பல நேரங்களில் பல மனிதர்கள்

பல நேரங்களில்   பல மனிதர்கள்
This entry is part 42 of 51 in the series 3 ஜூலை 2011

புத்தக அலமாரி

ஒரு தடவை ‘ காலச்சுவடு ‘ இதழில் வெளி வந்திருந்த ” நான் பார்க்காத முதல் குடியரசு தின விழா ” என்கிற கட்டுரைத் தலைப்பே வம்புக்கு இழுத்துப் படிக்கத் தூண்டிற்று.கட்டுரை நெடுகத் தளும்பிக் குதித்த நகைச்சுவையும், இசை பற்றிக் குறிப்பிடுகையில் காணப்பட்ட உணர்ச்சி வசப்படலும் என்னைக் கவர்ந்தன. கட்டுரை எழுதியவரின் பெயர் பாரதி மணி என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

சமீபத்தில் ஒரு புத்தகக் கண்காட்சியில் ” பல நேரங்களில் பல மனிதர்கள் ” என்ற புத்தகத்தின் அட்டையில் பாரதி மணி என்ற பெயரைப் பார்த்ததும் பழைய ஞாபகம் வந்தது. இப் புத்தகத்தில் தன்னைப் பாதித்தவர்களைப் பற்றி பாரதி மணி எழுதியுள்ள கட்டுரைகளைத் தவிர, பாரதி மணியால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர்கள் அவரைக் குறித்து எழுதியிருக்கும் கட்டுரைகளையும் தாங்கியிருக்கும் தொகுப்பு இது. ரசிக்கக் கூடிய முன்னுரைகளை வெங்கட் சாமிநாதன், இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன் ஆகியோர் தந்திருக்கிறார்கள்.

இத் தொகுப்பைப் படிக்கும் போதும், படித்து முடித்த பின்னும் பாரதி மணி ஒரு one-man உதவும் கரங்கள் என்ற நினைப்பைத் தவிர்க்க முடிவதில்லை.பாரதி மணியின் உதவும் தன்மை ஏதோ வள்ளல் வகைப்பட்டதில்லை , யாசிக்கும் போது கொடுத்தருளுவது என்பது போல. முழு மனதுடன், அபிமானத்துடன் , தேவை அறிந்து சிரத்தையுடன் சென்று உதவும் செயல்களாக நம்மை மணி செய்யும் உதவிகள் எதிர்கொள்கின்றன. “தில்லி நிகம்போத் சுடுகாடு ” கட்டுரை தெரிவிக்கும் நுணுக்கமான மனித மன உணர்வுகள், சாதாரணர்கள் அவர்கள் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் படும் துயர்கள் , அவர்களைச் சுற்றியிருப்பவர்களின் நிர்பந்தங்கள் நெருடல்கள் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு சீரிய மனிதாபிமானத்துடன் பாரதி மணி ஆற்றும் உதவிகள் நம்மைக் கலங்க அடிக்கின்றன. அவரது எழுத்தில் மிகைப் படுத்தப் பட்ட துக்கம், இரக்கம், புருவம் தூக்கல் இவை எதுவும் மருந்துக்குக் கூடக் காணோம் என்பதே உண்மை. அதுவும் இன்றைய தமிழின் சில உயரிய / சீரிய / இரக்க / துக்க / மனிதாபிமான தொழில் திறமை வழிந்து தள்ளும் சோக எழுத்துக்களில் இருந்து மணியின் எழுத்து வேறுபட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

1974 ல் பங்களாதேஷில் அவர் சந்திக்கும் தமிழர்களுக்கு அவர்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு 1944 ல் ஸ்தம்பித்து நின்று விடுகிறது . வெளியுலகம் எவ்வளவு தூரம் மாறி விட்டது என்பதை அறியாது நடமாடும் அவர்களின் நிலைமை பாரதி மணியை வெகுவாகப் பாதிக்க அவர் தில்லி திரும்பியதும் தன் மனைவியிடம் விவரங்களைச் சொல்லுகிறார். “இனிமேல் வீட்டுக்கு வரும் விகடன், கல்கி, குமுதம் போன்ற தமிழ்ப் பத்திரிகைகளை பழைய பேப்பர்காரனுக்குப் போட்டு விடாதே ” என்கிறார். அந்தப் பழைய புஸ்தகக் கட்டுக்களை அடுத்தடுத்து அவர் பங்களாதேஷுக்கு போகும் போது எடுத்துச் சென்று அங்கிருக்கும் தமிழர்களிடம் கொடுக்க , அவை வெள்ளிக் கிழமை தொழுகைக்குப் பிறகு தமிழ்க் குடும்பங்களுக்குப் படித்துக் காண்பிக்கப் படுகிறது. தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத, அங்கேயே பிறந்து வளர்ந்த இளம் தலைமுறையினருக்கு தில்லித் தமிழ்ப் பள்ளியிலிருந்து பத்துப் பிரதிகள் பால பாடம் ( அணில் ,ஆடு , இலை , ஈ , உரல் , ஊஞ்சல் ….) வாங்கிக் கொண்டு போய் ஒவ்வொரு ஊரிலும் கொடுக்கச் செய்கிறார். (பங்களா தேஷ் நினைவுகள் ) மூக்கடைப்புடன் ‘ செம்மொழியாம் தமிழ் மொழிதான் எங்கள் உயிர்மூச்சு ‘ என்று அயர்ச்சி ஊட்டும் பேச்சாளர்களை, கண்மணிகளை மணியின் காலில் கட்டி வைத்து அடிக்கலாம்.

தமிழ் எழுத்து உலகுக்கு நன்கு பரிச்சயமான தி. ஜானகிராமன், நாஞ்சில் நாடன், வெங்கட் சாமிநாதன், ஆதவன் ஆகியோரை இப்புத்தகம் சிறந்த ‘குடி’மகன்களாகவும் அறிமுகம் செய்து வைக்கிறது. நான் தில்லியில் இருந்த நான்கு வருஷங்களில் மேற்குறிப்பிட்ட தில்லி எழுத்தாளர்களுடன் பரிச்சயம் இருந்தது. தவிர, மணி குறிப்பிடும் யு . என். ஐ . காண்டீன் , கரோல் பாக் கையேந்தி பவன்கள், வினய் நகர் ( பின்னாளில் சரோஜினி நகர் ) செட்டியார் மெஸ் ஆகிய இடங்களில் எல்லாம் கை நனைத்திருக்கிறேன். ஆனால் மணியின் பரிச்சயம் எனக்குக் கிட்டியதில்லை . (சில மாதங்களுக்கு முன்பு வெங்கட் சாமிநாதனின் மனைவி மறைந்து சில நாட்கள் ஆன பின் அவர் வீட்டுக்குப் போயிருந்த போது வராந்தாவில் உட்கார்ந்து கொண்டு சாமிநாதனிடம் ஜெயமோகனின் காடு பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டிருந்தவர்தான் பாரதி மணி என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.) தில்லியில் பரிச்சயம் கிட்டியிருந்தால் நானும் அவர் தயவில் ஷிவாஸ் ரீகல், ரெட் லேபல் என்று இறங்கி விளையாடி.. இப்போது குடிப்பதில்லையாமே..ஹூம் , எல்லாவற்றுக்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

எழுத்தாளர்கள் என்று மாத்திரம் இல்லை , தொழில் அதிபர்களைப் பற்றி, அரசியல்வாதிகளைப் பற்றி, சினிமாக்காரர்களைப் பற்றி, என்று ஒரு கால கட்டத்தின் அதிசயங்களை, அலங்கோலங்களை , விசித்திரங்களைப் பற்றி அனாயசமாக, உற்சாகமாகப் படம் பிடிப்பது போல் எழுதியிருக்கிறார் பாரதி மணி. இன்று உயிருடன் இல்லாதவர் களைப் பற்றி எழுதும் போது சுப்புடு விஷயத்தில் மணி சற்றுக் கவனம் செலுத்தி எழுதியிருக்கலாம் என்று தோன்றிற்று. ஆனால் தமிழின் தலை சிறந்த , இப்போது மறைந்து விட்ட ஒரு எழுத்தாளரின் தலை சிறந்த படைப்பை, அவர் காலமாகிப் பல பத்து ஆண்டுகள் ஆகிய பின் அந்நாவலை எடிட் பண்ணச் சொல்லி என்னைக் கேட்டார் என்று விஷமத்தனமாக ஒருவர் சொல்லும் ஈனம் பாரதி மணியின் நினைவுக் குறிப்புகளில் இல்லை.

பாரதி மணியின் கட்டுரைகளில் காணப்படும் நகைச் சுவை உங்கள் இதழ்களில் புன்னகையை வரவழைக்கத் தவறுவது இல்லை. உதாரணத்துக்கு: “நாம் வசிக்கும் அறையின் கொள்ளளவு கொண்ட பெரிய வெங்கல உருளிகளில்தான் சாம்பார், ரசம் வைப்பார்கள். இதற்குப் புளி கரைக்க, இரண்டு மூட்டை புளியை அப்படியே உருளியில் சாய்த்து , யானைக்கால் பித்தவெடிப்பு இல்லாத சமையல்காரர்களை, கால் கழுவி விட்டு ஏணி வழியாக பிரும்மாண்டமான உருளிக்குள் இறங்கச் செய்வார்கள்.சிறு வயதில் இதை கேள்விப்பட்ட நான், என் அப்பாவைக் கேட்ட குழந்தைத்தனமான கேள்வி : ” அந்த சமயத்தில் அவங்களுக்கு ஒண்ணுக்கு வந்தா என்னப்பா செய்வாங்க ? ” ( நான் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம் )

“லால்குடி ஜெயராமன், உமையாள்புரம் சிவராமன் , வேலூர் ராமபத்திரன் , ரெட்டை நாடியான மகாராஜபுரம் சந்தானம் , வயலின் வித்தகர் எல்.சுப்ரமணியன், வீணை சிட்டிபாபு ,புல்லாங்குழல் ரமணி என்று இன்னும் என் ஞாபகத்துக்கு வராத பிரபலங்களை தில்லி வீதியில் ஏற்றிச் செல்லும் பாக்கியம் பெற்றது என் ஸ்கூட்டர் . பல சங்கீத வித்வான்கள் ” மணி , பாத்து ஒட்டு. சாயங்காலம் கச்சேரி இருக்கு ” என்பார்கள். ( சிரிப்புத்தான் வருகுதையா )

பாரதி மணியின் எழுத்தில் பல விஷயங்கள் இல்லை என்று தோன்றுகிறது. படாடோபம், தற்பெருமை, பொய்க் கூச்சம், மனிதாபிமான லேபல், முதுகில் குத்துவது, பொறாமைக் காய்ச்சல் முகமூடி அணிந்து காண்பிக்கும் public face.. என்று ஒரு பெரிய லிஸ்டே இந்த ‘இல்லை’களில் அடங்கும்.

கதைகளில் காணப்படும் சொல் அடர்த்தியும், கட்டுரைகளின் உண்மைத்தன்மையும் ஒருங்கே பெற்ற வித்தியாசமான தொகுப்பு ” பல நேரங்களில் பல மனிதர்கள் ”

புத்தகம் : பலநேரங்களில் பல மனிதர்கள் ஆசிரியர் : பாரதி மணி பிரசுரம் : உயிர்மை பதிப்பகம் சென்னை விலை : ரூபாய் 100/-

Series Navigationவிருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனடா எழுத்தாளர் இணையத்தின் பாராட்டுகுயவனின் மண் பாண்டம்

2 Comments

  1. Avatar பாரதி மணி

    இப்போது தான் பார்த்தேன். என் புத்தகத்தைப்பற்றி பெரிய பெரிய வார்த்தைகளால் புகழ்ந்திருக்கும் ஸிந்துஜாவுக்கும், பிரசுரித்த கோ. ராஜாராமுக்கும் என் மனமார்ந்த நன்றி! உண்மையிலேயே நான் ரொம்ப கொடுத்துவைத்தவன்!

  2. Avatar SOMASUNDARAM

    Barathi Mani is really a honest gentleman.He is also a fearless writter.We expect more from him.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *