(1)
செத்த ஓர் எலியைத்
தின்று தீர்ப்பதே வேலையாய்த்
தின்று தீர்த்தன காக்கைகள்-
எஞ்சியிருந்தது எலியின் வால் மட்டும்
எலி வாழ்ந்த வாழ்வின் எச்சமாய்-
எலி உயிரோடு இருந்த போது
எப்படியோ தெரியாது-
இறந்த பின்னே
அதன் உபயோகமாய்த் தெரிய
காக்கைகள் தெரிந்தே
விட்டு விட்டுப் போனது போல்.
(2)
பாய்ந்து
ஒரு புறாவைப்
பற்கள் பதியக் கவ்வி
பம்மி என்னை
வெறிக்கும்
அந்த சாம்பல் பூனையின்
குரூர விழிகள்
என் கழுத்தைக் கவ்வும்
வலியில்
புறாவின் வலியை
உணர்கிறேன் நான்.
அதுதான் காருண்யமா?
அது புறாவுக்கு சரி-
பசிக்கும் பூனைக்கு?
(3)
வீதியில் விழிகளை நட்டு வைத்து
அடகு வைக்க யாராவது வருகிறாரா என்று
காத்திருக்கும் ஒரு கந்துவட்டிக்காரன் போல்
காத்திருக்கிறது சுவர் மீது ஒரு பல்லி-
இரை கிடைக்காமலா போய் விடும்?
ஏன் கவலை ?
‘பூச்சிகள்’ இல்லாத உலகில்லையென்றாலும்
‘பூச்சிகள்’ எதிர்க்காத உலகில்லையே.
(4)
இருள்
மீது
பாய்கிறது
இருளில்
எலி
மீது
பாய
பூனை.
(5)
இருக்கும்
உயிர்க்கெல்லாம்
இரையே
ஒரே
உண்ணும்
இறை.
கு.அழகர்சாமி