தினம் என் பயணங்கள் -14

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

 

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

 

 

வெகு நாட்களாக நான் வீடு தேடும் படலம் ஒரு வழியாக முடிவிற்கு வந்து விட்டது.  வாடகை வீடு என்ற போதிலும் என் எதிர்பார்ப்புகளையும், நான் வாழ்தலுக்கான அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கியிருந்தது அந்த வீடு. பலவாறான பேச்சுகளையும்,  நிராகரிப்பையும் கேட்டிருந்த எனக்கு,

“மேடம் உங்களுக்கா வீடு, திருமலை டீச்சர்ன்னு சொன்னார், நீங்க தாலுக்கா ஆபிஸ்ல தான வேலை பாக்குறீங்க,” என்று, ஆச்சர்யமாய் விசாரித்த மேல் போர்ஷன்காரர்,வாக்காளர் அட்டை வாங்க வந்த போது முன்பே அறிமுகமாகியிருந்தார்.  என் அம்மாவைச் சொல்லியிருப்பார்கள் டீச்சர் என்று.

“இப்போது அம்மா ரிட்டயர்ட் ஆகிவிட்டார்கள்,” என்று முறுவலித்தேன் நான்.

“உள்ளே வந்து பாருங்களேன்,” என்ற போது, என் மகள் அருள்மொழியையே போய் பார்த்து வரும்படிக் கூறினேன்.

“நாளைக்கே வந்துடுங்க மேடம்,” என்று வீட்டுச் சாவியைக் கனிவுடன் நீட்டிய போது புதியதாகத் தன்னம்பிக்கை கீற்று என் நெஞ்சத்தில் உதித்தது.  “ இல்லை,  முடியாது,”என்கிற என் இயலாமை களை எப்படி, முடியும், எல்லாம் நிறைவாய் இருக்கிறது என்று மாற்றுவது என்று யோசிக்கத் துவங்கினேன்.
காலியாக இருந்த இரண்டு பகுதிகளைப் பார்த்து வந்தவள், முன்னாடி கொஞ்சம் சிறிய வீடாதான் இருக்கு “மம்மி, பின்புறம் கொஞ்சம் இடம் தாராளமா இருக்கு,இருந்தாலும் நீ ஆபிஸ்ல இருந்து எந்த நிலைமையில வருவியோ, ஆத்திர அவசரத்துக்கு , பின்னாடி அவ்ளோ தூரம் நடக்க முடியுமா? முன்னாடியே எடுத்துக்கலாம்,”என்று சொல்ல சரி என்றேன்.

முதல் முறையாக என் நிலையில் இருந்து யோசிக்கும் ஒரு ஜீவனைப் பார்க்கிறேன்.  ஏப்ரல் 2, 2014 அன்று வீடு பார்த்து ஏப்ரல் 3, 2014 பால் பொங்கி, குடும்பம் போயாயிற்று. என் நெடுநாளைய தனிக்குடித்தன கனவு  நிறைவேறியது.

ஒரு சொம்பு, ஒரு பால் பொங்கும் பாத்திரம், உப்பு, மிளகாய் என்று இளைய தம்பி அன்பு ராஜ் சீர் செய்தது புதுவித உணர்வைத் தோற்றுவித்தது.  அன்பு ராஜின் மனைவி சூர்யா வந்து புதுவீட்டில் பால் பொங்கினாள்.

மகிழ்ச்சியும், துன்பமும் அற்ற ஒரு நிறைவான மனநிலை அது. எந்த பக்கமும் சாராமல், சாயாமல் ஆழ்மனதில் இருந்து வெளிபட்ட அமைதி.

26.04.2014 ஆகிய இன்று என் புதிய இருப்பிடத்தில் இருந்து தான், அலுவலகம் செல்ல விரைகிறேன். எப்போதும் காலை உணவைத் தவிர்த்துவிடும் எனக்கு, என் மகள் செய்த வம்பில், ஒரு தோசையையும் கடலைச் சட்னியையும் உண்டுமுடித்தாயிற்று.  எப்பொழுதும் என் தாயார் செய்யும் வேலையான, என் பை கொண்டு வந்து சைக்கிளில் மாட்டுவது, சைக்கிள் துடைத்து வைப்பது, நான் சைக்கிளில் அமரும் வரை உடன் இருந்து கை அசைத்து வழி அனுப்புவது, பொட்டு வைக்க மறந்திருந்தால் சிறு முணுமுணுப்போடே பொட்டு வைத்து விடுவது என்று, என் மகள் புதுப் பணியைக் கையிலெடுத்திருந்தாள்.

இங்கும் பல அறிமுக முகங்களைப் புன்னகையால் திருப்தி செய்ய வேண்டி வந்தது.  திறந்த வெளி சிறு நீர் கழிப்பகம் போன்ற பகுதியில் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் சில ஆண்களையும், அந்த இடத்தையும், மூச்சை உள்ளடக்கி நாற்றத்தைச் சுவாசிக்காமல் கடக்க வேண்டியிருந்தது.

அங்கிருக்கும் வேகத்தைத் தடைபோடும் மேடொன்றில் ஏற முடியாமல் தவித்து நிற்கும் போதெல்லாம் யாரேனும் ஒருவர் தள்ளிவிடுவதற்கு என்றே வந்துவிட ஒவ்வொரு நாளும் இரண்டு நன்றிகளைச் செலவழித்துக் கொண்டிருக்கிறேன்.

இருபுறமும் வாகனம் வருகிறதா என்று பார்த்து, சாலையில் மறுபுறம் கடந்து, கலந்து, வாகன நெரிசலோடு நகர்ந்து, கதிரவனின் தாக்கத்தில் வழிந்தோடும் வியர்வையைத்துடைக்க வழி இல்லாமல் பயணித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் தான்.

இப்ப என்ன ஆபிஸ்க்கு அவசரம் என்றபடி சைக்கிளைப் பற்றி நிறுத்திய நௌஷாத் பாய், என் அனுமதியின்றியே,  நான் மறுப்பதை பொருட்படுத்தாமல், சைக்கிளைத்திருப்பி, அவர் தேநீர் கடை வாசலில் இருந்த நிழல் புறத்தில் நிறுத்தினார்.

“அண்ணா இப்பவே இப்படி வேர்த்துக்கொட்டுது, இதுல டீ வேறயா,” என்ற முகச் சுளிப்பை பொருட் படுத்தியதாகத் தெரியவிலலை.

“டீ வேண்டாம், பால் குடிங்க,” என்று மிதமான சூட்டில் கையில் திணித்தார்.

அந்த சூடான பாலைப் பார்த்தபோது, வாழ்க்கையும் அளந்து கொடுக்கப்பட்ட பால் போன்றது என்று தோன்றியது, அதை ரசனையா சுவைப்பதும், அருவருப்பாய் குடித்து முடிப்பதும், அவரவர் சுதந்திரம். பாதிக் குடித்து நிராகரிப்பதும், உயிர்ப்பான தருணங்களைக் கொட்டி விரைவில் தீர்த்து விடுவதும் அவரவர் வாழ்க்கை முறை.  சூடான ஒரு கனிவுப் பணி.

ஒரு நீண்ட பெருமூச்சொன்று என்னில் இருந்து விடைபெற்றது. அந்த பெருமூச்சினூடே விடைபெற்றது என் தன்னம்பிக்கை இன்மையும், சுயபட்சாதபமும், கழிவிரக்கமும் தான்.

 

 

[தொடரும்]

Series Navigation
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *