- பி.கே. சிவகுமார்
(பின்னர் விரித்து எழுதலாம் என நினைத்துத் தள்ளிப் போய்விடக் கூடாது எனப் பதிவு செய்த சிந்தனைச் சிதறல்கள்.)
வைரமுத்து ஞானபீடம் வாங்கியது குறித்து நான் மதிக்கிற நண்பர்கள் எதிர்ப்பு, வருத்தம், கண்டனம் ஆகியவற்றைத் தெரிவிக்கிறார்கள். இதனால் எல்லாம் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை இல்லை என்றாலும் இத்தகைய குரல்கள் இன்னும் எழுவது மகிழ்ச்சி.
வைரமுத்து படைப்புகளுக்குச் சாகித்திய அகாதெமி கொடுத்து இடதுசாரிகள் கோலோச்சிய அந்த அமைப்பு அவரைப் புண்ணிய ஸ்நானம் செய்துவிட்டபோதே அவருடைய அடுத்த இலக்கு ஞானபீடம் தான் எனப் பலருக்கும் தெரியும். இவ்வளவு வருடங்கள் யாரோ புண்ணியவான்(கள்) அதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்(கள்). அவர்களுக்கு நன்றி. இறுதியில் வைரமுத்துவின் விடாமுயற்சி வென்றுள்ளது.
வைரமுத்துவின் அடுத்த இலக்கு நோபல் பரிசாக இருக்கும். அதுவும் அவருக்குக் கிடைத்துத் தொலைக்கலாம் என்பதே இன்றைய பரிசுகளின் நிலை.
இதற்காக வைரமுத்துவை மட்டும் நோவதில் ஒரு பிரயோசனமும் இல்லை. காலமெல்லாம் அவர் விமர்சித்து வந்த, தன் இலக்கியப் பார்வைகளுக்கு எந்த விதத்திலும் ஏற்பில்லாத சாரு நிவேதிதாவுக்கு ஜெயமோகன் விஷ்ணுபுரம் விருது கொடுத்தது மாதிரி சாகித்ய அகாதமியும் ஞானபீடமும் நோபல் பரிசும் செய்யக் கூடாதா என்றும் கேட்டுக்கொள்ளலாம். அப்போது இடதுசாரிகளில் இருந்து ஜெயமோகன் வரை எல்லாருமே – இத்தகைய போக்குகளுக்கு ஒரு மறைமுக உந்துசக்தியாகவேனும் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.
வைரமுத்து மட்டுமல்ல புதியதாக எழுத வருகிறவர்களில் பலரும் அங்கீகாரத்துக்கும் பாராட்டுக்கும் விருதுக்கும் சமரசம் செய்து கொள்கிறவர்களாகவே இருக்கிறார்கள். இதுவே மிகப்பெரிய வீழ்ச்சி!
ஆக நாம் விமர்சிக்க வேண்டியது இந்தப் போக்கையும் என்பதைக் கணக்கில் கொண்டால், தகுதியில்லாமல் பரிசு வாங்குகிற, அங்கீகாரமும் பாராட்டும் பெறுகிற இலக்கிய எழுத்தாளர்கள் குறித்து எந்தப் பெரிய சத்தமும் தமிழில் எழுவதில்லை எனக் கவனிக்க முடியும்.
வைரமுத்து சினிமாவுக்கு ஆசைப்பட்டு அதில் இலக்கியவாதிகளைவிட வென்றவர் என்பதாலும், வைரமுத்துமீது பெண்கள் குற்றச்சாட்டு உள்ளன என்பதாலும் அவர் பலராலும் தாக்கப்படுகிறார் என்பதிலும் உண்மை உண்டு. வைரமுத்துவுக்கும் தீவிர இலக்கியத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதில் இருக்கிற உண்மை போலவே. ஒரு விமர்சனம் வைக்கும்போது அவரைப் பிடிக்காதவர் வைக்கிறாரா என்பதைவிட, சரியான காரணத்துக்கான விமர்சனமா என்று பார்க்கவே நான் முயல்கிறேன். வைரமுத்துவுக்கு இலக்கிய ஞானபீடம் எனில் டொனால்ட் டிரம்புக்கு உலக அமைதிக்கு நோபல் பரிசும் கொடுத்துத் தொலைக்கலாம். தொடர்புடைய துறைகளில் இருவரின் தகுதிகளும் அத்தகையவை.
வைரமுத்துவின் திராவிட இயக்கச் சார்புக்காக அவர் இவ்விருதை வாங்கியது குறித்து விமர்சிக்கிறார்கள் என திராவிட இயக்க ஆதரவாளரான ஒரு நண்பர் சொன்னார். திராவிட இயக்க அனுதாபிகளான இலக்கிய நுண்ணுணர்வு கொண்ட நண்பர்களிடம் நான் கேட்க விரும்புவது இதுதான்: திராவிட இயக்கத்தின் வெளிப்படையான ஆதரவாளர்களான இமையத்தின் இலக்கியப் பங்களிப்பைவிட, மனுஷ்யபுத்திரனின் இலக்கியப் பங்களிப்பை விட, (இந்தப் பட்டியலில் இன்னும் சிலரைச் சேர்க்க முடியும். பட்டியல் போடுவதைவிட உதாரணம் சொல்வதே என் நோக்கம் என்பதால் இரண்டு பேருடன் நிறுத்திக் கொள்கிறேன்) வைரமுத்துவின் இலக்கியப் பங்களிப்பு மேலானது இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? அப்படி இருக்கும்போது இது குறித்துப் பேச வேண்டியதும் நீங்கள் தானே. ஆனால் – உங்களுக்கும் பேசுவதில் ஒரு சங்கடம் இருக்கும். வைரமுத்துவை இதற்காக மனுஷ்யபுத்திரனோ இமையமோ விமர்சிப்பார்களா என்றே தெரியாதபோது, இதையெல்லாம் பேசி ஏன் பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டும் என நீங்கள் நினைக்கலாம்.
ஆகப் பெரும்பாலோர் வாழ்க்கையும் ஓர் அட்ஜெஸ்ட்மெண்டில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இடையில் நாம் தர்மாவேசம் கொள்ளும் வாய்ப்பை வைரமுத்து, விருது அமைப்புகள் போன்றோர் வழங்கி, நம் மன அழுத்தத்தை வெளிப்படுத்த வாய்ப்புக் கொடுத்து, அதனால் நம் மன அழுத்தம் குறைப்பதோடு, நம்மை நியாயவான்களாகக் காட்டிக் கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறார்கள்.
தமிழ் இலக்கியத்தில் வைரமுத்துவுக்கு இடமில்லை என நினைக்கிற நான், தமிழ்த் திரைப்பாடல்களில் அவர் ஒரு சாதனையாளர் என ஏற்றுக் கொள்கொறேன். வைரமுத்து பாடல்களுக்காக ஆஸ்கர் வாங்கினால் அதை நான் விமர்சிக்கவே மாட்டேன். திரைப்பாடல்கள் இலக்கியம் இல்லையா என்ற கேள்வி எழலாம். இல்லை என்பதே சுருக்கமான பதில். அவை இலக்கியச் சாயல் கொண்ட அல்லது ரசிக்கக் கூடிய கவித்துவம் கொண்ட வரிகள் சிலநேரம் கொண்டிருக்கும். ஆனால் திரைப்பாடல்கள் இலக்கியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அவற்றை இலக்கியமாகக் கொள்கிறவர்கள் கவிதைக்கு எந்த நன்மையும் செய்வதில்லை.
ஒரு நல்ல எழுத்தாளர் விருதையோ அங்கீகாரத்தைதோ பாராட்டையோ தேடி அலைகிறவர் இல்லை என்பதே என் நம்பிக்கை. இது ஒரு பழைய பள்ளியின் நம்பிக்கை எனச் சொல்வோர் உண்டு.
ஆனால் – அந்த நம்பிக்கைக்குச் சான்றான எழுத்தாளர்கள் என் முந்தைய தலைமுறையிலும் இப்போதும் சிலராவது இருக்கிறார்கள். எழுத்தைத் தாண்டி தனிமனிதர்களாகவும் அவர்களே என் ஆதர்ச நாயகர்கள்! அவர்களுக்குப் பெரிய விருதுகளோ அங்கீகாரமோ கிடைக்காது. ஆனால் இலக்கியம் அவர்களால் முன்னகர்ந்து கொண்டே இருக்கும்.
எழுத்தாளர் ஏன் விருதுக்கும் அங்கீகாரத்துக்கும் பரிசுக்கும் ஆசைப்படக்கூடாது, அவர் என்ன சாமியாரா, அவரும் மனிதர் தானே என்பது போன்ற புத்திசாலித்தனமான கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. அப்படியே போனால், எழுத்தாளர் ஏன் அரசியல்வாதியாக ஆசைப்படக்கூடாது, எழுத்தாளர் ஏன் சினிமா நாயக / நாயகியாக ஆசைப்படக் கூடாது என்று நீட்டிக்கும்போது இத்தகைய கேள்விகளின் அபத்தம் புரியவரும். ஒரு கலை மனம் தன் படைப்புக்கு விலை வைப்பதில்லை. விருதையோ அங்கீகாரத்தையோ நோக்கமாகக் கொள்வது தன் கலை மனத்தைத் தானே குறைத்து மதிப்பிடுவது. இதைப் புரிந்து கொள்ளாதவர்களே இத்தகைய சமாதானம் சொல்லிக் கொள்கிறார்கள். நாமாகத் தேடிப் போகாத நம்மைத் தேடி வருகிற விருதுகளே சரியான அங்கீகாரம்!
அகிலனுக்கு ஞானபீடம் கொடுக்கப்பட்டபோதும் இத்தகைய சர்ச்சைகள் எழுந்தன. தமிழ் இலக்கியத்தில் அகிலனின் இடம் வைரமுத்துவை விடச் சற்று மேலானதுதான். ஆக வைரமுத்து வாங்கியதே பெரிய சறுக்கல். ஞானபீடத்தால் வைரமுத்து சமூக மதிப்பு பெறலாம். வைரமுத்துவால் ஞானபீடம் தமிழ் இலக்கியத்தில் மதிப்பிழந்து விட்டது.