(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
22.நாடக உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த ஏழை!
அடடே…வாங்க..வாங்க…. வணக்கம்… எப்படி இருக்கறீங்க… நல்லா இருக்கிறீங்களா…? என்ன கண்டுபிடிச்சுட்டீங்களா….? இல்லையா? அட என்னங்க எந்தப் பதிலும் சொல்ல மாட்டேன்றீங்க… சரி…சரி..எல்லாரும் எல்லாத்தையும் மனசுல வச்சுக்க முடியுமா அதெல்லாம் ஒரு சிலராலதான் முடியும்… பராவாயில்லை..நானே சொல்லிடறேன்.. அந்த ஏழை எஸ்.ஜி. கிட்டப்பா தாங்க…..
ஆமாங்க நீங்க ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னால கே.பி.சுந்தரம்பாள் அம்மையாரின் கணவரைப் பற்றி என்னைக் கேட்டீங்கள்ள… அந்த அம்மையாரின் காதல் கணவர்தான் இந்த முடிசூடா மன்னர் கிட்டப்பா. என்னங்க ஆச்சரியமா இருக்கா… இருக்காதா பின்னே..இவங்க இரண்டு பேரும் மிகச்சிறந்த பாடகர்கள்; நடிகர்கள்; நம்ம நாட்டின் மாணிக்கங்கள்… அதுலயும் கிட்டப்பா அவர்கள யாராலயும் எந்தக் காலத்துலயும் மறக்க முடியாதுங்க..
சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், கலையுலகில் தீண்டத் தகாததாகக் கருதப் பெற்ற நாடகக் கலைக்குப் புத்துயிர் அளித்து, அன்றைய கர்நாடக இசையுலகில் புகழுடன் கொடிகட்டிப் பறந்தவர்களை எல்லாம் இசையினைக் கேட்பதற்காக நாடகக் கொட்டகைக்கு இழுத்து வந்த பெருமைக்குரியவர்தான் இந்த எஸ்.ஜி. கிட்டப்பா. இவரைச் செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா என்றும் அழைப்பர்.
இத்தகைய பெருமைக்குரிய கிட்டப்பா அவர்கள் 1906 –ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25 – ஆம் நாள் செங்கோட்டையில் கங்காதரய்யருக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் பத்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருடன் பிறந்தோர் சுப்புலக்ஷ்மி, சிவகாமி, அப்பாத்துரை, சுப்பையா, செல்லப்பா, சங்கரன், காசி, பிச்சம்மாள், நாராயணன் ஆகிய ஒன்பது பேராவர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ராமகிருஷ்ணன். வீட்டிலுள்ளோர் இவரைச் செல்லமாக அழைத்த பெயர் கிட்டன் என்பதாகும். அந்தச் செல்லப் பெயரே இசையுலக வரலாற்றில் கிட்டப்பா என்று நிலைத்துவிட்டது.
நாடக நடிகராதல்
குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. அந்தத் தாங்க முடியாத வறுமை காரணமாக இவரது சகோதரர்கள் இருவர், மாதம் 18 ரூபாய் சம்பளத்தில் “நாடகவுலகின் தந்தை” எனப் பாராட்டப் பெற்ற சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் கம்பெனியில் சேர்ந்தனர்.
இவரது குழுவில் பயிற்சி பெற்ற சுப்பைய்யரும் செல்லப்பையரும் பிற்காலத்தில் ராஜபார்ட் வேடங்களிலும் பெண் வேடங்களிலும் நடித்துப் புகழ்பெற்றனர். இந்த நாடகக் குழுவினர் 1912 – ஆம் ஆண்டில் மதுரையில் ஒரு நாடகம் நடத்தினர். அதில்தான் கிட்டப்பா தம் ஆறாவது வயதில் முதன்முதலாக மேடையேறி ஒரு பாடலைப்பாடி மக்களைக் கவர்ந்தார். அதன்பின் நாடகம் தொடங்கியதும் சபையினருக்கு வணக்கம் கூறும் பாடலைப் பாடும் இளம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் கிட்டப்பா சிறு சிறு பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
1919 – ஆம் ஆண்டில் கிட்டப்பாவும் அவரது சகோதரர்களும் கன்னையா நாடகக் கம்பெனியில் சேர்ந்தனர். கன்னையா கம்பெனி அரங்கேற்றிய நாடகங்களில் தசாவதாரம் நாடகமானது இசையிலும் நடிப்பிலும் காட்சி அமைப்புகளிலு
திருமணம்
கிட்டப்பாவுக்குப் பெண் கொடுக்கப் பலரும் முன் வந்தனர். இருப்பினும் அவரது பெற்றோர்கள் முடிவு செய்த, திருநெல்வேலி விசுவநாதய்யரின் மகள் கிட்டம்மாளை 24.6.1924– ஆம் ஆண்டில் கிட்டப்பா திருமணம் செய்து கொண்டார்.
1925 – ஆம் ஆண்டில் கிட்டப்பாவிற்கும் அவரது சகோதரர்களுக்கும் இலங்கையிலிருந்து நாடகங்களில் நடிக்க அழைப்பு வந்தது. சுந்தராம்பாளுடன் கிட்டப்பாவை நடிக்க வைப்பதற்காகவே நாடக முகவர் சிங்கம் அய்யங்கார் கிட்டப்பாவை இலங்கைக்கு அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டப்பாவிடம், “இலங்கையில் சுந்தராம்பாளின் கொடி பறக்கிறது. இது தெரியாமல் அங்கே போய் சிக்கிக் கொள்ள வேண்டாம்” எனக் கூறி அவரைச் சிலர் எச்சரித்தனர். கிட்டப்பாவிடம் கூறியதைப் போன்றே சிலர் சுந்தராம்பாளிடம் சென்று, “கிட்டப்பாவிற்கு எதிரே நின்று பாடி நீ மீள முடியுமா?” என அவரையும் பயமுறுத்தினர். ஆனால் இவற்றையெல்லாம் கேட்டு அவ்விருவருமே அஞ்சிப் பின்வாங்கி விடவில்லை.
“ராஜபார்ட் கிட்டப்பா ஸ்திரீபார்ட் சுந்தராம்பாள்” என கொழும்பு முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டது. 1926 –ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் நடித்த வள்ளி திருமணம் என்ற நாடகம் கொழும்பில் நடந்தது. “மோட்சமு கலதா” எனும் பாடலை கிட்டப்பா தமக்கேயுரிய பாணியில் மிகச் சிறப்பாகப் பாடினார். சுந்தராம்பாளும் அதற்கு ஈடு கொடுத்து தம் இன்னிசையால் அவையோரை மயக்கினார். இருவருமே கொழும்பு வாழ் தமிழர்களின் பாராட்டுரைகளில் மூழ்கித் திளைத்தனர். அவ்விருவரது வாழ்விலும் இந்நிகழ்ச்சி ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
மீண்டும் இவ்விருவரும் 1927 –ஆம் ஆண்டில் காரைக்குடியில் நடந்த வள்ளி திருமணம் நாடகத்தில் இணைந்து நடித்தனர். அதில் கிட்டப்பா வேலன், வேடன், விருத்தனாக நடித்தார். சுந்தராம்பாள் வள்ளியாக நடித்தார். அதே நாடகம் அதே இடத்தில் அடுத்த வாரம் நடக்கும் போது சுந்தராம்பாள் வேடன், வேலன், விருத்தனாகவும் கிட்டப்பா வள்ளி நாயகியாகவும் நடித்தனர். நந்தனார் நாடகத்திலும் இதே முறையைப் பின்பற்றி இருவரும் நந்தனாரும் வேதியருமாக மாறி மாறி நடித்தார்கள். அதன்பின் அவ்விருவரும் தொடர்ந்து பல நாடகங்களில் நடித்தனர். அன்றைய நாளேடுகள் இவ்விருவரின் நடிப்பையும் பாடும் திறனையும் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின.
இவ்விருவரும் தொடர்ந்து நடித்த கோவலன், ஞான சவுந்தரி போன்ற நாடகங்கள் இருவருக்கும் பெரும் புகழை ஈட்டித் தந்தன. இவர்களிருவரும் தனித்தனியே பாடி வெளிவந்த இசைத் தட்டுகள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்தன.
இவ்விருவரின் கலையுள்ளங்கள் செம்புலப் பெயல்நீர் போலக் கலந்தன… அவர்களிடையே காதல் மலர்ந்தது. ஒரே எண்ணம், செயல்பாடு, கொள்கை கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவது இயற்கைதானே! இசையும் இயற்கை! காதலும் இயற்கை. இவ்வியற்கையே இவ்விருவரிடையே காதலை முகிழ்வித்தது. காலப்போக்கில் கலையுலகில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் இணைந்து வாழ இருவரும் விரும்பினர். இருவருடைய வீட்டாருக்கும் இதில் விருப்பமில்லை. இருவருடைய குடும்பத்தினரும் அவர்களது காதலை எதிர்த்தனர்.
இருப்பினும் இறுதியில் காதலே வென்றது. கிட்டப்பா ஏற்கனவே திருமணமானவரென்பது சுந்தராம்பாளுக்கு நன்கு தெரியும். ஆயினும் “உன்னை இறுதிவரை காப்பாற்றுவேன்” என கிட்டப்பா அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் சுந்தராம்பாள் அத்திருமணத்துக்கு இசைந்தார். அவர்களது திருமணம் மாயவரம் ஆனந்தத் தாண்டவர் திருமண மண்டபத்தில் எளிய முறையில் நடந்தது.
“அம்மி மிதித்தோ அருந்ததி பார்த்தோ எங்கள் திருமணம் நடக்கவில்லை. அது பதிவுத் திருமணமும் அல்ல. அது ஈசனருளால் நடந்த திருமணம். ஜன்மாந்திரத் தொடர்பு என்பார்களே அவ்வாறு நடந்த திருமணம்!” என்று இத்திருமணத்தைப் பற்றி பிற்காலத்தில் சுந்தராம்பாள் கூறியது சிந்தனைக்குரியது.
ஸ்ரீ கானசபா நாடகக் கம்பெனி தொடங்குதல்
திருமணத்துக்குப் பின் கிட்டப்பா, சுந்தராம்பாள் இருவரும் சேர்ந்து ஸ்ரீ கானசபா என ஒரு நாடகக் கம்பெனியைத் தொடங்கித் தமிழ்நாடு முழுவதும் நாடகம் நடத்தினர். அதன் பின்னர் தற்போது மியன்மார் (பர்மா) என்று அழைக்கப்படும் நாட்டின் தலைநகரான ரங்கூன் வரையிலும் சென்று பல நாடகங்களை நடத்திப் பெரும் புகழுடன் தாயகம் திரும்பினர்.
நாடகக் கொட்டகைக்கு வெளியேதான் அவர்களிருவரும் கணவனும் மனைவியுமாக இருப்பர். மேடை ஏறிவிட்டால் அதனை மறந்து கடுமையாக மோதிக் கொள்வார்கள். கேலியும் கிண்டலும் நாடகத்தில் வலம்வரும்.
ஒருமுறை சத்யபாமாவாக மேடையில் தோன்றிய சுந்தராம்பாளிடம் கிருஷ்ண பரமாத்மாவாக வந்த கிட்டப்பா வேடிக்கையாக, “என்ன பாமா! உனக்கு எந்த நகையை எங்கு அணிய வேண்டுமென்று கூடத் தெரியவில்லையே?” என்றார்.
இது நாடகத்தில் இடம்பெறாத வசனம். சுந்தராம்பாள் விடுவாரா? “என்ன பரமாத்மா! உங்களுக்குப் பெண்கள் அணியும் நகைகள் பற்றி ரொம்பத் தெரியுமோ? தெரியாத விஷயத்தில் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்கணும்?” எனத் திருப்பித் தாக்கினார். உடனே சற்றும் சளைக்காமல் கிருஷ்ண பரமாத்மாவாகிய கிட்டப்பா, “அட பைத்தியமே! நான் பிறக்கும் முன்பே என் தாய் யசோதை ஆண் நகைகளில் ஒரு செட்டும் பெண் நகைகளில் ஒரு செட்டும் பண்ணி வைத்திருந்தாள். அதனால் சிறு வயதிலேயே எனக்கு அவ்விரண்டு செட் நகைகளையும் அடிக்கடி சூட்டி அழகு பார்ப்பாள். அதனால் எனக்கு இந்த விஷயத்தில் நல்ல அனுபவமுண்டு. என்னவோ எனக்கு ஒன்றும் தெரியாது என்பதைப் போல பேசுகிறாய்” என சமயோசிதமாகக் கூறிய பதிலைக் கேட்டு அரங்கமே அதிர்ந்தது.
விடுதலை இயக்கத்தில் ஈடுபடல்
1921-ஆம் ஆண்டிலிருந்தே கிட்டப்பா தேசீய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். அதற்கு அடையாளமாக கதர் உடுத்தத் தொடங்கினார். 1921 –ஆம் ஆண்டில் திலகரின் நிதிக்காகவும் 1923 –ஆம் ஆண்டில் மதுரையில் கதர் நிதிக்காகவும் 1924 –ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் தேசபந்துதாசிடம் கட்சிக்காகவும் 1930–ஆம் ஆண்டில் சென்னை உப்பு சத்தியாக்கிரகத்துக்காகவும் அவர் நிதி திரட்டிக் கொடுத்துள்ளார். உப்பு சத்தியாக்கிரகத்துக்காக அவர் தம் பேனாவை திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் ஏலம் விட அக்காலத்திலேயே அது 50 ரூபாய்க்கு ஏலம் போனது. மேலும் கிட்டப்பா தாம் நடித்த ஒவ்வொரு நாடகத்தின் முடிவிலும் காந்திக் குல்லாயுடன் தோன்றி காந்தியடிகளுக்குப் பிடித்த பாடலான “ரகுபதி ராகவ ராஜாராம்” என்ற பாடலைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கிட்டப்பாவுடன் சேர்ந்து சுந்தராம்பாளும் விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டார்.
விதியின் விளையாட்டு
நீரோட்டமாகச் சென்ற இருவரின் காதல் வாழ்க்கையில் விதி விளையாடத் தொடங்கியது. ஆம்! இன்றுபோல் அன்றும் பத்திரிக்கைகள் புகழ்பெற்ற தம்பதியர்களாக விளங்கிய இவ்விருவரைப் பற்றியும் எழுதி இருவருக்கிடையிலும் கருத்துவேறுபாட்டை வளர்த்தன. சில பத்திரிக்கைகள் “கிருஷ்ணலீலா நாடகத்தைப் பார்க்கப் போக வேண்டாம் என கிட்டப்பா கூறியும் கேட்காமல் சுந்தராம்பாள் அந்த நாடகத்தைக் காணச் சென்றதால் கிட்டப்பா கோபித்துக் கொண்டு சென்று விட்டார்” என்றெல்லாம் பலவாறாக எழுதின. இதனால் இருவருக்குமிடையே கருத்து வேற்றுமைகள் மெல்ல மெல்ல தலைதூக்கின; இடைவெளி அதிகமாயிற்று.
எதிர்பாராத சில சூழல்கள், கிட்டப்பாவிற்கு ஏற்பட்ட சில தவறான நட்புகள், சில புதிய பழக்கவழக்கங்கள், இருதரப்பிலும் ஏற்பட்ட சில வீண் பிடிவாதங்கள் போன்றவை ஒன்று சேர்ந்து அவர்களிருவரையும் பிரித்து விட்டது. கருத்தொருமித்து வாழ்ந்த காதலர்கள் பிரிந்து வாழ்ந்தனர். பாத்துக்குங்க…வாழ்க்கையில சரியான பழக்க வழக்கங்கள் வேணும். தவறான பழக்க வழக்கங்களக் கொண்டவர்களின் நட்பு நம்முடைய வாழ்க்கைய மாத்திப் போட்டுரும்…எந்த நட்பையும் நாம கவனமாத் தேர்ந்தெடுக்கணும்… அப்படித் தேர்ந்தெடுக்கலைன்னா கிட்டப்பா அவர்களுக்கு நேர்ந்ததுபோலத்தான் நேரும்….
அதுமட்டுமில்லைங்க…வீண்பிடிவா
தொடர்ந்த இழப்புகள்
இந்தப் பிரிவினைத் தொடர்ந்து பல துன்பமான நிகழ்வுகள் கிட்டப்பாவின் வாழ்க்கையில் ஏற்பட்டன. 1926 –ஆம் ஆண்டில் கிட்டப்பாவின் அன்னையார் மறைந்தார். 1927 –ஆம் ஆண்டில் கிட்டப்பாவின் தமையனாரும் தாயாரைப் பின் தொடர்ந்தார். 1928 –ஆம் ஆண்டில் கிட்டப்பா தன்னுடைய ஒரே குழந்தையையும் பறிகொடுத்தார். காதலால் அவருடன் இணைந்து அவருக்காகவே வாழ்ந்து வந்த சுந்தராம்பாளும் அருகில் இல்லை. அடி மேல் அடி! நாடக மேடையில் ஈடு இணையற்ற பாடகராக, முடிசூடா மன்னராகத் திகழ்ந்து அனைவராலும் பாராட்டப்பபெற்ற அம்மாபெரும் நடிகர் விதி நடத்திய வாழ்க்கைப் போராட்டத்தில் தளர்ந்து நின்றார். தன்னுடைய காதலியை விட்டுப் பிரிந்த நெப்போலியன் போனபார்ட் தொடர்ந்து பல்வேறு இழப்புகளைச் சந்தித்தார். அதற்காக வருந்தினார்.. தன் காதலியை நினைந்து நினைந்து மனம் நொந்து….நோய்வாய்ப்பட்டு காதலியின் நினைத்துக் கொண்டே இறந்தார். நெப்போலியனின் இம்முடிவு கிட்டப்பாவின் வாழ்க்கையிலும் நடந்தேறியதுதான் கொடுமை.
எல்லா நேரத்திலும் மனிதர்கள் வெற்றிபெறுவதில்லை. ஒன்றைக் கொடுக்கும் விதி மனிதனிடத்தில் இருந்து மற்றொன்றை எடுத்துக் கொள்கிறது. பணத்தைக் கொடுக்கும் விதி மன அமைதியைப் பறிக்கிறது. சுகத்தைக் கொடுக்கும் விதி அது அனுபவிக்கத் தக்க உடல்நிலையைப் பறிக்கின்றது. ஆம் மனிதர்கள் தோற்கும் இடத்தில் விதி வெல்கின்றது. எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் விதியிடம் தோற்றுத்தானே ஆக வேண்டும். இஃது கிட்டப்பாவின் வாழ்விலும் நிகழந்தது.
1932 -ஆம் ஆண்டு இறுதியில் உடலும் மனமும் சோர்ந்த நிலையில் கிட்டப்பா செங்கோட்டையில் தங்கியிருந்தார். அப்போது, அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை செங்கோட்டையில் வாழ்ந்த திரு. நாராயணன் என்பவர்,
“1929 மற்றும் 1933 –ஆம் ஆண்டுகளில் கிட்டப்பா ஆண்டுதோறும் பெருமுயற்சி எடுத்து நாதசுர வித்துவான்களையெல்லாம் வரவழைத்து இறைவன் திருவுலா வரும் நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்துவார். வழக்கம் போல் 1932 –ஆம் ஆண்டு நடந்த திருவுலா நிகழ்ச்சியன்றும் ஊர்வலம் வந்தது. பச்சை சாத்தி தேரானது கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்று நண்பகல் ஒரு மணிக்கு கோவிலை அடைந்தது. அப்போது அங்கு கிட்டப்பாவும் இருந்தார். அந்த வேளையில் கிட்டப்பா பாட வேண்டும் என்று அங்கு குழுமியிருந்த மக்கள் தங்களின் விருப்பததைக் கிட்டப்பாவிடம் தெரிவித்தனர். மக்களின் விருப்பத்தை உணர்ந்த கிட்டப்பா அவர்கள் மறுக்காது மறுநிமிடம் பாடத் தொடங்கினார்.
கிட்டப்பா முதலில் “பட முடியாதினித்துயரம் பட்டதெல்லாம் போதும்” என்ற பாடலையும் அதனைத் தொடர்ந்து, “மார்கழி மாதம் திருவாதிரை நாள்” பாடலும் பாடி முடிந்ததும் நாடக மேடையில் விழுவதுபோல் இறைவன் முன்பாக வீழ்ந்து வணங்கினார். கூடியிருந்த மக்கள் கூட்டம் ஆஹாஹா…என்று ஆங்காரமிட்டது. மக்கள் அனைவரும் சிதம்பரம் நடராஜப் பெருமானின் முன்னர் நிற்பது போன்று உணர்ந்தனர் என்று குறிப்பிடுகின்றார்.
இறைவனின் முன்னர் நின்று கொண்டு “”ஐயனே! படமுடியாதினித்துயரம் பட்டதெல்லாம் போதும்” எனக் கதறினாரென்றால் அது கடந்த காலத்தில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் உள்ளக் குமுறலாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதுவே கிட்டப்பா செங்கோட்டையில் பங்கு கொண்ட கடைசி நிகழ்ச்சியாகவும் அமைந்தது.
இசையால் அனைவரையும் மயங்க வைத்த கிட்டப்பா
நாடக மேடையில் கிட்டப்பா ஒரு பாட்டைப் பாடியபின் யாராவது மீண்டும் ஒருமுறை பாடுங்கள் என்று கேட்டால் கிட்டப்பா பாட மாட்டார். அது அவர் இயல்பு. ஆனால் சுந்தராம்பாள் பாடுவார். அப்பாடல் டூயட்டாக இருந்தால் கிட்டப்பாவும் பாடித்தானே ஆக வேண்டும். எனவே வேறு வழியின்றி கிட்டப்பா பாடுவார். பாடியபின் உள்ளே சென்றதும் சுந்தராம்பாளைத் திட்டுவார். இவ்வாறெல்லாம் இருந்தாலும், சுந்தராம்பாள் சிறிது உடல் நலமின்றி படுத்திருந்தால் அவரருகில் உட்கார்ந்து கொண்டு, “சுந்தரம்! நீ என்னை விட்டுப் போய் விடுவாயோ?” எனக் கண் கலங்குவார். அவர்களுடைய இசையும் தெய்வீகத் தன்மை வாய்ந்தது. காதலும் தெய்வீகத் தன்மை வாய்ந்தது!
கிட்டப்பாவுக்கு 4 கட்டை சுருதி. சில வேளைகளில் 5 கட்டையிலும் ஏன் 6 கட்டை சுருதியிலும் அனாயாசமாகப் பாடுவார். அதே வேளையில் சுந்தராம்பாளின் மத்திம சுருதிக்கும் பாடுவார். இசை மேதைகளுக்குத்தான் அந்த நுட்பம் புரியும். திருச்சி கோவிந்தசாமி பிள்ளை, காஞ்சீபுரம் நாயனாபிள்ளை, மருங்காபுரி கோபால கிருஷ்ணய்யர், புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், அரியக்குடி ராமானுஜய்யங்கார், திருவாவடுதுறை ராஜ ரத்தினம் பிள்ளை போன்ற இசை மேதைகள் எல்லாம் கிட்டப்பா நடிக்கும் நாடக அரங்கின் முதல் வரிசையில் அமர்ந்திருப்பர். கிட்டப்பாவின் வியக்க வைக்கும் அமர கானத்தைக் கேட்பதற்காகவே அவர்கள் நாடகம் பார்க்க வருவர்.
ஒருமுறை நாடகத்தில் கிட்டப்பாவின் பாடலைக் கேட்ட ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர், “நல்லவேளை! ஆண்டவன் எங்களைக் காப்பாற்றினார். நீங்கள் மட்டும் நாடகக் கொட்டகைக்குள் நுழையாமல் இசைக்கச்சேரி செய்வதற்கு மேடைக்கு வந்திருந்தால் நாங்களெல்லாம் என்றோ எங்கள் கடையைக் கட்டியிருப்போம்!” என்று வெளிப்படையாகவே கூறினார்.
முதன்முதலில் “எவரனி” எனும் கீர்த்தனையை இசைத் தட்டில் பதிவு செய்தவர் இதே ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்தான். பின்னர் எதிர்பாராத விதமாக கிட்டப்பா பாடிய “எவரனியை” அவர் கேட்டிருக்கிறார். உடனே தாம் பாடியதற்காகப் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்ததோடு, தாம் பாடிய “எவரனி” இசைத் தட்டு வெளிவராமலும் தடுத்து விட்டார். கிட்டப்பாவின் “எவரனி” முத்தையா பாகவதரை அந்த அளவுக்குக் கவர்ந்திருக்கிறது பாருங்கள்! கிட்டப்பாவின் கந்தர்வகானக் குரல் மற்றவர்களை மெய்மறக்கச் செய்ததற்கு இந்நிகழ்ச்சியானது சான்றாக அமைந்துள்ளது.
வேறு யாராவது ஒருவர் பாடிய பாடலை ஒருமுறை கேட்டாலே போதும், அடுத்த விநாடியில் அதனை அப்படியே திரும்பப் பாடும் திறனைக் கிட்டப்பா பெற்றிருந்தார். ஒருமுறை பியாரேசாகேப் பாடிய கமாஸ்ராகப் பாடலொன்றை அவர் கேட்டார். அன்றைய இரவு நாடகத்தில் அதே பாணியிலேயே அப்பாடலைப் பாடியதைக் கேட்ட பியாரே சாஹேப் கிட்டப்பாவை பாராட்டியதோடு ஒரு தங்கச் சங்கிலியையும் கிட்டப்பாவிற்குப் பரிசாகக் கொடுத்தார்.
1924 –ஆம் ஆண்டில் வடநாட்டு இசை மேதை பண்டித விஷ்ணு திகம்பரர் சென்னையில் தங்கியிருந்த பொழுது கிட்டப்பா வின் பேகடா ராக ஆலாபனையைக் கேட்டுக் கண்ணீர் மல்க மெய்மறந்து நின்றிருக்கிறார். கிட்டப்பாவின் தெய்வீக இசை ஞானத்துக்குச் சான்று பகர இந்த நிகழ்ச்சி ஒன்றே போதும். இந்துஸ்தானி பாடகர் புரபசர் கணேஷ் பிரசாதும் அமெரிக்க இசை விற்பன்னர் ஈச்சிம் என்பவரும் கிட்டப்பாவின் இசையில் மயங்கியவர்களுள் சிலர். இவ்வாறு நாடக மேடையில் சிறந்த கர்நாடக இசையை அறிமுகப்படுத்திய பெருமை கிட்டப்பாவுக்கு உண்டு. தனது இசையால் அனைவரையும் மயக்கி நாடக உலகில் முடிசூடா இசை மன்னராகக் கிட்டப்பா விளங்கினார்.
நாடகத்தை முடித்துக் கொண்ட மன்னர்
1933 –ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கிட்டப்பாவின் உடல்நிலை கவலைக்கிடமாயிற்று. கிட்டப்பா சென்னையில் டாக்டர் பி. ராமராவிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டபோது, கிட்டப்பாவிற்கு குடல் வெந்திருப்பதும் ஈரல் சுருங்கியிருப்பதும் தெரிய வந்தது. கிட்டப்பா சென்னை மயிலாப்பூரில் தனி வீடெடுத்துத் தங்கி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார். நோயின் கொடுமையைத் தாங்க முடியாத கிட்டப்பாவிற்கு என்ன தோன்றியதோ… தெரியவில்லை… யாரிடமும் கூறாமல் சென்னையிலிருந்து திடீரெனப் புறப்பட்டுச் செங்கோட்டைக்கு வந்து விட்டார். சிறிது காலம் கிட்டப்பா திருநெல்வேலியில் உள்ள மாமனார் வீட்டிலும் அதன்பின் சந்திர விலாஸ் மாடி அறையிலும் தங்கினார்.
1933 – ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25 –ஆம் நாள் கிட்டப்பாவிற்கு 27 -ஆவது வயது நிறைவு பெறும் நாள். அந்நாளின் நினைவாக கிட்டப்பா தமது உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் திருநெல்வேலி இந்து கல்லூரிக்காக இலவச நாடகம் ஒன்றை நடத்திக் கொடுத்தார். செப்டம்பர் மாதத்தில் கிட்டப்பா திருவாரூரில் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மேடையில் மயங்கி வீழ்ந்தார். அத்தருணத்தில் கிட்டப்பாவின் காதல் மனைவியாகிய சுந்தராம்பாள் கூட அருகில் இல்லை. அன்று அவருடன் நாடகத்தில் நடித்தவர் பிற்காலத்தில் திரையுலக நடிகையாக விளங்கிய m.k. விஜயாள் ஆவார். மனமொத்த தம்பதியாராக விளங்கிய கிட்டப்பா, சுந்தராம்பாள் இருவரும் இறுதிவரை ஒன்று சேரமுடியாமலேயே போய்விட்டது. இதுதான் விதியின் கொடுமை போலும்!…
உடல் நலக்கேடு ஏற்பட்டபோதும் கிட்டப்பா நாடகத்தில் நடிப்பதை மட்டும் விட்டுவிடவில்லை. தன்னுடைய நோயைத் தாங்கிக் கொண்டு தொடர்ந்து நடித்துக் கொண்டே இருந்தார். அக்டோபர் மாதத்தில் திருமங்கலத்தில் இரண்டு இலவச நாடகங்களை நடத்திக் கொடுத்தார். அதோடு அவரது நாடக வாழ்வு நிறைவிற்கு வந்தது.
கிட்டப்பாவிற்குக் கடுமையான வயிற்றுவலி. டாக்டர் அனந்த நாராயணன் சிகிச்சையளித்தார். சிறிது நிவாரணம் கிடைத்தது. முழுமையாக உடல் சீராகவில்லை. கிட்டப்பா சீரண சக்தியை இழந்து பெருந்துன்பத்திற்கு உள்ளானார்.
1933-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 –ஆம் நாள், சனிக்கிழமை பகல் 12 மணிக்கு மீண்டும் கிட்டப்பாவிற்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. அந்தவலி எந்தச் சிகிச்சைக்கும் கட்டுப்படவில்லை. கிட்டப்பாவை வயிற்றுவலி பாடாய்ப்படுத்தி முடிவில் அவரது உயிரையும் பறித்தது. 28 வயதுக்குள் தம் வாழ்க்கைக் கணக்கை முடித்துக் கொண்டு கிட்டப்பா புறப்பட்டு விட்டார். அவரது வாழ்க்கை எனும் நாடகத்தில் இறுதிக் காட்சி முடிந்து திரைச் சீலையும் வீழ்ந்தது! தனது நடிப்பாலும், இசையாலும் நாடகத்திற்கும் நாடகக் கலைஞர்களுக்கும் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தந்த பெருந்தகையான கிட்டப்பா தேவலோகத்திற்கு இசைபாடச் சென்றுவிட்டார்!….
கிட்டப்பா மறைந்தபோது அவரது இரு மனைவியரும் அருகிலில்லை என்பது கொடுமையிலும் கொடுமை!…. யாருக்கு யார் துணை?…… என்பது போன்று துணைவியர் அருகில் இன்றியே அவரது உயிர் பிரிந்தது! எவ்வளவு பெரிய துன்பம்! கிட்டப்பாவின் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதைப் பாருங்கள்! எல்லாம் விதியின் செயல் அன்றி வேறு எதைக் கூறமுடியும்?
தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ள கிட்டப்பாவின் நாடக ரசிகர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்று மனங்குமைந்து கதறி அழுதார்கள். கிட்டப்பா இறந்தபோது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு 25 வயது. இது எல்லாவற்றிலும் கொடுமையானது! அன்றுமுதல் சுந்தராம்பாள் துறவுக்கோலம் பூண்டார்! இவ்வளவு இளம் வயதிலேயே காலமானது சுந்தராம்பாளைத் துறவியாக்கி விட்டது. கண்ணான காதல் கணவன் இறந்தவுடன் அனைத்தையும் துறந்த சுந்தராம்பாளின் காதல் உள்ளத்தை என்னவென்பது?
கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் இணைந்து நடித்த பல நாடகங்களும் இன்பியல் நாடகங்களாக இருந்தபோதிலும் அவர்கள் வாழ்வு மட்டும் துன்பியல் நாடகமாகவே முடிந்தது! இவற்றை எல்லாம் பார்க்கும்போது,
“நதியின் பிழைஅன்று
நறும்புனல்இன்மை; அற்றே
பதியின் பிழை அன்று;
பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;
மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; (1824)”
என்ற கம்பராமாயணப் பாடல்தான் நம் நினைவுக்கு வருகின்றது. எது எப்படியோ காலம் உள்ளளவும் கந்தர்வகான கிட்டப்பாவின் வெங்கலக் குரலோசை நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்! அவ்விசை உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிறைந்திருக்கும்!
என்னங்க மயங்கிக் கலங்கிப் போயி இருக்கீங்க….! இதுதாங்க வாழ்க்கை…. இந்த வாழ்க்கையை நாம வாழ்ந்துதான் ஆகணும்…!ஒரு குறிக்கோளோடோ வாழணும்…! அப்பொழுதுதான் நாம வாழற வாழ்க்கை அர்த்தத்தோட அமையும்…அதுதாங்க உண்மையான வாழ்க்கை….! அந்த வாழ்க்கைக்குத் தயாராகுங்க…வசந்தம் என்பது ஒங்களத் தேடிவரும்…வாழ்க்கை வசந்தமாயிரும்…!
வாழ்க்கையில பிரச்சனை இருக்கலாம்…ஆனால் பிரச்சனையே வாழ்க்கையா இருந்தா என்ன செய்வீங்க?…என்ன முழிக்கிறீங்க…சோர்ந்திடக் கூடாது…எதிர்த்துப் போராடணும்…அப்படிப் போராடிப் புகழ் பெற்ற ஏழை ஒருத்தரு இருந்தாரு..மனச்சோர்வுக்கு ஆட்பட்டு ஒவ்வொரு நாளும் அந்தக் குறையோடு போராடிக்கிட்டே இருந்தாரு…நல்ல ஓவியங்களை வரைஞ்சாரு..ஒலகம் கண்டுக்கவே இல்லை… வறுமையில பிறந்து வறுமையில வாழ்ந்து வறுமையிலேயே இறந்தாரு….அவரு இறந்த பிறகு அவரது ஓவியங்களை உன்னதமானது என்று பாராட்டியது இந்த உலகம்…பேரும் புகழும் பெற்றார்….’Expressionism’ என்ற ஓவிய முறையை உலகிற்கு அறிமுகப்படுத்திய மேதை..யாரு…சொல்லுங்க…என்ன…
- 7.9.2013 அன்று மாலை காரைக்குடி கம்பன் கலையரங்கில்
- சாகச நாயகன் 5. என்டர் தி டிராகன் அனுபவம்
- முக்கோணக் கிளிகள் [3]
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 25
- சுற்றுச்சூழல் அதிர்ச்சி – “ சாயத்திரை “ சுப்ரபாரதிமணியனின் நாவல்
- புகழ் பெற்ற ஏழைகள் – 22
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -39 என்னைப் பற்றிய பாடல் – 32 (Song of Myself) கடவுளின் கை வேலை .. !
- டௌரி தராத கௌரி கல்யாணம் ……17
- ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – 1
- டாக்டர் ஐடா – தியாகம்
- நான் இசைக்கும் ஒற்றைப்பாடல்
- அண்டார்க்டிகா பனிக்கண்டம் சூடாவதற்குப் பூமியின் சுற்றுவீதிப் பிறழ்ச்சி ஒரு காரணம்
- கோலங்கள்
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 35
- தாகூரின் கீதப் பாமாலை – 80 பருவக் கால மழை .. !