6 ஆகஸ்ட் 2012

 

 

செவ்வாய் கிரகத்தைச்

சதுரஅடி சதுரஅடியாய்ச்

சலித்துச் சலித்துச்

சொல்லி  விட்டோம்

 

கணினியில்

‘செவ்வாய்’ என்று தட்டினால்

கொத்துக் கொத்தாய்ச்

செய்திகள் இறங்கிக்

‘குறித்துக் கொள்’

என்கிறது

 

ஆனாலும் நாம்

சும்மாவா இருக்கிறோம்?

 

சூரியக் குடும்பத்தில்

மூன்றாம் மடியில் நாம்

நான்காம் மடியில் செவ்வாய்

இடையே கிடக்கும்

அண்டம் கடக்க

வண்டியொன்று செய்தோம்

அது செவ்வாயில் இறங்கி

எழுதியிருக்கிறது

நம் முகவரியை

 

6 ஆகஸ்ட் 2012

மனித வரலாறு

மறக்கமுடியாத நாள்

 

இதனால் நாம்

பெற்றதென்ன?

விட்ட தென்ன?

கூட்டிக் கழித்தால்

‘மனிதனால் முடியும்’ வரிசையில்

இது இன்னொரு ‘முடியும்’

அவ்வளவுதான்

 

வினாடிக்கு

கோடி மைல் என்று

கோடி ஆண்டு பறந்தாலும்

அடுத்த விளிம்பொன்று

அண்டத்தில் இல்லை

இன்று மனிதன் கடந்தது

ஒன்றிரண்டு மில்லிமீட்டரே

 

அமீதாம்மாள்

Series Navigationசிவாஜி ஒரு சகாப்தம்கருப்பு விலைமகளொருத்தி