கலைச்செல்வி
சன்னல் வழியே சுள்ளென்று எட்டிப் பார்த்தது சூரியன். சன்னல் தன்னை உள்வாங்கியதால் அதற்கு கட்டுப்பட்ட சூரியன், தனது ஒளியில் சன்னல் வடிவம் காட்டி அதற்கு நன்றி கடன் செய்தது. அதன் வரிவடிவ ஒளியை இரசித்தவாறு படுத்திருந்தாள் வைதேஹி.
“வைதேஹி… சன்னமாக காற்றைக் கிழித்த சத்தம். இன்னமா தூங்கறே?’ என்ற கணவர் குரலுக்கு,
“ம்ம்ம் … எழுந்திருச்சாச்சு..” பதிலளித்தாள்.
பிரிந்திருந்த கூந்தலை அள்ளி முடிந்தாள். ஒற்றை நாடி சரீரம். மிக லேசான எழும்பிய வயிறு. நெற்றியில் ஒட்டியிருந்த ஸ்டிரிக்கர் பொட்டை சரி செய்தாள். அவளின் கூரிய மூக்கும், பெரிய கண்களும் அவளது பொட்டு சைஸ{க்கு தன்னை சரிப்படுத்தி கொண்டாற்போல் கச்சிதமான தோற்றம்.
நிதானமாக படுக்கையை எடுத்து வைத்து விட்டு, வாஷ்பேஸினுக்கு சென்று முகம் அலம்பி, பல்துலக்கி விட்டு வந்தாள்.
மாமனார் காலத்திய வீடென்பதால், வீடு சற்று பெரிதாகவும், தோட்டம் போடும் அளவுக்கு மண்வளம் உள்ளதாகவும் இருப்பதில் அவளுக்கு ரொம்ப பெருமை. அதிலும் தோட்டத்து கிணறு, அதையொட்டிய துவைக்கும் கல், கொடிக்கயிறு இதெல்லாம் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால்தான் வீட்டை புதுப்பிக்கும்போது, பிடிவாதமாக இவற்றை இடிக்கக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லி விட்டாள்.
வாசலில் சிறிது நேரம் நின்று காலை நேரத்தை அனுபவித்தாள்.
வெள்ளைக் கோலத்தில் ஆரஞ்சு வண்ணம் இழுத்தாற்போல் பவழமல்லி பூ கொட்டிக் கிடந்தது. அதன்; வாசம் தெருவிற்கே சென்ட் தெளித்தாற்போல் வீச, அந்த வாசத்தை அனுபவித்தவாறு, கேட்டில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த பையிலிருந்து பால்பாக்கெட்டை எடுத்தாள்.
காலையில் வாசல் பெருக்குவது என்பது வைதேஹிக்கு கஷ்டமான வேலை. அழகாக கொட்டி கிடக்கும் பூவை குப்பையென அள்ளி கொட்டி, பின் நீர் தெளித்து கோலமிட மனம் வராது. அதனாலேயே வாசல் பெருக்க ராமாயி அக்காவை வேலைக்கமர்த்தியிருந்தாள்.
“என்னம்மா.. இன்னும் இங்ஙனயே நின்னுட்டு இருக்கீங்க” – ராமாயியின் குரல் கேட்டு கலைந்தாள்.
“இந்த ப+ கொட்டி கிடக்கிறத பாருக்கா.. எப்படி தான் மனசு வந்து கூட்றியோ தெரியல?”
“குப்பை கிடந்தா கூட்டிதானேம்மா ஆகணும்” என்றவாறு பரட் பரட்டென்று பெருக்கினாள் ராமாயி.
தரையில் நியூஸ் பேப்பரை விரித்து படித்துக் கொண்டிருந்தார் ராஜகோபால்.
ராஜகோபால் – அவளது கணவர் அமைதியானவர். கோதுமை நிறத்தில் லேசான முன்வழுக்கையில், களையான முகம். காதோரம் நரைத்த முடி அவர் வயதை அறுபது என உரக்கச் சொல்லும். வேலை, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளின் படிப்பு என அவரது கவனத்தை, மனைவியின் இரசனை என்றைக்குமே கவர்ந்ததில்லை.
பாலை அடுப்பில் ஏற்றி, டீத்தூளை போட்டு, இரண்டு இஞ்சியையும் தட்டி போட்டாள். நல்ல நிறத்தில், சுவையான டீ.
“ஏழரை ஆச்சு… இன்னும் குளிரும் போகலை,.. வெயிலும் உறைக்கல…டீ நல்லா இதமா இருக்கு” – ராஜகோபால்
“மார்கழி பனியும், ஆண்டாள் திருப்பாவையும் விடியற்காலையிலே… லேசான பனியும், உறைக்காத வெயிலும், பாரதியார் பாட்டும் இந்த இளங்காலையிலே… சூப்பர் காம்பினேஷன் இல்ல…” என்றாள் ஆர்வமாக கணவனிடம்.
“பனியும், வீசிங்கும் கூட சூப்பர் காம்பினேஷன் தான்… என்ன சொல்ற….?” பதிலை எதிர்பார்க்காதவாறு அவர் பேப்பரில் மூழ்கி விட, அவள் பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள்.
“ஏண்டீ வைதேஹி… இவ்ளோ நேரமா வாசலை பெருக்கறே…?. ஓங்கி ஒலித்தது அம்மாவின் குரல்.
“இதோ வந்துட்டேம்மா..” இலைகளில் தவழ்ந்திருந்த பனியை சூரியன் சொட்டு சொட்டாக வெளியேற்ற, அதனை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கும் வைதேஹி, அம்மாவின் குரலை கேட்டதும் உள்ளே ஓடுவாள்;.
காலை பொழுதை வாசனையால் நிறைக்கும் பூ வாசம், சாண வாசம், பாம்பு போல நெளிந்து நெளிந்து ஓடும் கிராமத்து மண் சாலைகள், சைக்கிள் போகும் பாதையில் ரோட்டோரம் கதிர் சுமந்து சாய்ந்தவாறு கிடக்கும் நெற்பயிர்கள், கிராமத்து அண்ணனை ஜெராக்ஸ் எடுத்ததுபோல கோபமும், தோழமையுமான மதுரை வீரன் சாமி, எதிர்பார்ப்பும், எதிர்ப்புமான தோழியின் காதல், ஓட்டமும் நடையுமாக நாலைந்து குட்டிகளுடன் அலையும் நாய்கள், கொக், கொக் என்ற சத்தத்துடன் தானியங்கள் நிறைந்த பிளாஸ்டிக் தட்டை டொக் டொக் என்று கொத்தித் தின்னும் கோழிகள், பட்பட்டென்று அம்மி தட்டும் ஓசை என ரசிக்க எத்தனையோ இருக்கிறது அவளுக்கு.
“காலை நேரத்தில பொம்பள புள்ள துறுதுறுன்னு வேலை பார்க்க மாட்டீயா… எப்பபாரு எதையாவது வெறிச்சு வெறிச்சு பார்த்துக்கிட்டு… இப்படி இருந்தா போற வீட்டில எப்படி குப்பை கொட்ட போறீயோ…?” அம்மா அலுத்துக் கொண்டாள்.
இரவில் எல்லோரும் உறங்கிய பிறகு, கதை புத்தகத்தை எடுத்துக் கொண்டு உட்கார்வாள். “ஏண்டீ நேரங்கெட்ட நேரத்தில இதெல்லாம் படிச்சிக்கிட்டு… வா வந்து படுத்துக்கோ…”என்று பாசமாக மகளை அழைத்து பக்கத்தில் படுக்க வைத்துக் கொள்வாள்.
பாவம் என்ன செய்வாள் அம்மாவும? டவுனுமல்லாத, கிராமுமல்லாத அந்த ஊரில் மகளை சமுதாயக் கண்ணோட்டத்தில் பதவிசாக வளர்க்க வேண்டிய கடமை அவளுக்கு.
இவள் கையில் ஏதாவது புத்தகத்தையோ, நோட்டையோ திறந்து விட்டால் போதும். “கதை, பாட்டுன்னு இப்படி உக்காந்தா, போற வீட்டில உன் குடும்பத்த யார் பாத்துக்குவா? பொண்ணா இலட்சணமா வீட்டு வேலையை கத்துக்க வா” –பெருங்குரல் எடுத்து அம்மா கத்துவாள்.
“இப்ப அம்மா சொல்றபடி வீட்டுவேலை கத்துக்கடா… அப்பா உனக்குன்னு தனி சூட்கேஸ் வாங்கி தரேன். அதுக்குள்ள இதெல்லாம் வச்சுக்க. பின்னால உன் கல்யாணத்துக்கப்புறம் உன் புருஷன்ட்ட காட்டு… அவர் சம்மதிச்சா எழுதுடா..” என்று தன் செல்ல மகளின் மனம் நோகாமல் பிரச்சனையை முடிப்பார்.
பட்டப்படிப்பிலும் பெற்றோர் விருப்பமே நிறைவேறியது. இவள் கேட்டது தமிழ் இலக்கிய படிப்பு. அம்மாவிடம் விருப்பத்தை சொன்னாள்.
“என்னங்க… வைதேஹி என்ன சொல்றாள்னு கேளுங்க… தமிழ் பண்டிட் ஆக போறாளாம்…” அம்மாவின் கிண்டல் வென்று, தொழில்படிப்பில் அவளை சேர வைத்தது. படிப்பிற்கேற்ப நல்லதொரு வேலையும் கிடைத்தது. ஆனால் அவளுக்கு தான் ஏதோ குறைந்தாற்போலவே இருந்தது.
“ஏங்க நம்ம பொண்ணு வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தவுடனே கையில கதை புத்தகத்தை எடுத்துக்கறா… அதுல என்ன நல்லாவா எழுதுறான்.? கண்டதையும் படிச்சிட்டு கெட்டு போறதுக்குள்ள இவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சிடுங்க…” என்று அப்பாவின் காதில் கிசுகிசுத்தது இவளுக்கு கேட்காமல் இல்லை.
திருமணமும் முடிந்தது. கணவனின் அன்பும் கிடைத்தது.
ஒருமுறை பிறந்த வீட்டிலிருந்து வரும்போது ஒரு பெரிய பெட்டியை தூக்கி வந்திருந்தாள். அந்த சூட்கேஸின் மேலே பனிமலர் என்ற ஸ்டிரிக்கர் வேறு திருத்தமான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது.
“என்னடீ கையில சூட்கேஸ்லாம் பலமாயிருக்கே”
நடுஹாலில் திறந்து வைத்து கணவரிடம் தான் ஒளித்து ஒளித்து எழுதிய கட்டுரைகள்;, கவிதைகள், பள்ளி, கல்லூரி நாளைய கலெக்ஷன் என ஆசைஆசையாய் காண்பித்தாள் வைதேஹி.
“இதெல்லாம் கூட உனக்கு தெரியுமா?”
“இந்தாங்க.. படிச்சு பாருங்களேன்…” என்று ஆர்வமாக அவன் கையில் திணித்தாள்.
“எனக்கு இதிலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லைம்மா” என்றான் விகல்பமின்றி.
முகத்தை தூக்கி வைத்து கொண்டாள் வைதேஹி.
“ஏம்மா டீயை குடிச்சிட்டு அப்படியே உக்காந்திருக்க…” – ராமாயி அக்காவின் குரல் அவளை நிகழ்காலத்திற்கு உசுப்பியது.
அவர்களுக்குள் ஒரு விநோத விஷயம். ராமாயி இவளை ‘அம்மா’ என அழைக்க, இவளோ ராமாயியை வயதைக்கருதி ‘அக்கா’ என்றழைப்பாள்.
இரவு சமைத்திருந்த பாத்திரத்தை தேய்க்க போட்டு விட்டு சோஃபாவில் வந்தமர்ந்தாள் வைதேஹி.
எங்கே செல்கிறது மனம்? முன்பெல்லாம் முடியுமா? பேப்பரை வந்தாகிவிட்டது என்பது அது போடப்படும் சத்தத்தில் மட்டுமே தெரிந்துக் கொள்ள முடியும்.
பேப்பர் போடும் நேரத்திற்குள் பாதி சமையல் முடிந்திருக்கும். காலை நேர தெருவின் குரல்கள் அவள் கவனத்தை உரசும். மகனும், மகளுமாக இரு பிள்ளைகள். அப்போது தான் புத்தகத்தை எடுத்து வந்து எதையாவது சந்தேகம் கேட்பார்கள். குளித்து விடுவதிலிருந்து, பின்னல் போடுவது வரை என வேலைகள் வரிசைக்கட்ட, சிந்திக்கவும் மறந்து விடுவாள்.
அனிச்சையாக டிஃபன் செய்தாள். மனம் ஏனோ நழுவி நழுவிச் சென்றது.
குழந்தைகள் பள்ளி பருவத்தில் இருக்கும்போது வருடத்திற்கு ஒருமுறை லீவுக்கு மாமியார் வீட்டிற்கு செல்ல வேண்டியிருக்கும்.
வெள்ளி பதித்தாற்போல் ஓடும் காவிரியின் சலசலப்பு அவளுக்கு பிடித்தமானதொன்று. அதிகாலையில் பட்டை பட்டையாக விபூதி சகிதம் அபிஷேக நீர் எடுக்கும் குருக்கள், கரையோர ஆலமரத்து பிள்ளையார், குடிநீர் சேந்தும் குடங்கள், ஈர உடை பெண்கள், படித்துறையில் டப்டப் என்ற ரிதத்துடன் துவைக்கப்படும் துணிகள் என எத்தனை சுவாரஸ்யங்கள் காவிரியில்.
கொழுந்தன் குடும்பம், நாத்தனார் குடும்பம், மாமியார், மாமனார் என பெரும்கும்பலை சமாளித்து நிமிரும்போது தான், இவளுக்கு தான் பெற்ற குழந்தைகளே நினைவுக்கு வரும். இதில் எங்கே தனக்கு நேரம் ஒதுக்குவது?
மார்கழி மாத காலை நேரம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அதிகாலை நான்கு மணி முதல்; கேட்கும் பஜனை சத்தம். ஸ்பீக்கரில் அலரும் மாரியம்மன் பாட்டு, பால்காரரின் டபடப சத்தம். வாசல் தெளிக்கும் சத்தத்துடனான மண்பரியும் வாசம், மார்கழி காலையில் வாசலில் எரியும் சிறிய அகல், காலை நேர தண்ணீர் வருகை, எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோன்ற வெண்பனி. அந்த பனி இலைகளில்; சிலிர்த்து நிற்கும் தோற்றம் என பரவசமான மார்கழி காலை.
வரிசைக் கட்டி நிற்கும் காலை வேலைகளும், கணவரின் குரலும் அவளை நிற்க விடாது துரத்தும். பாதிகோலமிடுகையில் தூக்கம் விழித்து வரும் மகனும், மகளும் கலர்பொடியை கோலத்தில் கொட்டி கையால் தீட்ட, இரசித்து பார்ப்பாள் வைதேஹி. செடிகளில் பூத்திருக்கும் பனியை கைகளால் தட்டி, தட்டி அதன் சில்லிப்பில், உடலை சிலிர்த்துக் கொள்ளும் குழந்தைகளை ஸ்வெட்டரோடு அணைத்துக் கொள்வாள்.
கணவரிமிருந்து கோபமாக குரல் வரும், “மணி ஆறரையாகுது. மூணுபேரும் வாசல்ல என்ன செய்றீங்க இந்த பனியில… ஸ்கூல் திறக்கிறநேரத்தில சளி, காய்ச்சல்னு படுத்துக்கிறத்துக்கா?”
குழந்தைகளை அழைத்துக் கொண்டு உள்ளே வருவாள்.
‘வைதேஹி… இன்னுமுமா இரண்டு சப்பாத்திய சாப்பிடுற?” – கணவரது பரிவானக் குரல் நிஜ உலகத்திற்கு கூட்டி வந்தது அவளை.
நினைவுகளாகிப் போனது நடந்தவை மட்டுமல்ல… ஆறிப் போனது சப்பாத்தியும்தான்.
பிஸினஸ் பிஸினஸ் என்று நேரம் கெட்டநேரத்தில் வருகிறாரே என கணவரைப் பற்றி; தோன்றும் எண்ணங்களுக்கு பனிக்காலத்தில் மட்டும் ஓய்வு. இரவு நேர பனி, ஒளிச்சிதறல்களாக தெரியும் தெரு விளக்குகள். ஓளியால் பனி அழகா? பனியால் ஒளி அழகா? அங்கொன்றும் இங்கொன்றுமாக வாகன ஓட்டிகள். நாளை வேலைக்கு செல்லும் மனைவிக்கு சமையலுக்கான காய் வாங்கி வரும் மப்ளர் கணவர்கள். நேரம் செல்ல செல்ல தெரு அடங்கி 10 மணி சுமாருக்கு அவள் கணவர் வரும் நேரத்தில் அவர்களது கார் மட்டுமே தெருவில். இதுவரை சன்னல் வழியாக பார்த்த பனி இப்போது பரவலாக உடலிலும் பரவ கண் மூடி அனுபவிப்பாள்.
குழந்தைகளின் கல்லூரி வாழ்க்கை ஓடியதே தெரியவில்லை. படிப்பு, அலுவலக வேலை, பணத்தேடல்கள் என காலம் தனது இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. புத்தக தேடல்கள்கூட அவர்களது படிப்பை நோக்கி விரிந்ததேயன்றி, அவளின் ரசனையில் என்றும் குவிந்ததேயில்லை. எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் எட்டாக்கனியாகவே போனது.
பகிர்தல்கள் இல்லாத ரசனை, வெளிப்படுத்தல் இல்லாத படைப்பு என பழகி விட்ட சூழ்நிலை இவளுக்கு இன்னும் வெறுமையேற்படுத்தவில்லை. நீறு பூத்த நெருப்பாக உள்ளே கசியும் உணர்வுகளுக்கு, நிச்சயமாக வடிகால் இருக்கும். எதிர்ப்பார்ப்பின் மையப்புள்ளியில் நினைவை நிறுத்தி விட்டு, வாழ்க்கையை துரத்துகிறாள்.
காலம் சுழன்றதில் மகன் மத்திய அரசாங்க பணியில் டெல்லியிலும்;, பெண் திருச்சியிலும் செட்டிலாகினர். இப்போது வாரிசுகளுக்கு பணம் பண்ணும் நேரம். இவளும் விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டாள்.
லீவுக்கு குடும்பத்தோடு வரும் மகன் அம்மா, அப்பாவிடம் தங்கிவிட்டு, பின் தங்கை வீடு, மதுரையில் உள்ள மாமியார் வீடு என சக்கரத்தை காலில் கட்டியவாரே வருவான்.
ஆனாலும் பாட்டியும், பேரனும் ரொம்ப ஃபிரெண்ட்ஸ் ஆகி விட்டார்கள். பாட்டி தோட்டத்து மரங்களுக்கு நீர் பாய்ச்சும் போதே ராகேஷ் அவளுடன் கை கோர்த்துக் கொள்வான். கிணற்றில் நீர் இறைப்பது, துணி துவைப்பது என்று எல்லாமே அவனுக்கு அபூர்வம் தான். பாட்டியின் கையிலிருந்து தானியங்களை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி எங்கிருந்தோ பறந்து வரும் பறவைகளுக்கு உணவிடுவது பேரனுக்கு ரொம்ப பிடிக்கும். சின்ன கையை அகலமாக விரித்து, “இவ்ளோ பேர்ட்ஸையும் வளக்கிறியா பாட்டி” என்பான் தட்டில் அவைகள் டொக்டொக்கென்று மூக்கால் ஒலியெலிப்பியப்படி அழகாக தண்ணீர் அருந்துவதை ரசித்தப்படி.
“உங்க பாட்டி பேர்ட்ஸ் மட்டுமா வளர்க்கிறா..? சரியா லஞ்ச் சாப்பிடற நேரத்துக்கு ரெண்டு, மூணு பசுமாடுங்க வரும். உங்க பாட்டி கையால கலக்கி வைக்கிற சாப்பாட்ட தினமும் வந்து சாப்பிடுங்க…”
“அய்… கவ் கூட வளர்க்கிறியா பாட்டி..?”
“அதெல்லாம் நம்ப கவ் இல்லப்பா… ஆனா உங்க பாட்டி கவ், பேர்ட்ஸ், பிளான்ட்ஸ்; இதுங்ககிட்ட பேசிக்கிட்ட சாப்பாடு போடுவா… தண்ணீ ஊத்துவா… அதனால இதுங்களெல்லாம் உங்க பாட்டியோட ஃபிரெண்ட்ஸ்” என்பார் தாத்தா கிண்டலும், சிரிப்புமாக.
“என் பேரன் என்னை மாதிரியாக்கும்… அதான் நம்ப வீட்டுக்கு வந்துட்டா என் கைய பிடிச்சுக்கிட்டே சுத்தறான்”
புரியுதோ, புரியவில்லையோ சிரித்து கொள்வான் ராகே~;. “பாட்டி இங்க பாரு.. செம்பருத்தி பூ எவ்ளோ ப்யூட்டிஃபுல்லா இருக்கு பாரு… ஐ லைக் திஸ் ரோஸ் பாட்டி… ~hல் ஐ டேக் திஸ் டு மை ஹோம் ?” என்பான் ஆர்வமாக. ஆனால் மகன்தான் ஊருக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. “இதிலெல்லாம் கவனம் சிதறிடுச்சுன்னா அவனுக்கு படிப்பு கெட்டுடும்மா” என்பான்.
பேரன் போன முறை ஃபோனில் பேசும் போது “உனக்கு ஒரு ஸர்ப்ரைஸ் வைச்சிருக்கேன் பாட்டி” ன்னு சொன்னது நினைவுக்கு வந்தது. என்ன ஸர்ப்ரைஸ் வைச்சுருக்கானோ தெரியலையே’ – சந்தோஷமாக அலுத்தாள். உற்சாகமாக இருந்தது.
அவளுக்கு கூட ஸர்ப்ரைஸ்-ஆக தான் இருந்தது. குழந்தைகள் எல்லாம் காலேஜ் சென்று விட ஒரு நாள் தனிமையில் ராஜகோபால் கேட்டார், “உன் பேர் வைதேஹி.. ஓகே. அந்த பனிமலர் யார்? உன்னோட பெட்டியிலே பனிமலர்ன்னு எழுதி வைச்சிருந்;தியே…”
உற்சாகமாக சொன்னாள், “நான்தாங்க அது.. எனக்கு நான் வைச்சுக்கிட்ட பேர் அது. இந்த பேர்ல தான் எனக்கு தோணுனதை எழுதி வைப்பேன். அந்த பேர் நல்லாயிருக்காங்க?” என்றாள் கண்கள் பளபளக்க.
“வைதேஹி – இந்த பேர் தான் உன் அழகுக்கும், சுறுசுறுப்பும் ஏத்தப் பேர். பனிமலர் உனக்கு பொருந்தல.. என்ன நான் சொல்றது?”
பதில் சொல்ல தோன்றவில்லை அவளுக்கு.
மதிய சமையல் விறுவிறுப்பா முடிய, சாப்பிட்டு சிறிதுநேரம் படுத்தாள்.
முன்னெல்லாம் சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுக்கவே முடியாது. சமையலறையை சுத்தம் செய்து, பாத்திரம் துலக்கி, படிக்கவோ, எழுதவோ உட்கார்ந்தால், மகனும், மகளும் மடியில் படுத்துக் கொண்டு லூட்டி அடிக்க, டி.வி பார்த்துக்கொண்டே கண்ணயர்வாள்.
“தூங்கிட்டோமோ..?” திடீரென்று வாரிசுருட்டி எழுந்தாள்;. ஃபோன் ஒலித்தது. மகன் தான் லைனில் வந்தான்.
“ஹலோ தம்பி எப்படிடா இருக்கே”?.
“நல்லா இருக்கேன்ம்மா. நீ நல்லாயிருக்கியா..? தங்கச்சி வீட்ல எல்லாரும் சௌக்கியம்தானே…? அப்பா பக்கத்துல இருக்காரா?
“பக்கத்திலதான் இருக்காருப்பா… சித்ரா எப்படி இருக்குறா? பேரன் எங்கப்பா?”
“எல்லாம் இங்கதான் இருக்காங்கம்மா … நெட்ல பார்த்தேன். தமிழ்நாட்ல ரேஷன்கார்டுக்கு அப்ளை பண்ணினா ஒரு மாசத்தில கிடைச்சிடுமாம்;. அப்பாவை போய் உடனே அப்ளை பண்ணச் சொல்லும்மா” – நீண்டநாள் உபயோகிக்காததால்; காலாவதியாகிவிட்ட ரேஷன்கார்டை புதுப்பிக்க சொன்னான்.
“ம்ம்ம்…”
“முன்கதவில் கீல் ஏதோ லூஸா இருக்குன்னு அப்பா சொன்னாரே. சரி பண்ணிட்டாராம்மா?”
“கார்பென்டரை வர சொல்லியிருக்கிறாருப்பா… வயசானவங்க தனியா இருக்கிறதே பயமா தானே இருக்கு…”
“அட…உனக்கு அம்பத்தாறு. அப்பாவுக்கு அறுபது.. இதெல்லாம்; ஒரு வயசாம்மா?” விளையாடிய மகனிடம் கரிசனமாக கேட்டாள் “ஏம்ப்பா அங்க வேலை ஜாஸ்தியா?”
அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லம்மா. இங்க ஓரே பனி… நான் வெளியவே தலைக் காட்டல… லீவு கிடைக்கறதே பெரிசு… அதனால நல்லா இழுத்துப் போர்த்திட்டு தூங்கிட்டேன்..”.
“பாட்டி உனக்கு ஒரு கிஃப்ட் வாங்கி வச்சிருக்கேனே” – உற்சாகம் வழிய ஃபோனை பிடுங்கி பேசினான் பேரன்.
“அப்பா, தாத்தாகிட்ட பேசிட்டு உன்கிட்ட ஃபோனை கொடுப்பேனாம். நீ பாட்டி, தாத்தாக்கிட்ட நிறையா பேசுவியாம்”; – மகன் பேரனிடம் கெஞ்சி, கொஞ்சியது கேட்டது.
“நல்லா இருக்கீங்களாப்பா…, நீங்களும், அம்மாவும் ஒரு எட்டு சம்மந்தி வீட்டு வளைகாப்புக்கு போய்ட்டு வந்துடுங்கப்பா… கார்லேயே போய்ட்டு வந்துடுங்க. டிரைவரை இப்பவே ஏற்பாடு பண்ணிக்கோங்க. அப்புறம் என்னப்பா விஷேசம்?”
“நேத்துதான் செப்டிக்டேங்க் கிளின் பண்ணினோம். நாளைக்கு பாஸ்போர்ட் ஆபிஸ்க்கு போலாம்னு இருக்கேன்டா. ”.
“நீங்க அலையாதீங்கப்பா. உங்களுக்கு இருக்கிற பிஸினஸ் டென்ஷன்ல இதையெல்லாம் மண்டைல ஏத்திக்காதீங்க… என் ஃபிரெண்ட்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணிருக்கேன்… அவன் கேக்கிற டீடெயில்ஸ் எல்லாம் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்திட்டீங்கன்னா போதும்.”
பேரனும், மருமகளும் லைனில் வர பேசி விட்டு, ஃபோனை மனைவியிடம் கொடுத்தார். அதற்குள் அங்கு ராகேஷ் ஃபோனை பிடுங்கிக் கொண்டது கேட்டது.
“நம்ம கார்டன்ல இருக்கிற கோகனட் ட்ர்P-ல உன்ன மாதிரி குட்டி குட்டியா கோகனட் காய்ச்சிருக்குப்பா… அப்றம் நம்ப வெல்லுல தண்ணி இறைக்கிற ப்ளேஸ்ல வல்லாரை கீரை பாத்தி போட்டேன்ப்பா. நல்லா தளதளன்னு படர்ந்திருச்சு”.
“அய்…. நான் அங்க வரும்போது கோகனட் டைனியா இருக்குமா… பிக்கா ஆயிடுமா பாட்டி”
“நீ சீக்கிரம் வந்தீன்னா டைனியாவே இருக்கும்… இல்லைன்னா கோகனட்-ஆ ஆயிடும்டா கண்ணு”
“பாட்டீ… நீ சாப்பாடு போடுவியே… அந்த கவ்வுக்கு பேபி பிறந்திடுச்சா…”
“குட்டி கவ் பிறந்திடுச்சுடா கண்ணா… உன்னோட பிரெண்ட் டெல்லியிலே இருக்கான்.. பேரு ராகேஷ்… லீவு விட்டா இங்க தான் வருவான்னு அந்த குட்டி கவ்கிட்ட சொல்லி வச்சிருக்கேனே…”
“முரளி, கிருஷ்ணன், ஆண்டாள், சீதா எல்லாரும் டெய்லி க்ரெயின்ஸ் சாப்பிட வருவாங்கல்ல பாட்டி…”
“பாட்டியும், பேரனும் குருவியை பத்தி பேசிக்கிறாங்க…” மகன் மருமகளிடம் கிண்டலடித்தான்.
“பாட்டி! லாஸ்ட் வீக் புக் எக்ஸிபிசன் போயிருந்தோம். உனக்கு புடிச்ச புக் நேம நோட் பண்ணி வைச்சிருந்தேனா… அதை அப்பாக்கிட்ட காட்டினேன்… அப்பா வாங்கி கொடுத்தார்….புக் நேம் சொல்லட்டுமா… சொல்லட்டுமா… சொல்லட்டுமா…”
ஆர்வம் தாங்கவில்லை வைதேஹிக்கு. “தமிழ்ல்ல் இலக்கியஅஅ வரலாறு… அப்பா கரெக்டாப்பா.. பாட்டி கரெக்டா சொன்னேனா…” உற்சாகத்தில் பேரன் குரல் கேட்டது.
*****
(நன்றி : சிறகு இரவிச்சந்திரன்)
- மானுடம் போற்றுதும்
- இலக்கியப்பயணம்: —கனவு இலக்கிய இதழுக்கு வெள்ளிவிழா —- கனவு 25
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –34
- நம்பிக்கை ஒளி! (4)
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -3 பாகம் -8
- இயேசு ஒரு கற்பனையா?
- அக்னிப்பிரவேசம் -7
- கொசுறு பக்கங்கள்
- காரைக்குடி கம்பன் கழகத்தின் பவளவிழா
- ‘பாரதியைப் பயில…’
- தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012
- நான் ரசித்த முன்னுரைகளிருந்து………….. 2. பாரதியார் – பாஞ்சாலி சபதம்.
- சி.சு. செல்லப்பாவின் நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடும் வகையில் தளத்தின் முதல் இதழ் சி.சு. செல்லப்பாவுக்கு அஞ்சலி
- தாகூரின் கீதப் பாமாலை – 37 யாருக்குத் தெரியும் ?
- வைதேஹி காத்திருந்தாள்
- ஆரோகணம் & பிட்சா – டிஜிடல் தமிழ் சினிமா புரட்சியின் மைல்கல்கள்
- தானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி எனது பார்வையில்
- கவிதைகள்
- பழமொழிகளில் கல்லும் கல்லெறியும்
- மணலும், நுரையும்
- மீட்சிக்கான விருப்பம்
- தபால்காரர்
- தீயில் கருகிய சில உன்னத உறவுகள் நினைவுகள்
- மரப்பாச்சி இல்லாத கொலு
- “தீபாவளி…… தீரா வலி….. !”
- ஸ்வாத் பள்ளத்தாக்குக்கு போகும் சாலை: வெறுப்பு அழித்ததை மனிதம் மீட்கிறது.
- லூப்பர் ( ஆங்கிலம் )
- பேரரசுவின் திருத்தணி
- கற்பனைக் கால் வலி
- மனிதாபிமானம்!!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விரைவாக மாறும் வெளிக்கருவால், பூமியின் காந்தப் புலமும், ஈர்ப்பு விசையும் பாதிக்கப் படுகின்றன.
- சிறுவன்
- முப்பெரும் சக்தியின் நவராத்திரி..!
- மன்னை சரஸ்வதி தாயுமானவன் எழுதிய ‘நெல் மணிகள்’கவிதைத்தொகுப்பு