பயணமா? பாடமா?

This entry is part 2 of 2 in the series 24 டிசம்பர் 2023

நாளை பாலி பயணத்திற்கு கயல்விழி  தயாராகிக் கொண்டிருக்கிறார். மகள் கலையரசி வெற்றிகரமாக உயர்நிலை   3ஐத் தொடர விருக்கிறார்.  மகன் காவியன் இரண்டு மாதங்களில்   தேசிய   சேவையில் சேரவேண்டும். விடுமுறை மாதம். டிசம்பர். இரண்டு மாதமாகவே கலை ‘பாலி, பாலி’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். கயல்விழி இந்தப் பயணத்தை  ஏற்பாடு செய்வது முக்கியமாக கலையரசிக்காகத்தான். 

கயல்விழிக்கு முத்தையா என்பவர்தான் பயணமுகவர். புள்ளி வைத்தால் போதும். கோலம் அவர் பொறுப்பு. எங்கே   தங்குவது? போக்குவரத்து ஏற்பாடுகள்  எப்படி? வழிகாட்டி யார்?  எல்லாம் வந்து   அவரிடம் வரிசையில் நிற்கும். எடுத்துக்  கொள்வதுதான் அவர்  வேலை.  எல்லாரும் தயார். பணிப்பெண்ணை ஹவ்காங்கில் இருக்கும் தங்கை கல்யாணி வீட்டில் விட்டுவிட்டார். தொட்டிமீனுக்கு சாப்பாடு போடும்  வேலையை சிராங்கூனில்  இருக்கும்   அப்பா   கதிரவனிடம்   ஒப்படைத்துவிட்டார். 

நாளைக்காலை 7மணிக்கு விமானம். 4 மணிக்கு ‘க்ராப்’ அழைக்கப்பட்டது.  க்ராப்     வந்துசேர்ந்துவிட்டதை தொலைபேசி  சொன்னது. மூவரும் இறங்கினார்கள்.  இதோ விமான நிலையத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள்.  

விமான நிலையம். அவர்கள் பயணிக்கும் விமானத்திற்கான பிரிவு. கூட்டம் அதிகமில்லை. ஒரு சின்ன வரிசையில்   இணைந்துகொண்டார்   கயல்.  அவர் முறை வந்தது. பரிசோதிக்கும் அந்த   இளம்பெண்ணிடம்  கடவுச்சீட்டுகள் கைமாறின. பயணச்சீட்டின் விபரங்களை பெல்ஜியம் கண்ணாடி போல் பளீரென்று   கணினித்திரை காட்டியது.   கயலின் விழிகள் அந்த  இருக்கை எண்ணை அச்சடிக்கும் பொறியிலேயே  இருந்தது. அது தடதடவென்ற   ஒலியுடன் இருக்கை அட்டையை வெளியாக்கும்  அந்த  நேரம், ஒரு முல்லை மொட்டு  நெஞ்சுக்குள் மலர்வதுபோன்ற ஒரு சுகம்.  வந்துவிட்டால் பயணம்  உறுதிதானே.  அடுத்து  காவியன். அவனின் இருக்கை எண்ணையும் கடகடவென்று  அடித்துத்   தந்துவிட்டது பொறி.  அடுத்து கலையரசி . அந்த பரிசோதகர்  பெண் திரும்பத் திரும்ப கடவுச்சீட்டைப் பார்க்கிறார்.  கயல்விழியின் நெஞ்சில் அந்த முல்லை  மொட்டு மலரத் தயாராக  இருந்தாலும் மலரவில்லை.  மலராதோ?  கயல்விழி அந்த நொடிக்காகவே  காத்திருக்கிறார்.  

கலையரசியின் கடவுச்சீட்டை எடுத்துக்கொண்டு அதோ அந்த மூலையில் அமர்ந்திருக்கும்  பொறுப்பு  அதிகாரியிடம் சென்றார் அந்த பரிசோதகர்.  என்ன நடக்கிறது?  அவர்கள் ஏதோ  பேசிக்கொண்டிருக்கிறார்கள். கயலுக்கு அடிவயிறு பிசைகிறது. என்னவாக இருக்கும். அந்த அதிகாரி  உதட்டைப் பிதுக்கியதில்   கயல்விழியின் உயிர் பிழியப்பட்டது.  

அந்த பரிசோதகரான இளம்பெண் வந்தார். சொன்னார்.

‘கலையரசி  உங்களோடு பயணிக்கமுடியாதம்மா. அவரை  விட்டுவிட்டு   நீங்கள் மட்டும்  போகலாம்’

‘அவளுக்குப் பதினான்கு வயதுதான். அவளை விட்டுவிட்டு  நாங்கள் எப்படி தனியாகப் போவது?’

‘கலையரசியின் கடவுச்சீட்டு 6 மாதங்களுக்குள் காலாவதியாகிறதம்மா. குறைந்தது 6 மாதமாவது  உயிர்ப்பு இருக்கவேண்டும் என்பது உங்களுக்குத்   தெரியும்தானே’

‘யாருமே கவனிக்கவில்லையம்மா.  எல்லாரும் போகாமல்  இருக்கவேண்டியதுதான். பயணச்சீட்டு , மற்ற  ஏற்பாடுகள் எல்லாம்  பெரிய  செலவம்மா.  பரவாயில்லை  என்று சொல்லும் வசதி   எனக்கு   இல்லையம்மா.  வேறு   வழி ஏதாவது…..?’

கயல்   கிட்டத்தட்ட அழுதுவிட்டாள்.  இந்தப்  பயணமே  கலையரசிக் காகத்தானே. எல்லாவற்றையும் மௌனமாகக் கவனித்துக் கொண்டிருந்த அந்தப் பெரிய  அதிகாரி வந்தார். 

‘ஒரு வழி உண்டம்மா.   பயணிக்கமுடியாத இந்தப் பயணச்  சீட்டையும, கடவுச்சீட்டையும்  லாவண்டர் ஸ்ட்ரீட்டில் இருக்கும் குடிநுழைவுத் துறையிடம் காட்டி புதிதாக கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். 12மணிக்குள் கொடுத்துவிடுவார்கள்.  வேறு   குடும்ப உறுப்பினரிடம் இந்தப் பிள்ளையை ஒப்படைத்துவிட்டு நீங்கள் செல்லலாமே’

கயல்,   உடனே தங்கை கல்யாணியை  அழைத்தார்.  மணி  6கூட ஆகவில்லை.   கல்யாணிக்கு வேலை 9  மணிக்குத்தான். உடன் புறப்பட்டு  வந்து  அவர்களுடன் சேர்ந்துகொண்டார் கல்யாணி. கடவுச்சீட்டையும், செல்லாக்காசாகிப்போன அந்தப் பயணச்சீட்டையும்  கல்யாணியிடம் கொடுத்துவிட்டு கயலும் காவியனும் உள்ளே சென்றார்கள். கயலின் இதயம் மட்டும் பின்னோக்கி  நடந்தது. 

அவர்கள் மறைகிறவரை கல்யாணி பார்த்துக்கொண்டிருந்தார். அன்று மாலை 5 மணிக்கு பாலிக்கு ஒரு விமானம் இருப்பது உறுதியாகிவிட்டது.  அந்த விமானத்தில்  ஒரு  பயணச்சீட்டுக்கு முத்தையாவிடம் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டார்   கயல். கடவுச்சீட்டு கிடைக்காவிட்டால்  என்று யோசிப்பது ஒருபுறம் இருந்தாலும், கிடைத்து   போகமுடியாவிட்டால்? அதைத் தாங்கமுடியாதே.  இதோ  கயல் மறையப்போகிறார். கடைசியாக  ஒரு  முறை கல்யாணியிடம் கையசைத்தபோது, ஒரு  துளி கண்ணீர் விழிகளை ஈரமாக்கி பார்வையை மங்கலாக்கியது. முதிர்ச்சியில்லாத அழுகையில் கலையரசி. அவரை கல்யாணி   தேற்றினார். 

‘கவலைப்படாதே கலை. மாலை 5 மணிக்கு நீயும் பாலிக்கு பறந்துகொண்டிருப்பாய்’

குடிநுழைவுத்துறை. புது கடவுச்சீட்டுப் பிரிவில் கல்யாணியும் கலையும். கடவுச்சீட்டையும், அந்த பயணச்சீட்டையும் அதிகாரி கேட்டார்.    கல்யாணி கொடுத்தார். 

அந்த அதிகாரி உள்ளே சென்றார். இவர்கள் வெளியே. அவர் சென்று மறைந்த கதவைவிட்டு கல்யாணி விழிகளை அகற்றவே இல்லை. நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. வேலை முடியவேண்டும். கல்யாணி வேலைக்குப் போகவேண்டும். ஒரு வழியாக அந்த அதிகாரி வந்தார்.  

‘கலையரசிக்கு வயது 14தான். பிணையில்லாமல் கடவுச்சீட்டை  அவரிடம் கொடுக்கமுடியாதம்மா’

‘பிணை நான் தருகிறேன். நான் கலையின் சின்னம்மாதான். கலையின் அம்மா என் அக்காதான். இதோ பாருங்கள். என் அக்காவின்   பெயர் கதிரவன் கயல்விழி . என் பெயர் கதிரவன் கல்யாணி.’

‘சரிதானம்மா. பிணைக்கு தாய் வேண்டும். அல்லது தந்தை வேண்டும். வேறு யாரும்  பிணை கொடுக்கமுடியாதம்மா. சட்டம் ஏற்றுக்கொள்ளாது.’

கயல்விழி தன் கணவனைப் பிரிந்து  6 ஆண்டுகள் தனியாகத்தான்  வாழ்கிறார்.  மூச்சே குடும்பமாக கயல்விழி. குடும்பமே ஒரு பொழுதுபோக்காக அவர் கணவர். எப்படி  ஒத்துவரும். போராட்டங்களோடுதான்   கயல்விழி வாழ்ந்தார். ஆண் ஆதிக்கும் மிக்க  குடும்பத்திலிருந்து வந்தவர் அவர் கணவர்.  இங்கு கயல்விழியின் சம்பளம் அவரின் சம்பளத்தைவிட இரண்டு மடங்கு. கயல்  எதைப் பேசினாலும் அதிகம் சம்பாதிக்கும்   அகந்தையில் பேசுவதாக அவரின் அகங்காரம் நினைக்கிறது. இந்த வாழ்க்கை எப்படித் தொடரமுடியும். முடியாது. முறிந்தது. 

இப்போது பிணைக்கு  என்ன   செய்வது? கயல்விழி தொடர்ந்து கல்யாணியை அழைத்துக்கொண்டே இருக்கிறார். அவருக்கு என்ன பதில் சொல்வது. 

பிள்ளைகளுக்கும் அப்பாவுக்கும் உறவு நெருக்கமாகவும் இல்லை. அறுபடவும் இல்லை. அவ்வப்போது  தொலைபேசியில் அழைப்பார். சில சமயம் சாப்பிட அழைத்துச் செல்வார். அதிலெல்லாம் கயல் குறுக்கிட்டதில்லை.  கலையும் காவியனும் மறுப்புச் சொன்னதுமில்லை. அவர்களின் பிரச்சினைக்கு பிள்ளைகள் பொறுப்பாக முடியாதே. அவரோடு பிள்ளைகளுக்கு நேரடி பகை ஒன்றுமில்லையே. 

‘சின்னம்மா, நான் அப்பாவை அழைக்கிறேன்.’

‘சரி ‘

அழைத்தார். அவர் நாளை சென்னைக்குச் செல்ல  ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார். சொன்னார்.

‘நல்ல வேளை இன்று  அழைக்கிறாய். நாளை நான் சிங்கப்பூரிலேயே  இருக்கமாட்டேன். என்ன   சேதி?’

கலை  விபரத்தைச் சொன்னார்.

‘இதோ புறப்பட்டு வருகிறேன். அடுத்த பத்து  நிமிடத்தில் அங்கு இருப்பேன்.’

இதோ அவர் நெருங்கி வந்துகொண்டிருக்கிறார். கல்யாணி தொலைவில் மறைந்துகொண்டார். மணமுறிவுக்குப் பின் அவரைப் பார்க்கவே கல்யாணிக்குப் பிடிக்கவில்லை. அதிகாரியிடம் அவர் பேசினார். அவரின் அடையாள அட்டையைக் கொடுத்தார். கணினியில் தேடியதில் அந்த அதிகாரிக்கு ஒரு தெளிவு. சட்டப்படி இவர் தந்தைதான் என்றது கணினி. 

‘இதோ  இந்தப் படிவத்தில்  ஒரு கையெழுத்துப் போடுங்கள். கடவுச்சீட்டை உங்கள் மகளிடம் தருகிறோம். நீங்கள் இருக்கவேண்டியதில்லை. ‘

அதற்கான கட்டணம் 80 வெள்ளியைச் செலுத்திவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டார். போகும்போது சொன்னார். 

‘கடவுச்சீட்டு கைக்கு வரும்வரை எதுவாக இருந்தாலும் உடனே கூப்பிடு. நான்   பக்கத்தில்தான் இருப்பேன். உடனே வந்துவிடுகிறேன். ‘

அவர் சென்றுவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு மறைவிலிருந்து கல்யாணி வெளிப்பட்டார். 12 மணிவரை கல்யாணி அங்கு இருக்கமுடியாது. 9மணிக்கு அவள் கணினியைத் திறந்தே ஆகவேண்டும். வீட்டிலேயே வேலை.  சிராங்கூனில்  தன் அப்பா அம்மாவோடு இருக்கும் தம்பி கலைப்பித்தனை  அழைத்தார். என்ன இது? கதிரவன், கயல், கலை, கல்யாணி, காவியன் இப்போது கலைப்பித்தன். அப்பா கதிரவனுக்கு ‘க’ மீது  ஒரு காதல். அதற்கான காரணத்தை இன்றுவரை அவர் யாரிடமும் சொன்னதில்லை. அது இருக்கட்டும். இதோ கலைப்பித்தன் உடனே  குடிநுழைவுத்துறைக்கு  புறப்பட்டுவிட்டார். கலைப்பித்தன் ஒரு காரணப்பெயர். எப்போதும் எதையாவது எழுதிக்கொண்டும்  பாடிக்கொண்டும் இருப்பார். அவர் ஒரு சொல்லிசைக் கலைஞர். சுதந்திர மனிதர். 

கலையை கலைப்பித்தனிடம் ஒப்படைத்துவிட்டு, கல்யாணி  வீட்டுக்கு விரைந்தார். 

மணி 12. கடவுச்சீட்டு கைக்கு வந்தது. கலையை அழைத்துக்கொண்டு கல்யாணி வீட்டுக்குப் புறப்பட்டார் கலைப்பித்தன். விமானம் 5 மணிக்குத்தான். கல்யாணி வீட்டிலிருந்தபடி  3 மணிக்குப் புறப்பட்டால்கூடப் போதுமே. 

2மணிக்கே கலைப்பித்தனும் கலையும்  விமான நிலையம்  வந்துவிட்டார்கள். கயல் தொடர்ந்து கல்யாணியையும், கலைப்பித்தனையும் அழைத்துக் கொண்டே இருந்தார். எப்போதுமே விமான நிலையத்தை ஆசையோடு பார்க்கும் கலை, ஒரு திடுக்கத்துடனேயே பார்த்துக் கொண்டிருக்கிறார். வேறு ஏதாவது பிரச்சினை முளைக்குமோ? போக முடியாமல்   போய்விட்டால்? 

இப்போது வேறு ஒரு பரிசோதகர். அந்தப் பெரிய அதிகாரி இருந்தார். அவர் உடனே வந்துவிட்டார். கடவுச்சீட்டு  சரிபார்க்கப்பட்டது. எல்லாம் சரி. 

‘ அவர்  தனியாகப் போவதால் ஒரு பிணை வேண்டுமே.’

‘மறுபடியும் பிணையா?’ வெளவெளத்தார் கலை. 

‘பிணைதானே. நான் தருகிறேன். நான் அவரின் தாய்மாமன். ‘

‘சரி. எங்களுக்கு வேண்டியது ஒரு பிணை. இதோ இந்தப்   படிவத்தில் உங்கள் கையெழுத்தைப் பதியுங்கள்’

தலைமேல் போடவிருந்த கல்லை அந்த அதிகாரி மெதுவாக  இறக்கி தரையில் வைத்துவிட்டதுபோல் உணர்ந்தார் கலை. 

அந்தப் பொறி கலைக்காண இருக்கை எண்ணை மளமளவென்று தட்டி வெளியே தள்ளியது. 

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, மாமாவிடம் பிரியாவிடைபெற்று கலை உள்ளே சென்றார். அவர் மறையும்வரை காத்திருந்து  உடன் கயலை அழைத்தார் கலைப்பித்தன். 

‘எல்லாம்  சரியாகவே முடிந்தது கயல். இதோ கலை  பறந்துகொண்டிருக்கிறார். சரியாக 8 மணிக்கு அங்கிருப்பார். எதிர்பார்த்திரு. சிங்கப்பூர் நேரமும் பாலி நேரமும் ஒன்றுதானே. 

‘நல்ல  சேதி சொன்னாயடா   தம்பீ.  இதோ நான் விமானநிலையம் போகிறேன். ‘

அவள் விமான நிலையத்தில் தீயை மிதித்துக் கொண்டிருந்ததுபோல் உணர்ந்தார்.

’14 வயது. எப்படி  தனியாக வந்தீர்கள். உடனே சிங்கப்பூருக்கு திரும்பிச் செல்லுங்கள். பாலிக்குள் நீங்கள் நுழையமுடியாது.’

என்று எங்கிருந்தோ ஒரு அதிகாரி கத்துவதுபோல் தொடர்ந்து  காது இரைந்துகொண்டே  இருக்கிறது. அது என்ன பிரமையா? அதைக் கேட்கும்போதெல்லாம்,  தன் கால்கள் தரைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக  இறங்குவதுபோல் இருக்கிறது.  

‘கலை, கலை, நீ எப்படியாவது வந்துவிடு’

தன் இஷ்ட தெய்வத்தையெல்லாம் வேண்டிக்கொண்டார் கயல்.   

‘சிங்கப்பூரிலிருந்து, பாலி விமானம் தரை யிறங்கிவிட்டது’

அறிவிப்புப் பலகை அறிவித்தது.   

பயணிகள் வந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் அந்தக் குரல் கயலுக்கு செவியே செவிடாவதுபோல்  கத்திக்கொண்டிருக்கிறது.  உள்ளிருந்து வருபவர்களை கூர்ந்து கூர்ந்து பார்த்து பார்வைப்புலனே  குறைந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. காவியனும் அங்குதான். அவன் ஒரு புத்தகத்தில் மூழ்கிவிட்டான். நெஞ்சுக்குள் நெருப்பே  எரிந்தாலும், குளிர்ச்சியாக மூச்சுவிடத்  தெரிந்தவன். எந்த உணர்வையும் வெளியே கொட்ட அவனுக்குத் தெரியாது. 

இதோ  கலை. கடவுச்சீட்டைக் காண்பித்து அந்த அதிகாரியோடு பேசிக்கொண்டிருக்கிறார். இடை இடையே கயலைக் காட்டி ஏதேதோ சொல்கிறார். கயலும் இங்கிருந்து கையசைக்கிறார்.  அந்த  அதிகாரியும் திரும்பிப் பார்க்கிறார்.  கடவுச்சீட்டைக் கொடுத்து

‘பாலி உங்களை வரவேற்கிறது. போய்வாருங்கள்’ என்றார்.

ஓட்டமும் நடையுமாக கலை வெளியேறினார். அவரை அப்படியே இறுக அணைத்து குலுங்கிக் குலுங்கி அழுதார் கயல். கயலின் கண்ணீர் கலையின் உச்சந்தலையை நனைத்து  மெதுவாக இறங்கியது. 

‘அதான் வந்துருச்சுல்ல. இப்ப ஏம்மா இப்புடி அழுவுறீங்க’

காவியன் கேட்டான். கயல்  அழுகையை நிறுத்தியபாடில்லை.  வெகுநேரம் அழுதார். அந்தக் கண்ணீருக்கு  பல காரணங்கள் இருந்தன. அது கயலுக்கு மட்டுமே  தெரியும்.

யூசுப் ராவுத்தர்  ரஜித்

Series Navigationகனடா வரலாற்றில் தமிழர் படகுகள்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *