This entry is part 6 of 6 in the series 16 ஆகஸ்ட் 2026

                                                             

[எல்லா எழுத்தும் ‘சகஜமான மனநிலையில் வாசிப்போருக்கு’ என்றே யோசித்து எழுத முடியாதல்லவா! யாரோ ஒருவர் உங்களின் நம்பிக்கையைச்(trust) சிதைத்து உங்கள் மீதே உங்களுக்கு வெறுப்பையும் கோபத்தையும் ஊட்டிச் சென்று மீண்டும் நம்பிக்கையைப்(hope) பற்றியிருப்பதற்கான வாய்ப்புகளைத் தற்காலிகமாகச் சூரையாடிச் சென்ற பொழுதில் இதை வாசிக்கவும்! கடக்கவே முடியாது என நீங்கள் நினைக்கும் ஒரு கொடிய இரவுக்கு இவ்வெழுத்து நிச்சயம் ஆறுதலாக இருக்கும் என நம்புகிறேன்]

            மன்னிப்பு – எவ்வளவு கனமான வார்த்தை! நிற்க. இங்கு நான் குறிப்பிடுவது வழமையான பிறரை மன்னிப்பது பற்றியல்ல. நம்மை நாமே மன்னித்தல் பற்றி. பிறரை நாம் மன்னிக்கலாம்; அல்லது மன்னிக்காமல் போகலாம். அவர்களை மறந்து விட்டோ அவர்களிடமிருந்து தூரமாக விலகிச் சென்றோ வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்லலாம். பிறரை மன்னித்தே ஆக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அது அந்தந்த தனி நபர் எதிர்கொண்ட துரோகம், நெருக்கடி, சூழல் தந்த வலி ஆகியவற்றைப் பொறுத்தது. எனவே இதில் பொது விதி என்ற ஒன்று இருக்க முடியாது.

“மறப்போம்! மன்னிப்போம்!”, “மன்னிப்போம் மறப்பதற்காக!”…. என்றெல்லாம் எதற்கு இந்த வார்த்தை விளையாட்டுப் பிதற்றொலிகள்? இகழ்வாரைப் பொறுத்து, மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்று, இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்று, உண்ணாது நோற்கும் பெரியோரைப் பின் தள்ளி பிறர்சொல்லும் இன்னாச்சொ நோற்று…. என இவற்றையெல்லாம் கடைபிடிப்பதன் மூலம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ், துறந்தாரின் தூய்மை யுடையர் என்றெல்லாம் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து போற்றித் தரப்படும் பட்டங்களை வைத்து நாவைக் கூடச் சுத்தம் செய்ய இயலாது.

அதற்காகத் திறனல்ல தற்பிறர் செய்கையில் நோநொந்து அறனல்லாதவற்றைச் செய்ய வேண்டியதுமில்லை. அவர் நாண நன்னயம் செய்து அவரை ஒறுக்க வேண்டியதும் இல்லை. முதலில் நன்னயம் செய்தல் ஒறுத்தலே கிடையாது என்பது வேறு விஷயம். ஏனெனில் இவை எல்லாம் அறத்தைக் கெட்டியாகப் பற்றியிருக்கும் சமூகத்திற்கானது. இப்போது இவை எல்லாம் அதரப் பழையதாகிவிட்டன. நமக்குத் தீமை செய்த அந்த அறமற்ற உயிர்களின் இவ்வுலக இருப்பை முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டு நம் அன்றாடத்தைத் தொடரலாம். ஆனால் நம்மிடம் இருந்தே நாம் ஓட முடியாதில்லையா?

            சில உறவுகள்/நட்புகள், அவர்களால் உருவாகும் இக்கட்டான சூழல்கள், அவர்களது சூழ்ச்சி – எல்லாவற்றையும் குறித்து ஏதோ ஓர் உள்ளுணர்வு தொடக்கத்தில் இருந்தே நம்மை எச்சரிக்கை செய்திருக்கும். ஆனால் அவர்களை ஆத்மார்த்தமாக நம்ப விழையும் முயற்சியில் அவ்வெச்சரிக்கைகளைப் புறந்தள்ளியிருப்போம். அதன் விளைவாகக் கடுமையான பாதிப்புகளுக்குள்ளான பின் அந்த உள்ளுணர்வு ஓர் ஓரத்தில் இருந்து நம்மைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்க்கும். அத்தருணங்களில் நம்முள் உருவாகும் மனச் சோர்வை (sick feeling) அத்தனை எளிதில் தூக்கிப் போட்டு விட முடியாது.

ஆற்றுப்படுதல்(healing) நம்முள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது “எதற்காக இம்மனிதரை நம் வெளியில்(space) அனுமதித்தோம்?”, “ஏன் நம் அரண்களைத் தளர்த்திக் கொண்டோம்?”(feeling vulnerable), மிக முக்கியமாக “திரும்பத் திரும்ப தனது இயல்பை கூச்சமோ வெட்கமோ இல்லாமல் பறைசாற்றிய இன்னாருக்கு எந்த நம்பிக்கையில் மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் வழங்கினோம்?” போன்ற கேள்விகளின் இறுக்கம் தாங்காமல் மூச்சடைக்கும் போது நம்மீதுதான் கோபமும் எரிச்சலும் கட்டுக்கடங்காமல் வரும். “உனக்கெல்லாம் அறிவே கிடையாதா?” என்ற நம்மை நோக்கியே நாம் கேட்கும் கேள்வி காதில் அல்ல மண்டைக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.

நமது நம்பிக்கையோடு சேர்ந்து நம்மில் ஒரு பகுதியும் கொஞ்சமாக உடைந்திருக்கும் போது “இதுவும் கடந்து போகும்; சரியாகிவிடும்” என்று அமைதி கொள்ள முனைவதற்கும “இல்லை. போதும். இதற்கு மேல் என்னால் பொறுத்துக் கொள்ளவோ தாங்கிக் கொள்ளவோ முடியாது” என்று வெடிப்பதற்கும் இடையே மாறி மாறி சுழற்றியடிக்கப்பட்டுக் கொண்டிருப்போம். ஒரு நேரம் தன்னம்பிக்கை மலையளவு மனதில் வந்தமரும். மறு நேரம் மொத்தமும் காணாமல் போய் உள்ளுக்குள் சுருண்டு கிடக்கச் சொல்லும்.

இவ்வளவு கலக்கங்களுக்கும் அம்மனிதர்களைக் கை காண்பித்து அவர்களுக்கு நம் வாழ்க்கையில் பெரிய இடத்தைத் தூக்கித் தர வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அது உண்மையும் இல்லை. எதார்த்தம் என்னவெனில் அவர்களில் நம்பிக்கை கொள்ள ஏதுவாய் நம்முள் இருந்த மென்மையின் மீது பாறாங்கல்லாக விழுந்த அடியைத் தான் எதிர்கொள்ளத் தெரியாமல் தவிக்கிறோமாக இருக்கும். இனி பழைய மாதிரி மிக இயல்பான வெகுளித்தனத்துடன் ஒருவர் மீது நம்பிக்கை கொள்வதைச் சாத்தியமற்ற ஒன்றாக மனதிற்குக் கற்பித்ததாலேயே அத்துரோகம் ஆகக் கனம் வாய்ந்ததாக நம்மை அழுந்தும்.

பிழைத்திருக்கும்(survival) காலகட்டத்தில் நம்முள் கோபம் உறைந்தே இருக்கும். அடுத்தவர் செய்த தவறுக்கு நம் இயல்பும் வாழ்வும் மாறிவிட்ட எதார்த்தம் புரியும் போது உண்டாகும் அக்கோபம் மிகவும் இயல்பானதே. அக்காலகட்டத்தில் நம் வாழ்வின் தெரிவுகள் எல்லாம் அச்சூழலைச் சமாளிக்கவென எடுக்கப்பட்ட முடிவுகளாகவே இருக்கும். அதை முழுமையாக உணருகையில் கோபம் விண்ணை முட்டி நிற்கும். அத்தருணத்தில் கோபம் நல்லது என்றே நினைக்கிறேன். தெளிவைத் தரவல்ல கோபம் அது. நமது எல்லைகளைக் கடுமையாக வரையச் சொல்லிப் பணிக்கும் கோபம் அது. அக்கோபம் நமது காயங்கள் ஆறிவிட்டதையோ ஆறத் துவங்கியிருப்பதையோ சுட்டி நிற்கும். நமது பச்சாதாபத்தையும் அன்பையும் விட நம் எல்லைகள் அழுத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிய வைக்கவே சிலர் நம வாழ்வில் வந்து செல்கிறார்கள் போலும்.

ஆகக் கொடுமையான ஒரு கேள்வி சதா சர்வ நேரமும் நம்மைப் பிய்த்துத் திங்கும். “ஏன்?”

“I don’t deserve this suffering. ஏன் எனக்கு மட்டும் இதெல்லாம் நடக்கணும்?” – பதிலே இல்லாத இக்கேள்வியைக் கடப்பதுதான் மிகப்பெரிய சவால். கடுமையாக முயன்று எல்லாவற்றையும் மறக்கும் துணிவைப் பெற்றாலும் கூட இக்கேள்வியின் துரத்துதலில் இருந்து தப்பித்தல் கடினம். கர்மா என்ற ஒன்றின் இருப்புக்காக மனம் தவியாய்த் தவிக்கும். “யாரை/எதை உடைத்திருக்கிறோம்?” என்ற பிரக்ஞை சற்றும் இன்றி சர்வ சாதராணமாக வாழும் அவர்களைக் குற்றவுணர்வு அரித்தெடுக்காதா? ஒன்றுமே நடக்காதது போல் நடந்து கொள்பவர்களுக்கு அமைதியான பொழுதுகளில் தாம் கொடும் வலிகளைத் தந்து உடைத்த மனதின் கனம் நினைவுக்கு வராதா? அப்படியே வந்தாலும் குறைந்தபட்ச தண்டனை இவையெல்லாம்.

மெல்ல மெல்ல கசப்புகளையெல்லாம் காற்றில் கரைக்கும் போது ஓர் அற்புதம் நிகழும். வடுக்களை வாரி வழங்கிய அம்மனிதர்கள் நம் ஓர்மையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகல ஆரம்பிப்பார்கள். அவர்களது முகம், குரல், அவர்களிடமிருந்து ஈட்டியெனெ இறங்கிய சொற்கள், அவர்களுடன் பயணிக்க நேர்ந்த வலி மிகுந்த அக்காலகட்டம்,…. எல்லாமும் மறக்கப்படும். அந்த அழகிய மறதியை நோக்கிய நகர்வு விசனப்பட்டுக்(regret) கொண்டேதான் நிகழும் எனினும் நிகழ்ந்தே தீரும் என்பதில்தான் எத்தனை ஆசுவாசம்?  

நம்மை நாமே நொந்து கொள்ளும் சூழல்களில் “அன்று உனக்கிருந்த அனுபவத்திற்கும் பக்குவத்திற்கும் ஏற்றாற் போல் அதனை கையாண்டாய். Stop blaming yourself for not knowing any better! பரவாயில்லை. இப்போது புரிந்துவிட்டதுதானே? விடு” என்று ஏதோ ஒரு குரல் வந்து ஆறுதல் சொல்லி தேற்றும்.

இதைத் தவிர பொருத்தமான காரணமோ நியாயப்படுத்துதலோ இருக்கவே முடியாது. அல்லது

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்

என்றும் தெளிந்து தேரலாம்.

தன்னிரக்கம் எல்லாம் வேண்டாம். கொஞ்சம் நம்மையே நாம் கருணையுடன் நடத்தினால் போதும். நம்மையே நாம் மன்னித்து விட்டால் போதும். வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிச் செல்ல வேறு என்ன பெரிய வழி இருக்கிறது?

  • சோம. அழகு

Series Navigationதேவகி