மாயக்கண்ணன்

author
8
0 minutes, 9 seconds Read
This entry is part 24 of 29 in the series 28 ஏப்ரல் 2013

 

டாக்டர் ஜி.ஜான்சன்

அவன் ஒரு சுட்டிப் பையன். வயது ஆறு பெயர் மாயக்கண்ணன்.

அவனை நான் முதன் முறையாகப் பார்த்தது மருத்துவ வார்டில். கட்டிலில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.கருத்த மேனி. ஒல்லியான உருவம் பால் வடியும் முகம். அவன்தான் மாயக்கண்ணன்.

கட்டிலின் அருகே தரையில் ஓர் இளம் பெண் .துணி விரிப்பில் படுத்திருந்தாள் . அவளுக்கும் நல்ல தூக்கம்.அவளும் கரு நிறம்தான். ஒருக்களித்துப் படுத்த நிலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் .அந்த அமைதியான முகத்தில் ஒரு களை .உழைப்போர் வர்க்கத்தினருக்கு சொந்தமான எளிமையும் அப்பாவித்தனமும் அதில் பிரதிபலித்தது.

அப்போது நள்ளிரவைத் தாண்டிய நேரம். நான் வேறொரு அவசர நோயாளியைப் பார்த்துவிட்டு வெளியேறிக்  கொண்டிருந்தேன்.

அது ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனை சிவகங்கை மாவட்டத்தில் திருப்புத்தூரில் இருந்தது. அது 300 படுக்கைகள் கொண்டது . நான்தான் தலைமை மருத்துவ அதிகாரி. அதோடு மருத்துவப் பகுதியையும் நான்தான் கண்காணித்தேன். வார்டு என் பொறுப்பில் இருந்ததால் இரவில் வேலை செய்யும் அழைப்பு மருத்துவர் ( call doctor ) நோயாளிகளைக் கவனித்துக் கொண்டாலும், ஒரு சில நோயாளிகளைப் பார்க்க என்னையும் அழைப்பார்.

அந்த கட்டிலில் படுத்திருந்த சிறுவனைக்  ,காட்டி ” இந்த சிறுவனுக்கு என்ன பிரச்னை டாக்டர்? ” அருகில் இருந்த டாக்டர் செந்திலிடம் கேட்டேன்

” விளையாடிக் கொண்டிருந்த பொது மயங்கி விழுந்து விட்டான் . நான் உடன் ரேண்டம் ப்ளட் ஷுகர் ( random blood sugar ) பார்த்தேன். 25 மில்லிமோல் ( millimol ) இருந்தது .இன்சுலின் போட்டு குறைத்துள்ளேன். காலையில் மீண்டும் பாஸ்ட்டிங் ஷுகர் ( fasting sugar ) பார்க்கணும்.” என்று விளக்கினார்.

” இதற்குமுன் டையபெட்டீஸ் ட்ரீட்மென்ட் எடுத்துள்ளானா ? ”

” இல்லை என்கிறார் இவன் அம்மா? ”

” அவரை எழுப்பவா டாக்டர்? ” இரவு நர்ஸ் அமுதா கேட்டாள் .

” இல்லை வேண்டாம். காலையில் பேசுவோம். அவர் ஓய்வெடுக்கட்டும் . அவளைத் தடுத்தேன்.

அவனின் குறிப்பேட்டைப பார்த்தேன். பெயர் மாயக்கண்ணன். வயது ஆறு. அவனின் இதயத் துடிப்பும் , நுரையீரலும் சராசரியாக இருந்தது

நான் இல்லம் திரும்பினேன்.நினைவெல்லாம் அந்த மாயக்கண்ணனைப் பற்றியே இருந்தது.. அவனுக்கு உண்டான நோய் அதற்குக் காரணமாக இருக்கலாம்.ஆம் அது ஒரூ கொடிய நோய்தான்!

இப்படி சிறு வயதில் நீரிழிவு நோய் வருவதை முதல் ரகம் ( type 1 diabetes ) என்கிறோம். இது ஐந்து வயதிலும் உண்டாகலாம். இது ஒரு சுய எதிர்ப்பு வகையான ( auto immune ) நோய்.

கணையத்தின் செல்களுக்கு ( cells ) எதிரான சுய எதிர்ப்புப் பொருள் ( autoantibodies ) இரத்தத்தில் உருவாவதால் இன்சுலின் சுரப்பு தடைபட்டு இத்தகைய வகை நீரிழிவு நோய் உண்டாகிறது. ஐந்து வயதில் தொடங்கும் இந்தக் குறைபாடு அக் குழந்தை பனிரெண்டு வயதில் வயதுக்கு வரும்போது உச்ச நிலையை அடைகிறது.இதற்கு இன்சுலின் தவிர வேறு சிகிச்சை இல்லை.இதனால் இது உயிருக்கு மிகவும் ஆபத்தான நோயாகும்.

காலையில் வார்டு ஆய்வுக்கு ( ward rounds ) சென்றபோது மாயக்கண்ணன் கட்டிலில் உட்கார்ந்திருந்தான். உடல் ஒல்லியாக இருந்தாலும் முகம் மொழுமொழுவென்று கன்னங்கள் செழிப்பாகவே காணப்பட்டான்.அவனுடைய தாயாரைக் காணவில்லை.

வார்டு நர்ஸ் மெர்சி குறிப்பேட்டை என்னிடம் தந்தாள்..இரத்தத்தின் இனிப்பின் அளவு 10 மில்லிமோல் இருந்தது. இது இன்சுலின் சிகிச்சையால் குறைந்துள்ளது.

சிறுநீர் பரிசோதனையில் கீட்டோன் இருந்துள்ளது. கீட்டோன் என்பது நஞ்சு அமிலம் ( toxic acid ). நீண்ட நாள் நீரிழிவு நோயில் செல்களுக்கு சர்க்கரை போதாமல், சக்திக்கு உடலின் கொழுப்பு உடைபடும்போது இந்த நஞ்சு அமிலம் வெளியேறி இரத்தத்தில் கலந்து சிறுநீரில் வெளியேறும் .இப்படி காணப் பட்டால் இதை கீட்டோ அமில உயர்வு ( ketoacidosis ) என்று அழைப்போம்.

முதல் ரக நீரிழிவு நோயில் உண்டாகும் இந்த கீட்டோ அமில உயர்வு மிகவும் ஆபத்தானது. அது உண்டானால் அதிக தாகம், உலர்ந்த வாய், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாந்தி, வயிற்று வலி, மூச்சுத் திணறல், குழப்பம் போன்ற அறிகுறிகள் தென்படும். இதை உடன் கவனிக்காவிடில் நனவிழப்பும் ( coma ) மரணமும் நேரும்!

மாயக்கண்ணனுக்கு முதல் ரக நீரிழிவு நோய்தான் என்பது நிச்சயமாகிவிட்டது. இனி அவனுக்கு ஏற்ற இன்சுலின் ஊசி மூலம் சிகிச்சையைத் தொடங்க வேண்டும். .

இந்த ஊசியின் விலை அதிகம். இதை இவனுக்கு வாழ்நாள் முழுதும் போடவேண்டும். சராசரி மக்கள் இதை விலைகொடுத்து வாங்கி வாழ்நாள் முழுதும் போட்டுக்கொள்வது இயலாத ஒன்றாகும். இவனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பலாம். அங்கு ஒழுங்காக இவனைக் கூட்டிச் செல்வார்களா இவனின் பெற்றோர் என்பது தெரியவில்லை. இதுபற்றி இவனின் தாயாரிடம் முதலில் பேச வேண்டும் என்ற முடிவுடன் அவனை நோக்கினேன்.

” டேய் மாயக்கண்ணா…இப்போ எப்படி இருக்க? நேத்து என்னா சாப்பிட்ட ? ” என்றவாறு அவனின் கன்னத்தைத் தட்டினேன்.

அவன் பேச கூச்சப்படுவது தெரிந்தது. பின்பு சமாளித்துக்கொண்டு பதில் கூறினான்.

” ஐயா…மாம்பழம் சாப்பிட்டேன். ” நல்ல உச்சரிப்புடன் மழலைக் குரலில் கூறினான். கேட்பதற்கு மாம்பழம் போன்றே இனிமையாக இருந்தது .

” ஏது மாம்பழம்? எத்தனை பழம் சாப்பிட்டே?”

” ரெண்டு பழம் ஐயா. அம்மா வீட்டில வச்சிருந்தாங்க ”

” சரி. அம்மா எங்கே? ”

” வேலைக்கு போயிருக்காங்க.”

” அம்மாவுக்கு என்னா வேலை ? ”

” சித்தாள் வேலை ”

” அப்பா எங்கே? ”

” தெரியல ”

அவனின் பேச்சிலிருந்து நல்ல சுட்டியான கெட்டிக்கார பையனாகத் தோன்றினான். அவன்மீது ஒரு ஈர்ப்பும் உண்டானது.

அவனுக்கு மருத்துவமனை நீரிழிவு நோய் வியாதிக்கான உணவு தரும்படி குறிப்பேட்டில் எழுதினேன்.அவனின் அம்மா வந்ததும் என்னைப் பார்க்கும்படி மெர்சியிடம் கூறிவிட்டு வெளிநோயாளி பிரிவுக்குச் சென்றேன்.

நண்பகல் பனிரெண்டு வரை வெளிநோயாளிகளைப் பார்த்துவிட்டு அலுவலகம் செல்வது வழக்கம்.

அலுவலகத்தில் அன்று வந்திருந்த தபால்கள் வைக்கப்பட்டிருக்கும்.சிலவற்றுக்கு உடன் பதிலைக் கூறுவேன். அதை ஸ்டெனோ ( steno ) ஜெலின் குறித்துக்கொள்வாள். அவை மாலையில் தயார் ஆகிவிடும். நான்கு மணிக்கு மீண்டும் அலுவகத்தில் அவற்றில் கையெழுத்து இடுவேன். சில காசோலைகளும் கையெழுத்துக்காக வைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் என்னைப் பார்க்க வருபவர்களை மாலை ஐந்து மணிக்குமேல்தான் சந்திப்பது வழக்கம்.

அன்று மாலை என்னைப் பார்க்க மாயக்கண்ணனின் அம்மா வந்துள்ளதாக ஜெலின் கூறினாள் .நான் சரி என்றேன்.

அறைக்குள் நுழைந்ததும் ஓர் இளம் பெண் குனிந்து என் கால்களைப் பற்றிக்கொண்டு கதறி அழுதாள் . நான் ஒரு கணம் வெலவெலத்துப்போனேன்!

” டாக்டர்! என் மகனை நீங்கள்தான் காப்பாத்தணும் ! எனக்கு வேறு கதி இல்லை! ”

நான் செய்வதறியாது திகைத்தேன்.

” என்னம்மா இது ? முதலில் எழுந்திரு ! ” அதட்டினேன்.

” நீங்க என்ன பார்க்கணும்னு சொன்னீங்களாமே ? ” கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து நின்றாள் .

” மாயக்கண்ணனைப் பற்றி பேசவேண்டும்.” என்றவாறு அவளை நோக்கினேன

கருத்த நிறமானாலும், நல்ல உயரமாகவும் ஒருவித அழகும் அவளிடம் கண்டேன்.

” சொல்லுங்கள் டாக்டர்.” தலை குனிந்த நிலையில் கூறினாள் .

” மாயக்கண்ணனுக்கு சிறுவயதிலேயே வரும் இனிப்பு நீர் வியாதி உள்ளது.”.

” ஆமாங்க டாக்டர். சிஸ்டர் மெர்சி சொன்னாங்க . அதான் இங்கே ஒடியாந்தேன் அவனுக்கு எப்படி இது வந்தது என்று தெரியல . இப்போ நான் என்ன செய்வேன் ? எனக்கு உங்கள விட்டா வேற கதி இல்ல டாக்டர். எப்படியாவது அவன காப்பாத்துங்க டாக்டர்.இவன்தான் எனக்கு மூத்த புள்ள .”

” மொத்தம் எத்தனை பிள்ளைகள் உனக்கு? ”

” ஒரு மக இருக்கா .வயசு மூணு..”

” கணவர் என்ன செய்கிறார்? ”

” அவர் எங்களோட இல்ல .. நாங்க பெங்களூரிலே இருந்தபோது ஒருத்தியோட ஓடிப்போயிட்டாறு. ”

” பெங்களூரில் இருந்தீர்களா ? ”

” அங்க அவரு வேல பாத்தாரு ”

” இப்போ நீங்க எங்கே இருக்கீங்க? ”

” தெம்மாப்பட்டு டாக்டர். ”

தென்மாப்பட்டு மருத்துவமனையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது .

” நீ எங்கே வேலை செய்யிற? ”

” திருப்புத்தூரில கட்டடம் கட்டும் இடத்துல சித்தாள் வேல செய்யறேன் . ”

” உங்களுக்கு வேறு யாரும் உதவி செய்கிறார்களா ? ”

” இல்லைங்களே டாக்டர். ”

” ஒரு நாளைக்கு சம்பளம் எவ்வளவு? ”

” இருபது ரூபா .”

‘ இது போதுமா? ”

” பத்தாது டாக்டர்.வாரத்துல அஞ்சி நாள் வேலதான்.”

சோகமான நிலைதான். மாயக்கண்ணனைக் காப்பாற்ற வேண்டுமெனில் இவர்களுக்கு எப்படியாவது உதவலாம்.

” உன் பெயர்? ”

” அல்லி ”

” அட! அழகான பெயராச்சே? யார் வைத்தது? ”

” அம்மா ”

” பெற்றோர் இருக்காங்களா ? ”

” இல்ல . செத்துட்டாங்க. ”

” சரி. இங்கே பார் அல்லி . உன் மகனுக்கு உள்ள இனிப்பு நீருக்கு கட்டாயம் தினமும் ஊசி போடவேண்டும். அதற்கு செலவாகும். அது உன்னால் முடியாது. ”

” மருந்து மாத்திரையாலே முடியாதா டாக்டர்?> ”

:” முடியாது. ஊசி போடாவிட்டா உயருக்கு ஆபத்து. அவனை அரசாங்க மருத்துவமனைக்கு அன்றாடம் கூட்டிப் போக முடியுமா? ”

:” போலாம் டாக்டர். ஆனா என் வேல போயிடுமே? நா வேலைக்கு போனாதான் வீட்டுலே சாப்பாடு டாக்டர். ”

இந்தச் சூழலில் என்னால் எத்தகைய உதவி செய்யமுடியும் என்று உடன் அவளிடம் கூறவில்லை.ஆனால் ஒன்று செய்தேன்.அவளை அனுப்பிவிட்டு தென்மாப்பட்டுக்கு இன்பராஜை அனுப்பினேன். இன்பராஜ் மருத்துவமனையின் சமூக நல அதிகாரி. இலவச மருத்துவ ,, கண் சிகிச்சை முகாம்களை ஏற்பாடு செய்வது அவரின் வேலை.

தென்மாப்பட்டு சென்று கம்யூனிஸ்ட் கருப்பையாவை நான் உடன் பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட்டு வரச் சொன்னேன். அத்துடன் நானும் வீடு சென்றேன்.

கம்யூனிஸ்ட் கருப்பையா அந்தப்பகுதி வாழ் மக்களை நன்கு அறிந்தவர்.ஏழை எளிய மக்கள் பணம் கட்ட முடியாவிட்டால் அவர்களுக்கு சிபாரிசு செய்வார். அதன்வழி எனக்கு நெருக்கமானார்.மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். முறுக்கு மீசையுடன் எப்போதும் கழுத்தில் சிவப்பு துண்டுடன் , சண்டைச் சச்சரவு நடக்கும் இடங்களிலெல்லாம் முதலில் நிற்பவர்! எனக்குக் கூட மெய்க்காப்பாளராக ( body – guard ) இருப்பவர்!

அவர் சைக்கிளில் வீட்டுக்கு வந்தார். அல்லி பற்றி அவரிடம் கேட்டேன். அவள் குடும்பம் பற்றி அவர் கூறினார். பிழைப்பு தேடி அவர்கள் பெங்களூர் சென்றதையும், கணவனால் கைவிடப்பட்டு அவள் இரண்டு பிள்ளைகளுடன் திரும்பியுள்ளதையும், ஒரு குடிசை வீட்டில் வாடகை கூட ஒழுங்காகக் கட்ட முடியாமல் சித்தாள் வேலை செய்து கஷ்டப் படுவதையும் எடுத்துச் சொன்னார்.நான் மாயக்கண்ணன் பற்றிக் கூறி அல்லி குடும்பத்துக்கு உதவப் போவதை அவரிடம் கூறினேன். அவர் நன்றி கூறி விடை பெற்றார்.

ஸ்வீடிஷ் மிஷன் இப்பகுதி ஏழைகளுக்கு இலவச சிகிச்சைத் தர வருடந்தோறும் இரண்டு இலட்சம் ருபாய் அனுப்பியது. யார் யாருக்கு செலவிடலாம் என்று நான்தான் முடிவு செய்வேன்.

மாயக்கண்ணனுக்கு இங்கேயே இலவசமாக சிகிச்சை செய்ய முடிவு செய்தேன். அவனை இங்கேயே என் கண்காணிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவமனையில் மொத்தம் இருநூறு ஊழியர்கள் வேலை பார்த்தனர்.வேலைக்கு ஆள் சேர்ப்பதும் வேலையிலிருந்து நீக்குவதும் என் கையில்தான் இருந்தது..

மருத்துவமனையின் ஒரு பகுதியில் தமிழக அரசின் சமூக நலத்துறையின் ( social welfare department ) உதவியுடன் இளம்பிள்ளைவாத இடைநிலைப் பள்ளி ( Polio Transitional School ) நடத்தி வந்தேன். அதில் நாற்பது பிள்ளைகள் தங்கி படித்து வந்தனர். அவர்களைப் பார்த்துக்கொள்ள மேலும் ஒரு பெண்மணி தேவைப்பட்டார். அல்லியை அதில் சேர்த்துவிடலாம்.மாதம் ஐநூறு சம்பளம் கிடைக்கும். மருத்தவமனை ஊழியர் அனைவருக்கும் வளாகத்திலேயே இலவசமாக வீடுகள் தரப்பட்டுள்ளன,அல்லிக்கும் ஒரு வீடு கிடைக்கும்..

மாயக்கண்ணனின் படிப்பு பற்றி கவலை இல்லை. வளாகத்தினுள்ளேயே திருச்சபையின் துவக்கப்பள்ளி உள்ளது. அதில் அவன் சேர்ந்து விடலாம்.

இவற்றையெல்லாம் நான் மாயக்கண்ணன் என்ற அந்த சுட்டிப் பையனுக்காக செய்து முடித்தேன். அல்லி பூரித்துப்போன நிலையில் கண்ணீர் மல்க என் கால்களில் வீழ்ந்து நன்றி கூறினாள் ! அப்போது ஏழையின் சிரிப்பில் உண்மையில் இறைவனைக் கண்டேன்!

அப்போது பாவாடை சட்டை அணிந்த ஒரு சிறுமி அல்லியின் பின்னால் ஒளிந்து கொண்டு என்னை எட்டி எட்டிப் பார்த்தாள் ..அவள்தான் மாயக்கண்ணனின் தங்கை என்பதைப் புரிந்துகொண்டேன்.

” சின்ன பாப்பா , உன் பெயர் என்ன? ” அவள் கையைப் பிடித்து என் பக்கம் இழுத்துக் கேட்டேன்.

அவள் தலையை ஒரு பக்கமாகக் கோணிக்கொண்டு கண்களைச் சிமிட்டி சிமிட்டி , ” லெட்சுமி ” என்று குழைந்து குழைந்து கூறினாள் . அவளின் பால்வடியும் முகமும், மழலைப் பேச்சும் நெஞ்சில் நிறைந்தது.

வார்டிலிருந்து வெளியேறிய மாயக்கண்ணன் பள்ளியில் சேர்ந்து ஒழுங்காகத்தான் இருந்தான். தினமும் ஊசி போட வார்டுக்கு வந்துவிடுவான்.அவனுக்கு தரவேண்டிய உணவு பற்றி அல்லியிடம் விளக்கிக் கூறப்பட்டது.

புது வாழ்வு பெற்றது அச் சிறு குடும்பம்.

இன்சுலின் போடுபவர்களுக்கு ஒரு குறைபாடு உள்ளது. பசி அதிகம் எடுக்கும். இனிப்புமீது அதிக ஆசையும் எழும். மாயக்கண்ணன் சிறுவன். அவனும் இதற்கு விதிவிலக்கல்ல . கிடைத்ததைச் சாப்பிடும் பழக்கம் உள்ளவன்.

வீடுகள் அருகருகில் இருந்ததால் விளையாடும்போது பல வீடுகளுக்கும் சென்றுவிடுவான். அவனை எல்லாருக்கும் பிடிப்பதால் தின்பண்டங்கள் தரும் வாய்ப்பும் அதிகம் இருந்தது.

பொங்கல் விடுமுறை வந்தது. நான் சிதம்பரத்தில் என் கிராமத்தில் பொங்கல் கொண்டாட மூன்று நாட்கள் விடுப்பில் சென்றுவிட்டேன்.

மாயக்கண்ணனை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு அல்லியிடமும் வார்டிலும் சொல்லி விட்டுதான் புறப்பட்டேன்.

மாட்டுப் பொங்கல் அன்று அந்த அதிர்ச்சியான செய்தி வந்தது!

மாயக்கண்ணன் நினைவிழந்த நிலையில் வார்டில் சேர்க்கப்பட்டுள்ளானம் !

நான் ஐந்து மணி நேரத்தில் விரைந்து சென்ற போதிலும் என்னால் ஏதும் செய்ய இயலவில்லை!

அந்த பிஞ்சு உடலின் மீது வெள்ளைத் துணி போர்த்தப்பட்டிருந்தது!

Series Navigationபோதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 17பாசம் என்பது எதுவரை?
author

Similar Posts

8 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    சுறுசுறுப்பான மாயக் கண்ணன் மீது இனிப்பு நோயால் மரணம் நேர்ந்து வெள்ளைத் துணி விழக் கூடாதென்று குடும்பத்தையே டாக்டர் மருத்துவ மனைக் கர்ணனாகத் தோன்றிக் கண்காணித்தார். ஆனால் ஊழ்விதியின் கை பெரியது என்பதைச் சிறுகதைக் கண்ணீரில் அழகாகச் சொல்கிறது.
    இதயத்தைக் கீறும் கதை.
    டாக்டர் ஜான்சன்போல் கர்ண பரம்பரை மருத்துவர் கோடியில் ஒருவர். தமிழ்நாட்டில் பிறந்த ஆல்ஃப்ரட் ஸ்வைட்ஸர் [Albert Schweitzer] அவர்.

    http://en.wikipedia.org/wiki/Albert_Schweitzer [Albert Schweitzer]

    சி. ஜெயபாரதன்.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள நண்பர் சி . ஜெயபாரதன் அவர்களுக்கு வணக்கம். மாயக்கண்ணன் சிறுவயதிலேயே இனிப்பு வியாதியால் அகால மரணமுற்ற கசப்பான செய்தி என்னையும் வெகுவாகப் பாதித்தது உண்மை. இதைப் படித்து தாங்களும் மனம் வருந்தியதை என்னால் உணரமுடிகிறது.உங்கள் பாராட்டுக்கும் நன்றி. நீங்கள் ஆல்பர்ட் சுவைட்சர் பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளது ஒரு வகையில் வியப்பையூட்டியது.அவர் ஜெர்மன் நாட்டின் லுத்தரன் திருச்சபையைச் சார்த்தவர்.நானும் அந்த லுத்தரன் சபையைச் சார்ந்தவன்தான். அதோடு திருப்புத்தூரில் இயங்கிய ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனையும் லுத்தரன் திருச்சபையைச் சார்ந்ததேயாகும். ஆல்பர்ட் சுவைட்சர் ஒரு சிறப்பான மருத்துவ இறைத்தூதராக ( medical missionary ) விளங்கி உலகிற்கு இயேசுவின் அன்பின் சிறப்பை தமது தன்னலமற்ற தோண்டினால் வாழ்ந்து காட்டியவர். வேதத்தை பிரசிங்கித்தால் மட்டும் போதாது, அன்பை செயல்மூலம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று கூறியவர். ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆதிக்கத்தைச் சாடியவர். வெள்ளையர் கறுப்பர் என்ற ஏற்றத்தாழ்வை எதிர்த்தவர்., தமது வாழ்நாளை ஆப்பிரிக்க மக்களின் நல்வாழ்வுக்காக மருத்துவப் பணிக்காகவே அர்ப்பணித்தவர். இத்தகைய ஓர் ஒப்பற்ற மகானுடன் என்னை ஒப்பிட்டுள்ளது முற்றிலும் மிகையே எனினும், தங்களின் நல்ல உள்ளத்திற்கு எனது மனம் கனிந்த நன்றியை ஏறெடுக்கிறேன். …அன்புடன் டாக்டர் ஜி.ஜான்சன்.

  3. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    அன்பின் டாக்டர் ஜி.ஜான்சன் அவர்களுக்கு,

    மாயக்கண்ணன்…..மறைந்த சோகம் கதையைப் படித்ததும் மனதைத் தொற்றிக் கொண்டது. அவனைப் பற்றிய வர்ணனையில் மாயக்கண்ணனை நேரில் பார்த்த ஒரு
    உணர்வும் அவனை வெள்ளைப் போர்வையில் போர்த்தப் பட்டிருந்தது என்று முடித்த போது இன்னும் எத்தனை குழந்தைகள் இப்படி சக்கரை நோயில் கஷ்டப் பட்டுக் கொண்டு நோயோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்னும் எண்ணம் எழுந்தது. அல்லிக்கும் மாயக் கண்ணனுக்கும் நீங்கள் அளித்த நம்பிக்கை அபாரமானது. செய்யும் தொழிலே தெய்வம் என்று அதிலேயே சேவை புரியும் மனப்பாங்கு கொண்ட உம்மோடு ஆண்டவரும் கைகோர்த்து நிற்கிறார்….

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்

  4. Avatar
    Dr.G.Johnson says:

    அன்பு நண்பர் திரு சி .ஜெயபாரதன் அவர்களுக்கு வணக்கம். மருத்துவ இறைப்பணியாளர் ஆல்பர்ட் சுவைட்சர் பற்றி எழுதச் சொல்லியுள்ளதற்கு நன்றி. முயற்சி செய்கிறேன். அன்புடன் டாக்டர் ஜி.ஜான்சன்.

  5. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள ஜெயஸ்ரீ சங்கர் அவர்களுக்கு வணக்கம். மாயக்கண்ணனின் மரணம் உங்களையும் பாதித்து விட்டதை உணர்கிறேன் இதுபோன்று இளம் பிள்ளைகளுக்கு நீரிழிவு நோய் வருவதை சரியான முறையில் கண்காணிக்க வேண்டும்.தொடர்ந்து சிகிச்சை தர வேண்டும் .இதற்கு முறையான விழிப்புணர்வை உண்டு பண்ண வேண்டும். தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. அன்புடன் டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *