பாவண்ணனின்  நயனக்கொள்ளை

This entry is part 3 of 14 in the series 28 மே 2023

எஸ்ஸார்சி 

பாவண்ணனின் ’நயனக்கொள்ளை’  சிறுகதைதொகுப்பு சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  தொகுப்பில் ஒன்பது சிறுகதைள். பாவண்ணனின் சிறுகதைகள் எப்போதும் ஒரு குறு நாவலுக்கு அருகில் போய் நிற்கும். பாவண்ணன் சிறுகதை எழுதுபாணி அது. பின் அட்டையில் பாவண்ணனின் படம்  புன் சிரிப்போடு. அவரின் சிறுகதை குறித்து பதிப்பகத்தார் தரும் சில செய்திகள்.’கைவிடப்பட்ட எளிய மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் இணைக்கப்பட்டவர்களே. அந்த இணைப்பின் கண்ணிகளைத்தேடித்தேடி காட்சிப்படுத்துவதில் பாவண்ணனின் சிறுகதைகள் முன்னிலைபெறுகின்றன.’

‘கடுமையான துயரங்கள் மிகுந்த சூழல்களிலும்கூட ஒரு துளி நம்பிக்கைக்கும் வெளிச்சத்துக்கும் இடமிருக்கும் தருணத்தைப் பாவண்ணனின் சிறுகதைகள் உணர்த்தியபடியே இருக்கின்றன’

மிகத்துல்லியமான அளவீடு என்று இதனைக்கூறமுடியும். பாவண்ணன் சுபாவமாய் அப்படிப்பட்ட மனிதர் என்பதனை நெருங்கிப்பழகியவர்கள் தெரிந்திருப்பார்கள்.  எளிய மனிதர்களின் மீது அபார நம்பிக்கையுள்ள படைப்பாளி. பழசை மறவாத எழுத்தாளர் என்றால் பாவண்ணனைத்தான் முதலில் குறிப்பிடவேண்டும். நல்லமனிதராயும் நல்ல எழுத்தாளராயும் அமைவது இறைவன் கொடுத்தவரம். பாவண்ணன் அப்படித்தான்.  கவிஞர்பழமலய் சொல்லுவார்’ஈரநெஞ்சுக்காரர் பாவண்ணன்’ என்று.  மெய்தான்.

நயனக்கொள்ளை புத்தகத்தின் அட்டைப்படம் மிகப்பொருத்தமாக தேர்வாகியுள்ளது. அனேக தருணங்களில் அட்டைப்படங்கள் சரியாக அமையாது போவதுண்டு.’அடடா’ இன்னும் சிறப்பாக அட்டைப்படம் வந்திருக்கலாமே என்று வாசகர்கள் நாம் யோசிப்பதுண்டு. ‘நயனக்கொள்ளை’ நூலிற்கு அட்டைப்படம் தேர்ந்த பதிப்பாளரைப்பாராட்டியாகவேண்டும்.

இத்தொகுப்பை ‘ஊட்டிமணி ‘ என்கிற நிர்மால்யாவுக்கு பாவண்ணன் சமர்ப்பணம் செய்துள்ளார். மலையாளப்படைப்பளர்களை தமிழுக்கு அறிமுகம் செய்துவைக்கும் மொழிபெயர்ப்புப்பணியில் ஈடுபட்டுவருபவர் ஊட்டிமணி. அவரின் தமிழாக்கத்தை ஆவலோடு படித்து மகிழும் பாவண்ணன் இப்புத்தகத்தை அவருக்குச் சமர்ப்பித்து இருப்பது சாலப்பொருத்தமே.

திருவாசகத்தில் திளைக்கும் சந்தியாநடராஜன் ‘நயனக்கொள்ளை’ என்கிற மாணிக்கவாசகப்பெருமானின் சொல்லாடலைப் பாவண்ணனிடம்  நினைவுபடுத்தி  ஒரு கதை எழுதுங்களேன் என்று சொல்ல அதுவே ஒரு கருவாகிக்  கதையாகி  இந்த நூலின் பெயருமாகி நம்முன்னே நிற்கிறது.

ஆக முதற்கதை’நயனக்கொள்ளை’. இதனில் இரு  நெருங்கிய நண்பர்கள். அவர்களில் ஒருவருக்குப்பையன். அடுத்தவருக்குப்பெண். இரு குழந்தைகளும் ஒரு சாலை மாணாக்கர்கள். எது படித்தாலும் இருவரும் சேர்ந்தே படிக்கிறார்கள் . திருவாசக வகுப்புக்குக்கூட  ஒன்றாகச்செல்கிறார்கள் இக்கூட்டு கல்லூரி வரை தொடர்கிறது. பையனுக்குத் தாய் இல்லை. அப்பாவே  தாயும் தந்தையும்.  அந்த அப்பா  நோய்வாய்ப்படுகிறார்.  அதிக நடமாட்டம் என்பதிலை. மகன்தான் தந்தையை கூட இருந்து கவனித்துக்கொள்கிறார்.

 பெண் குழந்தை வளர்ந்து படித்து லண்டன் செல்கிறாள்.  கேம்பிரிட்ஜில் மேல் படிப்பதற்குச்சென்றவள் அங்கேயே தங்கி விடுகிறாள்.  வேறு தகவல்கள் வருவதில்லை.

நோய்வாய்ப்பட்டு முடியாமல் இருக்கும் பெரியவரை அவர் நண்பர் அடிக்கடி வந்து வந்து பார்க்கிறார். இருவரும் திருவாசகப்பிரியர்கள்.  பரஸ்பரம் திருவாசகம் வியாக்யானம் செய்துகொள்வார்கள். லண்டன் மகள் என்ன படித்தாள் எங்கு வேலைக்குப்போனாள் ,கல்யாணம்ஏதும்  ஆனதா எதுவும் அவள் தன்தந்தைக்குத் தெரிவிக்கவில்லை. ஏனோ அவள் சொல்லவில்லையே.   அவள் தந்தைக்கு அதற்கான கன வருத்தமுண்டு.

 லண்டன் பெண் ஒரு நாள் தாயகம் வருகிறாள். இச்சேதியை பெரியவர்கள் இருவரும் பேசிக்கொள்கிறார்கள்.  ஆறு வருஷங்களாக   அவளோ இன்னும் அவன் இனிய  நினைவுகளில்.  அவர்கள் பேசுவதை அந்தப்பையனும் கேட்டுக்கொள்கிறான். அவளோடு பழகிப்பேசிய அந்த நாள் ஞாபகம்  அவன் நெஞ்சில் வந்து வந்து போகிறது. அந்தப்பெண் நேராகத்தன் தந்தைவீட்டுக்குச்செல்லாமல் காரில்  அவன் வீடு வருகிறாள்.  அவளின் கால் ஒன்று  இறங்க ஏற மறுக்கிறது. அவன் ஒத்தாசையோடு காரிலிருந்து  இறங்கி நடக்கிறாள். கண் ஒன்று அசையாமல் செயற்கையாய் இருக்கிறது. விபத்தில் தான் உயிர் பிழைத்த அதிசயத்தைச்சொல்கிறாள். அவன் தந்தை படுத்திருக்கும் இடம் அருகே வந்து   அவரிடம் எல்லாவற்றையும் விசாரிக்கிறாள். திருவாசகம்  இன்னும் அருகில் இருப்பதைக்கவனிக்கிறாள்.

’கொள்ளைன்னு’ ஒரு பாட்டுல வருமே நினைவு இருக்கிறதா என்கிறாள். அவனோ தெரியாது என்கிறான். அவனின் தந்தை  அது ‘நயனக்கொள்ளை’ என்று தொடங்கி அந்த போற்றித் திருஅகவல் முழுவதும் சொல்கிறார். நாமும் அறிய அது நலம் பயக்கலாம்தான்.

‘ஒருங்கிய சாயல்

நெருங்கி உள் மதர்த்து

கச்சு அற நிமிர்ந்து கதிர்த்துமுன்

பணைத்து

எய்த்து இடை வருந்த எழுந்து புடைபரந்து

ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்

கூர்த்த நயனக்கொள்ளையில் பிழைத்தும்

கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்

செல்வம் என்னுமல்லலில் பிழைத்தும்

நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும்

புல்வரம்பு ஆகிய பலதுறை பிழைத்தும்’

மாணிக்கவாசகர்  வரிசையாய்ச் சொல்லிப்போவார். நம்முடைய  சாண்டில்யன் உரைநடையில் சொல்லுவதை மணிவாசகர் தெய்வப் பாட்டில் சொல்லியிருக்கிறார். இருவர் நோக்கமும் வேறு வேறு அறிவோம்.

எங்கிருந்து  ஓர் அரிய விஷயத்தை எடுத்து அதை யாரிடம்  கொடுக்கவேண்டுமோ கொடுத்து  ’ஒரு கதையாகத் தா நீ’  என்று சொல்லிய அற்புத மனிதருக்கு பாராட்டு சொல்லுவோம்.  கதையை  அழகு ஓவியமாக்கிக்கொடுத்திருக்கிறார். பாவண்ணன்  இவண்  படைப்பால் வென்று விட்டார்.

அடுத்து எனக்குப்பிடித்தகதை’ கங்கைக்கரைத்தோட்டம்’. இரு சிறுவர்களை வைத்துப் பாவண்ணன் புனைந்தது. கீரைவளர்த்து அதனைக் கட்டுகளாக்கி  தெரு வியாபாரத்துக்கு  தன் பையன்கள் மூலமாய் அனுப்பும் ஒரு  தாய்.  இருவரும் ஒரு பெரிய மனிதரின் வீட்டில் கீரை விற்கிறார்கள். அங்கு வீணை ஒலி கேட்கிறது. அதனில் இருவரும்  சொக்கிப்போகிறார்கள். அங்கு ஒரு அக்கா வீணை கையில் இருக்க’ கங்கைக்கரைத்தோட்டம்’ என்னும் பாடலைப்படுகிறாள். கீரை விற்றக் காசை எண்ணிக்கூட பார்க்காமல் அந்தப்பாட்டையே இருவரும் கேட்கிறார்கள். பாவண்ணனின் சொல்லாட்சியைப்பார்ப்போம்.

‘சீராகத் தரைதொடும் மழைத்தாரைகளென இசையும் பாடலும் பொழிந்தன.நிறைந்து வழிந்தோடும் நீரில் மிதந்து சுழன்றபடி செல்லும் இலைகளென எங்கள் மனங்கள் மிதந்து சென்றன.கைவீசி தாவி நீந்துவதுபோல அலைந்தன. வட்டமிட்டுச்சுருண்ட சுழல்களால் எடுத்துச்செல்லப்பட்டு ஆழத்தை நோக்கி இறங்கின’

மனங்களின் ரீங்காரம் பற்றி  கதாசிரியர்  இப்படிச்சொல்கிறார். அண்ணனும் தம்பியும் வீணை வீணை என்று பித்தாய்  அலைகிறார்கள். அதன் விலை அதன் மதிப்பு அறியாத இளம்பிஞ்சுகள்.  விளையாட்டாய் எதை எதையோ வீணை போல் செய்து  அவைகளை மீட்டி பார்த்து ஏமாறுகிறார்கள். அவர்களின் அம்மா ’கெடக்கறதுலாம் கெடக்கட்டும் மொதல்ல  கெழவன தூக்கி மணையில வைன்னு சொல்றமாதிரி இருக்குதுடா உங்கக்கதை என்று திட்டுகிறாள். அவர்களின் தந்தையோ ‘ செருப்பு பிஞ்சிடும்’  என்று விரட்டுகிறார்.’ பிள்ளை வளர்த்த லட்சணம் இதுவா’ எனத்தாயைப்பேசுகிறார் அப்பா.

ஒரு உறவுக்காரத்திருமணத்துக்குப்போன அம்மா வீணை போன்ற ஒரு கருவியை வாங்கி வந்தாள். அது வீணை இல்லை. வீணை போன்ற ஒன்றை வைத்து இந்தச்சிறுவர்கள் மல்லுக்கட்டிப்பார்க்கிறார்கள். இந்த ஒன்றை வாங்கிய  அந்தத்தாய் கணவனிடம் திட்டு வாங்குகிறாள்.

தாய் ஒரு சாவு என்று சொல்லி  அண்டையூர் செல்கிறாள். அந்த நேரம் பார்த்து அவர்களின் அத்தை வருகிறாள். அவளுக்குப்பசி. அவள் கணவனில்லாதவள். குடிகாரக்கணவன் குடித்தே இறந்துபோனான்.   உள்ளூரில் பன்னிரெண்டு நாள்  தொடர்ந்து கூத்துப்பார்க்கப்போன அத்தை  கூத்தாடி ஒருவனோடு ஓடிப்போகிறாள். அங்கேயும் மூத்த மனைவி அத்தையைத்துறத்த   அத்தை ஊருக்கே திரும்பி வருகிறாள். சிறுவர்களின் அப்பாதான் தன் சகோதரிக்கு ஒரு கூரைவீட்டை கிராமத்தில்   அதுவும் கோவில் மண்ணில் கட்டிக்கொடுத்துப்  பார்த்துக்கொண்டு இருக்கிறார். அத்தை வீட்டில் சோறு இல்லை.  உடம்பு முடியாதவள் ஆகிப்போனாள் அந்த அத்தை. தான் சேர்த்துவைத்த  சிறுவாட்டுச் சில்லறைக்காசில்  அவித்த கிழங்கு வாங்கி வந்து அத்தைக்குத்தருகிறான் சின்னவன்.கிழங்கத்தின்ற அத்தை ’போன உசிரை புடிச்சி நிறுத்திட்டடா மருமவனே’ என்று மகிழ்கிறாள்.

அந்த வீணைக்கருவி போன்ற ஒன்றை  அவர்கள் கையிலிருந்து வாங்கிய அத்தை  வாசிக்க ஆரம்பித்தாள். தம்பியைப்பாடச்சொன்னாள். அவன் பாடினான். அத்தை அதனை வீணையில் வாசித்துக்காட்டினாள். இசையைக்கேட்டனர் சகோதரர்கள். ’கங்கைகரைத்தோட்டம்’ பாடல்தான். படைப்பாளி பாவண்ணன் சிறுவர்கள் சொல்வதாய்ச் சொல்கிறார்,’  எங்கள் காதுகளையே நம்பமுடியவில்லை. எங்கள் உடல் புல்லரித்தது. நானும் தம்பியும் கைகளைத்தட்டியபடி எகிறி எகிறிக்குதித்தோம்’

தம்பி அத்தையைக்கேட்கிறான் இதை எல்லாம் எப்படி கற்றுக்கொண்டீர்கள் என்று. அத்தை சொல்கிறாள்’ அந்தக் கூத்தாடி கமுனாட்டியோட சுத்துனதுல இத கத்துக்கனதுதான் மிச்சம்’ என்று.

குழந்தைகள் இருவர் கைகளையும் ஒரு சேரப்பற்றி தன் நெஞ்சோடு ஒரு கணம் அழுத்திக்கொண்ட அத்தை’வரட்டுமா’ என்று படலைத்திறந்துகொண்டு வெளியே போகிறார். அத்தை  வாசகன்  கண்களில் நீர் நிறைக்கக்காரணியாகிறாள். நம் சொந்த பந்தத்தில் நட்புகளில் எத்தனை  அத்தைமார்கள் குடியால் வாழ்விழந்து கைம்பெண்களாகி வாழ்வைத்தொலைத்துவிட்டு சகோதரர்களோடு வாழ்ந்து மறைகின்றனர் என்பது நம் நெஞ்சைச்சுடுகிறது.  அந்தச்சகோதரர்களின்  உள்ளக்குமுறல்களை  யார் அறிவார்.  அவை மெய்யாகவே தாரத்தோடு பகிரமுடியாத  துயரசங்கிலிகள்.

 சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் அதை காசாக்கிப்பார்ப்பவர்களுக்கும்  மன்னிப்பு என்றுமே  கிடையாதுதான். இந்த ப்படைப்பில் அத்தை எனும் ஒரு சகோதரியை உயிர்ப்போடு உலவவிட்ட பாவண்ணன் வாசகர்களின் வணக்கத்திற்குறியவராகிறார். நிறைவாய்ப் பாராட்டுவோம்.

வள்ளல் என்னும் பெயரில் ஒருகதை.  வள்ளல் என்பது பாரிவள்ளலையோ வடலூர் ராமலிங்க வள்ளலையோ குறிக்காது. அது  எம் ஜி ஆர் ஐ மட்டுமே குறிக்கும். எம்ஜிஆரை கண்ணால் பார்த்துவிடவேண்டும் என்பதற்காக  கட்டை வண்டி கட்டிக்கொண்டு வந்து விடியவிடிய  ஆற்று மணலில் விழித்துக்கொண்டு படுத்துக்கிடந்தவர்கள் ஏராளமுண்டு.  எம் ஜி ஆர் குடித்த சோடா பாக்கியை அண்டா தண்ணீரில் கொட்டி ஆளுக்கொரு வாய் குடித்துவிட்டுப்போனவர்கள் ஆயிரம் ஆயிரம்  உண்டு.  என் கிராமத்தில் எம் ஜி ஆர்  பேர் சொன்னால் அழுதபிள்ளை வாய் மூடும் என்பார்கள். இந்த வள்ளல் கதையில் தங்கமணியும் பன்னீரும் அப்படித்தான். படப்பிடிப்புக்கு வரும் எம் ஜிஆரைப்பார்க்கத்தவம் கிடக்கின்றனர். வேலமரத்தடியில் பலகாரக்கூடை வைத்து விற்கும் மீனாட்சி ஆயா நடிகர் பாலையாவைப்பார்த்தவள். அவள் பாலையாவைப்பார்த்ததாகக்  கதைவிடுவதாகச்சொல்லி  பையன்கள் நம்ப மறுக்கின்றனர். ‘ அந்த காலத்துல நடராஜ மொதலியாரு கொட்டாய கட்டி இந்த ஊருக்கு சினிமாவ கொண்டாந்த  நாள்லியே சினிமா பாத்தவ நானு தெரிமா?’ என்று சவால் விடுகிறாள் அந்த மீனாட்சி ஆயா. ரயில்வேகேட்டின் சங்கிலியை எடுத்து படப்பிடிக்கு வந்த கார்களை வழிகாட்டி அனுப்பிய அந்த ஆயாவுக்கு பாலையா அன்று ரூபாய் நூறு அளித்திருக்கிறார்.

‘எம்ஜியாரு பெரிய கொடைவள்ளல் ஆயா. ஏழைங்களுக்கெல்லாம் வாரி வாரி குடுக்கறதுல மன்னன். அவரமாரி அள்ளிக்குடுக்கற ஆளு இந்த ஒலகத்துலயே இல்ல’ என்கிறான் தங்கமணி.

சிறுநீர்கழிப்பதற்காகச்சென்ற தங்கமணி மட்டும்  திரும்பி வருகிறான்.  அப்போது மூன்று கார்கள் வரிசையாக  வந்தன. ரயில்வே கேட் சங்கிலி போட்டு மூடிருந்தது. தங்கமணி இணைப்புச்சங்கிலியை எடுத்து கார்களுக்கு வழி ஏற்படுத்துகிறான். ஒரு காரின் பின் இருக்கையில் எம் ஜி ஆர் அமர்ந்திருக்கிறார். தினம் தினமும் தன் வீட்டுக்காலண்டரில் அவன் பார்க்கும் செக்கச்செவேலெனத் தாமரை இதழ் போன்ற முகம். எம் ஜி ஆர் மன்றத்தின் வாசலைப்பெருக்கி குளத்திலிருந்து பத்து பதினைந்து குடங்கள் தண்ணீர் எடுத்துச்சென்று தெளித்துச்சுத்தமாக  இடத்தைச் வைத்திருந்ததற்காகத் தங்கமணிக்கு எம் ஜி ஆர் படம் போட்ட  காலண்டர் ஊரார் வழங்கியிருந்தார்கள்.  அவன் பெயரையும் படிக்கும் வகுப்பையும் கேட்ட எம்ஜிஆர் தங்கமணிக்கு ஒரு பையை  இந்தா எனக் கொடுத்தார். பை நிறைய ஆப்பிள் பழங்கள்.  ஆப்பிள் பழங்களை அங்கிருந்த  எல்லோரும் பங்கிட்டுக்கொண்டார்கள்.

‘ நீ  ஆப்பிள் பையை வாங்கிக்கின. நாங்களும் பார்த்திருந்தா எங்களுக்கும் எதனாச்சிம் குடுத்திருப்பாரு, இல்ல’  சொல்லிய ரங்கசாமியின் முகத்தில் ஏக்கம் தெரிந்தது என்கிறார் பாவண்ணன். அன்றைய சமூகத்தை  அப்படியே படம் பிடித்துக்காட்டியிருக்கிறார் பாவண்ணன்.

ஒரு கூத்துக்கலைஞனின் கதை ‘கலைமாமணி’. தமுக்கு அடிப்பவன்  எழுப்பும் ஒலி அவன்  சொல்லும் அறிவிப்பு என்பதோடு தொடங்குகிறது கதை. திரெளபதி அம்மன் கோவில் திடலில் இரவு பத்துமணிக்கு கூத்து.

’அக்கம் பக்கத்து பதினெட்டு பாளையத்திலும் பேர் பெற்ற அமுத சிகாமணி, கூத்துச்சக்கரவர்த்தி சிருவந்தாடு ராமலிங்க வாத்தியாருடைய குழு அபிமன்யு வதம் என்கிற கூத்து நிகழ்ச்சியை நடத்த இருக்காங்க. தெரு ஜனங்க எல்லோரும் குடும்பத்தோடு வந்து கண்டு களிக்கணும்’ தமுக்குத்தாத்தா அறிவிக்கிறார். இந்த ஆரிவிப்பை  சகோதரர்கள் சிறுவர்கள் கேட்டு மகிழ்ந்துபோகிறார்கள். கூத்துக் கலைஞர் ராமலிங்கத்திற்கு எதாவது ஒரு பெரிய கெளரவம் செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார் பலராமன்.  அந்தச் சிறுவர்களின் தந்தை.  அந்தக்கூத்துக்கலைஞர் சிறுந்தாடு ராமலிங்கத்துக்கு  தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைக்கவேண்டும் என ஆசைப்படுகிறார் பலராமன்.  அவர் குறித்துக்கட்டுரை எழுதுகிறார். பத்திரிகைக்காரர்களை அழைத்துப் பேட்டி கொடுக்கிறார். என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார். சட்டமன்ற உறுப்பினரை எல்லாம் பார்த்து வேண்டுகிறார்.  பலராமனின் மனவி செல்விக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. மிக யதார்த்தமாக அவர்  கணவருக்குப்பதில் சொல்கிறாள்.

‘ இங்க பாருங்க.கோழி முட்டைங்கள அவையத்துக்கு வைக்கிறமாதிரிதான் இந்த விருதுக்கு ஆள எடுக்கிற விவகாரம். ஒன்னு ரெண்டுதான் குஞ்சு பொரிக்கும். மத்ததுலாம் கூழைமுட்டைதான். மொதல்ல அதெ புரிஞ்சிக்குங்க’

ஈசன் பரமசிவன் கூட  கைலாயத்தில் அந்த பராசக்தியிடம் பாட்டு வாங்குபவன்தான்.  கதையில் வரும் பலராமன் ஒன்றும் அதிசயமில்லை. பாவண்ணனின்  ஊடுருவும் பார்வையின் வெளிப்பாடுதானே இவை அத்தனையும்.  ஆண்டுகள் உருண்டன. கலைமாமணி விருது சிறுவந்தாடு கலைஞனுக்கு வரவில்லை.

 அவரே சொல்கிறார்.’’இங்க பாரு பலராமா ஒரு கூத்தாடிக்கு அவனுடைய ஆட்டத்த பாத்து ரசிச்சி கைதட்டி பேசக்கூடிய ரசிகர்களுடைய பாராட்டுதான் ரொம்ப பெரிய விருது. அரசாங்க விருதுலாம்  ஒரு கணக்கே இல்ல’

பிறகு அந்த சிறுவந்தாடு ராமலிங்கருக்கு கலைமாமணி என அறிவிப்பு வருகிறது.  பலராமன் நெகிழ்ந்து போகிறார். மறுநாள் அவர் சென்னையில் இருக்கவேண்டும் என்கிறார்கள்.  அவரோ கூத்து நடத்தறேன்னு கை நீட்டி பணம்வாங்கிட்டேன். அது முடிக்காம நா எங்கயும் போமாட்டேன். இது கலை இது தான்  எனக்குப்பெரியது என சென்னைப்போக மறுக்கிறார். ‘ என் சார்பாக நீயே  சென்னை சென்று விருதை வாங்கி வரலாம்’ என்கிறார் ராமலிங்கர். பலராமன் அதனை ஏற்காது நகர்ந்துவிடுகிறார்.

மெச்சத்தக்க  விஷயம்  உண்டெனில்  அது ஒரு கலைஞன் கலையை,  அதனை வளர்க்கும்  மக்களை நேசிப்பதே. இந்தக்கதை வாசகனுக்குச்  சொல்லும் செய்தியும் அதுவே.

’ பங்கு’ என்ற தலைப்பில் ஒரு கதை. ‘ அப்பா அம்மா அண்னனுங்க எல்லாரையுமே  அவ கால்தூசுக்கு சமம்னு நெனச்சி உதறிட்டு போனா. மாப்பிள்ளைய தானா தேடிகிட்டு வீட்டவிட்டு வீராப்பா போனவ பின்னால இப்ப நாம தேடிகிட்டு போவறம். கலிகாலம்டா சாமி’ என்கிறார் கதையில் வரும் ரேவதி. தனலட்சுமியிடம்  அதாவது காதல் மணம் செய்துகொண்ட சகோதரியிடம் தந்தை  பெயரிலிருக்கும் சொத்தை விற்க கையெழுத்துக்கேட்கச்செல்கிறார்கள். எல்லோரும்  அந்தக்குடும்பத்து உறுப்பினர்கள். தந்தை இறந்த செய்தியை ஒரு பேருந்துக்குபின்னர் ஒட்டியிருந்த அஞ்சலி போஸ்டரைப்பார்த்து அறிந்துக் கதறியவள் தனலட்சுமி. அவளைத்தான் ஒதுக்கி வைத்துவிட்டார்களே. அப்பா பெயரை இரண்டாகப்பிரித்து  தன் இரண்டு குழந்தைகளுக்கும் வைத்திருக்கும் பெண்ணைக் கொடுரமாய்ப்பார்க்கிறது அவள்  பிறந்த குடும்பம். தனலட்சுமியின் கணவன்’அவள் வருவாள் எங்கு கையெழுத்துப்போட வேண்டுமோ அங்கே போடுவாள்: காசு  எதனையும்’ எதிர்பார்ப்பவள்: அவள் இல்லை’ என்கிறார்.

‘பங்குக்கு வந்து நிக்குமோன்னு  நெனச்சி தடுமாறாதிங்க’ என்கிறார் செல்வகுமார்  தனலட்சுமியின் கணவன்

சமூகத்தில் யதார்த்தமாய் நிகழும் சம்பவம். அதனை அழகிய கதையாய் உருவாக்கி அளிக்கிறார் பாவண்ணன்.

புற்று என்னும் பெயரில் ஒரு சிறுகதை.

கணவனை புற்று நோயில் இழந்த அஞ்சலை ஒரு கனவு காண்கிறாள். கனவில் அவளின் மீன் பானை உடைகிறது. மீன்கள் துள்ளிக்குதிக்கின்றன. அஞ்சலை அவைகளை பிடித்து பிடித்து அருகில் இருந்த கால்வாயில் வீசினாள்.  அது ஒரு கெட்ட கனவென அச்சப்படுகிறாள். அவள் தன் குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகாமல் இருக்கவேண்டுமே என புலம்புகிறாள். ‘வர ஆடி மாசம்  மொத வெள்ளியில கூழு ஊத்தி ஒரு படையலை வச்சிடு’ என்று பார்வதி யோசனை சொல்கிறாள். மாரியாத்தாள்தான் காக்கவேண்டும் தன் குழந்தைகளை என்று அஞ்சலை பிரார்த்திக்கிறாள்.

அஞ்சலை தன் கணவன் முத்துசாமியை  இழந்த கதையை ஃப்ளாஷ் பேக் யுத்தியில் சொல்கிறார் பாவண்ணன். அஞ்சலையின் அண்ணன் பொன்னையன்  சகோதரிக்குப் பண ஒத்தாசை செய்கிறான் விழுப்புரத்தில் ஒரு பாயிடம் நல்ல வேலைக்குசேர்த்துவிடுகிறான். நூர்றுக்கணக்கில் துணிகளை தைத்து பாயிடம் கொடுத்துக் கூலி வாங்கி குடும்பம் நடக்கிறது. வயிற்று வலி என்று ஆரம்பித்து படுத்த முத்துசாமியை ஜிப்மர் மருத்துவமனைக்குப்போகச்சொல்லி ஆற்றுப்படுத்துகிறான் பொன்னையன். அஞ்சலையின் ஒரு பிள்ளையை தன் பிசினஸ் ஒத்தாசைக்கு அழைத்துச்செல்கிறான் பொன்னையன். முத்துசாமி புற்று நோயால் இறந்துபோகிறான். பொன்னையனின் மனைவி சும்மா இல்லை அவனைத் தூண்டிவிடுகிறாள். அஞ்சலைக்குச்சொந்தமான துண்டு நிலத்தையும் எழுதி வாங்கிக்கொள்கிறான் அண்ணன் பொன்னையன். அஞ்சலை மற்ற இரண்டு குழந்தைகளைப்படிக்கவைத்துக்கொண்டு காலம் தள்ளுகிறாள். நேசமணி தன் மாமன் வீட்டில் மாடாய் உழைத்துத் தம்பிகளைப்படிக்கவைக்க அம்மாவுக்கு  ஒத்தாசை செய்கிறான்.

எளியகுடும்பத்தில் வாக்குப்பட்டு வந்த  ஒரு பெண் கணவனை இழந்து ஒரு தையல் வேலையை ஒப்புக்கொண்டு தன் இரு குழந்தைகளைப்படிக்கவைப்பதில் காட்டும் அக்கறையும் ஒரு பையனை தன் அண்ணன் வீட்டு பிசினஸ் ஒத்தாசைக்கு  மனமே இல்லாமல் அனுப்பி வைத்துவிட்டு அவனுக்காக  ஏங்கித்தவிப்பதும்  என்பதை  தத்ரூபமாக கொண்டுவந்து நிறுத்துகிறார் பாவண்ணன்.

சிவப்புக்கல் மோதிரம் என்னும் கதை இரு அன்பு உள்ளங்கள் உடைந்துபோன சோகம் பேசுகிறது.  பெண்ணின் பையனின் பெற்றோர் ஒரு கட்சியில் இருக்கிறார்கள். திருமணம் நிச்சயமாகிறது. கட்சி உடந்துபோகிறது. இருவரும் பகைத்து நிற்கின்றனர். திருமணம் நின்று போகிறது. அவன் அளித்த சிவப்புக்கல் மோதிரம் அவள் கையில். அவன் பிறகு மணமே செய்துகொள்ளவில்லை. அவளோ வேறு ஒருவனை மணந்து வாழ்க்கையை நிறைவில்லாமல் வாழ்ந்து பின்  சட்டென முடிந்துபோகிறாள்.  மனித அன்பையும்  மன ஆழத்தையும் தரிசிக்கத்தெரியாத கட்சிப்பிரியங்களை என்ன சொல்வது நாம்?

‘மானம் கெட்ட ஒரு கட்சிக்காக நம்ம வாழ்க்கையை நாம ஏன் அழிச்சிக்கணும்?’   எண்ணிய மண வாழ்வு கொள்ளை போனதால் ஒருபெண்ணின் குமுறல் இப்படிப் பீறிட்டுவருகிறது. கட்சியின் விலாசம் எது?  நாம் தெரிந்ததுதான். பாவண்ணன் இத்தனைக்கோபமாய் எழுதி நான் பார்த்ததில்லை.

‘கட்சி, கூட்டம் கடலைப்புண்ணாக்கு’  பாருங்கள்!   எப்படி எல்லாம் அறச்சீற்றம்  கொப்பளிக்கிறது.

’குழந்தை’ என்னும் கதை  தாயும் தந்தையும் பெற்றகுழந்தைகளிடம் காட்டவேண்டிய  பரிவையும் பொறுப்பையும் பேசுகிறது.  பெண்ணுக்குப்பிள்ளையைக் கொடுத்துவிட்டு ஓடிப்போனவன் பொறுப்பில்லாக்கணவன், தாயோ பெற்ற  குழந்தையை கோவில் வாசலில் வைத்துவிட்டுப்போய்விடுகிறாள் அவளுக்கும் ஒரு வாழ்க்கை எப்படியாவது  வேண்டும்தான். அது நியாயமும்கூட.

  கடைசியாய் வெள்ளைக்காரன் என்னும் கதை.  கடலூர் துரைபங்களாவில் வேலைபார்த்த அம்மாவுக்கு வெள்ளைக்காரன் நிறத்தில் ஒரு குழந்தை.  அது பிறந்த கதை கம்ப சூத்திரமா என்ன ? நீங்கள் நினைப்பது மாதிரிதான் அது கிடைத்தது.  துரைமார்கள் சொந்த  நாட்டுக்குப்போனார்கள். ஓரங்கட்டப்பட்ட அம்மாவும் இந்த வெள்ளைக்காரப்பையனும் வீதிக்கு வருகிறார்கள். கூலி வேலை பார்க்கிறார்கள் அம்மா பாம்பு கடித்து  செத்துப்போனாள். அவன் ஒரு பெரிய மனிதரிடம் வண்டி ஓட்டுகிறான். அவனுக்குப்பெயரே வெள்ளைக்காரன். அவன் முதலாளி குடிகாரன் அவனிடம்  குப்பை கொட்டமுடியாத  அந்த வெள்ளைக்காரன் ஜபல்பூர் ரயில் ஏறி வட இந்தியக்காரர் ஒருவரைத் தஞ்சம் அடைந்து வாழ்க்கையைத்தொடர்கிறான். விதிவழி செல்லும் மனித வாழ்க்கையைக்காட்டுகிறார் பாவண்ணன். அதே நேரத்தில் மனித நேயத்திலும் உடல் உழைப்பிலும் மாற்றுக்குறைவதைப் பாவண்ணன் தன் எழுத்துக்களில் சமரசம் செய்துகொள்ளமாட்டார்.

பாவண்ணனின் எழுத்துக்களில் நேர்மையும் கம்பீரமும் விரவியிருப்பதை ’நயனக்கொள்ளை’யில் மீண்டும்  வாசகன் தரிசிக்கலாம்.  இனிய வாழ்த்துக்கள் நட்பே.

—————————————————————

Series Navigationநிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள்
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *