This entry is part 6 of 10 in the series 15 மார்ச் 2026

தேவவிரதன்

சில நாட்களுக்கு முன் யாரோ சர்வாந்தர்யாமி ‘வாட்ஸ்அப்’ மூலமாக எனக்கு வந்த ஓர் வீடியோ என் சிந்தனையை தூண்டியது. எல்லா செய்திகளுமே தூண்டாது. சில மிகுந்த எரிச்சலையே கிளப்பும். ஆனால், இது என் மனதை தொட்டதோடல்லாமல், பல எதிர் காலத்தை பற்றிய சிந்தனைகளையும் தூண்டியது.

இந்தியாவில் எதோ ஓர் ஊரில் மரணமடைந்த தன் தந்தையின் சிதைக்கு வேறு எவரோ தீ வைப்பதை கண்களில் கண்ணீருடன் வெளி நாட்டில் உள்ள மைந்தன் ‘வாட்ஸ்அப்’பில் பார்ப்பது போல் போட்டிருந்தார்கள். நம் நாட்டின் வழக்கத்தில் இறந்தால் கொள்ளி வைக்கத்தான் மகன் வேண்டும் என்று வேண்டுவார்கள். அந்த மகன்கள் இன்று எட்டாத தூரத்தில் இருக்கையில் அது எப்படி சாத்தியமாகும்? என்னுடைய உறவு பெண்மணி பல நாட்கள் தனியாக சென்னையில் அவர் மகளின் பிளாட்டில் வாழ்ந்த பின்னர் ஓர் மாதம் போல் உடல் நலம் குன்றி எதோ ஓர் பணிப்பெண் துணையுடன் இருந்தவள் ஓர் நாள் உயிர் விட்டாள். அவள் உடல் மிகவும் நலிந்தபோது செய்தி வெளிநாடுகளில் இருந்த மகன், மகளுக்கு அனுப்பியபோதும் இருவரும் வரவில்லை. அவள் இறந்த செய்தி கேட்டபின்னரே கிளம்பி வந்து இறுதிச்சடங்குகளை செய்து பண பரிவர்த்தனைகள், இதர சம்பிரதாயங்களை முடித்து விட்டு திரும்பினார்.

அவர்களை நான் குறை சொல்லவில்லை; அங்கிருந்து அவர்கள் கிளமப முடியாமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆக, பிள்ளைகள் வர சிலர் ஐஸ் பெட்டியில் உடலை வைத்து பாதுகாக்கின்றனர். இது எல்லோருக்கும் சாத்தியமில்லை என்பது தெரிந்ததே.

நான் பார்த்ததையும், எதிர்பார்ப்பதையும் இங்கு பதிவு செய்கிறேன். பலர் என்மீது கடும் சினம், எரிச்சல், மற்றும் வெறி கூட கொள்ளக்கூடும். ஆனாலும், அவர்கள் ஒரு சிலராகத்தான் இருப்பார்கள். பரவாயில்லை.

இன்று மருத்துவ துறையின் முன்னேற்றம் மற்றும் உபயத்தால் பல முதியோர்கள் நீண்ட நாட்கள் ஆயுளுடனும், கையில் நிறைய காசுடனும், மனதில் ஏகப்பட்ட உற்சாகத்துடனும், உடலிலும் ஓரளவு தென்புடனும் வாழ்கின்றனர். நடுத்தர குடும்பங்கள் இன்று பணக்கார குடும்பங்களாகி விட்டன; அதற்கு கீழே வாழ்ந்த மக்கள், நடுத்தர உயரத்தை அடைந்து விட்டனர் என்பதை மறுக்க முடியாது. அநேகமாக எனக்கு தெரிந்து, நன்கு அறிந்த சமூக வட்டங்களில் பெரும்பாலான இளைய தலைமுறையினர் வெளிநாடுகளில் தான் இருக்கின்றனர். அவர்கள் ஓரளவு நல்ல சம்பாத்தியமும் பெறுகின்றனர். அதன் பலனாகத்தான் இங்குள்ள பெற்றோர்கள் பலர் வசதியான முதியோர் இல்லங்களிலும், வசதி அற்றவர்கள் தனியாகவோ, இல்லை தரம் குறைந்த முதியோர் இடங்களிலோ வாழ்கின்றனர். ஓர் சிலர் தனியாகவே கூட ஓர் வேலைக்காரன் அல்லது வேலைக்காரி உதவியுடன் தனி வீடுகளில் கூட இருக்கின்றனர். நன்று. ஓர் சிலர்  மனதில் ஏகப்பட்ட உற்சாகத்துடனும்  சில நேரங்களில் தோற்றாலும், மருத்துவ துறையின் முன்னேற்றம் மக்களின் ஆயுள் காலத்தை வெகுவாகவே நீட்டிக்க உதவுகிறது என்பது எவராலும் மறுக்க முடியாத நிஜம்.

பல நோய்கள் பீடித்து இருந்தாலும், மருந்துகள் மூலம் அவைகள் ஓர் அளவுக்கு தீர்க்கப்படுகின்றன. ஆனால், அவைகளையும் தாண்டி ஒருவர் வாழ்க்கை தொடருமானால் அதன் பலன் என்ன? விளைவுகள் என்ன? எந்த நோயுமேயில்லை என்றாலும் முதுமை என்பதே ஓர் சாபம்தான். நோய்தான். சில காரியங்களில் ஈடுபட முதுமை கட்டாயம் தடையாகவே இருக்கும்.

மரணம் என்ற முடிவு அவர்களை தொடாமல் அலைக்கழித்து கொண்டே இருக்க போவது நிஜம். அப்படியானால், இந்த வாழ்க்கையின் முடிவு என்ன?

எழுபது அல்லது எண்பது வயதுக்கு மேற்பட்ட தாயையோ, தந்தையையோ எந்த அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலிய மகனோ மகளோ அழைத்துக்கொண்டு சென்று வைத்துக்கொள்வார்கள்? வைத்துக்கொண்ட அந்த ஆட்கள் அந்த நாட்டில் சென்று நடைப்பிணமாக வாழ்வதில் என்ன பயன்? பணம், வசதிகள் பலவற்றை விலை கொடுத்து வாங்க முடியும்; ஆனால், உடல் நலம், உற்சாகம், மன அமைதி இவற்றை எந்த நிறுவனத்தில் விலைக்கு வாங்க முடியும்? அல்லது முடியப் போகிறது?

இதிகாச புராண காலங்களில், அரசர் மகனுக்கு பட்டம் கட்டி, முடி சூட்டி   அவனை ஆட்சியில் அமர்த்தியபின் தான், தனது மனைவியுடன் ‘வானப்ரஸ்தம்’ என்னும் கண் காணாத வாழ்க்கை வாழ காட்டுக்கோ அல்லது வேறெங்கோ சென்று விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதாவது, ஓர் எல்லைக்குப்பின் வாழ்க்கை என்பதற்கு எந்த அர்த்தமும், வேலைகளும் இருப்பதில்லை என்பதால், உலக வாழ்க்கை மற்றும் சுகங்களை துறந்து கண்காணாமல் சென்று விடுவது என்பதே அது.

மரணத்திற்கும், இந்த மாதிரி வான பிரஸ்தத்திற்கும் என்ன வேற்றுமை?

இன்றைய வானப்ரஸ்தத்தை மனிதர்கள் பணமும், பலமும், ஆசைகளும் நிறைய இருப்பதால் மாற்றி அமைத்துக் கொண்டு முதியோர் இல்லத்தில் சகல சௌபாக்கியங்கள், சௌகர்யங்களுடன் வாழ்கின்றனர். ஆனால், அதுவும் எத்தனை நாட்களுக்கு?

விடை இல்லாத கேள்விதான்.

ஏதோ ஓர் தருணத்தில் அவர்களே இறுதியை விரும்பி ஏற்கும் காலமும் வரத்தான் போகிறது. அதன் பெயர் அப்போது கருணைக்  கொலையாக  இருக்காது. விரும்பி ஏற்கும் முடிவாக இருக்கப்போகிறது.

****

அது என்ன? மரணத்தை விலை கொடுத்து வாங்கலாம். ஆம்.

அதிர்ச்சியாக இருக்கிறதா? கருணைக்கொலை என்பதையே குற்றம், குரூரம் என்று கூறும் இந்த நாட்டிலோ, எந்த நாட்டிலோ முதுமை முற்றியவர்களை வலிய உலகை விட்டு அனுப்ப முன் வருவார்களா?

வருவார்கள். வரப்போகிறார்கள். பொறுத்திருந்து பாருங்கள்.

பணத்திற்காகவும், பதவிக்காகவும், சொத்துக்களுக்காகவும், விரோதத்திற்காகவும், ஜாதி மத வேறுபாடுகளுக்காகவும், அரசியலுக்காகவும், காதலுக்காகவும், பாலுணர்ச்சி வெறிக்காகவும் தினமும் நாம் படிக்கும், பார்க்கும், கேட்கும் கொலை செய்திகளைக் காட்டிலும் நான் சொல்வது கொடுமையானதா என்ன?

வந்த வேலை முடிந்துவிட்டது, பார்க்க வேண்டியவை எல்லாம் பார்த்தாகி விட்டது, அனுபவிக்க வேண்டிய சுக, துக்கங்களை எல்லாம் அனுபவித்தாகி விட்டது. அப்புறம் என்ன? கண் பார்வை, காது கேளாமை, அதீத மறதி, குழப்பான சிந்தனைகள், மனச் சிதைவு இவைகளுடன் ஆயிரம் நோய் நொடிகளுடன், உடல் உபாதைகளுடன், எல்லாவற்றிற்கும் பிறர் உதவியை நாடிக்கொண்டு, மூளை, மனம் இவற்றின் சக்திகளை எல்லாம் இழந்த பின் ஓர் நடை பிணமாக வாழ்வதில் வாழ்பவருக்கோ இல்லை அவரை பாதுகாப்பவருக்கோ என்ன சுகம் இருக்க முடியும்?

மனித வாழ்க்கையில் சுகமும், மகிழ்ச்சியும் தரக்கூடிய எல்லா கதவுகளும் அடைக்க பட்டபின் வாழ்க்கையை தொடருவதால் என்ன சுகமோ, திருப்தியோ காண முடியும்?

அந்தண வகுப்பை சேர்ந்தவர்கள் செய்யும் ‘சந்தியா வந்தனத்’தில் எம தர்ம ராஜனை வேண்டி ஓர் ஸ்லோகம் வரும். அது அவனை குறித்த நேரத்தில் அவன் கடமையை செய்து உலகத்தையும், அதை சொல்பவரையும் காக்க வேண்டும் என்பதாகும்.

அது எப்படி? பல வழிகள் இருக்கலாம்; இருக்கிறது. இருக்கின்றன.

இது ஒரு விதமான ‘கருணைக் கொலை’ என்று கருதப்படுமோ? வாத, பிரதிவாதங்கள் எழுமோ? தெரியவில்லை.

ஓர் நாள் இதுவும் நடக்கத்தான் போகிறது. பார்ப்பதற்கு நான் இருப்பேனா என்று தெரியாது.

Series Navigationஉங்களால்   முடியும் !ஈரான் அமெரிக்க மோதல் 2026