This entry is part 4 of 8 in the series 29 மார்ச் 2026

   லாவண்யா சத்யநாதன்

 ஒற்றனாயிருந்திருந்தால்

 நெற்குதிரில் பொன் நிரப்பியிருக்கலாம்..

 உலகைச் சுற்றி வந்திருக்கலாம்.

 உல்லாசங்களில் மகிழ்ந்திருக்கலாம்.

 அரசவாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.

 கால்கட்டென்ற பெரியோர் சொல்பொருள்

 விளங்காமல் வாய்ப்புகளை தவறவிட்டோமென்று

 விரக்தியிலெண்ணாதவன் உலகிலில்லை..

 குடும்பத் தலைவன் பதவி

 குடும்ப அட்டையில் மட்டும் நிற்க

 ஆட்சிமாற்றம் நிகழ்வதை

 பணம் வழங்கும் யந்திரமாவதை

 முகம் கருப்பு வெளுப்பாகும் வயதில்

 ஞானமின்னல் தோன்றி மறையுமொரு தருணம்

 நினத்துப் பாராதவன் ஒருவனுமில்லை.

 அதற்காக மனமுடைவது வீரனுக்கழகல்ல.

 அழகுமீனாட்சியைப் பார் – பட்டாடையுடுத்துகிறாள்.

 சொக்கனுக்கெப்போதும் நூலாடைதான்.

 கற்பகத்தைப் பார்

 காது மூக்கு கழுத்து கைகள் கால்களில்

 கனகம் வைரம் வெள்ளியில் மின்னுகிறாள்.

 கபாலியைப் பார். அவனுக்கு மிஞ்சியது

 ருத்திராட்சக் கொட்டைதான்.

 அவனைவிடவா நாம் குறைந்து போனோம்?

  எலித் தொல்லைக்கு பூனை வளர்த்த

  ஏமாளியானோமென்று புரியும்போது

  வாழ்க்கையை நினைத்து

  சிரிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் சிதம்பரம்!

  இல்லையேல் நெஞ்சுவலி வரும்.

  —–லாவண்யா சத்யநாதன்.

.

.

Series Navigationமகிழ்ச்சியைக்கையகப்படுத்துதல் – 7கதைப்போமா நண்பர்கள் குழுமம் – லாவண்யா சுந்தரராஜன் எழுதிய “முத்துமாலை” சிறுகதை