” சரி. நீயும் கவலைப் படாதே. நாம் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. கடிதம் எழுதிக் கொள்வோம். ”
” எப்படி? ”
” வேறு வழியில்லை. நான் கோவிந்தசாமியிடம் பேசிப் பார்க்கிறேன். ”
” என்னவென்று ? ”
” அவனிடம் நீ பேசினால் யாரும் தப்பாக நினைக்க மாட்டார்கள். நீ கடிதம் எழுதி அதை ஒரு புத்தகத்தில் வைத்து அவனிடம் கொடுத்து விடு. நான் பதிலை அதே புத்தகத்தில் வைத்து அவனிடம் தந்து விடுகிறேன். நீ அவனிடம் வாங்கி படித்த பின்பு பதிலை அதே புத்தகத்தில் வைத்து அவனிடமே தந்து வீடு. ”
” அவனை நம்பலாமா? பிரித்து படித்து விட்டால்? ”
” நம்பலாம். நல்லவன். அப்படியே படித்தால்தான் என்ன? நாம் என்ன எழுதப் போகிறோம்? நேரில் பார்த்தால் என்ன பேசுவோம் என்பதைத் தானே எழுதப் போகிறோம்? ”
தைரியமூட்டினேன்.
கோவிந்தசாமி எங்களுடன்தான் துவக்கப் பள்ளியில் சேர்ந்தான். மூன்றாம் வகுப்பு படித்தபின் தமிழ் நாடு சென்று விட்டான். அங்கு தமிழ்ப் பள்ளியில் படித்து விட்டு மீண்டும் திரும்பி உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்துகொண்டான்.
என்னைப் போலவே அம்மா இல்லாமல் அப்பாவுடன் அவனும் வாழ்ந்ததால் நாங்கள் நெருங்கிய நண்பர்களானோம். நான் லதா வீட்டில் தங்கியிருந்தபோது அவ்வப்போது அங்கு வருவான்.
அப்பா பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். லதாவையும் அவனுக்குத் தெரியும். எங்களுடைய இரகசியத் திட்டத்திற்கு அவன் நிச்சயம் உதவுவான்.
மலை அடிவாரத்தில் ஒரு தேநீர்க் கடைஇருந்தது. மூன்று சக்கர வண்டியில் அது இயங்கியது. கொல்லை த. ஆறுமுகம் என்பவர் அதை நடத்தி வந்தார். தேநீர், ரொட்டி விற்பனையுடன் பத்திரிகைகளும் விற்பனை செய்தார். வாடிக்கையாளர்கள் படிப்பதற்கும் தமிழ்ப் பத்திரிகைகள் வைத்திருப்பார்.
அவர் தந்தை பெரியார் மீது பற்று மிக்கவர். ‘ விடுதலை ‘ பத்திரிகையும் வைத்திருப்பார்.
அங்குதான் நான் தினசரிப் பத்திரிகைகள் படிக்கத் துவங்கினேன். தமிழ் முரசு, தமிழ் நேசன் பத்திரிகைகளை ஆர்வமுடன் படிப்பேன். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் இப் பத்திரிகைகளின் ஞாயிறு மலர்கள் வெளிவரும். அவற்றில் கதை, கட்டுரை, கவிதைகள் வெளிவரும். அவற்றையும் விடாமல் படிப்பேன். அதோடு ‘ சென்னைக் கடிதம் ‘ என்ற பகுதியில் தமிழ் நாட்டு அரசியல் பற்றிய விமர்சனம் மிகவும் சுவையாக வெளி வரும். பெரியாரின் ‘ விடுதலை ‘ என்னை மிகவும் கவர்ந்தது.
அப்பா தமிழ் ஆசிரியர் என்றாலும் பத்திரிகை வாங்கவில்லை. அங்கு நான் பத்திரிகை படிப்பதை அவர் பார்த்துவிட்டால் உடனே வீட்டுக்குப் போகச் சொல்வார்.
தப்பித் தவறி பேருந்திலிருந்து லதா இறங்கி வந்து விடுவாளோ என்ற பயம் அவருக்கு. நாங்கள் பள்ளி செல்ல பெருந்து எடுக்கும் இடத்த்தில்தான் தேநீர்க் கடை இருந்தது.
இப்படி நான் எது செய்தாலும் அவரின் பார்வைக்கு தப்பாகவே தோன்றலாயிற்று!
பள்ளிப் பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் படிக்க அவர் என்னை ஊக்குவிக்க வில்லை. அவற்றையெல்லாம் படித்தால் வகுப்பில் முதல் மாணவனாக வர முடியாது என்பார். கவனம் சிதறி விடுமாம். பல நூல்களிப் படித்தால்தான் பொது அறிவு வளரும் என்பதை அவர் ஏற்கவில்லை.
பாடப் புத்தகங்களை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை ” கரைத்துக் குடித்தால் ” தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கலாம் என்பார்.
அதோடு மட்டும் என்னை விட்டால்கூடப் பரவாயில்லை.
எக்காரணத்தைக் கொண்டும் நான் லதாவைப் பார்த்து பேசிவிடக் கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாய் இருந்தார்.
அதோடு கூட அவர் நிற்கவில்லை.
மலை அடிவாரத்தில் இருந்த தனுக்கொடி மளிகைக் கடை, சிங்காரம் சிகை அலங்கரிக்கும் கடை, தேநீர்க் கடை ஆகியவற்றில்கூட எங்களைக் கண்காணிக்கச் சொன்னதுதான் எனக்கு ஆத்திரத்தை மூட்டியது.
அவருக்குத் தெரிந்த எல்லாரிடமும் நாங்கள் காதலிப்பதாகக் கூறி விளம்பரப் படுத்தினார்.
” என்னா தம்பி! நல்ல படிக்கிற பையனாச்சே! அந்த பொண்ணை காதலிக்கிறாயாமே! இந்த வயசிலே உங்களுக்கு காதலா? உன் அப்பாதான் சொன்னார். ” பலர் இவ்வாறு அறிவுரைக் கூறினர்.
அவள் என் பால்யத் தோழி. அவளைக் காதலிக்கிறேனா என்பது எனக்கே தெரியாது! ஏன் இப்படி என் பெயரைக் கெடுக்கிறார்!
இரண்டாம் படிவம் வகுப்பில் நன்கு கவனம் செலுத்தினேன். வீட்டுப் பாடங்களை அன்றன்று செய்து முடித்தேன். அடுத்த நாளுக்கான பாடங்களையும் தயார் செய்தேன். என்னுடைய படிக்கும் பாணியில் எந்த விதமான மாற்றமும் இல்லை.
ஆனால் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், லதாவைப் பார்த்தாயா, பேசினாயா என்பதே அவருடைய முதல் கேள்வியாக இருக்கும். என்னைவிட அவருக்குத்தான் லதா நினைவு எப்போதும் இருக்குமோ என்றுகூட எண்ணத் தோன்றும்!
” உன்னால் படிக்க முடியுதா? எப்போதும் அவள் நினைப்பா? இந்த வயசில் உங்களுக்கு காதல் வந்து விட்டதா? ” என்பார்.
இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியில் நான் வீட்டில் படிக்க வேண்டியிருந்தது! வகுப்பில் முதல் மாணவனாக வர எனக்கு மட்டும் ஆசை இல்லையா?
இவருக்கு என்ன ஆயிற்று. பார்க்கும்போதெல்லாம் லதாவைப் பற்றியே பேசுகிறாரே! என்ன நினைத்துக் கொண்டு இப்படியெல்லாம் பேசுகிறார். நிம்மதியாகப் படிக்க விடமாட்டார் போலிருக்கிறதே?
ஒன்றாக வளர்ந்து விட்டோம் என்பதற்காக இவ்வளவு சோதனையா? இவரால் என் படிப்பு கேடுமோ என்ற அச்சமும் மேலோங்கியது.
என் ஆத்திரத்தையெல்லாம் வேறு யாரிடம் போய் முறையிடுவது? நாட்குறிப்பில்தான் பதிவு செய்து ஆறுதல் கொண்டேன்.
இரண்டாம் படிவ இறுதித் தேர்வில் என்னால் முதல் மாணவனாக வர முடியவில்லை. எனக்கு பெரிய ஏமாற்றம்தான்!
ஆறு வருடமாக முதல் மாணவனாகத் திகழ்ந்தவன் நான். முதன் முதலாக ஆறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டேன். நெஞ்சம் படபடத்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப நேரமானது.
ஒரேயொரு ஆறுதல் தான் எனக்கு. சிறந்த மாணவர்களுக்குள் ஆறாவது இடம்தானே. மனத்தை நானே தேற்றிக் கொண்டேன். வேறு யாரிடத்தில் போய் நான் சொல்ல முடியும்? லதாவைதான் நினைத்த மாத்திரத்தில் பார்க்க முடியாதே!
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். இத்தனைக் காலமாக நான் அடைந்த வெற்றிகளுக்குப் பின்னால் லதா இருந்தாள். ஆனால் இப்போது அவள் இல்லாததை உணர்ந்தேன்.
தேர்வு முடிவு புத்தகத்தை அப்பாவிடம் காட்டினேன். அவர் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. ஒவ்வொரு பாடத்திலும் நான் பெற்ற மதிப்பெண்களை நோட்டமிட்டார்.
” முதலாவதாக வராமல் ஏன்டா ஆறாவது இடத்துக்குப் போனாய்? லதாவை நினைத்துக்கொண்டு பரீட்சை எழுதினாயா? ” கோபமாகக் கேட்டார்.
” நல்லாத்தான் எழுதினேன். அங்கே எல்லாருமே முதல் மாணவர்கள். அதனால்தான் இப்படி. ” விளக்க முயன்றேன்.
” எல்லாரும் முதல் மாணவர்கள். அந்த முதல் மாணவர்களிலும் ஒரு முதல் மாணவன் இருக்கிறான் அல்லவா? அது ஏன் நீயாக இருக்கக் கூடாது? படிக்கும் வயதில் காதல் வந்தால் எப்படி படித்தது ஞாபகம் வரும்? உன் நினைப்பெல்லாம் எப்போதும் அவளைப் பற்றிதானே இருக்குது! ”
திரும்பவும் லதா பல்லவி!
ஒன்றாக வளர்ந்தபோது,
ஒரு பெண் வயதுக்கு வந்து விட்டால் என்ன? அதன்பின்பு அவளிடம் பேசக்கூடாது என்பதில் என்ன நியாயம் உள்ளது. வயதுக்கு வருவதில் அப்படி என்ன அதிசயம் உள்ளது. வயதுக்கு வந்துவிட்டால் உடன் காதல் வந்துவிடுமா? எப்போதும் போல் பழகும் எங்களைக் காதலிக்கிறோம் என்கிறாரே! படிக்கும்போதே காதலா என்று கேட்கிறார்!
ஒவ்வொரு பாடத்திலும் நான் பெற்றிருந்த மதிப்பெண்கள் பற்றி வினோதமான விளக்கம் தந்தார்.
ஒரு பாடத்தில் எண்பது மதிப்பெண்கள் வாங்கியிருந்தால், அந்தப் பாட நூலில் இருபது சதவிகிதம் நான் படிக்கவில்லை என்றார்
தொண்ணூறு மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அதைப் பாராட்டாமல், நூலில் பத்து சதவிகிதம் படிக்கவில்லை என்றார்.
உண்மையில் நான் நல்ல மதிப்பெண்கள்தான் வாங்கியிருந்தேன். அது எனக்கே ஆச்சரியம்தான்!
துவக்கப் பள்ளியில் பயின்ற போது அனைத்துப் பாடங்களிலும் மிக எளிதாக நூற்றுக்கு நூறு வாங்கி விடுவேன். ஆனால் உயர்நிலைப் பள்ளியில் அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தேன்.
துவக்கப் பள்ளியில் நான் புத்தகப் புழுவாக இருந்தது உண்மை.படிப்பதைத் தவிர வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபடவில்லை. விளையாட்டுப் போட்டிகளிலிருந்து விலகியே இருந்தேன். அந்த ஆறு வருடங்களில் விளையாட்டுப் போட்டிகளில் ஒரு பரிசு கூட வென்றதில்லை.
ஆனால் ஒவ்வொரு வருடமும் முதல் மாணவனாகத் திகழ்ந்ததால் நிறைய பரிசுகள் வென்றேன். ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் பெற்றாலும் பரிசு தருவார்கள். அவை அனைத்துமே ஆங்கிலக் கதை நூல்கள். பள்ளியை விட்டு வெளியேறியபோது தலைமை ஆசிரியை தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு நூலை பரிசாகத் தந்தார்.
நான் அப் பள்ளியின் சிறந்த மாணவன் மட்டுமல்ல, தலைமை நல்லொழுக்க மாணவனுங்கூட! அதோடு சாரணர் இயக்கத்திலும் சேர்ந்திருந்தேன்.
வேறு யாராக இருந்தாலும் இவற்றையெல்லாம் பார்த்து எப்படியெல்லாம் பாராட்டியிருப்பார்கள்! ஆனால் அப்பாவுக்கு மட்டும் ஏன் இது புரியவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை.
சிறப்புகள் பல பெற்றிருந்தும், மனம் நிம்மதி தேடி ஏங்கியது. எங்கே நிம்மதி?
( தொடுவானம் தொடரும் )
- நெஞ்சு பொறுக்குதில்லையே…..
- தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2
- தினம் என் பயணங்கள் – 7
- பொறுமையின் வளைகொம்பு
- காத்திருப்பு
- தொடுவானம் 5.எங்கே நிம்மதி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3
- பாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.
- படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை
- வரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’
- ”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]
- தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…
- திண்ணையின் இலக்கியத் தடம்- 24
- சீதாயணம் நாடகப் படக்கதை – 22
- மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்
- மருமகளின் மர்மம் 18
- நீங்காத நினைவுகள் – 36
- கொலு
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி
- புகழ் பெற்ற ஏழைகள் – 48
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு
- விண்வெளியில் சூடான பூதக்கோள் ஒன்றில் முதன்முறை நீராவி கண்டுபிடிப்பு