தமராகித் தற்றுறந்தார் வாழி!    

author
0 minutes, 12 seconds Read
This entry is part 2 of 4 in the series 25 பிப்ரவரி 2024

                                      

சோம. அழகு      

வயதாக வயதாக (ரொம்ப ஒண்ணும் இல்ல… ஒரு 32 தான்!) வாழ்க்கை பற்றிய… அதாவது மனிதர்களைப் பற்றிய கண்ணோட்டமே மாறுகிறது. மகிழ்ச்சி, நிறைவு, நிம்மதி போன்றவை புதிய இலக்கண மாற்றம் பெறுகின்றன.

யாருக்கெல்லாம் நம்மைப் பிடிக்கிறது என்பதை விட யாருக்கெல்லாம் நம்மைப் பிடிக்கவில்லை அல்லது யாரையெல்லாம் நமக்குப் பிடிக்கவில்லை என்பது நம்மை இன்னும் தெளிவுற வரையறுப்பதாக அவதானிக்கிறேன். ஏனெனில் நம் மீது உமிழப்படும் வெறுப்பிற்கான காரணங்களும் அக்காரணங்களை நமக்கெதிரான பதாகைகளாக உயர்த்திப் பிடிப்போரின் (அ)தர்மமும் நம் பண்புநலத்திற்குக் கட்டியம் கூறுவன; ‘நாம் சரி’ என்னும் தன்னம்பிக்கையை தெளிவை இன்னும் அதிகப்படுத்தித் தருவன. எப்போதும் அறவழி நின்ற/நிற்கும் ஒருவளின் இறுமாப்பாக இதைக் கொள்ளுங்களேன். எல்லோருக்கும் நம்மைப் பிடிக்க வேண்டுமெனில் ஒன்று நாம் பணமாக இருக்க வேண்டும்; அல்லது பிணமாகி இருக்க வேண்டும்.

            ‘பற்றற்றேம் என்போர்’, ‘புறனழீஇப் பொய்த்து நகைப்போர்’, ‘வினைவேறு சொல்வேறு பட்டோர்’, ‘ஒண்மை உடையாம்யாம்’ என்னும் திண்ணமான எண்ணமுடையோர்…. ஆகியோரிடமிருந்து வெகு தொலைவில் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தவும் இவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும் வாழ்க்கை ஒரு சந்தர்ப்பத்தை எச்சரிக்கைக் குறியீடாக அனுப்பும் போலும். பிரபஞ்சமே நமது நலன் கருதி தரும் சமிக்ஞை அது. அச்சமயத்தில் அன்னாரிடமிருந்து மிகக் கச்சிதமாகக்(நம்மீது தவறே இல்லாத போதும் சூழலின் பொருட்டு புரிதல் பிழையின் புண்ணியத்தில்) கிட்டும் பரிபூரண வெறுப்பு எவ்வளவு பெரிய வரம்! அமைதிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மனதிற்கு எவ்வித மெனக்கெடலும் இன்றி கிடைக்கும் அதிர்ஷ்ட பரிசு! எனவே பகைமை பாராட்டுபவர்களைப் பாராட்டுவோம். என்ன? புதுசா இப்படியெல்லாம் தோன்ற ஆரம்பிக்கின்றது? மனது இன்னும் பக்குவப்படுகிறதா? அல்லது அளவுக்கு அதிகமாக பொறுத்துக் கொண்ட காலம் முடிந்து விட்டதா? இல்லையெனில் தன்னம்பிக்கை கூடுகின்றதா? என்னமோ ஒண்ணு!  

ஒரு சமயம் எரிச்சலும் கவலையும் மட்டுமே சூழ்ந்திருக்க, ஏதோ தீவிரமான மனநோய்(depression, anxiety disorder இத்யாதி இத்யாதி) பீடித்துவிட்டது போலும் என்று பார்த்தால்….. சில பல நசநசத்த நசைநர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றவுடன் அவ்வழகிய இன்மை(absence) எல்லாவற்றையும் சரியாக்கி விட்டது. அத்தனை நாள் சலிப்பையும் கவலையையும் அரிதாரமாகப் பூசியிருந்த அத்தனை உணர்வுகளும், வில(க்)க வேண்டியவர்கள் விலகிய பின் அனைத்தும் மீண்டும் குடியேறத் துவங்கி முதற்கட்டமாகச் சட்டென அளவில்லா நிம்மதியும் அமைதியும் சூழ்ந்து கொண்டன. அட! இவ்வளவுதானா? எப்பாடு பட்டேனும் இதை அடைந்துவிட வேண்டும். இந்த இடத்தில் ஒரு தவிர்க்க முடியாத ஒப்பீடு. ஓர் ஆண் ‘இவர்கள் போதும்; இவர்கள் வேண்டாம்’ என்று தன் எல்லைகளை ஆணித்தரமாக வகுக்க இயலும். ஒரு பெண்ணால் இன்னும் திருத்தமாக முடியும்; அது மதிக்கப்படுவதில்லை. அவ்வளவே!

ஏனோ இருபது வயதிற்குப் பிறகிலிருந்தே என் மனம் ஏகாந்தத்திற்காக(loneliness அல்ல!) ஏங்குகிறது. நம் மீதான புரிதல் பிழைகளுக்கும் நமது உண்மை பண்புக்கும் இடையில் சிறைபட்டுக் கிடக்கிறது நமக்கான விடுதலை. நாம் விலகியிருக்க விழையும் அத்‘தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரண’த்தைக் காரணம் காட்டி மீண்டும் வர வேண்டாம் என்பதே யான் வேண்டும் விடுதலை. நமது விலைமதிப்பற்ற வாழ்நாட்களைத் திருடி, அருமையான நொடிப்பொழுதுகளைக் களவாடி, சதா சர்வ காலமும் நம்மை மன உளைச்சலில் உழலச் செய்து நமது இயக்க நிலையை முடக்கிப் போட எத்தனிப்போரின் பகையைக் ‘கொடுத்துங் கொளல் வேண்டும்’ என்ற அசரீரி ஒன்று வெகு காலமாக என்னைக் கெஞ்சி வருகிறது. இவர்களோடு ‘பகைநட்பாங் காலம்’ அமையாமல் போதலே ஆகச்சிறந்த ஆசீர்வாதம்.

என் வயதிற்கு இந்தச் சிந்தனைகளெல்லாம் ரொம்பத் தாமதமா? சில செறிஞர்களின் பிரிவு உபசார விழாவிற்குப் பின்பு சோகத்திற்குப் பதில் கொண்டாட்ட மனநிலை  என்னை ஆக்கிரமிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருப்பது எனக்கு மட்டுந்தானா?

அடுத்தவருக்கான நியதிகளை நிர்ணயிப்பதும் அவற்றில் நிபந்தனைகளைத் திணிப்பதும் மிகப்பெரிய வன்முறை என்று முக்காலமும் உணர்ந்து நட்பு பாராட்டும் நல்லுள்ளங்களும் நலம்விரும்பிகளும் மட்டுமே மனதிற்கு உவப்பானவர்களாகிறார்கள். அந்நியர்களிடமிருந்து அவ்வப்போது கிட்டும் எதிர்பாராத கனிவு அல்லது நமது சிறு சிறு உதவிகளுக்குக் கிடைக்கும் ஓர் அன்பான புன்னகை… இவை போதாதா நம் வாழ்க்கையை அழகாகக் கொண்டு செல்ல? இவ்வாறானவர்களால் மட்டுமே சூழ்ந்திருக்கக் கிடைக்கும் அன்றாடம் பற்றிய கற்பனையே மகிழ்வைத் தருகிறது. அதை விடுத்து ஏன் எல்லோரையும் ‘உற்றார்’ என்ற ஒற்றைச் சொல்லுக்காகத் தூக்கித் திரிய வேண்டும்?  

‘நமக்குன்னு நாலு பேர் வேண்டாமா? நல்லது கெட்டதுக்குன்னு வந்து நிக்கணும்ல?’ – உறவுகள் குறித்து இது போன்ற பெரும்பாலானோரின் அறிவுரை முத்துகள் எல்லாம் எனக்கு அருவருப்புக் குமட்டல்கள்தாம். இங்கு யாரும் தனியாக இல்லை. தத்தம் அலைவரிசைக்கு ஏற்றாற்போல் மனதின் தரம் பார்த்துக் கேண்மை கொண்டிருப்போம். It’s never about quantity but about quality. எனவே சுற்றத்தினர் யாரும் தம்மை ஈடு செய்ய இயலாத உறவாகக் கருதி நம் வாழ்வில் தமக்கான இடமின்மையைக் கண்டு அதிர வேண்டிய அவசியமில்லை. உலக மக்கள் தொகை 8.1 பில்லியன்!

என் சரியை யாரிடமும் சுமத்துவதில்லை நான். ஒவ்வாதவர்கள் தாராளமாக என் வாழ்க்கையை விட்டு வெளியேறலாம். My life’s EXIT door is always open, unlike the ENTRY door. மெதுமெதுவாக வெளியேற எத்தனிப்பவர்களிடம் சொல்ல ஒன்றே ஒன்று உண்டு எனக்கு – “கொஞ்சம் வேகமாக நகர்ந்து தொலையுங்கள்!”  

  • சோம. அழகு
Series Navigationஹிந்தி குறுங்கவிதைகள்உற்றவன்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *