வளவ. துரையன்
திருவாய்மொழி நூற்றந்தாதி என்பது ஸ்ரீமத் மணவாள முனிகள் அருளிச் செய்துள்ள பிரபந்தமாகும். அதில் 48- ஆம் பாடலை மிக முக்கியமானதாகக் கருதுவார்கள்.அப்பாசுரம் இதுதான்.
”ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளைத்
தாராமை யாலே தளர்ந்துமிக—தீராத்
ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமந்தான்
மாசறு சீர்மாறனெம் மான்”
இப்பாசுரத்தில் நம்மாழ்வாரை “மாசறு சீர்மாறன்” என்று மணவாள மாமுனிகள் குறிப்பிடுகிறார். மேலும் இப்பாசுரம் திருவாய்மொழி ஐந்தாம் பத்தின் எட்டாம் திருவாய்மொழிப் பாசுரங்களின் பொருள்களைச் சுருக்கமாக எடுத்துக் கூறுகிறது.
இப்பாசுரத்துக்கு பிள்ளைலோகம் ஜீயர் கூறியிருக்கும் வியாக்கியானம் மிகச்சிறப்பான ஒன்றாகும். நம்மாழ்வாரை ஏன் ‘மாசறு சீர் மாறன்’ என்று காட்ட வேண்டும்? அவர் மாசு மறுவற்றவர் என்பது தெரிந்த விஷயம் தானே? இதனைப் பிள்ளைலோகம் ஜீயர்
”இவ்வளவான தசையிலும் உபாயாந்தரங்களில் கண் வைக்கையாகிற மாசு இன்றிக்கே இருக்கிற”
என்று கூறி ஆழ்வாரின் பெருமையை விளக்குகிறார்.
இப் பாசுரத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஏழாம் திருமொழிப் பாசுரங்களைப் பாசுரங்களை ஒப்பு நோக்கினால் இதன் பொருள் நன்றாக விளங்கும். அவற்றில் நம்மாழ்வார் சிரீவர மங்கை வானமாமலைப் பெருமாளைப் பார்த்து அவர் அருளை வேண்டுகிறார். அனால் ஆழ்வாரின் விருப்பம் அங்கு நிறைவேறவில்லை. ஆதலால் ஆழ்வார் திருக்குடந்தை ஏகுகிறார். அங்கும் அவரது எண்ணம் ஈடேறவில்ல. இதனைச்,
”சிரீவர மங்கை வாணன் திருவடிகளிலே சரணம் புக்க இடத்திலும், தம் அபேட்சிதம் கிடையாமாலே, அடியார்களைக் காப்பதையே தன் குறிக்கோளாகக் கொண்டுள்ள எம்பெருமான், தாம் விரும்பிய பேறுகளைக் கொடுக்காது இரான் என்றும், ஆனால் அப்பெருமான் எந்த இடத்தில் நமக்கு அருளலாம் என்று எண்ணி யுள்ளானோ, அதை நாம் அறியாத காரணத்தால் திருகுடந்தைக்குச் சென்றால் அங்கு நம் விருப்பம் நிறைவேறும்”
என்று கருதிச் சென்றதாகக் கூறுகிறார் உரையாசிரியர்.
இவ்வாறு பெருமாளிடம் தான் கேட்ட அருளைப் பெறமுடியாமல் அதனால் மனம் மற்றும் உடலெல்லாம் தளர்ந்த போதும், எம்பெருமானைத் தவிர வேறு எந்த உபாயத்தையும் பின்பற்றுதலாகிய மாசு இல்லாதவர் என்பதால் மாசறு சீர்மாறன் என்று மணவாள மாமுனிகள் கூறுவதாக உரையாசிரியர் காட்டுகிறார்.
திருக்குடந்தை சென்ற போதும் அங்கும் ஆழ்வாரின் விருப்பம் நிறைவேறவில்லை. இதை,
”எம்பெருமான் கிடந்த கோலத்தைக் கைவிட்டு எழுந்திருத்தல், இருத்தல், உலாவி அருளுதல், இன்சொல் கூறுதல், குளிர நோக்கி அணைத்தல் எல்லாம் செய்தருளக் காணாமையாலே”
என்று கூறுவதிலிருந்து அறிய முடிகிறது. எனவே நம்மாழ்வார் மிகவும் மனவேதனைக்கு ஆளாகிறாரம். திருக்குடந்தைப் பெருமானும் அவர் விரும்பிய பேறுகளைத் தராதத்தைத்தான்,
”ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளைத் தாராமையாலே”
என்று மாமுனிகள் காட்டுகிறார். பெருமாளின் அருள் கிடைக்காததால் ஆழ்வாரின் மனம், உடல் வாடுவதைத்தான் தளர்ந்து எனும் சொல் காட்டும். இதை மிகத்தளர்ந்து என்று பொருள் கொள்ளல் சாலப் பொருத்தமாகும்.
நாம் எண்ணியது கிடைத்து விட்டால் மனத்தின் ஆசை தீர்ந்து விடும். இது உலக இயல்பு. அதுகிடைக்காவிட்டால் அது தீராத ஆசையாக நீடித்திருக்கும். இங்கே பெருமாளின் பேறு பெறும் அனுபவம் கிடைக்காத காரணத்தால் ஆழ்வார் தீராத ஆசையுடன் இருந்ததைப் பாசுரம் காட்டுகிறது.
அவரின் ஆசை நிறைவேறாததால் அவர் ஆற்றமை அதிகமாகிறது. அதனல்தான் ‘என் நான் செய்கேன்’ என்றும் ‘தரியேன் இனி’ என்றும் ’உனக்கு ஆட்படும் அடியேன் இன்னும் உழல்வேனோ’ என்றும் நம்மாழ்வார் மனம் வருந்திப் பேசிய பேச்சுகளைத்தான் ”ஆற்றாமை பேசி அலமந்தான்” என்று மணவாள மாமுனிகள் காட்டுகிறார்.
ஆனாலும் ஆழ்வாரின் அத்தகைய பேச்சுகளுக்கிடையில் அவர், ‘உனதாள் பிடித்தெ செலக் காணே’ என்றும், ‘களைகண் மற்றிலேன்’ என்றும், அவரே அருளிச் செய்வதால் எந்த நிலையிலும் பெருமாளே தம்மைக் காக்க வல்லவர் என்ற திடமான உறுதியே, நம்பிக்கையே நம்மாழ்வாரின் மனத்தின் ஆழத்தில் குடிகொண்டிருந்ததாக பிள்ளைலோகம் ஜீயர் அருளிச் செய்கிறார்.
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 9
- ஏன் என்னை வென்றாய் அத்தியாயம்- 2
- வாழ்க்கை ஒரு வானவில் 8.
- தொடுவானம் 21. உயிருக்கு தப்பி ஓட்டம்
- உலக அமைதிக்கு ஒரு வணக்கம்
- பேச்சுத்துணையின் வரலாறு…!!!
- சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் அறங்கள்
- துவாரகா சாமிநாதன் கவிதைகள்
- உறக்கம்
- அத்தைமடி மெத்தையடி
- துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட இரண்டாம் ஆண்டு விழா
- மையல்
- மணவாள மாமுனிகள் காட்டும் சீர்மாறன்
- தண்ணீர்கள்
- பிரான்சு கம்பன் கழக மகளிர் விழா அழைப்பிதழ்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 80 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3
- மறுவாசிப்பில் தி. ஜானகிராமன்..
- காந்தி தேசம் எனது பார்வையில் (.நூல் :- காந்தி தேசம் ஆசிரியர் :- ப. திருமலை.)
- ஆட்டம்
- தினம் என் பயணங்கள் -22 தேர்விற்கான ஐந்தாம் நாள் பயணம்
- தீட்சை
- முரண்கோள் [Asteroid] தாக்குதலைப் புவி மீது தடுக்கத் திசை திருப்பும் நாசாவின் பெருஞ் சவால் சுயநகர்ச்சி விண்ணுளவி [Asteroid Grand Challenge Spacecraft]
- நீங்காத நினைவுகள் – 51 முரசொலி அடியார்