குரு அரவிந்தன்.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் அழைப்பின் பெயரில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து ரொறன்ரோவிற்குச் சென்ற வாரம் வருகை தந்திருந்தார். சென்ற சனிக்கிழமை 21-10-2023 கனடா இலக்கியத் தோட்டத்தின் ஏற்பாட்டில், மார்க்கம் நகரசபை மண்டபத்தில் ‘தமிழ் இலக்கியத்தில் அறம்’ என்ற தலைப்பில் அவர் இலக்கிய ஆர்வலர்களுக்கு உரையாற்றினார். கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் எல்லாவற்றையும் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, உரையைக் கேட்கும் ஆர்வத்தில் இலக்கிய ஆர்வலர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது. மார்க்கம் நகரசபைத் தமிழ் அங்கத்தவரான ஜெனிட்டா நாதன் அவர்கள் மலர்ச்செண்டு கொடுத்து எழுத்தாளர் ஜெயமோகனை வரவேற்றார். அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த மருத்துவ கலாநிதி ரகுராமன் அவர்கள் எழுத்தாளர் ஜெயமோகனைச் சபையினருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
எழுத்தாளர் ஜெயமோகன் தனது ஆரம்ப உரையில், தமிழகத்து சிறந்த படைப்பாளிகளை இனம்கண்டு அவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்குக் கனடாவில் விருதுகள் வழங்குவதைப் பாராட்டி, தமிழகம் செய்யத் தவறியதைக் கனடா இலக்கியத் தோட்டம் நடைமுறைப் படுத்துவதாகக் குறிப்பிட்டு, இலக்கியத் தோட்டத்தைப் பாராட்டினார். வெளிநாட்டுப் பயணம் என்று சொல்லி முதன் முதலாகத் தான் கனடா நாட்டுக்குத்தான் பல வருடங்களுக்கு முன் வந்ததாகக் குறிப்பிட்டார்.
ரொறன்ரோவில் உள்ள பதினைத்து வயதுக்குட்பட்ட தமிழ் சிறுமிகளுடன் உரையாடிய போது அவர்களின் கேள்விகள் தன்னை மிகவும் கவர்ந்ததாக உரையின் ஆரம்பத்தில் அவர் குறிப்பிட்டார். தமிழ் இலக்கியம் சார்ந்து அவர்கள் கேட்ட சில கேள்விகள் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகக் குறிப்பிட்ட அவர், உதாரணமாக ஒரு படைப்பை மொழிமாற்றம் செய்யும் போது தமிழ் பண்பாட்டு தனித்தன்மையை முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டுமா அல்லது பண்பாட்டுச் சமகால தன்மையைக் கண்டறிய வேண்டுமா என்பது போன்ற கேள்விகளை அவர்கள் முன்வைத்ததாகக் குறிப்பிட்டார். யாருக்காக மொழி பெயர்க்கிறோம் என்பதையும், அது பிரபலபடைப்பாயின் சமகாலத் தன்மையையும் கண்டறியவேண்டும் என்று அவர்களுக்குச் சொன்னதாக அவர் குறிப்பிட்டார்.
இதைவிட சங்ககாலத்தில் சாதி முறைகள் இருந்தனவா, தமிழ் இலக்கியத்தில் பெண்களை ஏன் உயர்வாகக் கருதவில்லை என்பன போன்ற கேள்விகளையும் அவர்கள் எழுப்பியதாகக் குறிப்பிட்டார். சங்க காலத்தில் சாதிபேதமின்றி, பெண் அடிமைத்தனமின்றி எல்லாமே சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், நாம் வாழும் இந்தக்காலம் அவ்வாறு அமையவில்லை என்றும் ஆதங்கப்பட்டார்.
ஜெயமோகனின் உரையைத் தொடர்ந்து பார்வையாளர்கள் சிலர் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தார்கள். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஜெயமோகன் தெளிவாகவும், சிறப்பாகவும் பதில் அளித்திருந்தார். ஜெயமோகன் குறிப்பிட்டது போல, தமிழ் இலக்கியம் அறிந்த ஒரு ஆரோக்கியமான புதிய தலைமுறை ஒன்று கனடாவில் உருவாக்கப் பட்டிருப்பதையும், கடந்த 40 வருடங்களாக அவர்களை உருவாக்குவதில் நாங்கள் வெற்றி அடைந்திருப்பதிலும் எமக்குப் பெருமையாக இருக்கின்றது.
நிகழ்வு முடிந்ததும் அவருடன் நேரடியாக உரையாட முடிந்தது. அப்போது எனது நூல்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினார். என்னிடம் இருந்த ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ என்ற வெளிநாட்டுக் கதைகள் அடங்கிய எனது புதிய சிறுகதைத் தொகுப்பையும், தமிழகக் கவிஞர் மு. முருகேஸ் அவர்கள் தொகுத்து வெளியிட்ட ‘மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்’ என்ற தொகுப்பையும் கையளித்திருந்தேன். எனது பல சிறுகதைகளைத் தான் வாசித்தாகவும், இந்த நூல்களை வாசித்தபின் தனது கருத்தைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். சென்ற முறை கனடாவிற்கு வந்த போது கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திலும் உரையாற்ற இவரை அழைத்திருந்தோம், அதையேற்றுச் சிறப்பாக உரையாற்றியிருந்தார். நாகர்கேவிலைச் சேர்ந்த எழுத்தாளர் ஜெயமோகன் 2014 ஆம் ஆண்டு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஓர் அமெரிக்கத் தமிழனின் சிந்தனைகள்
- நாவல் தினை அத்தியாயம் முப்பத்தேழு பொ.யு 5000
- தமிழக எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு
- ஊருக்குப் போகவேண்டும்
- வெயிலில் வெளியே