறுதலைக் கூட, அதுவும் தன்னுடலில் மாற்றம் வந்தால் உணர முடியாமல் போகுமா?l 

மற்றவர்களுக்குத் தருவது இருக்கட்டும். மனைவிக்கு? 

அவளை எப்போதுதான் நினைத்திருக்கிறோம் என்று தெரியாது அவருக்கு. நனைவில் இருந்து கூட வந்தது எப்போது நடந்தது? 

கல்யாணமான இந்த ஒன்றரை வருடத்தில் அவளைப் பெயரைச் சொல்லிக் காவிரி எனக் கூப்பிட்டு எவ்வளவு நாளாகிறது. வைராக்கியத்தோடு இந்த குகைக்குப் புறப்பட்ட நேரத்தில் ஒரு வினாடியாவது நினைவில் வந்தாளா? 

மன்னிக்க வேண்டும் என் அருமை மனையாட்டியே. நான் சீக்கிரம் வந்து விடுகிறேன். அப்புறம் வேறு எங்காவது குடிபெயரலாம். மருந்தையும் கவிதையையும் மதிக்கும் மனுஷர்கள் இருக்கும் ஊரில்.

 ஊரெல்லாம் ஐயா குடி அம்மா குடி குப்பா குடி குப்பி குடி என்று தாடையைத் தாங்கிக் கெஞ்சாமல் நாமே மருந்து குடித்து நாமே பறந்து இறங்கியிருப்போமே எல்லா கௌரவத்தோடும்? 

அவர் ஏக்கத்தோடு மறுபடி சஞ்சியில் கையோட்டினார். அந்தச் சம்புடத்தில் இருந்த மருந்தை உடனே உட்கொள்ள மனம் ஏங்கியது. 

புத்தி சொன்னது –எப்படியும் குகைக்குள் மரிக்கப் போகிறாய்.  அது ஏன் மருந்து கொடுத்து ஆயுசை நீட்டிக் கொண்டு குகைக்குள் உயிர் விடணும்? அதுவும் வீட்டுக்காரியையும் கூட்டிக்கொண்டு.

 சஞ்சிக்குள் சஞ்சியாக மடித்து வைத்திருந்த சிறுபொதியாக ஓலைத் தூக்கி. ஐநூற்றுக் குறிஞ்சி மருந்து செய்முறை எல்லாம் அவர் மகனைத் தவிர யாருக்கும் கிடைக்கக் கூடாது. அவன் பிறந்து வளர்ந்தபின்.

 நேற்றிரவில்  அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோகப் பாதியளவு   நினைவில் இருந்து ஏதும் மறக்காமல் நினைத்து ஓலையில் எழுதிடும்  போதே இரண்டு பிரதி எடுத்தார். 

முதல் பிரதி அடுத்த வருடம் அவர் மகன் பிறக்கும்போது அவனுக்குக் கொடுக்க.  இப்போதைக்கு ஆமாம், நாய் உருட்டிய தேங்காய் போல் தனக்கும் பயன் இல்லை மற்றவர்களுக்கும் பயனில்லை. 

மதுகரன் என்ற பெயரில் மகன்   வரும்போது அவனுக்குத் தர மருத்துவர் நீலனே இருப்பார். ஆவியாக இருந்தால் என்ன?

 சக்தித் துகள்களாக   உடல் உதிர்ந்து மீண்டும் துகளெல்லாம் சேர்ந்து உடலாக, உயிராக மாறப் போவதாகத் தோன்றிக்கொண்டே இருக்கிறது. 

அப்படி எலும்பு தோல் போர்த்த உடலைப் பொடியாக்கி மீண்டும் உடலாக்கி என்று சொன்னால் மனைவியே நகைப்பாள். அரசன் பாதி உறக்கத்தில் கேட்டு பூசணிக்காய் வேண்டுமென்றால் சொல்ல வேண்டியதுதானே என்று சத்தம் போட்டு, நூறு சாம்பல் பூசணிக்காய் மருத்துவருக்குத் தரச் சொல்லி உத்தரவிடுவான்.

 எப்படியோ மருந்து கிளறப் பக்குவம் மகனுக்குச் சொல்லித்தர மருத்துவர் இருப்பார், 

மூத்திரம் முட்டிக்கொண்டு வந்தது. எங்கே ஒதுங்குவது? எதுக்கு ஒதுங்க? இந்தப் பறந்து விரிந்து கிளை விட்டுப் பிரிந்து கிடக்கும் குகைத்தொகுப்பே உன்னுடையது என்று குகையின் ஈரச் சுவர்கள் மருத்துவரிடம் சொல்லிச் சிரித்தன.

 இருளில் பக்கவாட்டில் இடது பக்கமிருந்து கரகரவென்று சத்தம்.

 எலியா? இருந்தால் சிரமம் தான். இரண்டு நாள்  அது பாட்டுக்குத் தன் விருப்பம் போல் போகும். அப்புறம் யார் இது  இங்கேயே இருக்கிறானே என்னை வேட்டையாடிக் கொல்ல வந்தவனா என்று சந்தேகத்தோடு சற்றுத் தொலைவில் இருந்து பார்க்கும். நான் அனங்காமல் இருந்தால் பக்கத்தில் போய் சுற்றிப் பார்க்கலாமே, மேலே ஏறி ஊர்ந்து பார்க்கலாமே, கடித்துப் பார்க்கலாமே மென்று பார்க்கலாமே தின்று பார்க்கலாமே. விரைவில் நான் எலும்பு மட்டுமான உடலாக இருப்பேன்.எலியா பெருச்சாளியா? ஒன்றிரண்டு இருந்தால் அடித்து விரட்டலாம்.  விரட்டினால் கூட்டத்தோடு திரும்பி வரும். அப்புறம் எலும்பு கூட மிஞ்சாது. 

மருத்துவரின் எண்ணங்கள் தரிகெட்டு ஓடின,

எதுவும் செய்ய மனதில் ஆர்வம் இல்லை அவருக்கு. தற்காப்புக்காக தரையில் உருண்டிருந்த, குகைச் சுவரிலிருந்து உதிர்ந்திருந்த, கூர்த்த முனை கொண்ட சிறு கருங்கல் பாளத்தை எடுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டார். 

இப்போது பாதுகாப்பு கிடைத்து விட்டது. எதற்கு? பாதுகாப்பு செய்தும் ஆயுள் நீட்டித்தும் என்ன சாதிக்கப் போகிறோம். அந்த பத்துப் பேர் பறந்து போனார்களே அவர்கள் திரும்பி வந்திருந்தால் நன்றாக இருக்கும். வந்திருக்கக் கூடும். 

பறந்தால் தான் தகவல். திரும்பியவர்கள் கண்டுகொள்ளப் படுவதில்லை. 

நடந்து நடந்து கால் தளர வலது பக்கம் வட்டக்கற்கள் தாறுமாறாக அடுக்கிய அடுத்த குகைக்குள் போய் கையை நீட்டியபடி ஊர்ந்தார் மருந்துவர். இருளில் குளிர்ந்த நீர் தாரையாகப் பெய்து கொண்டிருந்த குகைக்கூரையை ஒட்டி வலது கையை நீட்டினார். 

நாலு முறை குவித்த உள்ளங்கையில் நீர் கொண்டு வாயுயர்த்திப் பருக உடல் சோர்வு நலிந்து மறைந்தது. இனி உறங்க வேண்டியதுதான் என்று தீர்மானித்த பொழுது இன்னொரு கவலை. 

வெறுந் தரையில் படுத்தால் சுவர் ஓரத்தில் தேளோ பாம்போ பள்ளத்தில் வசித்து வரலாம். உடல் வேட்டை ஆட இல்லை, புலன் ஐந்தும் இயக்கம் நின்று போக வலிமை மிகுந்த கொடுக்கு கொண்டு கொட்டிப் போகலாம். படமெடுத்துச் சீறிக் கடித்துப் போகலாம்.

ஓரத்தில் இழையுயிர்களைத் தேடிச் சஞ்சியை சுருட்டித் தரதரவென்று இழுத்துப்போய்ப் பின் வலித்தார். நான்கு மூலைகளிலும் வேறு பிராணி ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. 

படுத்துச் சற்றே இளைப்பாறலாம் என்று தோள் துண்டைக் கீழே விரித்து கையைத் தலைக்கு அண்டக் கொடுத்து உறங்கினார் அவர். நடு உறக்கத்தில் இருந்தபோது கரகரவென்ற ஒலி அடுத்துத் திரும்பியும் கேட்க அவர் அவசரமாகக் கண் விழித்தார். 

யாரங்கே என்று குரல் உயர்த்தி அந்தகார இருளின் ஊடே ஒலியைக் கூராகச் செலுத்தினார்.  நிணமும், கழிவு நீரோடையில் அமிழ்த்திய வாடையுமாக சன்னமாக ஒரு குரல் கரகரவென்று எங்கிருந்தோ வந்தது. 

மருத்துவர் தன் கைகளை விரித்துக் கண் முன் வைத்துப் பார்த்தார். பத்து விரல் தான். இரண்டு கைகள் தான். அவருடைய புத்தியோ நரம்பு மண்டலமோ ஏதும் ஆட்டக்களி காட்டவில்லை.

 காது மடலில் தட்டித் தட்டிப் பரிசோதித்தார். ஒலித்து உதிர்ந்து மறுபடி ஒலித்த தட்டோசை சீராகவே இருந்தது, எந்தப் பக்கத்திலிருந்து பேசும் குரல் கேட்கிறது என்பதுதான் தெரியவில்லை.

 இது திசை கடந்து வரும் குரல். ஒரு வேளை குகைச் சுவரோடு அப்பியிருக்கும் வௌவாலா? வௌவால் பேசாதே. 

வழுக்குப் பாறைக் குகைக்குள் கல்லும் பேசும் புல்லும் இசை பாடும் என்று ஆசிரியப்பா எழுதி நானூற்றில் சேர்க்க கவி மண்டிலனிடம் அளித்தது நினைவு வந்தது.  சேர்க்கக் கட்டணமாக பத்து வராகனும் அந்தப் பாவில் சொற்குற்றம், பொருட்குற்றம் இல்லை என்று மூத்தோர் சான்றும் கொடுத்திருந்தார் அவர். 

கல்லும் பேசும் அக்கவிதை உயிர்த்திருக்கிறதா? மறுபடி அவர் குரல் உயர்த்திக் கேட்டார் – இங்கே யாராவது இருக்கிறீர்களா? 

பத்து வினாடி அமைதி. சலசலத்து நீர் குகைச் சுவரில் கசிந்து தரை தொட்ட ஒலி அது. 

நான் இங்கே இருக்கிறேன் என்று ஆண் குரல்  சற்றே தரையில் பரவி நீர்ப் பெருக்கு போல் வெளியே கசிந்தது. சுவரில் எதிரொலிக்காமல் தரையில் அதிர்ந்து மேலே எழும் குரல் வினோதமானதாகக் கேட்டது.

 யாரது என்று கேட்டார். குழலன் என்று சுருக்கமாக மறுமொழி வந்தது. தரையில் படுத்திருக்கிறீரா என்று முன்னும் பின்னும் அகல வாட்டிலும் அசைந்தபடி குரல் அதிரக்கேட்டு வலக்கைப் பக்கம் நடக்கத் தொடங்கினார் அவர். 

நான் நடந்து வருகிறேன். என் குரல் உங்கள் அருகில் வரும்போது மறுகுரல் கொடுங்கள். 

அந்தப் பக்கமிருந்து பதிலே இல்லை. அவர் நடக்க, தரையில் என்னைப் பதித்து வைத்திருக்கிறார்கள் என்று மெதுவான குரல் மறுமொழியாக வந்தது.

ஆச்சரியத்தோடு கேட்டபடி தரையில் கிடக்கும் எதையும் யாரையும் மிதிக்காமல் அப்படி அபத்தமான சூழ்நிலை இருந்ததாகக் கருத்தேற்றுக் கொண்டு மெல்ல ஊர்ந்தார் மருத்துவர்.

 குகைச் சுவரில் இருந்து ஒளி சன்னமாகக் கசியாமல் தரைக்குள் இருந்து மேலே வந்து கொண்டிருந்ததைக் கவனித்தார் அவர். முன்பு அவர் சுற்றிவர நடந்தபோது அமைதியாக இருந்த நிலம் அது. அதன் நிலப்பரப்பில் ஒரு மனுசத் தலை தட்டுப்பட்டது. 

மருத்துவர் தன்னைக் காலால் இடறி நோவித்து விடக் கூடாது என்ற ஜாக்கிரதையோடு அந்தத் தலை மருத்துவரின் கால்களோடு ஒத்திசைந்து உயிர்ப் பயத்தில் நகர்ந்தது. 

நான் உங்களை விடுவிக்க முயற்சி செய்யலாமா என்று கேட்டபடி மருத்துவர் அந்தத் தலைக்கு நேராக விலகி நின்று வினவினார். கேட்கும் போதே தரையில் பனிக்கட்டி நாட்படக் கட்டித்துக் கிடந்ததுபோல் தரை பிரகாசித்ததைக் கண்டார்.

 அந்தத் தலை குகைக்குள் ஒளியைத் தரைவழி கசிய வைத்ததையும் கவனித்தார். அதைவிட  வியப்பானதாக, அவருடைய பயம் எழுப்பி உடுப்பு சிறுநீர் கழித்து வெளியேற்றி அலற வைத்த பிள்ளைப் பிராயக் கனவு போல் அந்தக் காட்சி தெரிந்தது.

 இளைஞனாகத் தோற்றமளிக்கும் தலை உடம்பு இல்லாமல் தனியாக இருக்க, பக்கத்தில் ஒரு உடல் தலையின்றிக் கிடந்தது.  

நாம் சந்தித்திருக்கிறோம் என்றது தலை. அதிர்ந்தார் நீலன். இப்படி ஒரு வினோதமான ஜந்து என்னைச் சந்தித்தது என்று நம்பவே முடியவில்லை. என் கனவில் அவனோ அவன் கனவில் நானோ இயங்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் கனவு முடிவாகட்டும்.

கனவெல்லாம் இல்லை என்றது இளைஞனின் தலை. உங்களை நோவித்த பல் பிடுங்கினேனே. சிரித்துக் கொண்டே வழியனுப்பினீர்களே சீனப் பல் மருத்துவன் நான் தான் – அது கூறியது.

உங்கள் இல்லத்தில் சஞ்சீவனிக்குப் பாதுகாப்பு எவ்வளவு என்று தெரிந்து கொள்ள வந்தேன். ஏனென்றால் எனக்கு, என் குழாம் சார்ந்தவர்களுக்கு கடமை நிறைவேற இன்னும் ஆயுள் வேண்டியுள்ளது. பாதுகாப்பு என்றால் என்ன விலை என்று கேட்கும் உங்கள் இல்லம் புகுந்து சஞ்சீவனியைக் களவு செய்ய என் நோக்கம். 

பட்டு வணிகனாகத் தெரு விளையாடியதும் நான் தான். ஊரில் பாதுகாப்பு அறிய வேண்டி அது.

எனில் நீவிர் பரிதாபமாகத் தோற்று என்னை எந்த முயற்சியும் செய்ய வேண்டாம் என்று ஏமாற்றத்தோடு நீங்க வைத்தீரே, இது நன்றா. 

கனவில்லை என்று இந்த அற்பத் தலை சொன்னால் போதுமா? மருத்துவருக்குச் சந்தேகமே இல்லை. அவருடைய மனமும் மூளையும்  புலன்களும் அவரை ஏமாற்ற இன்னும் அந்தக் கனவை மெய்ப்பட்டது போல் நடத்திக் காட்டுகின்றன. இனியும் இங்கே நிற்காமல் என் குகைக்குத் திரும்பலாம். 

நீலன் இப்படி நினைத்தபோது தலை அவரைப் பார்த்துப் புன்சிரித்தது. 

உங்கள் குகை? அரைமணி நேரம் வந்து பார்த்ததும் உங்கள் குகையானதா? நன்று நன்று என்று சிரித்தது.

வெறுந்தலை பேசியதை விடத் தான் மனதில் நினைத்ததை ஒரு வினாடியில் வாங்கித் திருப்பி விடுவது எந்த மாதிரி ஆற்றல் என்று தெரியாமல் அதிசயித்தார் மருத்துவர். 

அது அந்தத் தலையற்ற உடல்? தலையை, இளைஞனை என்று குறிப்பிட்டால் என்ன தவறு? மருத்துவர் நினைக்க அப்படியே செய்யும் என்றான் தலை மட்டுமான இளைஞன். 

அந்தத்  உடல் என்னுடையதுதான். நான் அதைத் தனியாக்கி என் உடலை இந்தத் தலையோடு நிரந்தரமாகப் பொருத்த    முயல்கிறேன். உங்களைச் சந்தித்து வந்தபோது என்னைக்  காத்திருந்து பிடித்தார்கள். யார்? ஊகிக்கலாம் தான்.  

என்னை இங்கே அனுப்பியவர்கள் நான் செய்ததற்கோ செய்ய விட்டுப் போனதற்கோ தண்டனையாக என் தலையை இந்தக் குகைக்குள் உறைபனிப் பாளம் நடுவே நட்டு வைத்திருக்கிறார்கள். இதுவும் நிரந்தரமில்லை. என்னை விடுவித்து விடுவார்கள் உடலும் தலையும் மறுபடி இசையும்- நிரந்தரமாக அல்லது தாற்காலிகமாக. அல்லது என்னை அவர்கள் கொல்லலாம்’’.

அவனுக்கு பேச்சில் அவசரம் தெரிந்தது மட்டுமில்லை, அவனைச் சிரம் அறுத்தவர்கள் மீண்டும் வந்து தலையையும் பகுதியாக்கியோ அல்லது கண்களையோ காதுகளையோ பற்களையோ தனியாக்கி மேலும் தண்டிக்கலாம் என்று தோன்றி வருவதாக மருத்துவரிடம் மனதில் சொன்னான் அவன். 

நீ யார் என்று மருத்துவர் கேட்டபடி தரையில் சமணம் கொட்டி அமர்ந்தார். தலையே தானான இளைஞர் சொல்லியதன் சாறு இது – 

மருத்துவர் நீலரே, நான் குழலன். உங்கள் காலத்துக்குக் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு அப்புறமான காலத்துப் பிறவி. இப்போது தேள்களும் கரப்புகளும் கூட்டாக உலகை ஆள்கிறார்கள்.

முன்னூறு ஆண்டு இப்படிக் கூட்டமைப்பு நிலவி வருகிறது. தேள்களும், கரப்புகளும் உயிரணுச் சங்கதி மாற்றம் வர வைப்பது மூலம் வடிவம் பெரியதாக, பேச, சிந்திக்கக் கூடியவர்களாக மாறி யாதொரு பெருங்குறையுமின்றி ஆண்டுவரும் காலம். 

மனிதர்கள் இந்தக் கூட்டமைப்பின் நம்பிக்கைக்கு உரிய சேவகர்களாக ஊழியம் செய்து வருகிறார்கள். என்றாலும்   ஆயிரம் வருடங்களாக உலகு என்னும் கோளை ஆண்டு வந்து அடுத்திருக்கும் செவ்வாய் கிரகத்தையும் தங்கள் ஆட்சிக்கு உட்படுத்தி அதிகாரம் செய்து அங்கிருந்த தேள், கரப்பு இனங்களை வதைக்க முற்பட்டனர். 

சுருங்கச் சொன்னால், இரு கிரகத்துப் பூச்சியினங்களும் மாற்றுப் பிரபஞ்சங்களில் நட்பு பாராட்டிய அவர்களின் வழித் தோன்றல்கள் போல் உடல் பருத்து பேச்சும், சற்றே அறிவுமாக மாற்றம் பெற, மானுடர்கள் தேள்களால் அடக்கி ஒடுக்கப்பட்டனர். 

மானுடர்கள் அஃறிணையாக, அர் விகுதி தேள்களுக்கு மாற்றப்பட்டது.  இது இப்படி வரும் –  பெருந்தேளரின் தங்குமிடத்தைச் சுற்றித் தண்ணீர் விட்டுக் கசடு நீக்கிய மனுஷன் கோவிலன் பத்து தேளர்களால் கொட்டப்பட்டது. அந்த மனுஷம் மன்னிப்பு கேட்க விடுவிக்கப்பட்டது. 

இந்த முயற்சியின்பாற்பட்ட ஆய்வில், ஆண் தேளை ஆண் மானுடனாக்குவது மட்டும் முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

தேள்களோடு எங்கும் பெரும்பான்மையானவையும், அதிக இடர் எதிர்ப்பு உயிர்ப்பு  கொண்டவையுமான கரப்புகள் சேர்ந்து கூட்டமைப்பு நிறுவின. ஏதோ  ஒரு காலத்தில் மனிதரோடு மனிதர் போரிட்டு பெருநகர் முழுவதும் அழித்தொழிக்க, கரப்புகள் மட்டும் அழியாமல் தாக்குப் பிடித்ததை அவற்றின் மீள்திறனுக்கான நல்ல உதாரணமாகக் காட்டுவது இயல்பு. 

கூட்டமைப்பு இயங்கும்போதே தேளர்களை மனிதராக்க அறிவியல் சார்ந்த முயற்சிகள் ஏற்படுத்தப் பட்டன. அவை அரைகுறையாக நின்று போக, ஒரு விபத்தில் அந்த விபரீதப் பிராணிகள் அறிவுமனையில் இருந்து தப்பி வந்தார்கள். அந்தப் பத்து பேரில் ஒருவன் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் நான். உங்களுக்கு நான் இளைஞனாகத் தோன்றினால் இளைஞன் தான். முதியவன் எனில் முதியவன் தான். 

தேளாகப் பிறந்து மனிதனாக முடியாமல் போனாலும், அந்த மாற்றத்துக்கான முயற்சிகள் காரணமாக எனக்கு சில அதிசயமான ஆற்றல்கள் வந்து சேர்ந்தன. நினைத்த நேரத்தில் நினைத்த உருவெடுப்பது, யந்திரம் இல்லாமல் காலப் பயணம், தலை தனியாக, உடல் தனியாக வெவ்வேறு தலங்களில் சீவித்திருப்பது, தற்காலிகமாக ஒட்டுச் சேர்வது இப்படி. அந்த ஆற்றலை வைத்துத்தான் பொது யுகம் 5200 பிறந்த நான் இந்தப் பொது யுகம் 300 வந்து சேர்ந்தது.

மருத்துவர் விதிர்விதிர்த்துப் போனார். தேளாக இருந்து அரைகுறையாக மனிதனாக மாற்றப்பட்டவனோடு பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை விட எதிர்காலத்திலிருந்து வந்த ஒருவனோடு நேர்கண்டு கொண்டிருக்கிறோம் என்று நினைக்கவே பயமாக இருந்தது. 

