போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 10

This entry is part 29 of 33 in the series 3 மார்ச் 2013

போதி மரம் – பாகம் ஒன்று – யசோதரா – அத்தியாயம் – 10

சத்யானந்தன்

யசோதரா ராணி பஜாபதி கோதமியின் அறைக்குச் சென்ற போது அவர் மலைநாட்டுப் பெண்கள் கொண்டு வந்திருந்த கம்பளி, சால்வைகள், விரிப்புகள், ஜமக்காளங்களைப் பார்த்தபடி இருந்தார். “வா..யசோதரா.. நீயும் தேர்ந்தெடு.. குளிர்கால மாளிகை தயாராகிக் கொண்டிருக்கிறது”. யசோதராவும் மரியாதைக்காக சிலவற்றைத் தேர்வு செய்தாள். மலைப்புரத்துப் பெண்களுக்கு மூக்கு மிகவும் சிறியதாகவும் கூர்மையற்றும் இருந்தது. குள்ளமாக இருந்தனர். அவர்கள் அணிந்திருந்த பாசி மணி மாலைகள் வண்ண மயமாய் அழகாயிருந்தன. நீளம் குறைவான வெள்ளைப் புடவையை அவர்கள் முட்டிக்குச் சற்றுக் கீழே வரும்படி சுற்றிக் கொண்டு அதிகம் நீளமில்லாத தலைப்பை இடமிருந்து வலமாக வரும்படி அணிந்திருந்தனர். ஆண்கள் அணிவது போன்ற நாடாக்களால் மேலே போட்டுக் கட்டிக் கொள்ளும் சட்டைகளை சிறிய வடிவில் தைத்து அணிந்திருந்தார்கள்.

அவர்கள் விடைபெற்றுச் சென்றதும் “யசோதரா.. இந்த மாளிகையில் நீ இதுவரை காணாத ஒரு அறை இருக்கிறது. அதைப் பார்க்கலாம் வா…” என்று அவள் கையைப் பற்றி அழைத்துச் சென்றார் ராணி பஜாபதி கோதமி.

தனது அறையிலிருந்து வெளிப்பட்டு நீண்ட நடையில் பல அறைகளைத் தாண்டி உப்பரிகை செல்லும் படிக்கட்டுக்களின் முன் நின்று வலப்புறமாகத் திரும்பினார். ஒரு சிறிய நடை, அதன் முடிவில் மரக்கதவுகள் திறந்து உள்ளே சாளர வெளிச்சம் தவிர தீப்பந்தங்களுடன் பணிப்பெண்கள் நின்றிருந்தனர்.

பெரிய விசாலமான அறை. இருக்கைகளோ கட்டில்களோ இல்லை. காட்சிப்படுத்த வசதியான மரச்சட்டங்களால் ஆன பல தட்டுக்களின் மீது ஏகப்பட்ட பொருட்கள் இருந்தன. அத்தனையும் மரத்தால் ஆனவை.

முதலில் சின்னஞ்சிறிய வில் – கூர்முனை இல்லாத மர அம்புகளுடன் கண்ணில் பட்டது. வண்ணம் பூசப்பட்ட சிங்கம், புலி, கரடி, மான், யானை, குதிரை பொம்மைகள் இருந்தன. ஈட்டி, கேடயம், கத்தி, சிறிய குதிரைகள் பூட்டிய தேர். சிறிய மர ஏணி மட்டும் ஒரு இடத்தில் சுவரின் மீது சார்த்தப்பட்டு இருந்தது. “இது எதற்கு அத்தை?” “இதில் ஏறி சறுக்க நன்கு தேய்த்து வழுக்கிச் செல்லும் சறுக்கு மரமும் நடுவில் தாங்கும் சட்டங்களும் தனித்தனியே இருக்கின்றன” என்றார் ராணி. செவ்வக வடிவ மரச்சட்டத்தில் கயிறுகளில் கோர்த்த பல வண்ண வட்ட வடிவ மணிகள் இருந்தன. “இவை விளையாடும் சிறுவர்கள் தமது வெற்றிகளைக் கணக்கிடுவதற்கு ” ஒரு மேஜையின் மீது சிறிய படை வீரர்கள் நூற்றுக் கணக்கில், அதைத் தவிர கணிசமான குதிரைப்படை, யானைப் படை ஆகியவை ஒரு கோட்டையைச் சுற்றி வியூகம் போல வைக்கப் பட்டிருந்தன. “தேவதத்தனும் சித்தார்த்தனும் பொம்மைகளை வைத்தே நிறைய போர்களை நடத்தி இருக்கிறார்கள்.”

ஓவியம் வரையும் தூரிகைகளும் சிறிய மரச்சட்டத்தில் படுதாக்களும் இருந்தன. மூங்கிலை வைத்த நுட்ப வேலைப்பாட்டில் அமைந்த காடு தோட்டம் இவைகளும் பொம்மைகளாக இருந்தன. அரசவையின் மாதிரி, கோட்டை, அரண்மனை, கோயில், நகர், தெருக்கள், இவைகள் மண்ணால் செய்த வண்ண பொம்மைகளால் வடிவமைக்கப் பட்டிருந்தன.

“ராகுலன் பிறந்த நாள் முதலே எனக்கு இந்த அறையின் நினைவு மிகுந்தது” என்றார் ராணி.

உணவருந்தும் போது “சித்தார்த்தன் நம்மை விட்டு இரவில் யாருமறியாது கிளம்புவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு தனியே நகர்வலம் சென்றது உனக்குத் தெரியுமா?”

“தெரியாது அத்தை”

“அப்போது அவன் ஒரு சவ ஊர்வலம், ஒரு வயோதிகன், பின்னர் ஒரு வைராகி என ஒவ்வொரு நாள் ஒரு காட்சியைக் கண்டான். ”

“இதை உங்களிடம் யார் சொன்னது?”

“வேறு யார்? தேரோட்டி காந்தகன் தான்”

“இப்போது அவன் எங்கே?”

“முதலில் அவனை சிறையில் அடைத்தார் மன்னர்”

“அதன் பிறகு?”

“சித்தார்த்தன் மனம் இதை அறிந்தால் புண்படும் என்று நான் எடுத்துக் கூறியதால் அவன் நாடு கடத்தப்பட்டிருக்கிறான்”

யசோதரா பதில் ஏதும் சொல்லாமல் சிந்தனையில் ஆழ்ந்தாள். உணவு உண்டு அரசி தாம்பூலம் தரித்துக் கொண்டார். யசோதாரா மறுத்து விட்டாள்.

“வெளி உலகம் அறியாதவராய் அவரை வைத்திருக்க முடிவெடுத்ததுதான் ஒருவேளை அவர் இந்த சன்னியாச வழியில் செல்லக் காரணமாகி விட்டதோ?” என்று பேச்சைத் தொடர்ந்தாள் யசோதரா.

மகாராணி சற்று நேரம் கழித்து “கபிலவாஸ்து உருவான வரலாறு பல பாடல்களில் நாட்டியங்களில் நீ கண்டிருப்பாயே” என்றார்.

“தெரியும் நான்கு சகோதரர்களான மூதாதைய மன்னர்கள் வளமான நிலத்தில் உருவாக்கிய நகரும் நாடும் கபிலவாஸ்து.”

“இப்படி ஒரு நாட்டையே உருவாக்கிய கற்பனையையும் திட்டத்தையும் எல்லா தேச வரலாற்றிலும் காண இயலாது யசோதரா. அபூர்வமான இந்த முனைப்பும் தீர்க்க தரிசனமும் கொண்ட வம்சத்தின் வித்து சித்தார்த்தன். அவனிடம் அபூர்வமான இந்தத் தேடல், ஆன்மீகத்தின் மீதான ஈடுபாட்டில் துறவறம் கொள்ளத் துணியும் அர்ப்பணிப்பு மனப்பான்மை பூரணமாய் இருக்கின்றன. அதனால் தான் கட்டாந்தரையில் படுத்து உறங்கி பிட்சை எடுத்து வாழும் மனத்திண்மை அவனிடம் இருக்கிறது. இது அவனை ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் கட்டாயம் தனது லட்சியத்தை அடைய வைக்கும்.”

*****************
வெண்மையான எட்டு முழ வேட்டியை இடுப்பைச் சுற்றி கால்களுக்கு இடையே வளைத்துப் பின்பக்கம் சொருகும் பாரம்பரிய முறையில் அணிந்து ஒரு அங்கவஸ்திரம் மேலே அணிந்து ஆசிரமத்தில் மரத்தடியில் ஒரு தட்டையான கல்லின் மீது அமர்ந்திருந்தார் அமர கலாம. அவருக்கு எதிரே இன்னொரு அதே உயரக் கல்லின் மீது அமர்ந்திருந்தான் சித்தார்த்தன்.

“இந்த ஆசிரமச் சூழலில் சௌஜன்யமாக உணர்கிறீரா சித்தார்த்தரே?”

“ஐயமில்லை யோகியாரே. தங்களை குருவாக ஏற்க விரும்புகிறேன்”

“இன்றே தொடங்கலாம். தியானம் பற்றிய தங்கள் அனுமானம் என்ன?”

“மனத்தைக் குவித்தல்”

“எதன் மீது குவித்தல்?”

“இறைவன் மீது”

“எந்த இறைவன் மீது? அவன் வடிவமென்ன?”

“வடிவம் இல்லாத இறைவன். பரம் பொருள் என்று கொள்ளலாம்’

“வடிவமின்மை மீது அதாவது சூனியத்தின் மீது மனத்தைக் குவிப்பதா?”

சித்தார்த்தனால் பதில் கூற இயலவில்லை.

“சரி. நீங்கள் தியானம் செய்ய முயன்றீர்களா? என்ன அனுபவம் உள்ளது?”

“முயன்றிருக்கிறேன். ஒவ்வொரு முறை அமரும் போதும் சங்கிலிகளாக ஏதோ வடிவங்கள், மனிதர்கள், நினைவுகள் குறுக்கிட்டு முயற்சியைத் தளர அடிக்கும்”

“இன்று இங்கே துவங்கும் போது அவ்வாறு நிகழாதா? என்ன நினைக்கிறீர்கள்?”

சித்தார்த்தன் வாளாவிருந்தான்.

“பத்மாசனத்தில் அமருங்கள்.” அமர்ந்தான்.

உங்கள் மூச்சைச் சீராக இழுத்து விடுங்கள். அது சீராகி உங்களுக்கே ஒரு பிசிறில்லாத சுருதியில் கேட்பது போல் உணருவீர்கள். அதுவரை மூச்சைச் சீராக இழுத்து விடுவதிலேயே கவனமாயிருங்கள்” அமர கலாம தானும் அதைச் செய்தார். “இப்போது சீரான சுருதியை உணருகிறீர்களா?”

ஆமென்பதாய் சித்தார்த்தன் தலையசைத்தான். “விழிகளை மூடி வரும் எண்ணங்களை, காட்சிகளை எதிர்க்காமல் வர விடுங்கள். சற்று நேரம் அவ்வாறே செல்லட்டும்”

சித்தார்த்தன் பலமுறை எதிர்கொண்ட நிலையே இது. பிம்பிசாரர் முதல் யசோதரா வரை, நாவிதர் முதல் காந்தகன் வரை வனம், மழை, கபிலவாஸ்து, ராஜகஹம் என பலவும் வந்தன. அமைதியாய் அவரது அடுத்த கட்டளைக்காகக் காத்திருந்தான்.

“சித்தார்த்தரே. இப்போது ஒவ்வொன்றாக எண்ணங்களை நழுவ விடுங்கள். வலிந்து முயற்சிக்காமல் இயல்பாக அவை நழுவுகின்றன என உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது ஒரு எண்ணம் அல்லது காட்சி வெளியேறியது என்று உணருங்கள். மூச்சை உள்ளே இழுக்கும் போது வேறு எண்ணம் ஏதுமின்றி அந்த மூச்சையே அவதானியுங்கள்”

வெளியேறும் மூச்சுக் காற்றையே மையப் படுத்தியதில் அதன் உள்ளார்ந்த ஏற்ற இறக்கம் மெல்ல சீர்படுவதை உணர முடிந்தது. இந்த கவனக் குவிப்பு முயற்சியில் எண்ணங்கள் காட்சிகள் மோதும் சலசலப்பு இரண்டாம் பட்சமானது. மூச்சுக் காற்றிலேயே அதன் சமநிலைச் சுருதியிலேயே நிலைப்பது மட்டுமே ஒரே இயங்குதலாக மாறியது. அப்போது ஓயாத மனம் தன் வழியிலே போய்க்கொண்டிருக்க,எந்த ஏற்ற இறக்கமும் அலையடிப்பும் இல்லாத சுவாசம் ஒரு தொட்டிலைப் போலத் தன்னைச் சுற்றியும் ஏந்தியும் சாந்தி தருவதாக இருந்தது.

பிறந்த நாள் முதலாகத் திரிந்து அலைந்து பட இன்ப துன்ப அனுபவங்கள் எதனோடும் இந்த ஆழ்ந்த அமைதியை ஒப்பிட இயலவில்லை. முதன் முதலாக உடல் என்பதும் உயிர்ப்பு என்பதும் பிந்தி நின்றன. இயங்கும் போது இயங்குகிறேன் பார் என்ற குறைநத பட்ச அகம்பாவம். ஒடுங்கி அமர்ந்தால் இன்னும் எத்தனை நேரம் இப்படிச் சிரமப் பட வேண்டும் என்னும் கேள்வி. இவ்வாறாய் எப்போதும் முள்ளாகவே உறுத்திக் கொண்டிருக்கும் உடல் பற்றிய பிரக்ஞை அகன்றது. விழித்திருக்கும் நேரங்கள் என்றுமே அலைக்கழிப்பாகவே இருந்தன. தனித்திருந்தாலும் மனம் பலகாத தூரங்களைக் கடந்து இறந்த காலத்தின் பல வருடங்களைக் கடந்து எங்கெங்கோ சென்று வந்தது. உறக்கம் ஓய்வைத் தந்தது. அமைதியைத் தரவில்லை.உடலும் மனமும் இயங்க ஆன்ம அனுபவத்தில் – அந்த அனுபத்தில் இருந்து பிரிந்து- ஆழும் நிலை முதன் முதலாகக் கைவசமானது. இது வாய்த்து விட்டது என்னும் பரவசமோ பரபரப்போ இன்றி, நன்கு துடைத்துப் பளபளக்கும் விளக்குப் போல உள் நிர்மலமானது. இந்த உள் தான் ஆன்மாவா? உடலமும் சுவாசமும் மன்மும் பல பிறவிகளின் முடியாச் சங்கிலியின் ஒரு கண்ணியாகவே எப்போதும் இருந்தன. இருக்கின்றன. புலன்களின் தேடலெல்லாம் பழைய அனுபவத்தை மீண்டும் அரங்கேற்றி அதனுடன் நடப்பு அனுபவத்தை ஒப்பிட்டுப் பார்த்து இன்னும் அதிகத் துய்ப்பு உண்டோ என எதிர்பார்த்து இதையே மீண்டும் மீண்டும் மீண்டும் ஓயாமல் செய்கின்றன. எப்போதேனும் அதில் போலியாக அலுப்புற்று சலிப்புற்று அதற்குத் தீர்வாக இன்னொரு ஜீவனின் துய்ப்பில் பங்களிப்புச் செய்கிறது மனம். இருவரின் சிக்கல்களை இன்னும் இறுகிய தாறுமாறான நூல்களின் பிணைப்பாக மாற்றி அதை ஜீவிதம் என்று அழைக்கிறார்கள். ஆறாம் அறிவு இதை சரி என்று அனுசரணையாக நியாயப் படுத்துகிறது. சிக்குண்ட ஏனைய ஜீவிதங்களோடு ஒப்பிட்டு உயர்வு தாழ்வு கூறி, சுதை பொம்மைகளைப் பிரம்மாண்டமென நிலை நாட்டும் தருக்கங்களைக் கருவிகளாக்கி மாயையும் பற்றும் அக்ம்பாவமுமே உண்மை, வேறு எதுவும் இந்த வாழ்நாளில் தேடத் தேவையில்லை என்னும் கிணற்றுத்தவளைத்தனமே நிலைத்துவிட்டது.

உள் என்பது புறம் தொடர்பற்றுப் போகும் போதே ஊர்ஜிதமாகிறது. உள் தேடல் உள்ளது. தேவைகள் அற்றது. சாந்தமானது. சவால்களும் சபதங்களும் சாதனைகளும் வேதனைகளுமற்றது. உள் தன்னளவில் பூரணமானது. குறைகளையும் பாக்கியங்களையும், அல்லது மருந்தையும் மருத்துவர் தேடும் ரணங்களையும் அறியாதது. நான் என்று எப்போதும் காட்சிப் படுத்தப்படும் ஒன்று. சித்தார்த்தன் என மற்றவர் கண்டு வந்த ஒன்று இந்த உள்ளுக்கு உள்ளே இல்லை. உறக்கம் இயக்கம் என்னும் இருமை இதில் இல்லை.

மொட்டு அவிழ்ந்து மலர்வது போல இந்த அகவழியான அனுபவத்தின் ஆரமபக் கணங்கள் தந்த அமைதி பற்றிய பிரஞ்கையும் மெல்ல மெல்ல அடங்கியது. எந்த் அச்சமும் நிச்ச்யமின்மையும் எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு மௌனமும் அது தந்த அமைதியுமாக பல நாட்களாகத் தேடிய பெருநிலையின் முதற் கட்டத்தை அடைந்தான். மற்ற சீடர்களின் பயிற்சிகளை மேற்பார்வையிட்ட அமர கலாம ஆசிரமத்தின் நந்தவனத்தில் தோட்ட வேலைகளைச் செய்தார். சூரியன் மேலே மேலே சென்று உச்சியை அடைந்தது. சித்தார்த்தன் ஆடாமல் அசையாமல் நிஷ்டையிலேயே இருந்தான்.

பிற்பகலானது அமர கலாம ஏனைய சீடர்களுக்கு வைதீக மதமோ அல்லது ஷ்ரமணத்தின் மகாவீரர் பாதையோ இவை இரண்டையுமே புரிந்து கொள்ளாமல் நிராகரிப்பதோ அல்லது ஏற்பதோ தவறான திசையில் செல்வதாகும் என்று விளக்கிக் கூறினார்.

ஆசிரமத்தில் உள்ள தோட்டம், தொழுவத்தில் இருக்கும் ஆடுமாடுகள், செடிகள் என எல்லா உயிரினங்களின் இயங்குதலையும் சீடர்கள் அவதானிக்க வேண்டும். தியானம் மூலமாக புறவய உலகில் பின்னிப் பிணைந்து தனது தேடலை இழக்காமலிருக்கும் வலிமையைப் பெற வேண்டும் என்று உபதேசித்தார். சூரியன் மேற்திசையில் இறங்கத் தொடங்கியது. மாலை நெருங்கும் வேளையில் ஒரு சீடனை சித்தார்த்தனிடம் அனுப்பினார்.

‘யோகி சித்தார்த்தரே என்று பலமுறை அந்த மாணவன் சித்தார்த்தனை அழைத்துத் தோள்மீது கைவைத்து அசைக்க சித்தார்த்தன் விழிகள் திறந்தன. அவன் முகத்தில் சாந்தம் தெளிவாகத் தென்பட்டது.

அமர கலாம சித்தார்த்தன், மற்ற மாணவர்கள் அனைவரும் நதியில் நீராடித் திரும்பினார்கள்.

அன்று இரவு சித்தார்த்தன் கனவில் ஒரு வெளிச்சம் தன்னை விழுங்கிப் பின்பு அது மட்டும் எங்கும் நிறைந்திருக்கக் கண்டான்.

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 54 என் மனதில் இருப்பதை அறிபவன் !தன் வரலாற்றுப் பதிவுகளில் அடித்தள மக்கள்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *