This entry is part 8 of 10 in the series 15 மார்ச் 2026

பாலமுருகன்.லோ

“ஏண்டி வத்சலா, ஒண்ணு கேள்விப்பட்டியா?”

“என்னன்னு சொன்னாதானே தெரியும்? உங்க மனசுல இருக்கிறது எனக்கு எப்படித் தெரியும்?”

“ஏண்டி, நம்ம காம்ப்ளெக்ஸே அல்லோலப்பட்டு இருக்கு, உனக்குத் தெரியலைன்னு சொல்றியா?”

“தெரியலைங்கிறதை வேற எப்படிச் சொல்றது? வழவழன்னு இழுக்காம நேரா விஷயத்துக்கு வாங்க.”

“நம்ம காம்ப்ளெக்ஸ்ல மேல மாடியில இருந்தாங்களே, ரேகாவும் அவ புருஷன் சங்கரும்… ஆமா, அவங்க இப்ப ஒண்ணா இல்லையாம். அதைப்பத்தி ஏதாவது உனக்குத் தெரியுமான்னுதான் கேட்டேன்.”

“ஏன் இப்ப அதைக் கேட்டு என்ன சாதிக்கப்போறீங்க? உங்க வேலையையே உங்களால ஒழுங்கா பார்த்துக்க முடியலை. இதுல ஊர்ல இருக்கிறவங்களைப் பத்தி தெரிஞ்சு என்ன சாதிக்கப்போறீங்க?”

“அதுக்கில்லடி… ஒரு காம்ப்ளெக்ஸ்ல இருந்துகிட்டு இதுகூட தெரியலைன்னா எப்படி?”

“ஏதோ சண்டைன்னு கேள்விப்பட்டேன், என்னவாம்?”

“அந்தப் பொண்ணு இருக்கா இல்ல, அவ அவனை, அதான் சங்கரை, வேண்டாம் என்கிறாளாம்!”

“ஏனாம்? என்னவாம்? ரெண்டு பேரும் நல்லாதானே குடும்பம் நடத்தினாங்க. அஞ்சு வயசுல ஒரு குழந்தை வேற. ஏன் இப்படி முடிவெடுக்கிறாங்க?”

“இல்லை, ரெண்டாவது பிளாக்ல நம்ம காய்கறிக் கடை வச்சிருக்கிறாரே கந்தசாமி, அவர் நான் நம்ம வீட்டுக்கு வர்றப்ப இதைச் சொன்னாரு.”

“ஏம்பா கணேசா, விஷயமே தெரியாதா? உங்க வீட்டு மாடியில இருக்காங்க இல்ல, ரேகா சங்கர் தம்பதியர், அவங்கவங்க வாழ்க்கையைப் பார்த்துக்கிட்டுப் போயிட்டாங்களாம்.”

“நான் கூட அவர்கிட்ட, ‘எங்க போயிட்டாங்க?’ன்னு கேட்டேன். ‘அதான்பா, தனியாப் போயிட்டாங்களாம்’னாரு.”

“ஏண்ணே, அப்ப அவங்களோட குழந்தையை யாரு கூட்டிக்கிட்டுப் போனா?”

“ஏம்பா கணேசா, இது என்னப்பா கேள்வி? அந்தப் பொண்ணுதான் தன்னோட கூட்டிக்கிட்டுப் போயிடுச்சாமே.”

“கந்தசாமி அண்ணே, எனக்கு ஒண்ணும் தெரியாதுண்ணே. நான் வேலைக்குப் போயிட்டு வீட்டுக்கு வர்றதே அக்கடான்னு இருக்கு. இதுல அக்கம்பக்கத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கத் தோணலை. இப்ப நீங்க சொல்லிதான் விஷயமே தெரியுது.”

“சரி, இப்ப என்ன பண்ணலாம்? நீங்க போய் மூஞ்சியை அலம்பிட்டு வாங்க. முதல்ல சாப்பிடுங்க, அப்புறம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றி சிந்திக்கலாம். உங்களுக்குப் பிடிச்ச மீன் குழம்பும் வச்சிருக்கேன்.”

“சரிடி, வை. முதல்ல நாம சாப்பிடலாம், பிறகு நீ சொன்ன மாதிரி மத்தவங்களைப் பத்தி யோசிக்கலாம்.”

“ஏண்டிமா, மீன் குழம்பு அருமையா இருக்கு. சமையல் செஞ்ச கைக்கு தங்க வளையல் போடலாம் போல.”

“ஆமா, இந்த சால்ஜாப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. அப்படியே வாங்கிப் போட்டுடலாம்.”

“சரிடி, கோவிச்சுக்காத. காசு வந்தவுடனே வாங்கிப் போட்டுடறேன்.”

அந்த இரவு அவர்கள் இருவரும் சாப்பிட்டபின் உறங்கினர். மறுநாள் அன்றாட வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள் வத்சலா. கணேஷோ வழக்கம்போல் எழுந்து காலைக்கடனெல்லாம் முடித்து நிறுவனத்திற்குச் செல்ல ரெடியாகி இருந்தான்.

“ஏங்க, நீங்க போய் நம்ம கந்தசாமி அண்ணன் கடையில கொஞ்சம் இன்னைக்கு ஆகுற மாதிரி காய்கறியெல்லாம் வாங்கிட்டு வந்திருங்க. அதுக்குள்ள உங்களுக்கு இட்லி ஊத்துறேன் காலைக்கு.”

“சரிடிம்மா, வேகமா போயிட்டு வந்திடுறேன்.”

“ஆமா, யாரையாவது பார்த்துப் பேசிக்கிட்டே இருக்காதீங்க, உங்க வேலைக்கு லேட் ஆயிடும். அதனால போனமா வந்தோமான்னு இருங்க.”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். இப்பத்தான் மணி ஆறு ஆகுது, நான் ஒன்பது மணிக்குத்தான் வீட்ல இருந்து கிளம்புறேன். நான் கரெக்டா ஆபீஸுக்கு போயிடுவேன்.”

காய்கறிகளை வாங்கிக்கொண்டு கந்தசாமியிடம் பேசிக்கொண்டிருந்த கணேசனை உஷார் செய்தார் கந்தசாமி. உடனே கணேசன் மெதுவாகத் திரும்பி, கந்தசாமி சொன்ன இடத்தைப் பார்த்தார். சற்று தூரத்தில் சங்கர், அதான் ரேகாவின் புருஷன், நடந்து வந்துகொண்டிருந்தான். கணேசனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படிப் பேசுவது அவனிடம் என்று நினைத்துக்கொண்டே இருந்தார். எப்படியாவது பேசியாக வேண்டும். என்ன நடந்தது என்று தெரிந்துகொண்டாக வேண்டும், இல்லையென்றால் தலையே வெடித்துவிடும்போல் இருக்கிறது என்று எண்ணி, சங்கரை நோக்கி நடந்தான் கணேசன்.

“ஏம்பா சங்கரு, எப்படி இருக்க? வேலையெல்லாம் எப்படிப்பா போயிட்டு இருக்கு?”

“இப்பெல்லாம் உன்னைப் பார்க்க முடிவதில்லையே, என்ன வேலை பிஸியா?”

“கணேசன் அண்ணே, அதெல்லாம் ஒண்ணுமில்லை, எப்போதும் போலத்தான் இருக்கேன்.”

“ஏம்பா, வீட்ல குழந்தைங்க எல்லாரும் சௌக்கியமா?”

“ஆமாண்ணே, எல்லோரும் சௌக்கியம். நான் கொஞ்சம் அவசரமாப் போயிட்டு இருக்கேன். நாம அப்புறம் சந்திக்கலாமா?” என்று கூறி, சங்கர் கணேசனிடமிருந்து நழுவிச் சென்றுவிட்டான்.

‘அட, சிக்காம போயிட்டானே, இவனை எப்படி எங்கே மறுபடியும் பார்ப்பது,’ என்று மீண்டும் காய்கறி கடைக்கு வந்து, வாங்கிய காய்கறிகளையெல்லாம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினான் கணேசன்.

வீடு வந்த கணேசன், “அடியே வத்சலா, அந்தப் பையனைப் பார்த்தேன்.”

“எந்தப் பையனைப் பார்த்தீங்க? கொஞ்சம் விளக்கமாச் சொன்னாதானே புரியும்.”

“அதாண்டி, நம்ம வீட்டுக்கு மேலே இருக்காளே ரேகா, அவ புருஷன், அவன் அதான் சங்கர். அவனைத்தான் பார்த்தேன், நம்ம கந்தசாமி கடை பக்கத்தில்.”

“என்னவாம் அதுக்கு?”

“இல்லடி, உனக்கு அதுக்குள்ள மறந்துடுச்சா! நாம நேத்து ராத்திரி பேசினோமே, அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இல்லைன்னு.”

“ஆமாம், அதற்கு என்ன இப்ப? நீங்க அதை ஊர்ஜிதப்படுத்திட்டீங்களா?”

“இல்லடி, அவன் என்கிட்ட இருந்து நைசா நழுவிப் போயிட்டான்.”

“சரி, நீங்க போய் ஆக வேண்டிய விஷயத்தைப் பாருங்க. இன்னைக்கு ஆபீஸுக்குப் போறீங்கல்ல?”

“பின்ன போகாம என்ன செய்வதாம், கட்டாயம் ஆபீஸுக்குப் போயாகணும்.”

“அப்ப சீக்கிரம் கிளம்புங்க, மணி ஆகுது. நீங்க போய்க் குளிச்சுட்டு வர்றதுக்குள்ள நான் மதியச் சாப்பாட்டை ரெடி பண்ணிடுறேன்.”

கணேசன் தயாராகிக் காலை டிபன், காபி எல்லாம் குடித்த பிறகு தனது நிறுவனத்திற்குக் கிளம்பினான். வத்சலா தனது அன்றாட வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டுக் காலைச் சாப்பாட்டை முடித்த பிறகு, ரேஷனில் இன்று சர்க்கரை, அரிசி போடுகிறார்கள் என்று தெரிந்தவுடன் வேகமாக ரேஷன் கார்டையும் இரண்டு பைகளையும் எடுத்துக்கொண்டு ரேஷன் கடைக்கு விரைந்தாள். அங்கு காத்திருந்த மக்கள் கூட்டத்தோடு அவளும் வரிசையில் நின்றிருந்தாள். அந்தச் சமயம் பார்த்து ரேக்காவும் தனது குழந்தையுடன் அங்கு வர, வத்சலா அவளிடத்தில்,

“என்ன ரேகா, நல்லா சௌக்கியமா? வீட்ல எல்லாரும் சௌக்கியம்தானே!” என்றாள்.

“ஆமாம் அக்கா, எல்லோரும் நலம்.”

“ஏம்மா கொஞ்ச நாளா உன்னைப் பார்க்க முடியல. அம்மா வீட்டுக்குப் போயிருந்தியா?”

“அக்கா, என்னத்தச் சொல்றது. முதல்ல எனக்கு சந்தேகமாதான் இருந்துச்சு. அதான் எங்க ரெண்டு பேருக்கும் அப்பப்போ சண்டை வந்தது. ஆனா எப்ப உண்மை தெரிஞ்சதோ, அப்பவே முடிவெடுத்துட்டேன் அவன் கூட இருக்கக் கூடாதுன்னு.”

“ஏண்டி, என்னடி சொல்ற? அப்படி என்ன உன் புருஷன் செஞ்சுட்டான்?”

“ஏன்க்கா, நான் என்ன நகை நட்டா ஆசைப்பட்டேன்? இல்லை எங்காவது டூருக்கு கூட்டிக்கிட்டு போகச் சொல்லி தொந்தரவு செஞ்சேனா? இல்லை மத்த பொம்பளைங்க மாதிரி புதுப் புடவையா வாங்கி பீரோவுல அடுக்கச் செஞ்சேனா? இல்லவே இல்லை. அந்த ஆள் வேற ஒரு பெண்ணோட ரொம்ப நாளா பழக்கம் வச்சிருக்காரு.”

“ஏதோ ஒரு மாற்றம் தெரியுதேன்னு அவரைக் கண்காணிச்சுக்கிட்டே இருந்தேன். ஒரு நாள் நல்லா வசமா மாட்டிக்கிட்டான் என் கையில. கையும் களவுமா அவங்க ரெண்டு பேரையும் ஒரு பார்க்குல பிடிச்சிட்டேன். அங்கேயே அவன்கிட்ட நல்லா நாக்கைப் பிடுங்குற மாதிரி கேள்வியெல்லாம் கேட்டேன். ஆனா அவன்கிட்ட இருந்து ஒரு பதிலும் வரலை. அவளையும் நல்லா கேட்டுவிட்டேன். தலையைக் குனிஞ்சிட்டு உட்கார்ந்தவதான், தலையை மீண்டும் நிமிர்ந்தே பார்க்கலை.”

“இப்ப சொல்லுங்க, அந்த ஆளோட எப்படி குடும்பம் நடத்தச் சொல்றீங்க?”

“ஏம்மா, அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே! அதுக்கு முழுசா பிரியணுமா?”

“நான் அவகிட்டயும் அவன்கிட்டயும் சொன்னேன், ‘இதெல்லாம் வேண்டாம், அவங்கவங்க பொழப்பைப் பார்த்துட்டு போயிடுங்க, அதுதான் எல்லாத்துக்கும் நல்லது’ன்னு. ஆனால் அந்த ஆளு கேட்கிற மாதிரி தெரியலை. அவளும் பதிலும் பேசாமதான் உட்கார்ந்திருந்தா. இவ்வளவு நடந்த பிறகு எப்படி ஒண்ணா வாழச் சொல்றீங்க? அதான் பிரியலாம்னு முதல் கட்டமா குழந்தையைத் தூக்கிக்கிட்டு அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்.”

“ஏண்டி, குழந்தைக்காகவாவது கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?”

“அக்கா, எல்லாம் பல தடவை யோசிச்சுதான் பிரியறதுன்னு முடிவெடுத்தேன்.”

“அப்ப காலம் முழுக்க இப்படியே இருக்கலாம்னு இருக்கியா?”

“யாரு சொன்னது? அந்த வீணாப்போனவனை நம்பி ஒருத்தி வரப்போறா. என்னை ஏத்துக்கிட்டு குடும்பம் நடத்த ஒருத்தன் வரமாட்டானா? அவன் வர்ற வரைக்கும் நான் காத்திருப்பேன். என்ன குறைஞ்சு போச்சு?”

“நான் மத்த பொம்பளைங்க மாதிரி உடைஞ்சு போய் வீட்டுல முடங்கிக் கிடக்க மாட்டேன். என் குழந்தைக்காக நான் இப்ப இருக்கிறதை விட ரெண்டு மடங்கு தெம்பா ஓடுவேன்,” என்றாள் ரேகா.

வத்சலா ரேகாவைப் பார்த்து, “பெண் என்றால் இப்படித்தான் துணிச்சலுடன் பல சவால்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். சோதனை, துயரம் வந்தவுடன் சோர்ந்து போய் ஒரே இடத்தில் உட்காரும் பொம்பளைங்க மத்தியில் ரேகா துணிச்சலான பொண்ணு” என்று எண்ணினாள்.

-பாலமுருகன்.லோ-

Series Navigationஈரான் அமெரிக்க மோதல் 2026ஆண் பால் – அத்தியாயம் மூன்று