1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை
நீலகண்டன் வாசல் திண்ணையில் மேற்கு வடமேற்கில் ஆரோகணித்திருந்தான். முதுகில் உதய கால வெய்யில் இதமாகப் படர்ந்திருந்தது. கற்பகம் பின்னால் இருந்து ஆலிங்கனம் செய்த மாதிரி சுகம்.
அதெல்லாம் இப்போ அதிகமாகக் கிடைக்கிறதில்லை. தூரம் நின்னு போச்சு. இச்சை எல்லாம் கட்டுக்குள்ளே அடக்கிக்குங்கோ இல்லே தச்சனைக் கூப்பிட்டு பலகை அடிச்சு அரைக் கட்டுலே அடைச்சு மூடுங்கோ. போற வழிக்குப் புண்ணியம் தேடிண்டு கோவிலுக்கு நிதம் போறது தான் இந்த வயசுக்கு அழகு.
தொட்டாலே கற்பகம் அவசரமாகக் கழன்று கொள்கிறாள். ராத்திரி பலவந்தமாகப் படுக்க வைத்தால், சுரைக் குடுக்கை மாதிரி தொங்கிப் போயாச்சு, அதை ஏன் பிடிச்சு நீங்களும் வேலை மெனக்கெடுத் தொங்கணும் என்று மாரை மூடிக் கொள்கிற தீவிரம் அவனுடைய ஆசையை எதிர்த்து இல்லை என்பது மட்டும் புரிகிறது. முப்பது வருஷ தாம்பத்தியத்தில் தேய்ந்து போன உடம்பு அது,
இன்னும் பலவந்தமாக உள்ளே போனால், எங்கே போக, வழி முட்டி உடனே வெளியே வந்து. என்னடா கஷ்டம் ராமச்சந்திரா. சொன்னேனே, கேட்டேளா, திரும்பிப் படுங்கோ. சுக்கு மாதிரி உலர்ந்து கிடக்கு. இந்த வயசுக்கு இதான்,
ஆனாலும் சாப்பாட்டிலும் சிஷ்ருஷையிலும் எந்தக் குறைபாடும் அண்டாமல் பார்த்துக் கொள்கிறாள்.
இந்தப் பேப்பர்க் கடன்காரன் கொண்டு வந்து வீசி எறிஞ்சா காந்தி, நேரு, டி.பி.ராஜலெட்சுமின்னு நாலு விஷயம் படிச்சுட்டு குளிக்கப் போகலாம். காந்தியும் நேருவும் கிடக்கட்டும். அந்த நடிகை. தோள்பட்டையும் மத்ததும் என்னமா உருண்டு திரண்டு. கல்யாணமான புதுசுலே கற்பகத்துக்கு வாச்ச மாதிரி. விஷயம் இல்லாமலா சினிமா ராணின்னு பட்டம் எல்லாம் கொடுத்திருக்கான். பல்லு ஒண்ணொண்ணும் முத்து மாதிரி. பார்த்துண்டிருந்தாலே ஸ்கலிதமாயிடும்.
அட என்னடா எழவு. எப்பப் பாரு இதான் ஞாபகத்துக்கு வரணுமா. ரிடையர் ஆன அப்புறம் ஒட்டுமில்லாம உறவுமில்லாம ஒழிஞ்சு போகும்னு பார்த்தா வந்துட்டேன் வந்துட்டேன்னு சதா முந்தி வந்து நின்னு தொலைக்கறது சனியன்கள்.
கற்பகம் ஏன் இன்னும் காப்பியோடு வரவில்லை? அவன் எழுந்து ‘கபாலீசுவரா, கற்பகம், கந்தா சரவணா கணபதி’ என்று கைலாசக் குடும்பத்து தெய்வங்களுக்கு அட்டண்டென்ஸ் எடுக்கிற சத்தத்தோடேயே பில்டர் மூடி தரையில் வைத்து காபி டபராவில் டம்ளர் மோதுகிற சத்தம் கேட்குமே.
இந்த சனியன் கொலு வைத்து முழுக் கூடத்தையும் அடைத்து கதவை வேறே சாத்தி வைத்திருப்பதால் காப்பி வேண்டும் பதிகம் கற்பகத்துக்குக் கேட்டிருக்காது. புதுசாக வாங்கிய பொம்மைகளை யாராவது பார்த்து கண் பட்டுவிடும் என்று பகல் முழுக்க கூடத்துக்குள் விரியும் ரேழிக் கதவுகள் மூடியே கிடக்கின்றன.
கொலுவை சனியன் என்று திட்டியதற்காக கபாலீசுவரன் வகையறாக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தபோது நீலகண்டன் மனதில் இன்னார் மேல் என்றில்லாத கோபம் சுறுசுறுவென்று ஏறிக் கொண்டிருந்தது.
பேப்பர் போட்டு இழவெடுக்கிற பையன் எங்கே தொலைந்தான்? அஞ்சு மணிக்கு வந்து விழற காகிதக் கட்டு இன்னும் வந்து சேரல்லியே? வந்து நாலு பக்கம் புரட்டி, ஆபிச்சுவரியிலே யார் மண்டையைப் போட்டான்னு படிக்க ஆரம்பிச்சாத்தானே கலகலன்னு அடிவயிறு ஆபேரி ராகம் பாடும்? கிரமமா கொல்லைக்குப் போகாட்ட பாம்பே கக்கூஸ் கட்டி வச்சதுக்கு என்ன பிரயோஜனம்? பேப்பர் இல்லாம நடக்கிற சங்கதியா இதெல்லாம்?
சரி பேப்பர் வந்து அதிலே யாரும் நேத்து செத்துப் போனதா அச்சடிச்சு வராட்ட? கோபத்துக்கு நடுவிலும் நீலகண்டனுக்கு சந்தேகம். யாரும் சாகாம ஒரு நாளும் இருக்குமா என்ன? இழுத்துப் பறிச்சுக் கிடந்து உயிரை விடறவங்களும், ஒரு இருபது வருஷம் முந்தி அவன் எஜமானன் வெள்ளைக்கார துரை பரலோகம் போனமாதிரி படார்னு போறவங்களும் இல்லாம அஸ்தமிச்சா போயிடுவாங்க.
சட்டென்று சிநேகிதன் நாயுடு ஞாபகம் வந்தது. அவன் ரொம்பவே சுகவீனப்பட்டு கிடக்கறதா பென்ஷன் வாங்கப் போனபோது யாரோ சொன்னார்களே. போய்ப் பார்த்துட்டு வந்துடணும். இன்னிக்குப் போனா என்ன?
என்ன எழவெடுக்க? வீடு முழுக்க மண் பொம்மையை உக்காத்தி வச்சு காலை நீட்டி நடக்க இடம் இல்லே. காப்பி கிடையாது. பேப்பர் வரலே. கொல்லைக்குப் போகாம எப்படி மத்தக் காரியத்தைப் பார்க்கறது?
பேப்பர் பையன் காந்தி குல்லாயும் அரையில் முக்கால் காலுக்கு மூடிய சோமனும், கதர் சட்டையுமாக கை நிறைய பேப்பரை அள்ளியபடி படி ஏறி வந்தான்.
நேரம் ஆனதுக்கு கோபித்துக் கொள்ள முடியாது. காந்திக்காரன். சுதந்திரம் வாங்குகிற வேலையில் மும்முரமாக இருக்கப்பட்டவன். ஒழிஞ்ச நேரத்தில் தான் பேப்பர் போட்டாகணும். தேசத்துக்கும், நீலகண்டனுக்கும் சுதந்திரம் வேணும். அப்போ, இந்த சிரமத்தை எல்லாம் பொறுத்துத்தான் ஆகணும்.
பேப்பரைக் கையில் வாங்கியபோது தமிழ் வாராந்தரியும் கூடவே கொடுத்தான் பையன். இது என்ன இன்னிக்கு அதிசயமா? வாரக் கடைசியில் வருமில்லையோ?
சரஸ்வதி பூஜைக்காக கனமான புஸ்தகமாப் போட்டிருக்காங்க சாமி. ரெண்டு நாள் முன்னாடியே அடிச்சு அனுப்பிட்டாங்க.
பையன் விளக்க. நீலகண்டன் பேப்பரைப் பிரித்தபடி தலையாட்டினான்.
அவன் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருந்ததாக உணர்ந்து தலையை நிமிர்த்தினான்.
சாமி குறுக்கெளுத்து போட்டி நீங்க அனுப்பறீங்களா?
ஏன் கேக்கறே?
நீலகண்டன் மூக்குக் கண்ணாடியை மூக்கு முனையில் இருந்து திரும்ப மேலே ஏற்றி விட்டுக் கொண்டு பையனை தீர்க்கமாகப் பார்த்தான்.
இல்லே, நீங்க போடலேன்னா, நான் எடுத்துக்கறேன். சும்மா வேணாம் சாமி. நாலணா தந்துட்டுத்தான்.
ரிடையர் ஆனால் கோபம் அதிகமாக வருகிறது. யாரையாவது பார்த்து நிஷ்டூரமாக ஏதாவது சொல்லணும் என்று வாய் விறுவிறுக்கிறது.
உன் நாலணாவை உடப்புலே போடு. நான் பேப்பர்லே குறுக்கெளுத்தை ரொப்பி அனுப்பறேன். கிழிச்சு பின்னாலே துடச்சுக்கறேன். உனக்கு என்ன போச்சு?
சாமி இஷ்டம் இல்லேன்னா தர வேணாம். வார்த்தையை எதுக்கு விடறீங்க? வந்தேமாதரம்.
பையன் இந்த ஷணம் காந்தி மகாத்மா கூப்பிட்டு சேர்த்த ஹர்த்தாலில் கலந்து கொள்கிற சாந்தமும் முகமெல்லாம் தியாக சிந்தையும் எழுதியிருக்க, நீலகண்டனைப் புழுவே என்று பார்த்தபடி படி இறங்கிப் போனான்.
பல்லு தேச்சாச்சோ?
கேட்டபடி உள்ளே இருந்து காப்பியோடு கற்பகம் பிரத்யட்சமானாள்.
ஏண்டி கழுதே. தேய்ச்சுட்டேன்னு தெரிஞ்சு தானே காப்பியோட வந்து நிக்கறே. அப்புறம் எதுக்கு நீட்டி முழக்கி கேள்வி?
கோபமா சிரிப்பா ரெண்டும் கலந்த எதோ ஒண்ணா என்று தெரியலை நீலகண்டனுக்கு அனுபவப்பட்டது.
கொலுவை மிதிக்காமல், கொலுப் படியில் ஓரமாக இருக்கிற ராமர் பட்டாபிஷேக செட் அனுமாரையோ, கீழ்ப்படியில் மாரைக் காட்டிக் கொண்டு நிற்கிற பளிங்கு வெள்ளைக்காரியையோ தட்டி விட்டு உடைக்காமல் கொல்லையில் பல் தேய்க்கிற சடங்கை வாசல் திண்ணையிலேயே நிறைவேற்ற பல்பொடி, வாளித் தண்ணீர், எடுத்து நிறைத்துக் கொப்பளிக்க வெங்கலச் சொம்பு சகிதமாகத் தான் வாசலில் ஜமுக்காளத்தை ராத்திரி உதறி விரிப்பது.
நடுராத்திரிக்கு மூத்திரம் வந்தால் தெருக் கோடியில் போய்க் குத்த வைக்கக்கூட கற்பகம் யோசனை சொன்னாள். அந்த கண்றாவி எல்லாம் முடியாது என்பதால், ராத்திரி ஏழு மணிக்கு மேல் பொட்டு தண்ணீர் குடிப்பதில்லை நீலகண்டன்.
காப்பியைக் கையில் வாங்கிக் கொண்டு டம்ளரை ஓரமாக எச்சில் படுத்தி சூடு எந்தத் தரத்தில் இருக்கிறது என்று சோதித்தான். கொதிக்கக் கொதிக்கத்தான் இருக்கு. அதற்குக் கீழே போனால் அது கனவான்கள் குடிக்கத் தகுந்ததில்லை.
எச்சப் பண்ணாம குடியுங்களேன்.
அவளும் முப்பது வருஷமாகச் சொல்கிறாள். நீலகண்டனும் கேட்பதில்லை. எஃப்.ஏ படிக்க கல்கத்தா போயிருக்கிற இளைய பிள்ளையும் கொழும்புவுக்கு உத்தியோக நிமித்தம் புறப்பட்டுப் போன மூத்தவனும் கூடக் கேட்பதில்லை.
சாதம் நேத்திக்கு மாதிரி இன்னிக்கும் கொழச்சு வடி. வயித்துக்கு இதமா இருக்கு.
அவன் வயிற்றைத் தடவிக் கொண்டு காப்பிச் சூட்டில் லயித்தான்.
இப்படி வடிச்சா சக்கரை போடாத பாயசம் மாதிரி இருக்கு. பசங்க இருந்தா வாயிலேயே வைக்காது.
கற்பகம் உள்ளே போக முற்படுகிற அவசரத்தில் சொன்னாள்.
சின்னவன் கல்கத்தாவிலே இருந்து வந்தா அவனுக்கு மட்டும் உதிர் உதிரா சின்ன வெங்கலப் பானையிலே சாதம். எனக்கு இப்படி புனர்பாகம். கஷ்டமில்லயே உனக்கு?
ஒரு கஷ்டமும் இல்லே. வடிச்சுக் கொட்டத்தானே எங்கம்மா பெத்துப் போட்டு அனுப்பியிருக்கா?
கற்பகம் மூக்கில் வைர மூக்குத்தி டாலடிக்க சொன்னபோது ரசித்து தலையை ஆட்டிக் கொண்டபடி தன் காதையும் மூக்கையும் தொட்டபடி அவளைப் பார்த்தான்.
ஏன் இடுப்பிலேயும் கை வச்சு அபிநயம் பிடிக்க வேண்டியதுதானே?
கற்பகம் விடாமல் இடுப்பிலும் கைவைத்து அபிநயம் பிடித்தாள்.
கிட்டே வா, நானும் பிடிக்கறேன்.
விவஸ்தையே இல்லை. இது வாசல் திண்ணை. ஞாபகம் இருக்கோ இல்லியோ?
அவள் வார்த்தையில் உஷ்ணம் இல்லை. எல்லாம் சேர்ந்து காப்பியில் இருந்தது.
சாயந்திரம் சுண்டல் என்ன பண்ணப் போறே?
காப்பி இன்னும் நாலு வாய் இருக்கிறது. அது தீர்வதற்குள் அவள் வாயைப் பிடுங்க வேண்டும்.
அதுக்கு இன்னும் எட்டு மணி நேரம் இருக்கு. கிடந்து அலையறேளே.
காப்பியில் கொஞ்சம் சர்க்கரை தூக்கல். தமிழ்ப் பத்திரிகை தன்னிச்சையாகப் பிரிந்த பக்கத்தில் ராஜகுமாரி முந்தானை அலட்சியமாக விலகிக் கிடக்க உற்றுப் பார்க்கிறாள். கற்பகம் இல்லாத நேரத்தில் உன்னித்தெழுந்த சமாசாரங்களை தீவிரமாகப் பார்வையிட வேண்டும்.
இங்கிலீஷ் பேப்பரில் சிவலோகப் பிராப்தி கேசுகளை வாசிப்பதற்கு முந்தியே வயிறு கூப்பிடுகிறது. மனதில் சந்தோஷம் தானாக வந்தது. சாயந்திரம் நாயுடுவைப் போய்ப் பார்க்கணும் என்று சம்பந்தமே இல்லாமல் திரும்ப நினைவு. செத்துக் கித்துப் போயிட்டானோ பாவம்?
சுண்டல் என்ன பண்ணலாம்? நீங்களே சொல்லுங்களேன்.
பட்டாணி தான். அம்சமா எலுமிச்சம் பழம் பிழிஞ்சு விட்டு.
ஊறுகாய் மாதிரி இருக்கும். என்ன ருஜியோ உங்களுக்குன்னு.
நன்னார்க்குண்டி.
ஐயோ, தனித் தனியாப் பிரிச்சுச் சொல்லுங்களேன். கேட்க சகிக்கலை.
அவள் அடக்க முடியாமல் சிரித்தாள்.
சந்தி பிரிச்சா இன்னும் கஷ்டமாப் போயிடுமே.
நீலகண்டன் எழுந்து வேஷ்டியை இடுப்பில் இறுக்கியபோது கற்பகம் காலி டம்ளரோடு நன்னா இருக்கும்டீ என்று உரக்கச் சொல்லி மறுபடி சிரித்தபடி சமையல் கட்டுக்குள் புகுந்தாள்.
நன்றாக இருக்கும் அடி. அப்படித்தான் தமிழ்லே.
அவன் சொல்லிக் கொண்டே உள்ளே போன வேகத்தில், நாலாவது கொலுப்படியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் தலைகுப்புற விழுந்து சிரச்சேதம் ஆனான்.
நீலகண்டன் அவசரமாக உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு உடைந்தவனை படிக்கு உள்ளே வெள்ளைத் துணிக்கு மறைவில் தள்ளினான். மோட்டார் கார் ஓட்டி வந்து விபத்துக்குள்ளாகி அதில் இறந்து போனவன் பிணத்தை மறைக்கிற குற்ற உணர்ச்சி. அதை எல்லாம் அடித்துத் தள்ளிக் கொண்டு வயிறு முன்னால் போகச் சொல்லிக் கூப்பாடு போட்டது. நியூஸ் பேப்பரில் ராஜலஷ்மி கண்ணடித்தாள்.
ராஜலெட்சுமியை சாவகாசமா பார்த்துக்கலாம் அய்யரே. உன் தோஸ்த் நாயுடுவை மறக்காம பார்த்துடு. போகாட்ட மொதலுக்கே மோசமாகிடும். போ ரைட்.
வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டபோது படியில் இருந்த இன்னொரு போலீஸ்காரன் சொன்னான்.
இருங்கோடா எல்லா தீத்தாராண்டிகளும். போய்ட்டு வந்து பேசிக்கறேன்.
நீலகண்டன் பூணூலை காதில் சுற்றிக் கொண்டு நடந்தான்.
(தொடரும்)
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -13
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-2)
- தாகூரின் கீதப் பாமாலை – 14 இளமங்கைக்குப் புரியமா ?
- முள்வெளி அத்தியாயம் -9
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 20)
- திரைப்படம்: ஹாங்காங்கின் இரவுகள்
- சுந்தர் சி யின் “ கலகலப்பு “
- அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்
- பொக்கிஷம் – ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன் – ஆவணப்படங்கள்.
- கே.எஸ்.தங்கசாமியின் “ ராட்டினம் “
- யமுனா ராஜேந்திரனுடன் சில மணித்தியாலங்கள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம்
- எம் சூர்யோதயம்
- வளவ. துரையனின் நேர்காணல்
- நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் – அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில்
- உழைப்பால் உயர்ந்த உத்தமி! – சுசேதா கிருபளானி – (1906 – 1974)
- கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகளை கண்டித்து கண்டனக் கருத்தரங்கம்
- பஞ்சதந்திரம் தொடர் 44 – வேதியனும் திருடர்களும்
- மலைப்பேச்சு -செஞ்சி சொல்லும் கதை-26
- என் முகம் தேடி….
- தங்கம் – 7 சீனாவின் மைடாஸ்
- சின்னமகளிடம் கிங் ஃபிஷர் பற்றி ஒரு உரையாடல்
- தருணங்கள்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூறு இரா.முருகன்
- வரலாறும் நமது அடையாளங்களும் – ஜோ டி குருஸ்
- ஃபேஸ்புக் உரையாடல்கள் மற்றும் அவற்றின் மீதான டிப்பணிகள்
- 2025 ஆண்டுக்குள் முரண்கோள் (Asteroid) ஒன்றில் மனிதத் தளவுளவி இறங்கி ஆராய நாசா விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.
- முகம்மது வரலாற்றில் இருந்தாரா? Did Muhammad Exist? புத்தக விமர்சனம்
- துருக்கி பயணம்-2 அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்