நேற்றிரவு தேங்கிய மழைக்குட்டையில்
மூக்கு நனைக்கும் காகம்
குல்மொஹர் மரத் தண்டருகே
குளம்பு பதித்து நிற்கும் வெள்ளைமாடு
சைக்கிள் மிதிக்கும் உடலில்
வியர்வை புழுக்கும் சூரியன்
தடுப்புக் கம்பி குறுக்கில்
வாலசைக்கும் தொண்டை சிவந்த கரும் குருவி
எவர் இட்டார் எவர் நீரூற்றி வளர்த்தார்
என்றறியா என் உயர வேம்பு
தூரத்துக் காட்சியில் கும்பலாய்க் காணும் மரவரிசை
எல்லாவற்றையும் வாசிப்பதான மனிதனின் கண்ணில்
சதா உறுத்தும் விலைவாசி நிகழின் கவலை மணல்.
– பா.சத்தியமோகன்