கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ – 2023

author
0 minutes, 2 seconds Read
This entry is part 5 of 8 in the series 5 நவம்பர் 2023

குரு அரவிந்தன்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா சென்ற சனிக்கிழமை 28-10-2023 ரொறன்ரோவில் உள்ள ஸ்காபரோ சிவிக்சென்றர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை 9:30 மணியளவில் விழாவிற்கு வருகை தந்தோருக்குத் தேநீர், சிற்றுண்டி வழங்கப் பெற்றது. 10:00 மணியளவில் நிகழ்வில் கலந்து கொண்ட சில பிரமுகர்களால் மங்கள விளக்கேற்றப் பெற்றதைத் தொடர்ந்து, கனடா பண்ணும், தமிழ்த்தாய் வாழ்த்தும் செல்வி சோலை இராச்குமார், செல்வி சென்னி இராச்குமார் ஆகியோரால் இசைக்கப்பெற்றது. தொடர்ந்து அமைதி வணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து கனடா பழங்குடி மக்களின்  அங்கீகாரம் வாசிக்கப் பெற்றது.

Displaying CTWA-Awards-1-Oct 2023.jpg

எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய துணைத்தலைவருமான எழுத்தாளர் குரு அரவிந்தனின் வரவேற்புரையைத் தொடர்ந்து தேனுஜா திருமாறன் ஆசிரியையின் மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. தொடர்ந்து இணையத்தலைவர் கவிஞர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமையுரை இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து ‘கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் கடந்து வந்த பாதை’ என்ற தலைப்பில் உதயன் பத்திரிகை ஆசிரியரும், துணைச் செயலாளருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் உரை இடம் பெற்றது. அதைத்தொடர்ந்து விருது விழா மலர் வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த நிகழ்வில் வர்த்தகப் பிரமுகர்கள் சிலர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.

புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் தமிழ்மொழியை, முத்தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதில் கடந்த 30 வருடங்களாகச் சிறப்பாகச் செயற்பட்டுவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் தமிழ் இலக்கிய உலகில் மிகவும் மதிப்புமிக்க விருதான ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கிச் சில மூத்த எழுத்தாளர்கள், மற்றும் ஆய்வாளர்களைச் சாதனையாளர்களாக மதிப்பளித்திருந்தது.  இவர்களுடைய சாதனைகள் வெளியுலகிற்குத் தெரியாமல் முடக்கப்பட்டு விடக்கூடாது என்பதால், ஒருவர் வாழும்போதே அவரைக் கௌரவிக்கும் முகமாக அவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ்க்கலாச்சார வளர்ச்சிக்காக ஆற்றிய அரிய சேவைகளைப் பாராட்டி இந்த விருது வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

Displaying CTWA-Award-3-Oct 2023.jpg

கனடாத் தமிழர்கள் பெருந்தொகையாகக் கனடா மண்ணிற்குப் புலம்பெயர்ந்து சுமார் 40 வருடங்களாகின்றன. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் மண்டபங்கள் மூடப்பட்டதால், விருது விழாவைச் சென்ற முறை எம்மால் நடத்த முடியாமல் போய்விட்டது. எனவே இம்முறை அதையும் சேர்த்து எழுத்தாளர் இணையத்தின் சார்பாகப் 10 சாதனையாளர்களுக்கு விருது கொடுத்து மதிப்பளித்தோம். இவர்கள் தாயகத்திலும், புலம்பெயர்ந்த கனடா மண்ணிலும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இதுவரை பல துறைகளிலும் ஆற்றிய பணிக்காக இந்த மதிப்பு மிக்க விருதுகள் வழங்கப் பெற்றன.

Displaying CTWA-Malar-Committee-2023.jpg

இந்த விருது விழாவில் பேராசிரியர் கலாநிதி பாலசுந்தரம் இளையதம்பி, பேராசிரியர் கலாநிதி நாகராஜ ஐயர் சுப்பிரமணியன், முனைவர் பாலா சிவகடாட்சம், முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ், திரு. தங்கராசா சிவபாலு, திரு. சின்னையா சிவநேசன், திரு பால குமாரசாமி (தேவகாந்தன்), சிந்தனைப்பூக்கள் திரு. பத்மநாதன், திரு தாமோதரம்பிள்ளை சண்முகநாதன் (சோக்கல்லோ சண்முகம்)  திரு தெய்வேந்திரன் சண்முகராஜா (வீணைமைந்தன்) ஆகியோரே இம்முறை மதிப்பளிக்கப் பெற்றனர். விருதாளர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டபின் அவர்களின் ஏற்புரைகளும் இடம் பெற்றன.

1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர்களாக திரு. தெ. சண்முகராஜா, அமரர் திரு. திருமாவளவன், கவிஞர் வி. கந்தவனம், திரு சின்னையா சிவநேசன், திரு. ஆர். என். லோகேந்திரலிங்கம், திரு. த. சிவபாலு, அமரர் திரு. சிவநாயகமூர்த்தி, பேராசிரியர் இ. பாலசுந்தரம், திரு. குரு அரவிந்தன் ஆகியோர் இதுவரை இணையத்தின் தலைவர்களாகப் பணியாற்றியதும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்கது.

Displaying CTWA- Malar-Awards-2023.jpg

இணைத்தின் முன்னாள் காப்பாளர் மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி, முன்னாள் காபப்பாளர் அமரர் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம், தற்போதய காப்பாளர் கவிஞர் கந்தவனம், மற்றும் பண்டிதர் அமரர் மா.சே. அலெக்ஸாந்தர், அமரர் புலவர் மொகமட் ஹன்ஸீர் ஆகியோருக்கு எழுத்தாளர் இணையம் ஏற்கனவே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Displaying CTWA- Awards-28Oct 2023.jpg

அரசியல் துறையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் ஒன்ராறியோ போக்குவரத்து இணை அமைச்சர் திரு விஜே தணிகாசலம், மார்க்கம் நகரத்தின் 7 ஆம் வட்டாரப் பிரதிநிதி திருமதி ஜெனிற்றா நாதன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். விருதாளர்கள் பற்றிய அறிமுக உரையை திரு ரவி கனகசபை, திரு குமரகுரு கணபதிப்பிள்ளை, திரு எஸ். ஜெயானந்தசோதி, திருமதி ரஜனி சுதாகரன், திரு அனுரா வென்சிலாஸ், திருமதி விமலாதேவி புஸ்பநாதன், திரு கணபதி ரவீந்திரன் ஆகியோர் ஆற்றினர்.

இவர்களுடன் கனடாவில் பிறந்து வளர்ந்த இளம் தலைமுறையினரான செல்வி ஆரணி ஞானநாயகன், செல்வன் தருண் செல்வம், செல்வி அர்ச்சயா மோகன்குமார் ஆகியோர் அழகு தமிழில் விருதாளர்களுக்கான அறிமுக உரை நிகழ்த்தியதைப் பலரும் பாராட்டியிருந்தனர். இதைத் தொடர்ந்து தன்னார்வத் தொண்டர்களாகப் பணியாற்றியவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப் பெற்றன. எழுத்தாளர் இணையத்தின் செயலாளர் திருமதி கமலவதனா சுந்தா அவர்களின் நன்றி உரையைத் தொடர்ந்து மதிய உணவுடன் விருது வழங்கும் நிகழ்வு சிறப்பாக நிறைவேறியது.

Series Navigationபூமியைச் சுற்றிவரும் நிலவின் சுற்றுப்பாதை நிகழ்வை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின துணைக்கோள்தினை       அத்தியாயம்  முப்பத்தெட்டு     பொ.யு 5000
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *