This entry is part 2 of 7 in the series 1 மார்ச் 2026

பாலமுருகன்.லோ

வீட்டின் முற்றத்தில் அந்த மூலையில் உட்கார்ந்துகொண்டு, தனது இரு கால் முட்டிகளின் மீது தலை வைத்தபடி அழுதுகொண்டிருந்தாள் அக்கா கீதா. “அக்கா… அக்கா…” என்று அவளைக் கூப்பிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தேன். உள்ளே அவளை அந்தக் கோலத்தில் நான் பார்த்த பின், என்ன அவளிடம் பேசுவது எனத் தெரியாமல் சற்றுத் தவித்து அதே இடத்தில் நின்றுவிட்டேன். அவளது கண்கள் குளமாகத் தண்ணீர் தேங்கியிருந்தது. ஆற்றில் செந்நீர் பார்த்ததுண்டா? அக்கா கீதாவின் இரு கண்களும் சிவந்து இருந்த கோலத்தைப் பார்த்தபோது, ஆற்றில் செந்நீர் ஓடினால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது அந்தக் காட்சி.

நான் உள்ளே வந்து உரக்கக் கத்தியும் அவளது காதுகளுக்கு எட்டவில்லை. அதனால், அவளது பக்கத்தில் போய், “அக்கா… கீதாக்கா,” என்று மேலும் உரக்கக் கூப்பிட்ட பின்தான் அவளது பார்வை என் மீது பட்டது. அவள் அண்ணாந்து பார்த்தாள்.

“வாடா… அசோக், இன்னைக்குக் காலேஜ் இல்லையா?” “ஆமாம் அக்கா, ஸ்டடி ஹாலிடே.” “ஏன் இப்போ அழுகிறாய்? என்ன ஆச்சு?” ‘நானே உன்னிடம் கேட்கலாம்னுதான் இங்கு வந்தேன். வந்த பின்தான் தெரிந்தது நீ அழுதுகிட்டு இருக்கேன்னு.’ “சரி, அழுகிறதை நிறுத்து முதலில். என்ன நடந்தது, அதைச் சொல்லு. தாத்தா, பாட்டி எப்படி இருக்காங்க? இரண்டு பேருக்கும் உடம்பு சரியில்லைன்னு அம்மா சொன்னாங்க. அதான் அவங்களையும் பார்த்துட்டு, உன்னையும் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.”

“அசோக், பாட்டிக்கு உடம்புதான் கொஞ்சம் அதிகமாகப் படுத்திக்கிட்டு இருக்கு. ஏற்கனவே அம்மாவுக்கு சுகர், பி.பி, மற்ற காம்ப்ளிகேஷன் எல்லாம் இருக்கு. இதில் வேற அவங்களுக்கு ரெண்டு முறை நெஞ்சு வலி வந்து போயிருக்கு. நான் ஒரே ஒரு ஆளாக என்ன பண்ணச் சொல்கிறாய்? வீட்டைப் பார்க்கிறதா? தாத்தாவைப் பார்க்கிறதா? இல்லை பாட்டியை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்க்கிறதா? என்னால் எல்லாத்தையும் எப்படி ஒரே நேரத்தில் பார்க்க முடியும்? அதான் கடவுள் கிட்ட முறையிட்டுக்கிட்டு இருந்தேன்.”

“எப்படி, அழுதுகிட்டேவா? கடவுள் கிட்ட மனம் உருகிக் கேட்டாலே போதும், கொடுத்துடுவாரே.” “சரி, நீ என்னக்கா கடவுள்கிட்ட கேட்டாய்?” ‘நானா? கடவுள்கிட்ட எனக்குத் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடு கடவுளேன்னுதான் வேண்டினேன். வேற என்ன வேண்டச் சொல்கிறாய்?’ “அதுவும் சரிதான், உன்னால் வேற என்ன வேண்ட முடியும்.”

“ஏன்க்கா, லதா அக்கா வெளிநாட்டில்தானே இருக்காங்க? அவங்ககிட்ட சொல்ல வேண்டியதுதானே?” “நானா லதாகிட்டயா? பாவம், அவளே பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கணும்னு சொல்லியிருந்தா. வேலையில வேற கெடுபிடியாம். அங்ககூடப் புதிய புதிய சட்டமெல்லாம் போட்டுக்கிட்டே இருக்காங்களாம். அவுங்க நாட்டு ஆட்களுக்கு நிறைய வேலை தரப் போறாங்களாம். இங்க தமிழ்நாட்டிலிருந்து, இந்தியாவிலிருந்து போற இந்தியர்களுக்கு இனி வெகு கணிசமான வேலை வாய்ப்புதான்னு போன மாசம் போன் பேசினப்பதான் சொன்னாள்.”

அவளே பெரிய போராட்டத்தில் இருக்கா, சொந்த நாட்டை விட்டுப் பிழைக்க புருஷனோட, பிள்ளைகளுடன் போனவள்கிட்ட நாம சும்மா இங்கிருக்கிற பிரச்சினைகளையெல்லாம் தினம் தினம் சொன்னா, பல்லாயிரம் மைல் தாண்டி அங்கிருக்கிறவளுக்கு என்னன்னு நினைக்கத் தோன்றும். மனசு கிடந்து அடிச்சுக்காதா! அதான் நான் அவள்கிட்ட ஒண்ணும் சொல்லலை. முடிஞ்ச அளவுக்கு அவளும் குடும்பத்துக்கு உதவுறா. வேற அங்கிருந்துகிட்டு என்ன பண்ணச் சொல்லுற?

“அதுவும் சரிதான். பாவம், பல்லாயிரம் மைல் கடந்து இருக்கிறவங்ககிட்ட நாம பொழுதுக்கும் ஏதாவது சொல்லிக்கிட்டே இருந்தா, அங்க எப்படி வேலையை ஒழுங்கா பார்ப்பாங்க.”

“அசோக், இப்படித்தான் பாரு, ஆறு மாசம் முன்னாடி தாத்தாவுக்கு ரொம்பவே உடம்பு முடியாம போச்சு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம அவளுக்குத்தான் போன் போட்டேன். இங்கத்துக்கும் அங்கத்துக்கும் குறைந்தது நான்கு மணி நேரம் வித்தியாசமாமே, அது கூட சட்டுனு எனக்கு உறைக்கலை. பதற்றத்தில் உடனே போன் போட்டுட்டேன்.” லதா நல்ல தூக்கத்திலிருந்திருப்பா போல. என் குரல் கேட்ட உடனே, “என்ன கீதா?” என்று பதற்றத்துடன் பேச ஆரம்பிச்சா. அவளிடம் முதலில் சொல்ல வேண்டாம்னுதான் நினைச்சேன், ஆனால் என்னால் கட்டுப்படுத்த முடியலை. அவளிடம் போட்டு உடைச்சிட்டேன். “அப்பாவுக்கு இந்த மாதிரி உடம்பு சுகமில்லாம இருக்கு, ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கேன். இவ்வளவு மருத்துவச் செலவாகும்னு சொல்றாங்க”ன்னு அவளிடம் சொன்னேன். உடனே அவள், “கீதா கவலைப்படாதே, இன்னும் நான்கு மணி நேரத்தில் நம்ம ஊருக்குப் பக்கத்தில் இருக்கா என் தோழி ஒருத்தி, அவள் உன்னை வந்து பார்ப்பா. அவள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கோ, நான் அவளுக்கு அப்புறம் கொடுக்கிறேன்” என்றாள். அவள் சொன்ன மாதிரியே, நான்கு ஐந்து மணி நேரத்தில் லட்சக்கணக்கில் பணத்துடன் சலீமா என்ற பெண் வந்து என்னிடம் பணத்தைக் கொடுத்துட்டுப் போனா. லதா கொடுக்கச் சொன்னதாகச் சொல்லி, கவலைப்படாதீங்க என்றும் சொல்லிட்டுப் போனா. இந்த மாதிரி லதாவால் என்ன முடியுமோ, அதை அவளும் குடும்பத்துக்காகப் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கா.

“சரிக்கா, உன்னைப் பற்றி எப்போது யோசிக்கப் போற?” “என்னைப்பத்தியா? ஏன், என்ன யோசிக்கணும்? நான் நல்லாதானே இருக்கேன். எனக்கு என்ன குறை?” “கீதாக்கா, நான் அதைச் சொல்லல. நீ எப்ப மறுபடியும் திருமணம் செய்யப் போற? உனக்குன்னு ஒரு ஆள் வேண்டாமா?” “அசோக், பட்டது எல்லாம் போதும். திருமணம் என்னும் பந்தத்தில் விழுந்து, அடிபட்டு, மிதிபடுறதெல்லாம் போதும். இனி என் வாழ்வில் திருமணம் என்பதற்கு பேச்சே இல்லை. முடிஞ்சது முடிஞ்சதுதான்.” “இல்லக்கா, நான் என்ன சொல்ல வரேன்னா!” “என்னடா, நீ என்னவோ பெரிய மனுஷன் மாதிரியெல்லாம் பேச ஆரம்பிச்சுட்ட? என்ன ஆச்சு உனக்கு?” “இல்லை, இப்படி கஷ்ட காலத்தில் நீ மட்டும் உட்கார்ந்துகிட்டு அழுகிற மாதிரி ஆயிடாதே. உனக்கு ஆறுதல் சொல்லக் கூட ஒரு ஆள் பக்கத்தில் இல்லையே. லதாக்கா எல்லாம் பல்லாயிரம் மைல் தாண்டி இருக்காங்க. என்னதான் பக்கத்திலிருந்து ஆறுதல் சொல்ற மாதிரி வருமா? அதான் சொன்னேன்.” “எல்லாம் எனக்கும் தெரியும். நீ கொஞ்சம் அடங்கு, அதிகப்பிரசங்கித்தனமா பேச வேண்டாம்.” “சரிக்கா, ஏதாவது உதவி வேணுமா இப்போ?” “இல்லடா, இப்போதைக்கு ஒண்ணும் வேண்டாம். ஏதாவது தேவைப்பட்டால் நானே உன் அம்மாகிட்ட சொல்லி உன்னைக் கூப்பிடச் சொல்றேன்.”

இரவு ஏழு மணி இருக்கும், அசோக்கின் அம்மா அசோக்கிடம், “கண்ணு, கீதா கூப்பிட்டா. பாட்டிக்கு ராத்திரிக்குச் சாப்பாடு கொண்டு போகணுமாம். ‘கொஞ்சம் அசோக் இருக்கானா?’னு கேட்டா. நானும், ‘அவன் வீட்லதான் இருக்கான், அவனை அனுப்புறேன்’னு சொல்லிட்டு வந்தேன். அதனால, அக்கா வீட்டுக்குப் போய் அவ கொடுக்கிற சாப்பாட்டைப் பாட்டிக்குக் கொடுத்துட்டு வரியா? அப்படியே பாட்டிகிட்ட இதையும் சொல்லச் சொன்னா. தாத்தாவுக்குச் சாப்பாடு போட்டுட்டு அவ ஆஸ்பத்திரிக்கு வராளாம்.”

அம்மாவுக்குச் சாப்பாடு அசோக் மூலம் அனுப்பி வைத்துவிட்டு அப்பாவுக்காகக் காத்திருந்தாள் கீதா. சுவரோரமாக உட்கார்ந்திருந்தவளின் நினைவு பின்னோக்கிச் சென்றது. அசோக் சொன்னதை அவள் மீண்டும் மீண்டும் நினைவுகூர்ந்து பார்த்ததால் அவளது நினைவு பின்னோக்கி நகர்ந்தது.

அம்மா, அப்பா, லதா, லதா வீட்டுக்காரர், உறவினரெல்லாம் வந்திருந்தனர் கீதாவின் வீட்டிற்கு. என்ன விசேஷமென்றால்? கீதாவிற்கு வரன் பார்க்கும் படலம்தான், வேறு என்ன. அதான் வீடே களைகட்டியிருந்தது. அனைவரின் முகத்திலும் சந்தோஷம் தாண்டவமாடியது. நல்ல படித்த பையன் கீதாவுக்கு முடிவானது, திருமணத் தளம் எல்லாம் முடிவானது, திருமணம் குறித்த நேரத்தில்தான் நல்லபடியாக முடிந்தது.

கிராமத்திலிருந்து கீதா நகரத்திற்குச் செல்கிறாள். மாப்பிள்ளை வீட்டாருடன் பழக முற்படுகிறாள். எல்லாம் அவளுக்குப் புதிதாக இருந்தது. இதுநாள் வரை அப்பா, அம்மா, அக்கா என்று இருந்தவள், இனி மாமனார், மாமியார், நாத்தனார், கணவன் என்று சுற்றிச் சுற்றி வரவேண்டும். புதிதாக இருந்தாலும் கீதா அதைச் சீக்கிரமே பழக்கப்படுத்திக்கொண்டாள். அவரவர் குறிப்பறிந்து செயல்களைச் செய்யவும் தொடங்கினாள். அங்குதான் காலம் விளையாடியது. நன்றாகப் போய்க்கொண்டிருந்த கீதாவின் வாழ்வில் ஓர் புயல் வீசத் தொடங்கியது. அவளது கணவன் திடீரென்று இறந்துவிடுகிறார். இப்பதான்! கல்யாணம் ஆகி இருக்கு, அதுக்குள்ள அவருடைய இழப்பு, அந்த இழப்பு சாதாரண இழப்பு இல்லை. நாம் ஒன்று நினைத்தால் அது வேறொன்று நடக்கும், அதுவே நடைமுறை. அந்தத் துயரச் சம்பவமெல்லாம் அவளது கண்முன் நிழலாடியது.

“அம்மா கீதா… கீதா…” என்று அவளது அப்பா கூப்பிட்டுக்கொண்டே வீட்டினுள் வந்தார். அவரது குரல் கேட்ட மாத்திரத்தில் கீதா சுய நினைவிற்கு வந்தாள்.

“ஏனம்மா… அம்மாவுக்குச் சாப்பாடு கொண்டுபோகணுமில்லையா? நானே வேணும்னா கொண்டு போய்க் கொடுத்துட்டு வந்துவிடட்டுமா? பிறகு நான் வந்து சாப்பிடுகிறேன்.” “இல்லப்பா, நம்ம அசோக் இருக்கான் இல்லையா? அவனிடம் சாப்பாட்டைக் கொடுத்து அனுப்பியிருக்கிறேன். நீங்க சாப்பிடுங்க, நான் பிறகு மருத்துவமனைக்குப் போகிறேன்,” என்றாள்.

“ஏம்மா நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே!” “என்னப்பா சொல்லுங்க.” “ஏம்மா நீ ஏன் உன் வாழ்வைப் பத்தி யோசிக்க மாட்டேங்கிற? உனக்குன்னு ஒரு வாழ்வு வேண்டாமா? பிள்ளை குட்டின்னு நீ உன் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டாமா?”

“இல்லப்பா, பட்டதெல்லாம் போதும், இனி என் வாழ்வில் மறுமணமே இல்லை.” “ஏம்மா இப்படித் தப்பாவே யோசிக்கிறாய்? எங்க காலம் அதோ இதோன்னு இருக்கு, உனக்கு ஒரு துணை வேண்டாமா?” “ஏம்பா, எனக்குத் துணை கடவுள்தான் அப்பா. அவர் தவிர எனக்கு வேறு யார் உதவிட முடியும்?”

“சரிம்மா, ஒண்ணே ஒண்ணு நீ எனக்குச் சொல்லு. எங்களுக்கு அப்புறம் நீ லதாவோட போய் இருப்பியா?” “காலம் அதை வலியுறுத்தினால், லதாவும் விருப்பப்பட்டால், நான் அங்கு அவளுடன் கட்டாயம் தங்குவேன். நீங்க இப்ப அபசகுனமா ஏதும் பேச வேண்டாம். கடவுள் ரெண்டு கால் ரெண்டு கை கொடுத்திருக்கிறார், மற்றவர்களுக்கு உதவ மற்றும் நமக்கு நாமே வேண்டியதை செய்துகொள்ள. பின் ஏன் அப்பா லதாவுக்குத் தொந்தரவா போய் இருக்கணும். என்னதான் இருந்தாலும் லதா என் சொந்த இரத்தம் இல்லை என்று சொல்ல வரல. அவளுக்குத் தேவையில்லாம நாம் ஏன் போய் அந்த தொந்தரவைக்  கொடுக்கணும்னுதான் யோசிக்கிறேன்.”

“ஏம்மா லதாவும் உன்னை சும்மா விட்டு விடுவாளா?” “கட்டாயம் இல்லை அப்பா. அவ எப்படி என்னை அப்படியே விட்டு விடுவா? அவ என் இரத்தம் அல்லவா! நம்ம இரத்தம் அல்லவா.” “என்னமோ போம்மா. நீ ரொம்ப காலம் நல்லா இருக்கணும்மா. அம்மா அப்பாவுடைய ஆசி உன்னுடனும், லதாவுடனும் என்றுமே இருக்கும்மா.”

-பாலமுருகன்.லோ –

Series Navigationகாத்திருப்பின் நியமம்மழைபுராணம் – 21