நீங்கள் தப்பி வந்தீர்கள் என்று சொன்னீர்களே,  தப்பித்து இங்கே இப்படிச் சுருள் சுருளாக இருட்குகைத் தொகுதியுட் புகுந்தது ஏன்? மருத்துவர் கேட்க நினைத்து வேண்டாம் என விலக்கினார். 

தலையோடு உரையாடும் போது இலக்கணம் மீறாத மொழியில் இடையூட எளிதாக இருக்கும் என்பதைக் கவனித்திருந்தார் அவர். அவனுக்குத் தரவு கொச்சகக் கலிப்பாவாக மறுசொல் யாத்தளிக்கத் தெரியுமா என அறிய அவர் ஆர்வம் மிகுந்திருந்தார். 

இல்லை, வெண்பாவில் இடையூடத்தான் பொதுவான விருப்பம் என்று அவன் தெரிவிக்க, குகை புகுந்த காதைதனை நீர் முதலில் செப்புக எனப் பறைந்தார் மருத்துவர். 

குழலன் வழுக்குப் பாறை நிலம் போனதும், பெதும்பை, தருணி, மங்கை, பேரிளம் மங்கை என்று ஒவ்வொரு வயதுப் பெண்களிலும் அவன் உலா வரக்கண்டு மோகித்ததும் சுருங்கச் சொன்னான். 

பேதை என்னும் பெண் சிறுமிகள் பட்டுத்துணியால் வனைந்த பொம்மை வைத்து விளையாடும் களங்கமில்லா வயதினர் என்பதால் மையுற மாட்டார்கள் என குழலன் சொல்ல உண்மைதான் என்றார் மருத்துவர். நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து வயது இளம்முதுபெண்டிர் மீது அடாத ஆசை கொண்டு நடந்ததை விவரித்தான் குழலன் அடுத்து.

 இருபது வயது மங்கையும் அவள் அன்னை நாற்பதுக்காரியும் சேர்ந்து போனால், மங்கையை ஒதுக்கி, அவளுடைய அம்மையைக் காமுறும் மனமும் உடல் விழைதலும் கொண்டவன் நானென்றான்.

விவசாயிகளும் கருமான், தச்சன், கொத்தன் போன்ற தொழில் முனைவர்களும், புரோகிதர்களும், கவிஞர்களும் உரைநடை எழுதுவோருமாக ஒரே குடியிருப்பில் வசிக்கப் போனது பற்றிச் சொன்னான் அவன். 

 மூன்று பிள்ளை பெற்ற நாற்பத்துரெண்டுக்காரி மேல் மையல் கொண்டு அவள் பின் வாடை பிடித்து ஓடிய கதையும்   சுருங்கச் சொன்னான்.  ஊரார் அடித்து முழுக்க தேளனாக மாற்றுவதற்கு முன் தப்பி ஓடியதும் சொன்னான். 

ஓடினது தான் தெரியும், இப்படி இருட்குகைக்குள் தலையைத் துண்டித்துப் பனிப்பாளத்தில் புதைத்து அவனை நிறுத்திப் போனது யாரென்று அவனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. யாரோ தண்டித்திருக்கிறார்கள்.

குகை இருண்டு வந்தது.  மருத்துவர் பின்னால்   கட்டெறும்பை விடச் சற்றே பெரிய செந்தேள்கள் சிறு படையாக ஊர்ந்து வந்ததை மருத்துவர் பார்த்தார். குழலன் என்ற அந்தத் தலையின் மேல் செந்தேள்கள் ஊர்வதை அவரது போதம் கெடுவதற்கு முன் கண்டார்.

அவரது தலை சுற்றி மயக்கமடைந்து நிலம் சிரம் பட விழுந்தார்.

தொடரும்

Series Navigationபுத்தகக் கொள்ளையும்,  பாலஸ்தீனக்குழந்தைகளும்வீட்டுச் சிறை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *