ரசிப்பு எஸ். பழனிச்சாமி
சங்கருக்கு அந்த போன் வந்த போது காலை ஒன்பது மணி இருக்கும். அவருடைய சொந்த ஊரிலிருந்து பால்ய சினேகிதrர் ராமசுப்புதான் பேசினார். அவர் அடிக்கடி போன் பண்ணுபவரல்ல. தென்காசிக்குப் பக்கத்தில் இருக்கும் மங்களபுரம் கிராமத்தில் பத்தாவது வரை சங்கருடன் ஒன்றாகப் படித்தவர்.
காலேஜ் படிப்புக்காக சங்கர் கோயம்புத்தூர் வந்து, படிப்பு முடிந்ததும் இங்கேயே வேலை கிடைத்து வடவள்ளியில் வீடு வாங்கி குடும்பத்தோடு செட்டிலாகி விட்டார். எப்போதாவது ஊருக்குப் போகும்போது ராமசுப்புவை பார்த்து, பழைய பள்ளிக்கூட காலத்து நினைவுகளை அசைபோடுவதுண்டு. ராமசுப்பு அவருடைய பரம்பரை தொழிலான, கயிறு திரிக்க உதவும் தேங்காய் மட்டைகளை மொத்தமாக வாங்கி விற்கும் தொழிலை கவனித்து கிராமமே கதி என்று இருந்து விட்டார். வருமானத்துக்கு ஒன்றும் குறைவில்லை.
“என்ன ராமசுப்பு, நல்லாயிருக்கீங்களா? என்ன விஷயம் திடீரென்று போன்” என்றார் சங்கர்.
“என் பையனைக் காணவில்லை, சங்கர்” என்றார் ராமசுப்பு. அவருக்கு திக்கென்றது. அதிர்ச்சியான விஷயம்தான். ராமசுப்புவுக்கு ரெண்டு பையன்கள். அதுவும் காலேஜ் படிக்கிற வயதில் உள்ள பையன்கள். எதுவும் காதல் விவகாரமோ? ரெண்டு பையன்களில் மூத்தவனா? இளையவனா? என்று தெரியவில்லை. போனின் மறுமுனையில் ராமசுப்புவின் லேசான விசும்பல் சத்தம் கேட்டது.
“கவலைப்படாதீர்கள் ராமசுப்பு. ஒன்றும் ஆகியிருக்காது. சீக்கிரம் வந்து விடுவான் பாருங்கள்” என்று ஆறுதல் கூறினார் சங்கர். பிறகு, “எப்போதிலிருந்து அவனைக் காணவில்லை. என்ன ஆயிற்று?” என்று கேட்டார்.
“என்னுடைய மூத்த மகன் திலீப் இந்த வருடம் பி.டெக் முடித்திருக்கிறான். இரண்டு வாரத்துக்கு முன்னால் வேலைக்கு இன்டர்வியூ வந்தது. கோயம்புத்தூருக்கு கிளம்பிப் போனான். பிறகு வேலையில் சேர்ந்து விட்டதாக போன் பண்ணினான். தினமும் அவனோடு பேசுவேன். நாலு பேர் சேர்ந்து ஒரு ரூமில் தங்கியிருக்கிறோம். சாப்பாடெல்லாம் பிரச்சினை இல்லை. வாரம் இரண்டு நாள் லீவு என்றெல்லாம் சொல்லுவான். ஆனால் போன வெள்ளிக்கிழமையிலிருந்து அவன் போனே பண்ணவில்லை. நான் அவனுக்கு போன் போட்டால் சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது” என்றார்.
“எந்த கம்பெனியில் வேலை செய்வதாகச் சொன்னான்”
“எல் அன் டி கம்பெனிதான் இன்டர்வியூவிற்கு கூப்பிட்டிருப்பதாகச் சொன்னான். அங்குதான் வேலை செய்ய வேண்டும்” என்றார்.
“எந்த இடம், என்ன வேலை என்பது மாதிரி வேறு ஏதாவது விபரம் சொன்னானா?”
“சாய்பாபா காலனி பக்கத்தில்தான் வேலை என்று சொன்னான். அவன் தங்கியிருக்கும் இடம் ஊரிலிருந்து கொஞ்சம் தள்ளியிருப்பதாகவும், காபி, டீ குடிப்பதானால் கொஞ்ச தூரம் நடந்து செல்ல வேண்டும் என்றும் சொன்னான்”.
ராமசுப்பு சொல்வதை வைத்து ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
“குவாலிட்டி கன்ட்ரோலில் வேலை செய்வதாக சொன்னான். எலக்ட்ரானிக் உதிரிப்பாகங்கள் தயார் பண்ணுகிற கம்பெனியாம்” அதற்கு மேல் அவருக்கு விபரம் ஏதும் தெரியவில்லை.
“சங்கர், எனக்காக ஒரு காரியம் செய்ய முடியுமா? அவன் வேலை செய்த கம்பெனியில் போய் கொஞ்சம் விசாரித்து விட்டு தகவல் சொல்ல முடியுமா? இங்கே என் மனைவி அழுது கொண்டேயிருக்கிறாள். நானே கிளம்பி வந்து விடுவேன். எனக்கு இப்போதுதான் பைபாஸ் சர்ஜரி நடந்தது. ரொம்ப தூரம் பிரயாணம் பண்ணக் கூடாது என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்றார். அதைக் கேட்டதும் சங்கருக்கு அவர் மேல் பரிதாபம் ஏற்பட்டது.
“ஒன்றும் கவலைப்படாதீர்கள். நான் போய் பார்த்து வந்து தகவல் சொல்கிறேன். சாய்பாபா காலனியில் குறிப்பாக ஏதாவது இடம் சொன்னானா? ஞாபகம் இருக்கிறதா?”
“சிவசக்தி தியேட்டர் பக்கத்தில் என்று சொன்னான்” என்றார் ராமசுப்பு.
ஆபீசுக்கு லீவு சொல்லிவிட்டு கிளம்பினார் சங்கர். சாய்பாபா காலனியில் சிவசக்தி தியேட்டர் அருகில் எல் அன் டி கம்பெனி பெயர் ஏதாவது தெரிகிறதா என்று தேடினார். அங்கு இருந்த கடைகளில் விசாரித்துப் பார்த்தார். அப்படி ஒரு கம்பெனி இருப்பதற்கான அடையாளமே தெரியவில்லை. ஒரு வேளை எல் அன் டி யில் கட்டிடம் கட்டும் பிரிவாக இருக்குமோ என்று அந்த ஏரியாவில் பெரிய அளவில் கட்டிட வேலைகள் ஏதாவது நடைபெறுகிறதா என்றும் தேடிப் பார்த்தார். அங்குமிங்கும் அலைந்ததுதான் மிச்சம்.
என்ன செய்வது? சரியான முகவரியோ, தகவலோ இல்லாமல் எப்படி கண்டு பிடிப்பது? ‘தேடிப்பார்த்தேன். கண்டு பிடிக்க முடியவில்லை என்று சொல்லிவிடலாமா?’ ஆனால் ராமசுப்புவை நினைத்தால் பாவமாக இருந்தது. இப்போதுதான் இருதய ஆபரேஷன் செய்து கொண்டவர். அவருக்கு ஏதாவது நல்ல தகவல் சொன்னால் ஆறுதலாயிருக்கும்.
எதிர் திசையில் ஒரு பெரிய பில்டிங் இருந்தது. அதன் இரும்பு கேட்டருகே சீருடையில் ஒரு செக்யூரிட்டி நின்றிருந்தார். அவரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று ரோட்டைக் கடந்து அவரிடம் சென்றார் சங்கர்.
“ஐயா, எல் அன் டி கம்பெனி ஆபீஸ் ஏதாவது பக்கத்தில் இருக்கிறதா?”
“என்ன அட்ரஸ்?” என்றார் அந்த செக்யூரிட்டி.
“சிவசக்தி தியேட்டர் அருகில் என்று சொன்னார்கள்”
“அதோ, அதுதான் சிவசக்தி தியேட்டர். ஆனால் எல் அன் டி கம்பெனி இங்கு இல்லையே” என்றார் செக்யூரிட்டி. பிறகு கொஞ்சம் யோசித்தபடி, “இதோ இந்த சந்தில் போனீர்கள் என்றால் வேலைக்கு ஆட்களை எடுக்கும் மேன் பவர் ஏஜென்சி ஒன்று இருக்கிறது. அங்கு கேட்டுப் பாருங்கள்” என்றார்.
சரியென்று அவர் சொன்ன அந்த ஏஜன்சியை தேடிப் பிடித்து உள்ளே நுழைந்தார். பத்துக்கு இருபது அடி சைஸில் இருந்தது அந்த ஆபீஸ். அதன் ஒரு ஓரத்தில் கேபின் போல இருந்தது. அங்கே சென்றபோது உள்ளே ஒரு பெண் யாருக்கோ போனில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். பேசி முடித்த பிறகு சங்கரைப் பார்த்து, “உட்காருங்கள். என்ன விஷயமாக வந்தீர்கள்?” என்றாள்.
“திலீப்குமார் என்று ஒரு பையன் எல் அன் டி யில் இன்டர்வியூ என்று ஊரிலிருந்து வந்தான். அவனைத் தேடித்தான் வந்திருக்கிறேன்” என்றார். அவருக்கு தான் ஏதோ சம்பந்தமில்லாத இடத்தில் விசாரித்துக் கொண்டிருப்பதாக தோன்றியது.
அந்தப் பெண், “கொஞ்சம் இருங்கள்” என்று சொல்லிவிட்டு ஒரு கத்தையான கோப்பை எடுத்து தேட ஆரம்பித்தாள். சங்கருக்கு ஆச்சரியமாக இருந்தது. எல் அன் டி கம்பெனிக்கு இன்டர்வியூவிற்கு வந்தவனைப் பற்றி இந்தக் கோப்பில் தேடிக் கொண்டிருக்கிறாளே இந்தப் பெண்?
“மேடம், எல் அன் டி என்பது பெரிய கம்பெனி அல்லவா?”
“எங்களுடைய இன்னொரு கம்பெனியின் பெயர்தான் எல் அன் டி. அதாவது லாரன்ஸ் அன்டு தங்கமணி பிளேஸ்மென்ட் சர்வீஸஸ் என்பதைத்தான் எல் அன் டி என்று சொல்லுவோம். அவர்கள் இன்டர்வியூ செய்து செலக்ட் பண்ணி அனுப்புவார்கள். நாங்கள் எந்தக் கம்பெனியில் வேலை காலி இருக்கிறது என்று பார்த்து அங்கே அனுப்புவோம்” என்றாள்.
சங்கருக்கு அதிர்ச்சியாக இருந்தது. தன் மகன் எல் அன் டி யில் வேலைக்குச் சேர்ந்திருப்பதாக ராமசுப்பு நம்பிக்கொண்டிருக்கிறார், பாவம்.
“இதோ இருக்கிறது” என்று ஒரு தாளை உருவி எடுத்தாள்.
“திலீப்குமார், தந்தை பெயர் ராமசுப்பு, சொந்த ஊர் தென்காசி தாலுகா மங்களபுரம், சரிதானே?”
“ஆமாம், சரிதான். இங்கு வந்தானா?”
“இரண்டு வாரங்களுக்கு முன்னால் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி இங்கு வந்தான். இரண்டு மூன்று கம்பெனிகளுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் இப்போது எந்தக் கம்பெனியில் இருக்கிறான் என்று தெரியாது” என்றாள்.
“எந்த கம்பெனியில் வேலை செய்கிறான் என்று எப்படி தெரிந்து கொள்வது?””
“ஏன், அவனுடைய செல்போனில் பேசி தெரிந்து கொள்ளலாமே?”” என்றாள்.
“அவனுடைய செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அவனுடைய அப்பாவுக்கு தினமும் போன் பண்ணிக் கொண்டிருந்தவன் போன வெள்ளிக்கிழமையிலிருந்து போனே பண்ணவில்லை. அதனால்தான் விசாரித்து சொல்லச் சொல்லியிருக்கிறார்”” என்றார்.
“எங்கள் ஆபீசில் ரகு என்பவர்தான் அவனை அழைத்துப் போனார். இன்னும் அவர் வரவில்லை. கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள். அவர் வந்ததும் கேட்கலாம்” என்றாள்.
அப்போது ராமசுப்புவிடமிருந்து சங்கருக்கு போன் வந்தது.
“ராமசுப்பு, உங்க பையன் வந்து பார்த்த ஆபீசில்தான் இருக்கிறேன். இது எல் அன் டி கம்பெனி இல்லை. அதே பெயரில் உள்ள தனியார் வேலை வாய்ப்பு அலுவலகம்”.
“அப்படியா, ரொம்ப நன்றி சங்கர்! ஒரு வழியாக என் பையன் இருக்குமிடத்தைக் கண்டு பிடித்து விட்டீர்கள்” என்றார் ராமசுப்பு.
“இல்லை, இல்லை. இங்கு வந்திருக்கிறான் என்றுதான் தெரிந்திருக்கிறது. ஆனால் எந்த கம்பெனியில் வேலை செய்கிறான் என்ற விபரம் தெரிவதற்காக காத்திருக்கிறேன்” என்றார் சங்கர்.
காத்திருந்த போது அந்தப்பெண்ணிடமிருந்து சில விபரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. வேலை தேடும் இளைஞர்கள், ஒரு அப்ளிகேஷனில் விபரங்களை நிரப்பி சர்ட்டிபிகேட்களை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுத்து, ஆயிரம் ரூபாய் கட்டணத்துடன் அப்ளை செய்தால், படிப்பு மற்றும் தகுதியைப் பொறுத்து தகுந்த இடங்களில் வேலைக்கு சேர்த்து விடுவார்களாம். சில சமயம் ஃபைனல் செமஸ்டர் எழுதிய மாணவர்கள் கூட அப்ளை பண்ணுவார்களாம். அவர்கள் வேலையில் சேர்ந்த பிறகு தேர்வு முடிவுகள் வந்தவுடன் டிகிரி சர்ட்டிபிகேட்டை ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்துவிட வேண்டுமாம். ஒருவேளை ஃபெயிலாகி விட்டால் அந்த வேலை போய்விடுமாம். ஆனால் மறுபடி பரீட்சை எழுதி பாஸ் பண்ணி, பிறகு மறுபடி அப்ளை பண்ணினால் ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்ட வேண்டிய தேவையில்லையாம்.
சுமார் அரைமணி நேரம் காத்திருந்த பிறகு, ரகு வந்தான். அந்தப் பெண் அவனை அழைத்து, “ரகு, இவர் திலீப்பை தேடி வந்திருக்கிறார். அவனை எந்தக் கம்பெனியில் சேர்த்து விட்டாய்?”” என்றாள். அவன் சங்கரை ஒரு பார்வை பார்த்து விட்டு, “எந்த திலீப்பை சொல்றே, பத்மா?” என்றான்.
“எல் அன் டி மூலமா வந்தானே, பி. டெக் படித்தவன். மங்களபுரம் சொந்த ஊர்”
“ஓ! அந்தப் பையனா, இரண்டு இடத்துக்கு கூட்டிட்டுப் போனேன். ரைட் சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தானே! ஏன் என்ன விஷயம் சார்?” என்று சங்கரைப் பார்த்து கேட்டான்.
“அந்தப் பையன் போன வெள்ளிக்கிழமையிலிருந்து போனே பண்ணவில்லை. போனும் சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்கிறது. அவன் ஏதோ குவாலிட்டி கன்ட்ரோலில் வேலை செய்வதாக அவனுடைய அப்பாவிடம் சொல்லியிருக்கிறான்” என்றார்.
“அப்படியா, வேறு வேலைக்குப் போனால் இந்தப் பசங்க சொல்றதேயில்லை” என்று சலித்துக் கொண்டான்.
“நீங்கள் சேர்த்து விட்ட கம்பெனியில் வேலையில் இருக்கிறானா என்று கொஞ்சம் கேட்டுப் பாருங்களேன்” என்றார் சங்கர்.
“பத்மா, அந்த நோட்டை எடு. அதில்தான் குறிப்பு இருக்கும்” என்று ஒரு நோட்டை வாங்கி புரட்டினான். “இதோ இந்த நம்பருக்கு போன் போடு” என்று அவளிடம் கொடுத்தான். அங்கே போன் செய்தால் அப்படி யாரும் வேலை செய்யவில்லை என்று சொல்லிவிட்டார்கள். இன்னொரு இடத்துக்கு போன் செய்த போது அவன் ஒரே ஒரு நாள்தான் வேலை செய்தான். பிறகு வரவில்லை என்றார்கள். இப்போது எல்லா வழியும் மூடியாகி விட்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.
“சார், உங்க நம்பர் கொடுத்து விட்டு போங்கள். ஏதாவது தகவல் தெரிந்தால் போன் பண்ணுகிறோம்” என்றான் ரகு. தன்னுடைய போன் நம்பரைக் கொடுத்துவிட்டு கிளம்பினார் சங்கர்.
சங்கருக்கு வருத்தமாக இருந்தது. ராமசுப்புவுக்கு உதவி செய்ய முடியவில்லையே. எங்கே போயிருப்பான் இவன்? போனை ஏன் சுவிட்ச் ஆஃப் செய்திருக்கிறான். ஒருவேளை விபத்தில் சிக்கியிருப்பானோ? அப்படியிருந்தால் போன் நம்பரை வைத்து அவன் வீட்டுக்கு தகவல் போயிருக்குமே! என்ன ஆகியிருக்கும் என்று புரியவில்லையே?
சாயந்தரம் ராமசுப்பு போன் பண்ணினார். இனிமேலும் அவரிடம் உண்மையை மறைக்காமல் பையனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி விடவேண்டியதுதான். ஆனால் ராமசுப்பு எடுத்ததுமே ஆவலுடன் ‘திலீப் இருக்குமிடம் தெரிந்து விட்டதா?’ என்று கேட்டார். அவருக்கு அதிர்ச்சியை கொடுக்க விரும்பாமல் ‘கம்பெனிகளில் விசாரித்து சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள்’ என்றார் சங்கர்.
“சங்கர், திலீப் கூட திருப்பத்தூர் பையன் ஒருவனும் இன்டர்வியூவுக்கு போயிருக்கிறான். ரெண்டு பேரும் ஒன்றாகப் படித்தவர்கள் என்று என்னிடம் பேசிய போது சொன்னான்”” என்றார். திடீரென்று மனதில் ஒரு ஒளிக்கீற்று. அவனைப் பிடித்தால் விஷயம் தெரிந்துவிடும் என்ற நம்பிக்கை வந்தது. “அந்தப் பையன் பெயர் என்ன?”” என்றார் சங்கர் ஆர்வமாக. ஆனால் ராமசுப்பு தெரியவில்லை என்று சொல்லிவிட்டார்.
மறுநாள் சிவசக்தி தியேட்டர் பக்கத்தில் உள்ள அந்த ஆபீசிற்கு சென்று, “திலீப்புடன் திருப்பத்தூர் பையன் ஒருவனும் இன்டர்வியூவிற்கு வந்திருக்கிறான். அவன் எங்கே வேலை செய்கிறான் என்று கண்டுபிடித்தால், இவனைப் பற்றி தகவல் கிடைக்கும்” என்றார் சங்கர். அவர்கள் தேடிப்பார்த்து விட்டு, ‘அதே தேதியில் திருப்பத்தூரில் இருந்து மூன்று பேர் இன்டர்வியூவிற்கு வந்திருக்கிறார்கள். இவனுடைய கிளாஸ்மேட் என்றால் பி. டெக் படித்தவன் மோகன் மட்டும்தான்’ என்று முடிவுக்கு வந்து, அவனுக்கு போன் பண்ணினார்கள். அவனோ, ‘ரெண்டு பேரும் ஒன்றாக வந்தது உண்மைதான். ஆனால் நான் சேர்ந்தது வேறு கம்பெனி. அவன் எந்த கம்பெனியில் சேர்ந்தான் என்று தெரியவில்லை’ என்று சொல்லிவிட்டான். மீதி இருந்த ஒரு நம்பிக்கையும் ஏமாற்றத்தில் முடிந்தது.
தினமும் போன் பண்ணி, ‘ஏதாவது தகவல் தெரிந்ததா?’ என்று ராமசுப்பு விசாரிப்பார். சங்கர் அவருக்கு ஆறுதல் சொல்வார். ஒரு கட்டத்தில் ராமசுப்பு விரக்தியடைந்து விட்டார். “சங்கர், அவனாக வந்தால் வரட்டும். எல்லாம் கடவுள் விட்ட வழி”” என்று சொல்ல ஆரம்பித்தார். போலீஸில் பையனைக் காணோம் என்று புகார் தரப் போயிருக்கிறார். எங்கு காணாமல் போனானோ அந்த ஏரியாவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுங்கள் என்று சொல்லிவிட்டார்களாம்.
ஏழு நாட்கள் ஓடிவிட்டது. எந்த முன்னேற்றமுமில்லை. ஆனால் அன்று மாலை போன் செய்யும் போது ராமசுப்பு இன்னொரு ஒரு தகவலை சொன்னார். அதாவது திலீப் எழுதிய கடைசி செமஸ்டரில் இரண்டு பாடத்தில் ஃபெயிலாகி விட்டானாம். சர்ட்டிபிகேட் வீட்டுக்கு வந்திருக்கிறது. ‘அது தெரிந்தால் இப்போதுதான் இருதய ஆபரேஷன் செய்து வந்த அப்பாவிற்கு அதிர்ச்சியாக இருக்கும் என்றுதான் போனில் பேசுவதை தவிர்த்திருக்கிறான்’’ என்று உறுதியாகச் சொன்னார். அதனால் அவன் எங்கோ நல்லபடியாகத்தான் இருக்கிறான் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
அது சரியாக இருக்குமென்றுதான் சங்கருக்கும் தோன்றியது. டிகிரி வாங்கவில்லை என்றால் வேலையும் போய்விடும். அப்பாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கும் என்றுதான் போனை ஆஃப் செய்து பேசுவதை தவிர்த்திருக்கிறான்.
“ராமசுப்பு, எல்லாம் சரிதான். ஆனால் வேலையுமில்லாமல் செலவுக்கும், சாப்பாட்டுக்கும் என்ன செய்வான்?” என்று கேட்டார்.
“நானும் அதை யோசித்தேன். அதனால் எதற்கும் இருக்கட்டும் என்று அவனுடைய வங்கிக் கணக்கில் 5000 ரூபாயை கட்டி அவனுடைய போன் நம்பருக்கு எஸ் எம் எஸ் அனுப்பி விட்டேன்” என்று சொன்னார்.
இரண்டு வருடம் ஓடி விட்டது. ராமசுப்பு மாதாமாதம் 5000 ரூபாயை வங்கிக் கணக்கில் கட்டி எஸ் எம் எஸ் அனுப்பி வைப்பதை தொடர்ந்து கொண்டிருந்தார்.
ஒருநாள் ஆபீஸ் வேலை விஷயமாக பொள்ளாச்சி ரோட்டில் சிட்கோவுக்கு போக வேண்டியிருந்தது. அங்கே கோமளா எஞ்சினியரிங் கம்பெனியில் எங்களுக்காக ஒரு மெஷின் தயார் பண்ணச் சொல்லியிருந்தோம். அங்கு போன போது முதலாளி இல்லை. அவருடைய அறையில் உட்காரச் சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில், “வாங்க சார், வணக்கம்” என்றபடி ஒரு இளைஞன் வந்தான்.
என்னைப் பார்த்ததும், “நீங்க… சங்கர் அங்கிள் தானே?” என்றான். சங்கருக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. “ஆமாம், நீ யார் என்று தெரியவில்லையே” என்றார்.
“நான்தான் திலீப்குமார் அங்கிள். ஊருக்கு வந்தால் அப்பாவை பார்க்க வருவீர்களே” என்றான். மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
“என்னப்பா, எப்படி இருக்கிறே? நீ திடீரென்று காணாமல் போய் விட்டதால் எங்கெங்கோ தேடினோம். எங்கே போனாய்? இங்கே என்ன செய்கிறாய்?” என்று கேள்விகளை அடுக்கினார்.
“ரொம்ப நம்பிக்கையோடு வேலைக்கு வந்தேன். ஆனால் இரண்டு பாடத்தில் ஃபெயில் ஆனதாக தெரிந்ததும், எனக்கு வாழவே பிடிக்கவில்லை. மருதமலைக்கு சென்று அங்கிருந்து குதித்து விடலாம் என்றுதான் நினைத்தேன்” என்றான். சங்கர் அதிர்ச்சியுடன் அவனையே பார்த்தார்.
“மருதமலை கோயிலில்தான் இந்த கம்பெனி முதலாளியை பார்த்தேன். என்னுடைய தற்கொலை முடிவை எப்படியோ புரிந்து கொண்டு, ஆறுதல் சொல்லி அழைத்து வந்து அவருடைய கம்பெனியில் வேலை கொடுத்தார். இப்போது இந்த கம்பெனியை நான்தான் பார்த்துக் கொள்கிறேன் அங்கிள்.” என்றான்.
“சினிமா கதை போல இருக்கிறதே!” என்றார் சங்கர்.
“ஒவ்வொரு சனிக்கிழமையும், இங்கு வேலை பார்க்கும் எல்லோரையும் அழைத்து ஒரு கூட்டம் போடுவார். தன்னம்பிக்கையைப் பற்றி பேசுவார். ஏதாவது சாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்தான். ஆனால் அவர் ஒரு கண்டுபிடிப்பாளராகவும், பெரிய பணக்காரராகவும் ஆகவில்லையா? எல்லோரிடமும் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அதைக் கண்டு பிடித்து பெரிய விஷயங்களை சாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். நல்ல மனிதர்” என்றான்.
அந்த மனிதர் மீது சங்கருக்கு மரியாதை ஏற்பட்டது.
“சரி, அப்பாவிடம் பேசினாயா? ஊருக்குப் போனாயா?”
“இல்லை, அங்கிள். நான் ஒரு மெஷின் கண்டுபிடித்திருக்கிறேன். அதன் மூலம் நாட்டில் இப்போது நிலவும் மின்வெட்டுப் பிரச்சினையை தீர்த்து விடலாம். ஒவ்வொரு வீட்டிலும் எளிதாக பொருத்தலாம். செலவும் அதிகமில்லை. அதற்கு அரசாங்க ஒப்புதல் வாங்கி விட்டால் பேங்க் லோனில் எனக்கென்று தனியாக ஒரு கம்பெனி ஆரம்பித்துக் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார். அதற்கு அப்பாவின் பெயரை வைத்து, அப்பாவை வைத்து திறப்புவிழா நடத்த வேண்டும். அதுதான் இப்போது என்னுடைய குறிக்கோள்” என்றான்.
“ரொம்ப சந்தோஷம். அந்த மனிதரிடமிருந்து தொழிலை மட்டுமல்ல. நல்ல குணத்தையும் கற்றுக்கொள்” என்றார்.
“நான் ஆரம்பிக்கப் போகும் கம்பெனியில், தேர்வில் தோற்றவர்களை தேடிப்பிடித்து அவர்களில் யாருக்கு உயர்ந்த லட்சியம் இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே வேலை கொடுப்பேன்” என்றான் திலீப்.
- மானுடம் போற்றுதும்
- இலக்கியப்பயணம்: —கனவு இலக்கிய இதழுக்கு வெள்ளிவிழா —- கனவு 25
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –34
- நம்பிக்கை ஒளி! (4)
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -3 பாகம் -8
- இயேசு ஒரு கற்பனையா?
- அக்னிப்பிரவேசம் -7
- கொசுறு பக்கங்கள்
- காரைக்குடி கம்பன் கழகத்தின் பவளவிழா
- ‘பாரதியைப் பயில…’
- தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012
- நான் ரசித்த முன்னுரைகளிருந்து………….. 2. பாரதியார் – பாஞ்சாலி சபதம்.
- சி.சு. செல்லப்பாவின் நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடும் வகையில் தளத்தின் முதல் இதழ் சி.சு. செல்லப்பாவுக்கு அஞ்சலி
- தாகூரின் கீதப் பாமாலை – 37 யாருக்குத் தெரியும் ?
- வைதேஹி காத்திருந்தாள்
- ஆரோகணம் & பிட்சா – டிஜிடல் தமிழ் சினிமா புரட்சியின் மைல்கல்கள்
- தானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி எனது பார்வையில்
- கவிதைகள்
- பழமொழிகளில் கல்லும் கல்லெறியும்
- மணலும், நுரையும்
- மீட்சிக்கான விருப்பம்
- தபால்காரர்
- தீயில் கருகிய சில உன்னத உறவுகள் நினைவுகள்
- மரப்பாச்சி இல்லாத கொலு
- “தீபாவளி…… தீரா வலி….. !”
- ஸ்வாத் பள்ளத்தாக்குக்கு போகும் சாலை: வெறுப்பு அழித்ததை மனிதம் மீட்கிறது.
- லூப்பர் ( ஆங்கிலம் )
- பேரரசுவின் திருத்தணி
- கற்பனைக் கால் வலி
- மனிதாபிமானம்!!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விரைவாக மாறும் வெளிக்கருவால், பூமியின் காந்தப் புலமும், ஈர்ப்பு விசையும் பாதிக்கப் படுகின்றன.
- சிறுவன்
- முப்பெரும் சக்தியின் நவராத்திரி..!
- மன்னை சரஸ்வதி தாயுமானவன் எழுதிய ‘நெல் மணிகள்’கவிதைத்தொகுப்பு