ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
புயல் மையங்கொண்டிருக்கிறது.
புயலின் மையத்திலிருப்பவர்களின்
பீதியை
அயல்மண்ணிலிருப்பவர்களால் உணர முடியாது.
கோப்புக்காட்சிகளிலிருந்து புயலின் பேரழிவுப் படங்களை
‘லைவ்’வாகக் காண்பித்துக்கொண்டிருக்கும் ஊடகங்களுக்கு
புயல் ஒரு செய்தி மட்டுமே.
கரையைக் கடப்பதற்கு முன்னும் கடந்த பின்னும்
இன்னுமின்னுமாய் சேதங்களைக்
கண்முன்னம் காண்பது ஒரு வலி யெனில்
காற்றில் முறிந்துவிழுந்த மரங்களின் அடியில்
குற்றுயிரும் குலையுயிருமாய் கிடப்பது வேறு வலி
பேய்க்காற்று சுழன்றடித்து கண்முன்னம் குழந்தையை வாரியிழுத்துச் சென்று
கடலுக்குள் தள்ளிவிடுவதைக் காணும் கையறுநிலை கொடிதிலும் கொடிது
உடையா கோபுரங்களில் பாதுகாப்பாயிருப்போருக்கும்
புயல் பெரும் அச்சுறுத்தல்தான்
கட்டிடத்தின் அடியில் சேரும் நீர்
கட்டிடத்தின் மீது வீசியறையும் காற்று
அதை இடிபாடுகளாக்கிவிடாது என்று
தீர்மானமாய்ச் சொல்லவியலாது.
பொழுதுவிடிந்தால் தெரியும்
சேதாரம் மீளமுடியாத அளவு அதிகமா
அல்லது மீண்டுவிட முடியுமா என்று.
இன்றிரவு உறங்கச்செல்லுமுன்
புயலின் மையத்தில் சிக்குண்டிருக்கும்
மனங்கள் பல………
- வானிலை அறிக்கை
- இணைப்பு வழித்தடங்களுக்கான போர்
- ஆண் பால் -10