This entry is part 6 of 14 in the series 28 மே 2023

கோவிந்த் பகவான்

ஒருக்களித்து காம்புகள் தெரிய

உறங்கும் இணை இணையாத இளம் வீதி நாயின் கனவினைப்போல்

விரிகிறாய்

துருவேறி செதிலுதிர்க்கும் 

குளியலறை ஜன்னல் கம்பிகளின் மீது படர்ந்த 

அணில்கொடியின் சொரசொரப்பாய் படர்கிறாய்

நான்கு வழிச் சாலையில்

குருதி வழிய துடித்துப் புலம்பும் விபத்தின்

உயிர் நோக்கி விரையும்

அவசர ஊர்தியின் சைரன் ஒலியாய் அலறுகிறாய்

அகன்ற வாயுடைய சமையலறை குண்டானுக்குள்

துண்டு துண்டாய் வெந்து கொதிக்கும் மாமிசத்தின்  வீச்சமாய் வீசுகிறாய் 

போதாது

மூங்கில் கொம்புகளால் வேயப்பட்ட பாடையில் கிடத்தப்பட்டு

வான் நோக்கிய நெற்றியில் அறையப்பட்ட ஒற்றை நாணயமாய்

அப்பிக்கிடக்கிறாய்.

   -கோவிந்த் பகவான்

Series Navigationஉனக்குள் உறங்கும் இரவுஅவனை அடைதல்