This entry is part 5 of 7 in the series 11 அக்டோபர் 2026

வே. நாராயணசுவாமி

(ருட்யார்ட் கிப்ளிங் இயற்றிய “If” கவிதையின் அறவியல் உள்ளீட்டால் தூண்டப்பட்டு, தமிழின் செவ்வியல் கவிமரபில் மறுபடைப்பாக உருவான “ஆயினும்” என்னும் கவிதை)

சுற்றங்கள் தத்தம் சூழ்ச்சியைச் சொறிந்து
உன்மேல் பழிகளை உரைத்திடும் போதும்,
நிலைபிறழாது நெறியொடு நிற்றலும்;

உலகினர் யாவரும் உன்னையே ஐயுற,
உன்னை நீ நம்பி, அவரவர் ஐயத்தின்
காரணம் யாதென செவிமடுத்துக் கேட்டலும்;

காத்திருப்பதனால் களைப்புறாதிருத்தலும்,
பொய்யுரை சூழினும் பொய்மை வழி செல்லாது,
பகைவர் வெறுப்பினும் வஞ்சகம் வளர்க்காது,
நல்லவன் நானென நாவால் நவிலாது,
அறிவுடை யானென அறைபறை சாற்றாது,
அடக்கமிகு அமைதியில் அடங்குதல் ஆயினும்;

கனவுகள் காணினும் கனவிற்கு அடிமையாய்
உனதுயிர் முழுதும் ஒப்படையாமலும்,
எண்ணுதல் இயலினும் எண்ணமே குறியென
நண்ணும் வழிபிறழ்ந்து (உருக்)குலைந்திடாதிருத்தலும்;

வெற்றியும் தோல்வியும் எதிரெதிர் வருகையில்
வேடம் பூண்ட பொய்யராம் இவ்விருவரை
ஒருநிகர் வஞ்சகரென ஒருபுறமொதுக்கி

மறுபுறம் சமநிலை ஓர்தலும்;

நீயுரை செய்த சீர்மிகு வாய்மையைத்
தீயவர் திரித்து சிறுமதி மூடரைப்
பிணைக்கும் வலையென பின்னுதல் கேட்டும்
விண்ணெழு வெற்பென வெம்மி வீற்றலும்;

தன்னுயிர் முழுவதும் தந்து வனைந்திட்ட
அரும்பெரும் வளங்கள் அழியக் கண்டும்,
தேய்ந்த கருவிகள் வாய்த்த துணையாக,
தாழ்ந்து மறுபடி தாமே உழைத்துத்

தாழ்விலா தகைமை ஏற்றலும்;

ஈட்டிய வெற்றிகள் அனைத்தையும் திரட்டி
ஓர் குவியலாய் உறு பணயம் வைத்து,
ஒருகணச் சுழற்சியில் ஒழித்திட நேரினும்,
தொடங்கிய இடத்தே துணிவுடன் தொடங்கி,
இழந்த பெரும்பொருள் இத்துணை என்றொரு
தழல் மூச்செறியா தீரமோடிருத்தலும்;

நெஞ்சமும் நரம்பும் நெடுந்தசை வலியும்
தத்தம் ஆற்றல் தேய்ந்த பின்னரும்,
உனது குறிக்கோள் உறுதுணை ஆகிட
ஊக்கமுடன் உன் பணி ஆற்றலும்;

உன்னிடத் தெஞ்சிய உறுபொருள் யாதுமின்றி,
“நிலைத்திரு” எனும் திண்ணிய மனவலி
ஒன்றே உள்ளிருந்து உரைப்பதாதலால்
நெஞ்சமதில் வலிமை நிறைந்து மகிழ்தலும்;

மக்களுக்குரைத்தும் மாட்சிமை காத்தும்,
மன்னரொடு நடந்தும் பொது மக்கள் நலம் பேணியும்;

பகைவரும் உன்னைப் பாழ்செய வியலாது,
அன்புடை நண்பரும் அளவுமீற் றுன்னை
அலைத்திடா வண்ணம் அகநிலை தேர்ந்தும்;

யாவரும் மதிப்புற ஏற்றிடல் ஆயினும்,
யாரையும் அளவுக்கு மேலெனக் கொள்ளாது
நடுநிலை நிற்றல் நன்குனக் கியலினும்;

இரக்கமில்லா இறுகிய ஒரு நிமிடமே இருப்பின்
அவ்வறுபது வினாடிகள் அனைத்தையும் நிரப்பி,
ஒவ்வொரு நகர்விலும் ஓய்விலா முயற்சியால்
இலக்கைக் குறித்து துணிவுற ஏகினும்;

இவ்வுலகு உனதே; இதனுறை யாவையும்
இக்கணமே உனதென ஆகும்;

அவற்றினும் மேலாய்,

அறிவும் அடக்கமும் ஆளுமையும் அருளும்
அனைத்தையும் வென்ற முழுமனிதமாவாய் மகவே!

Series Navigationதட்டம்மை தவிர்க்க  தடுப்பூசி முக்கியம்!மூங்கை