சங்க இலக்கியத்தில் பண்டமாற்று முறை

This entry is part 12 of 29 in the series 3 நவம்பர் 2013

வளவ. துரையன்.

சங்க காலத்தின் பெருமையை விளக்கும் எட்டுத் தொகை நூல்களுள் அகநானூறும் ஒன்றாகத் திகழ்கிறது. அகநானூறு முழுதும் தலைவனும், தலைவியும் உலவும் அகத்திணைச் செய்திகளே விரவிக் கிடக்கின்றன என்றாலும் பண்டைத் தமிழரின் செல்வச் செழிப்பையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் சில பாடல்கள் காட்டுகின்றன.

பண்டை வணிகமுறை பண்டம் மாற்று முறையிலேயே அமைந்திருந்தது. தன்னிடம் அதிகமாக உள்ள ஒரு பொருளைத் தந்து அதற்கு மாற்றாக தனக்குத் தேவையான வேறு ஒரு பொருளைப் பெற்றுக் கொள்வதே பண்டம் மாற்று முறையாகும்.

நக்கீரர் எழுதி உள்ள அகநானூற்றுப் பாடலில் இம் முறையைக் காணலாம். ஓர் அழகானக் காட்சியையே நம் கண்முன் நக்கீரர் கொண்டுவந்து காட்டுகிறார்.

நீண்ட கொடிகள் அசைந்தாடும் ஒரு பெரிய வீதியில் அழகிய பாண்மகள் ஒருத்தி சென்று கொண்டிருக்கிறாள். அவள் மொழியே அழகு ததும்பக் கூடியது அவள் நடந்து செல்லும் போது அவள் உந்தி தெரியும்படி ஆடை சரிந்து கிடந்தது. அவ்வுந்தியே அவள் அழகைக் காட்டுவதை “அவ்வாங்கு உந்தி அஞ்சொற் பாண்மகள்” எனும் சொற்றொடர் விளக்குகிறது.

அப்பெண் தன்னுடைய தந்தையார் அன்று காலையில் பிடித்துவந்த பெரிய கொம்பை உடைய வாளை மீனை விற்கச் செல்கிறாள் என்பது “தன் ஐயர் காலைத் தந்த களைக்கோட்டு வாளைக்கு” என்ற அடியில் தெரிகிறது. அதை விற்றுக்கிடைக்கும் பணத்தைத் தொகையாக்கிப் பெறுகிறாள் என்பதும் புலனாகிறது.

அந்த நெடிய பாட்டில் காணும் குறிப்பிலிருந்து அத்தெருவில் கள்ளுக் கடைகள் இருப்பது தெரிகிறது. ஆனல் அந்த இளம்பெண் வாளையை விற்றுக் கள்ளைப் பெற விரும்பாமல் செல்கிறாள். மேலும் அத்தெருவில் பழைய செந்நெல்லைக் குவித்து வைத்து விற்கும் கடைகள் உண்டு. ஆனால் அவள் அவர்களிடமும் வாளை மீனை விற்று நெல்லை வங்கவில்லை என்பதை,

”நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி மறுகிற்

பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்

எனும் அடிகள் உணர்த்துகின்றன.

அன்றன்றைய தேவைக்கு நெல்லை வங்காமல் இருப்பதிலிருந்து அப்பெண் செல்வம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று உணரலாம். இப்படிக் கள்ளையும், செந்நெல்லையும் வாங்காதவள் அவற்றுக்கு மாறாக அரும்பெறல் முத்துகளைப் பெறுகிறாள் என்பது ‘கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம் பயங்கெழு வைப்பு’ எனும் சொற்றொடர் வழி அறிய முடிகிறது.      ஆனால் முத்தின் விலைஅதிகம்; எனினும் ஒரு முத்தைப் பெறுவதற்குரிய வாளை மீன்களை ஒரே இல்லில் கொண்டு வந்து சேர்த்து வைத்திருக்கிறாள். இப்படி அவ்வப்போது கொணர்ந்து கொடுத்துச் சேர்த்து சேமிப்பு செய்தவள் பின் நாளில் அச்சேமிப்பால் முத்துகளோடு அணிகலன்களும் பெறக் கூடியவள் என்றும் நக்கீர்ர் காட்டுகிறார். இதோ பாடல் அடிகள்:

” ——————————————————–தன்ஐயர்

காலைத் தந்த கனைக்கோட்டு வாளைக்கு

அவ்வாங்கு உந்தி அஞ்சொற் பாண்மகள்

நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி மறுகிற்

பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்

கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்

பயங்கெழு வைப்பு——- —————- ——————”

 

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 31.சர்வாதிகாரியாக மாறின ஏ​ழைபிறவிக் கடன்!
author

வளவ.துரையன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    திரு. வளவ. துரையன் அவர்களின் அகநானூறு பாடலின் விளக்கம் சுவையானது. அதில் வரும் வீதியும் அதில் செல்லும் பெண்ணைப் பற்றியும் நக்கீரர் அழகாகவே கூறியுள்ளார். இதில் இரண்டு உண்மைகள் அன்றும் இன்றும் உள்ளன:

    * பெண்ணின் தொப்புள் அழகை அன்றும் இன்றும் இரசிப்பது. அன்று அப்படி. இன்று நம் திரைப்பட கதாநாயகிகளின் தொப்புள் அழகு.

    * அன்று வாளை மீன் தந்து சேர்த்து முத்து வாங்கும் பெண். இன்று தவணை முறையில் கட்டி நகை வாங்கும் பெண்.

    அதோடு பண்டைய தமிழகத்து வீதிகளில் கள்ளுக்கடைகள் இருந்ததையும் அறிகிறோம்.

    சிறிய பாடல்தான் என்றாலும் பண்டைய தமிழக வீதியில் உலா சென்ற உணர்வு உண்டானது! வாழ்த்துகள்………அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்

  2. Avatar
    Dr N.Baskaran says:

    வளவதுரையனின் அகனானூறு கட்டுரை இனிமை…
    கவிதையைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
    சங்கஇலக்கியப் பாடல்சாறு பிழிந்து தந்துள்ளார்.
    அரசவைப் பாடலைத் தெருவுக்குக்கூட்டிவந்து அறிமுகப்படுத்தியுள்ளார்.
    வாழ்க வளவன்…வளர்க தமிழ்… அன்புடன் ந.பாஸ்கரன்,கடலூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *