டௌரி தராத கௌரி கல்யாணம் …22

This entry is part 12 of 31 in the series 13 அக்டோபர் 2013
 

குழந்தைகள் இரண்டும் ஒரு சேர அழுவதைக் கேட்டபடி, பாலை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்த சித்ரா, என்னாச்சுடி….கௌரி ரெண்டும் இப்படி அழறது…பாவம்…ரொம்பப் பசிக்கறதோ என்னமோ…இந்தா பாலைக் கொடு…..இதென்ன உன் கையில் லெட்டர்…இங்க கொடு பார்க்கலாம்..வாங்கியவள் அறைக்கு வெளியில் வந்து பிரித்துப் பார்க்கவும், ஓ ..இது அவரோட எழுத்து மாதிரி இருக்கே…யாருக்காக்கும்…? என்னும் கேள்வியோடு படிக்க ஆரம்பிக்கிறாள் சித்ரா.

கணவர் கடைசியாக தனது கைப்பட எழுதிய கடிதம்..அது எப்படி இந்த நேரத்தில் காசியில் தனது கையில் கிடைக்க வேண்டும்…?
கலங்கிய மனத்துடன்  மற்ற வேலைகளின் மேல் கவனம் செலுத்தித் தோற்றுப் போனாள் அவள்.

நாளை காலை ஏழு மணியிலேர்ந்து காரியங்கள் தொடங்கிடுவோம்….தங்கிய இடத்தின் எதிரில் தான் வீடு..வந்து விடுங்கள் என்று புரோகிதர் சொன்னதும் கௌரிக்கு சிறிது நிம்மதியாக இருந்தது. நல்லவேளை எதிர் வீடு தான்…என்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டாள் .

பயண அலுப்பில் சித்ராவும் குழந்தைகளும் அசந்து தூங்க ஆரம்பிச்சாச்சு.

முதலில் , நாளைக்கு கார்த்தால என்னவெல்லாம் எடுத்துண்டு வரணம்னு ஒரு வார்த்தை புரோஹிதர்த்ட கேட்டுக்கலாம் , நினைத்த கௌரி அவர் வீட்டை நோக்கி நடந்தாள் .

எதிரே என்றால் குறைந்தது பத்தடி கூட இல்லை…அதற்கும் குறைவான இடைவெளியில் இரண்டு படிகள் மேலே ஏறினால் சின்னச் சின்னக் கதவுகள் . ஐந்தடிக்கு மேலே உயரம் இருப்பவர்களை உள்ளேயே விடமாட்டேன் என்பது போல மிரட்டியது தலைவாசல்.

மெல்லக் குனிந்து கொண்டே உள்ளே நுழைந்தவளுக்கு ஆச்சரியம். உள்ளே….ஒரு மைல் தூரத்துக்கு வீடு தான்…ரயில் பெட்டி போலப் போய்க் கொண்டே இருந்தது. கதவைத் தனது மோதிரத்தால் தட்டி சத்தம் எழுப்ப எட்டிப் பார்த்தது தலை….பிரசாத்தின் தலை.

அட…இவன் எங்கே இங்கே….போற இடமெல்லாம் நானும் வருவேங்கிறாப்பல, விடமாடேங்கறான்…நினைத்துக் கொண்டவள் சிறிதும் கண்டு கொள்ளாமல், அவர் இருக்காறா…ப்ரோஹித்..? கேட்டுக் கொண்டே சுற்றுமுற்றும் பார்க்கிறாள்.

பழங்காலத்து வீடு என்று வாசனை சொல்லியது.எந்த ஆடம்பரமும் இல்லாத வெற்று அறைகள்.வண்ணம் மங்கிய பெரிய பெரிய போட்டோக்கள் அதன் மேல் எரிந்து வழியும் முட்டை பல்புகள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது.

வாம்மா…கௌரி……குரல் மட்டும் வந்ததைத் தொடர்ந்து மெல்ல அடியெடுத்து பயந்தபடியே உள்ளே நுழைகிறாள் கௌரி.

மாமா…நா…அவள் மனசுக்குள் அவரைப் பார்த்ததும் சீடர்கள் இல்லாத  பரமார்த்த குரு தான் நினைவுக்கு வந்து போனார்.

வாடிம்மா கொழந்தே…..வாய் கொள்ளாத வெற்றிலையில் நாக்கு குழற அழைத்தார் அவர்..’.ழொக்காழு’ அங்கிருந்த மர ஸ்டூலைக் கை காட்டினதும் கௌரி அதில் அடங்கி உட்கார்ந்து கொண்டாள் .

ழம்மா வழைழைழா…..கேட்டுக் கொண்டே அங்கிருந்த ஒரு மண் சட்டியில் துப்பிவிட்டு வாயைத் துடைத்துக் கொண்டார்.

அம்மா வரலை….ரூம்ல இருக்கா.நான் கேட்டுண்டு போகலாம்னு தான் வந்தேன் மாமா.

நீ தானே நேக்கு மெயில் போட்டு , மொபைல்ல பேசுவே…என்ன பண்றார் உங்காத்துக் காரர்? குழந்தைகள் இருக்குன்னு சொன்ன ஞாபகம்.

ஆமாம்….ட்வின்ஸ்….ரெண்டு பசங்க…அழைச்சிண்டு வந்திருக்கோம்.இப்போ தூங்கறா..சொன்னவள் முதல் கேள்வியை பதில் சொல்லாமல் தவிர்த்தாள் .

ஒரு லிஸ்டைக் கையில் கொடுத்துவிட்டு எல்லாம் நான் பார்த்துப்பேன்….நீங்க இந்த லிஸ்டில் இருக்கறதை மட்டும் கொண்டு வந்தால் போதும். அப்பறம் என்ன காப்பி சாப்டுட்டு போங்கோ. கோயிலுக்கு கூட நீங்க போகலாம் இப்போ…கங்கை இங்கே தான் பக்கத்தில்..போய் பார்க்கலாம்…என்கிறார்.

சரி…போய் பார்க்கறேன் .காப்பில்லாம்  வேண்டாம்…தாங்க்ஸ்…நான் கெளம்பறேன் மாமா..எழுந்து கொண்டவள், பிரசாத்தைப் பார்த்து லேசாக புன்முறுவல் செய்து விட்டு நகர்ந்தாள் .

அந்த வீட்டை விட்டு வெளியே வந்ததும் மென்மையான காற்று வீச ,  மீண்டும் தங்கிய அறைக்குச் சென்று அம்மா…நான் கொஞ்சம் இப்படியே போய் பார்த்துட்டு வந்துடறேன்…பயப்படாதே என்ன…

..ம்ம்ம்.சரி….சீக்கரமா வந்துடு…தெரியாத்த ஊரு வேற…என்று சொல்லிக் கொண்டே திரும்பிப் படுத்துக் கொள்கிறாள் சித்ரா.

குழந்தைகளுக்கு போர்வையால் போத்தி விட்டு , கொசுவுக்கு ‘ஆல் அவுட்’டை ப்ளக்கில் செருகி சுவிட்சைத் தட்டியவள் ,கதவைச் சாற்றிவிட்டு கிளம்புகிறாள்.

நடக்க நடக்க  தெரு வளைந்து நெளிந்து சுழன்று போய்க் கொண்டே இருந்தது. எதிரில் முட்டுவது போல வரும் மனிதர்கள், ரிக்ஷா வண்டிகள்,….போதாக்குறைக்கு மாடுகள்…இதையா ரொம்பப் பக்கம்னு சொன்னார் ….எண்ணியபடியே நடந்ததும் கங்கை கண்ணுக்குத் தெரியவே மனம் நிம்மதியானது.

ஓ ….கங்கா மையா கே ஜப் தக் ஹைன் பானி ரஹேன்
மேரே சஜ்னா தேரே ஜிந்து கானி ரஹேன் ….ஜிந்துகானி ரஹேன்..
மையா…..தேரே..மையா…..மையா..

தேரே மையா…ஓ …எங்கிருந்தோ பாடல் ஒலித்துக் கொண்டே இவளைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது.

பொங்கிப் புரண்டு ஓடும் கங்கை…இரண்டு புறமும் அடர்த்த கரை என்றெல்லாம் கற்பனை செய்து வந்தவளுக்கு அகன்ற கங்கையைக் கண்டதும் சிறிது ஏமாற்றம் தான் பிறந்தது. படிகளில் இறங்கி சுத்தமான படியைத் தேடி நின்று கொண்டாள் .ஜிலு ஜிலு வென்று காற்றும் ,
மாலை நேரத்தில் கங்கை பார்க்க ரம்மியமாகத் தான் இருந்தாள் .

இன்னும் கொஞ்சம் சுத்தமா இருந்திருக்கலாம்…சரி, கிளம்பலாம்…..குழந்தைகள் எழுந்துண்டா கஷ்டம்…நினைத்துக் கொண்டு திரும்புகையில் …மீண்டும் பிரசாத்……’இப்படி நீங்க மட்டும் தனியா வரலாமா கௌரி…’ கேட்டுக் கொண்டே அருகில் வருகிறான்.

அந்த ப்ரோஹித் உங்ககிட்ட உங்க ஹஸ்பண்ட் என்ன பண்றார்ன்னு கேட்டதும்…ஒண்ணுமே சொல்லலை நீங்க…ஏன்..? அட்லீஸ்ட் நான் தெரிஞ்சுக்கலாமா?

ரொம்ப முக்கியமா..? இதோ பாருங்கோ பிரசாத்..இதெல்லாம் என்னோட பர்சனல் மேட்டர். வந்த இடத்தில் பிட் நோட்டீஸ் போட்டுண்டு இருக்க முடியாது….உங்களுக்கும் அவசியமில்லை. பட்டென்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பிக்கிறாள்.

கிளம்பியாச்சா..? பேசிண்டே போலாமா….அவனும் கூடவே சேர்ந்து கொள்கிறான். கௌரி…டேக் மீ அஸ் யுவர் ஃப்ரெண்ட் அட்லீஸ்ட்..

ஷ்யூர்….

அவர்கள் நடக்கிறார்கள்…

நான் நீங்க வந்து பார்த்தபோது இருந்த கௌரியாட்டமா இப்போ இல்லை.

ம்ம்ம்ம்..

டூ கிட்ஸ்….ட்வின்ஸ்….நான் தான் காரணம்…..!

ம்ம்ம்ம்…

என்ன ம்ம்ம்ம் கொட்டிண்டு…நான் என்ன கதையா சொல்றேன்…?

சொல்லேன்…கேட்கிறேன்..

சிறிது நேர மௌனம்…தயக்கம்….மீண்டும் ஒரு மெல்லிய கனைப்பு …கௌரி மெல்லிய குரலில் ஆங்கிலத்தில் தொடருகிறாள்..

நான் கார்த்திக்கை மனசார நேசிச்சேன். எப்டியும் கல்யாணம் ஆகிடும்னு நாங்க ரெண்டு பேருமே ரொம்ப நம்பினோம்.நான் ரெண்டு தடவை ஆபீஸ் விஷயமா டெல்லி வந்தேன்….அதுக்கு முன்னாடி….தயங்கியபின்..ஒரு பிரிவை எதிர்கொள்ள முடியாமல் கொஞ்சம் அவசரப்பட்டு, அதுவே…..என்னை வாழ்கையின் இந்தக் கோடிக்கு கொண்டு வந்து விட்டுட்டு போய்டுத்து. சரியா தப்பான்னு கூட அறியாத நிலை…எல்லாம் விதி…மை லை ஃ ப் இஸ் ப்ரீ ரிட்டன்ட் ..!

எனக்குக் கூட இப்போ வெரி ரீசண்ட்டா ஒரு போன்கால் அங்கேர்ந்து வந்ததாக்கும் ..கார்த்தி ன்னு தான் சொன்னார்…’கௌரி இருக்காளா..?ன்னு கேட்டு…பண்ணினார்…நான் ‘ராங் நம்பர்’னு சொல்லி வெச்சுட்டேன்…எனக்கு ஆச்சரியம்..? என்கிறான் பிரசாத்..

ஒ ..அப்படியா ?..அவன் சரியான இடியட்…..இந்தக் குழந்தைகள்,  நான் மனசார நேசிச்ச கார்த்தியின் குழந்தைகள் தான்.. ஆனால்…அவனுக்கு அதுலயே டௌட். நீங்க நினைச்சுப்பேள் …இந்தக் காலத்துல சம்பாத்திக்கிற பெண்கள் தாறுமாறா முடிவு எடுப்பான்னு….அதும் கொஞ்சம் மாடர்ன்னா இருந்துட்டாப் போதும்….அவா தாட்ஸ்லயும்  ரொம்ப அட்வான்ஸ்டா இருப்பாள்னு….இல்லையா? பிரசாத்தைப் பார்க்கிறாள்.

ம்ம்ம்…நாட் அட் ஆல்…!

ஆனால்…முன்னல்லாம்.. ஒண்ணுல தோத்துப் போயிட்டா அடுத்ததுல சரி பண்ணிக்கலாம்னு நானும் கேஷுவலா
நினைச்சதுண்டு. அதான்..எங்கம்மாட்ட கூட ரீமாரிஜ் பண்ணிக்கோன்னு ரொம்ப ஈஸியா சொல்லிட்டேன்.ஆனால் அது அவ்வளவு ஈஸி இல்லைன்னு இப்பப் புரிஞ்சுண்டேன்.நான் எவ்ளோ முட்டாள் தனமா யோசிச்சிருக்கேன்னு இப்பத் தோணறது. இப்போ உணர்றேன் ..

ஐம்…சாரி..!

நிறையப் படிச்சாலும், பெரிய வேலையில் இருந்து கைநிறைய சம்பாதிச்சாலும் கூட இன்னும் நாங்கள் அடிப்படையில் பெண்கள் என்ற அதே எண்ணத்தோட தான் அடிமனசுல இருக்கோம். ரொம்ப உயர்ந்துட்டோம்னு நெனைச்சு யாருமே சம்பிரதாயத்தை தூக்கி எறியரது இல்லை.மனசுக்குள்ளே பெண்களாய், உணர்வுகளில் பெண்களாய், அன்புக்கு அடங்குவதில் பெண்களாய்த் தான் இருக்கோம். என்ன ஒரு வித்தியாசம் …சமூகத்தின் அவலங்களில் அவளது பலம் பலவீனமாகிவிடும் அவலம்…இருப்பதால் தான் வெளி வேஷத்தை நாங்கள் துணைக்குக் கைத்தடியாக உபயோகப் படுத்தறோம்.இதில்…. இன்னும் பலவீனம் கூட பலமிழந்து துணிவைத் தவறவிட்டு கோழையாக தற்கொலை செய்து கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள்… இல்லையா..? ஜியாகான்….அதற்கு சாட்சி..!

ம்ம்….ஆமாம்….பாவம்…பட்டிங் ஸ்டார்…!

அவளும் ஒரு நடிகை தான்..இருந்தாலும் அவளுக்குன்னு ஒரு வால்யூஸ் இருந்ததல்லவா..? சமுதாயத்தின் பார்வையில் தற்காலத்து பெண்கள்..புதுமைப் பெண்கள்…ஒண்ணு கேஸ் ..! இல்லாட்டால் போகப் பொருள்.

கல்யாணம்கறது கூட ஒருத்திக்கு அவள் வாழ்க்கையில் விளையாடற சூதாட்டம் போலத் தான்….வெற்றியும் தோல்வியும் ஆட்ட முடிவில் தான் தெரியும்..ஆனா எனக்கு ஆடறதுக்கு முன்னாடியே தோத்து போயிட்டேன்னு தெரிஞ்சுடுத்து.

ப்ளீஸ்….கௌரி…!

பிரசாத்…நாம நினைக்கறது தான் நடக்கும்னு நம்பக் கூடாது….நாம நினைக்காதது கூட நாம நினைக்காத நேரத்தில் நடக்கறது தான் வாழ்க்கை . அதை ஏத்துண்டு வாழறது தான் புத்திசாலித் தனம்..என்ன சொல்றேள்..?

பெரிய ஞானி மாதிரி பேசறே..எனக்கு ரொம்ப புதுசா புதுமையா இருக்கு….ஆனா இதெல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு, மறந்துட்டு…  நீ ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது..? தப்பா நினைச்சுக்காதே கௌரி…

டக்கென்று ஒரு நிமிடம் நிற்கிறாள்…அவனை ஆழமாகப் பார்க்கிறாள்.

எதையும் தூக்கிப் போட முடியாது…எதையும் மறந்து போகவும் முடியாது.

………………ட்ரை …!

எந்த ஆதாரமுமே இல்லாமல் ஒருத்தனை நம்பிய எனக்கு நான் ஆயுள் முழுதும் இப்படித்தான் தண்டனை கொடுத்துக் கொள்ள வேண்டும்.அப்பத் தான் எனக்கென இருக்கும் கொள்கையும் , நான் எனக்குள் வரையறுத்த கோட்பாடுகளும் நானே மீறாமல் இருக்க முடியும். அப்படி வாழும் போது தான் எனக்கு தன்னம்பிக்கை, சுதந்திரம்…இந்த இரண்டும் என்னைத் தூணாகத் தாங்கிப் பிடிக்கும். இப்பத் தான் நான் இப்படித் தான் வாழ வேண்டும் என்ற நியதியில் இருக்கேன்.என்னை அப்படியே வாழ விடுங்கள்.ஆரோக்கியமான நல்ல நட்பை கல்யாணம் நிச்சயம் காப்பாற்றாது ….பிரசாத்.

ஒரு லட்ச ரூபாயில் உன்னை நான் தவற விட்டுட்டேனோ…?

அன்னிக்கு நாங்க ‘டௌரி தர மாட்டோம்’. விளையாட்டா போட்ட விதி என்னோட விதியையே மாத்திடுத்து…! சிரிக்கிறாள் கௌரி.

எங்கம்மாவால் ஏற்பட்ட சதி….!  நிச்சயமா அவங்க ஆசீர்வாதம் கிடைக்கும்.

ஆமாம்..பிரசாத்…நிச்சயம் ..என் அப்பாவின் ஆசியும் உங்களுக்கும்…கிடைக்கும்..!

அப்போ எனக்கு கல்யாணம் இல்லையா நடக்கணம்….நடக்குமா கௌரி…?

அதற்குள் அவர்கள் தங்கியிருந்த சத்திரம் வந்துவிடவே…வாசல் திண்ணையில் குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்த சித்ரா இவர்களைப் பார்த்து ஏதோ கணக்குப் போட்டவளாக சிரித்தபடியே….எங்கியாக்கும் போயிருந்தேள் ? என்று கேட்கிறாள்.

(தொடரும்)

Series Navigationஅத்தம்மாபேபி பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள காலவெளிப் பிளவுப் பழுதுகள்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *